ss

Wednesday, March 28, 2012

சிறு கதைகள் ( 5 )


யார் சிறந்த தம்பதி?..


அந்த ஊர் திருவிழாவையொட்டி ஏற்பாடு செய்திருந்த சிறந்த தம்பதி யார் என்ற தேர்வுக்கு கடைசி சுற்றுக்கு இரண்டு தம்பதியினர் வந்திருந்தனர்.

அவர்களில் முதல் தம்பதியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

வயதான காலத்தில் உங்களில் யார் முதலில் காலமாக விரும்புகிறீர்கள்?

இருவருமே நான் நான் என்றார்கள்.

காரணம் கேட்கப் பட்டது.

ஆண்: அவங்களை விட்டுவிட்டு என்னால் ஒரு நிமிடம்கூட வாழ முடியாது.

பெண்: நான் பொட்டோடும் பூவோடும் அவர் இருக்கும்போதே போய்விட வேண்டும்.

பலத்த கரவொலி எழுந்தது.

அடுத்த தம்பதியிடம் அதே கேள்வி கேட்கப்பட்டது.

இருவருமே மவுனமாக இருந்தனர்.

மக்கள் வியந்தனர். கடைசி சுற்றுக்கு வந்து கோட்டை விட்டார்களே என்று.

பெண்: நான் இல்லாவிட்டால் அவரை யார் என்னளவு கவனிப்பார்கள்? எனவே அவருக்குப் பணிவிடை செய்ய நான் இருக்கவேண்டும்.

ஆண்: காலம் பூராவும் எனக்குக் குறைவில்லாமல் பணிவிடை செய்த அவங்களுக்குக் கடைசி நேரத்தில் நான் இருந்து பணிவிடை செய்யவேண்டும்.

கரவொலி விண்ணைப் பிளந்தது. அவர்களுக்குத்தான் பரிசு என்பதைச் சொல்லவும் வேண்டுமா?....

Friday, March 23, 2012

உழவும் விதைப்பும்

கிராமப் புறங்களில் உள்ள முப்பது வயதுக்குக் குறைவான வயதுடைய இளைஞர்களில் பெரும்பாலோருக்கு ஏர் பிடிக்கத் தெரியாது என்பதும் விதை விதைக்கத் தெரியாது என்பதும் கசப்பான உண்மையாகும்!
ஏர் பிடிக்கத் தெரியாமல் போனதற்கு காரணம் கால் நடைகளின் பயன்பாடு குறைந்துபோனதும் அவற்றிடம் வேலை பழக்கவும் வேலை வாங்கவும் ஆட்கள் இல்லை என்பதும் ஆகும்.

விதை விதைக்கத் தெரியாமல்போனதற்குக் காரணம் மானாவாரி விவசாயமும் விவசாயி விதை சேமித்து வைக்கும் பழக்கமும் ஒழிந்துபோனதே ஆகும்!

இதன் விளைவாக அளவுக்கு மிஞ்சிய இயந்திரங்கள், ரசாயன உரம், பூசிக் கொல்லிகள் ஆகியவற்றின் பயன்பாட்டால் நிலங்கள் களர்த் தன்மைக்கு மாறிவருகின்றன என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்!

இது எங்குபோய் முடியுமோ என்று நினைத்தால் அச்சமாக உள்ளது! 

Thursday, March 22, 2012

அரசன்!

பூசனிக்காய்க்கு

ஓர் ஆசை!

காய்களின் அரசன்

தான் ஆக !

கூவி அழைத்தது

அனைவரையும்

என்னை எதிர்ப்பவன்

யாரென்று!

அச்சங்கொண்ட

எவராலும்

எதிர்த்துப் பேச

இயலாதே!

சுண்டைக்காய்தான்

முன்வந்து

துணிந்து நின்றது

மல்லுக்கு!

என்னோடு மோத

இவனா என்று

ஏளனம் செய்தது

பூசனிக்காய்!

கூவி அழைத்தது

சுண்டைக்காய்

யாரேனு மொருவர்

வாருமென்று!

இருவரையும் - தூக்கி

ஏறியுங்கள்

வலியவன் யாரெனப்

பாருமென்று!

ஓட்டம் பிடித்தது

பூசனிக்காய்,

அரசன் ஆனது

சுண்டைக்காய்!

Wednesday, March 21, 2012

ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (2)

 உடற்பயிற்சி 

நமது உடம்பு பல்வேறு புலன் உறுப்புக்களையும் பல்வேறு பணிகளைச் செய்யக்கூடிய அங்க அவயங்களையும் கொண்டது. அவை தசைகளாலும் எலும்புகளாலும் இன்னும் நுண்ணிய அமைப்புகளாலும் பிணைக்கப்பட்டு தோலினால் மூடப்பட்டுள்ளன. 

ரத்த நாளங்கள் மூலமாக ரத்த ஓட்டம் நடக்கிறது. நுரையீரல் மூலமாக சுவாசம் நடக்கிறது. அதுபோலவே மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய புலன்களின் மூலம் பெறப்படும் உணர்வுகளும் தேவைகளும் நரம்புகள் மூலமாக மூளைக்கு எடுத்துச் செல்லப் படுகிறது. மூளையில் இருந்து இடப்படும் கட்டளைகளும் நரம்புகள் வாயிலாக உடம்பு முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் இருந்து பிராணவாயுவை எடுத்துக்கொண்டு மீதியை வெளியிடுவதன் மூலம் நமது உடம்பில் அசுத்த ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பணியை நுரையீரல் சதாகாலம் தொடர்ந்து செய்கிறது. அதுபோலவே நல்ல ரத்தத்தை உடம்பு முழுவதும் செலுத்தி உடம்பு முழுவதும் இருந்து அசுத்தபட்ட ரத்தத்தைச் சேகரித்து நுரையீரலுக்கு சுத்திகரிக்கும் பணிக்காக அனுப்பி மீண்டும் பெறும் இடைவெளியற்ற தொடர்ச்சியான ரத்த அழுத்தப்பணியை இதயம் ஓய்வின்றிச் செய்கிறது. 

நாம் உண்ணும், அருந்தும் உணவுப்பொருட்களை மேலும் பக்குவப்படுத்தி தன்மயமாக்க வேண்டியவற்றை ஏற்றுக்கொண்டு கழிவுப் பொருட்களை வெளியேற்றும் செரிமான உறுப்புக்கள் தொடர்ந்து வேலை செய்கின்றன. செரிமானத்துக்கு உதவியாக ஆங்காங்கு இருக்கும் சுரப்பிகளும் தமது பணியைச் செய்கின்றன.

நமது உடம்பில் தேவையற்ற, உபயோகமற்ற உறுப்புக்கள் எவையும் இல்லை. எலும்புகள் திடமான உடலமைப்புக்கான பணிகளைச் செய்கின்ற அதே நேரம் தோல் நமது முழு உடம்மையும் வெளி, உள் சூழ்நிலைமைக்கேற்ப பாதுகாக்கும் உறையாகச் செயல்படுகிறது. நமது உடம்பிலே இருக்கும் ஒவ்வொரு பகுதியும் சதா காலமும் இயங்கிக்கொண்டே இருப்பதால் போதுமான வெப்பம் பாதுகாக்கப்படுகிறது.

மூளை உடம்பு முழுவதும் இருந்து கிடைக்கும் உணர்வுகளைப் பெற்று அதற்குத் தகுந்தபடி கட்டளையிடுவது மட்டுமல்லாமல் பதிவுசெய்யும் பணியையும் செய்கிறது. ஒவ்வொரு உறுப்பும் ஒட்டுமொத்தமான உடம்பின் பிரதிநிதியாகத்தான் செயல் படுகிறது. எனவே ஒவ்வொரு உறுப்பின் மூலமும் கிடைக்கும் உணர்வுகளையும் தேவைகளையும் பதிவுசெய்து காலா காலத்தில் அனைத்து உறுப்புக்களுக்கும் முறையாகக் கட்டளையிடும் சிக்கலான பணி மூளையுடையது. 

அதுமட்டுமல்ல நல்லது, கெட்டது, தேவையானது, தேவையற்றது, போன்ற முரண்பாடான விசயங்களை எல்லாம் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய பணியையும் மூளை செய்வதோடு பதிவுப் பெட்டகமாகவும் விளங்குகிறது. மூளயின் நான்கு பாகங்களும் அவற்றிற்குண்டான பணிகளை செவ்வனே நிறைவேற்ற வேண்டும். 

ஒருஇயந்திரம் பழுதின்றிச் சரியாக இயங்க வேண்டுமானால் அதன் பணிகள் தடையின்றி நடக்கவேண்டுமானால் அது நீண்டகாலம் நல்லபடி இயங்கவேண்டுமானால் அது நல்லபடி பராமரிக்கப்பட வேண்டும். அதன் பாகங்கள் வலுவுள்ளதாகவும் தங்குதடையின்றி இயங்கவல்லதாகவும் இருக்கவேண்டும். மனிதஉடம்பு என்கிற இயந்திரமும் அப்படியே 

ஆக ஒட்டு மொத்தமான நமது உடம்பும் அங்க அவயங்களும் அதனதன் பணியைச் சிறப்பாகச் செய்யுமளவு நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். அவை நிலைமாறும் போது உடல்நலம் கெடும். எனவே எல்லா உறுப்புகளும் சீராகச் செயல்பட அந்தந்த உறுப்புகள் பலம் வாய்ந்தவையாகவும் சீராக இயங்கக்கூடிய செயலூக்கம் உடையவையாயும் விளங்க வேண்டும். அதற்காக உடற்பயிற்சி அவசியமாகிறது.

நாம் நமது உடலமைப்பை வயதுக்கும் உடல்வாகுக்கும் ஏற்றபடி சிறியதாகவோ பெரியதாகவோ இருக்கும் ஒன்றாகத்தான் கருதுகிறோம். ஆனால் ஒவ்வொரு கணமும் எண்ணற்றவை நமது உடலிலிருந்து வெளியேறுவதையும் எண்ணற்றவை உடம்பில் புதிதாகச் சேர்வதையும் சாதாரணமாக நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. 

நமது உடலுக்குத் தேவையானதை உள்ளே கொண்டு சென்று அந்தந்தப் பாகங்களின் தேவையை நிறைவு செய்வதும் உடலின் அனைத்துப் பாகங்களும் தேவையற்றவையாக ஒதுக்கும் பயனற்றவற்றை உரியமுறையில் வெளியேற்றுவதுமான அந்த இயக்கத்தில் கோளாறு நேரும்போது அது நோயாக உணரப்படுகிறது. 

அந்த இயக்கம் முற்றிலும் நின்றுபோகும்போது அதைத்தான் உயிர் போய்விட்டது அல்லது மரணம் நடந்துவிட்டது என்று கூறுகிறோம். 

எனவே உயிர்வாழ்வது சிறப்பாக இருக்கவேண்டுமென்றால் நோயற்ற வாழ்வு வாழவேண்டுமென்றால் நமது உடம்புக்குள் நடக்கும் கண்ணுக்குத் தெரியாத இயக்கங்கள் சிறப்பாக நடக்கவேண்டும். அப்படிச் சிறப்பான உடலியக்கத்தைக் கொண்டிருப்பதும் இல்லாததும் நமது உடலுக்குக் கொடுக்கும் பயிற்சியைப்பொறுத்தே அமையும்.

ஆதிமனிதன் வாழ்வின் ஆதாரமான உணவுக்கே உடல்ரீதியாகப் போராட வேண்டி இருந்ததால் உடற்பயிற்சி என்பது அவசியமான ஒன்றாக இல்லை. அவன் வெய்யிலில் காய்ந்தான். மழையில்நனைந்தான். மரக்கிளைகளில் தொங்கினான். உணவின்றிப் பலநாள் பட்டினிகிடந்தான். கிடைத்த உணவை அப்டியே உண்டான். அதனால் இயற்கையாகவே மனிதனின் உடலமைப்பு மிக்க வலுவுள்ளதாகவும் எதையும் உண்டு செரிக்கும் குணமுள்ளதாகவும் இருந்தது. 

அவன் பார்க்க அழகற்றவனாக இருந்தாலும் மிக்க ஆரோக்கியமாக இருந்தான். இயற்கைச் சீற்றங்களும் கொடிய விலங்கினங்களும் கொள்ளைநோய்களும் மருத்துவ வசதி இன்மையும் தவிர அவனுடைய உடல்நலத்தைக் கெடுக்கவல்ல எந்தத் தீயபழக்கங்களும் அவனிடம் இல்லை. 

ஆனால் மனிதன் நாகரிகத்தில் முன்னேற முன்னேற அறிவியல் வளர வளர உடலுழைப்பின் தீவிரம் குறைந்துகொண்டே வந்து தற்காலத்தில் உடலுழைப்பை நம்பி வாழ்வது தகுதிக்குறைவான நிலை என்றும் உடலுழைப்பு இல்லாமல் சொகுசான வாழ்வு வாழ்வு வாழ்வதுதான் உயர் தகுதிக்கு உரிய வாழ்வுமுறைஎன்றும் கருதப்படுகின்றது. 

மிகவும் சொகுசான உணவை உண்டு சொகுசான வாழ்வு வாழ்வதால் அவனுடைய உடம்பும் இயற்கையிலேயே வலுக்குறைந்ததாக ஆகிவிட்டது. ஆனால் வெய்யிலில் காய்வதும் மழையில் நனைவதும். பட்டினிகிடப்பதும் இல்லாத அழகிய உடலமைப்பைக் கொண்ட வாழ்வு வாழ்பவனாக இருக்கிறான். 

அதனால் நவீன மருத்துவ வசதிகள் மிகுந்திருந்தாலும் அதற்கும் மேல் எண்ணற்ற புதுப்புது நோய்களும் பெருகிவிட்டன. அதனைத் தொடர்ந்து மனிதனின் வாழ்வில் உடற்பயிற்சி என்பது அவசியக் கடமையாகிவிட்டது.

உடற்பயிற்சி செய்வதன்மூலம் உடல் உறுதிப்படுகிறது. சீராகத் தொடர்ந்து இயங்கி உறுப்புக்கள் அதனதன் பணியைச் சிறப்பாகச் செய்ய ஊக்குவிக்கப் படுகிறது. உடற்பயிற்சி இல்லாவிட்டால் தசையமைப்புகள் தேவைக்கு மாறான விதத்தில் வளர்ந்து செயல்பாட்டுக்குப் பொருத்தமற்றதாக ஆவதோடு தேவையற்ற பழுவையும் உடம்பு பெற்றுவிடும். உடல் பலவீனமும் அடையும். அதுபோலவே இயங்கும் உறுப்புகளும் வேகமாக செயல்பட இயலாமல் போவதுமட்டும் அல்ல இயல்பான இயக்கமே துன்பமான பணி ஆகிவிடும்.

அதுமட்டுமல்ல நமது உடல் ஆரோக்கியத்துக்குச் சாதகமான அல்லது பாதகமான சூழலில் வாழ்ந்துகொண்டு உள்ளோம். 

நாம் உண்ணும் உணவும் பருகும் நீரும் சுவாசிக்கும் காற்றும் சுத்தமானவையாக இல்லாததுமட்டுமல்ல மாசு பட்டதாகவும் இருக்கிறது. அதுதவிர நாகரிக வளர்ச்சியின் பேராலும் பலருக்கு எல்லாவிதமான உணவும் உண்ணுமளவு வசதி இருப்பதாலும் பல நேரங்களில் தேவையற்றதையும் உண்ணும் பழக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உடல் ஆரோக்கியமாக இருக்குமளவு உறுப்புக்கள் தமக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு தேவையற்றதைப் புறக்கணித்து வெளியேற்றும் பணியைச் சிறப்பாகச் செய்யும. ஆனால் உடல்நலன் கெடும்போது தேவையற்றதை உடல் அனுமதிப்பதோடு தேவையானதைப் பெறும் சக்தியைக்கூட இழக்கிறது. எனவே நோய் ஏற்படுகிறது.

எனவே நாம் அனைவரும் சிறியவர்முதல் பெரியவர் வரை வயதுக்கேற்ப உடலுழைப்பின் தன்மைக்கேற்ப உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகிறது. துவண்டுகிடக்கும் துணி தண்ணீரை அதிகமாக உறுஞ்சுகிறது. ஆனால் அதே துணியைக் கயிறுபோல் முறுக்கி வலுவானதாக்கி விட்டால் தண்ணீரை அதிக அளவு உறுஞ்ச முடியாது. அதுபோல் திடமான உடம்பில் தேவையற்றவை நுழைந்து தங்க முடியாது. ஆனால் திடமற்ற உடம்பில் தேவையற்றவை அனைத்தும் எளிதில் குடியேறிவிடும். பின் நோய்களுக்குப் பஞ்சமா என்ன? எனவே முறுக்கப்பட்ட துணியைப்போல திடமான கயிறு போல உடல் நலம் பேணப்பட வேண்டும்.

உடல் நலம் குன்றும் போது உடலமைப்பின் நுண்ணிய பகுதியான உடல் நலத்தை யொட்டியே நலம் பெறும் பகுதியான மனமும் பாதிக்கப்படும். இதை ஒரு பலவானின் நடத்தையையும் பலவீனனுடைய நடத்தையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும். முன்னவன்  தன்னுடைய பேச்சில் கருத்துச்செறிவும் நியாயமும் குறைவாக இருந்தாலும் அல்லது அது இல்லாவிட்டாலும் அதை வெளிப்படுத்துவதில் ஊக்கமுடையவனாக இருப்பான். அவனுடைய சொல்லும் செயலும் கூடுதல் மதிப்புப் பெறும். அதேசமயம் பலவீனமானவன் அவனுடைய பேச்சில் நியாயமிருந்தாலும் கருத்துநிறைந்தவனாக இருந்தாலும். அதை வெளிப்படுத்துவதிலும் பிறரைக் கவரும் விதத்தில் பேச்சாற்றலை வெளிப்படுத்துவதிலும் ஊக்கமற்றவனாக இருப்பான். ஆக அவனுடைய சொல்லும் செயலும் அதற்குண்டான மதிப்புப் பெறாது. மேலும் மனநலம் பாதிக்கப்படும் போது கட்டுப்பாட்டை இழக்கும் உடம்பு மேலும் மேலும் கெட்டு உடலும் உள்ளமுமான மனிதவாழ்வுக்கே இடையூறு ஏற்பட்டு நீண்ட காலம் நலமுடன் வாழவேண்டிய வாழ்வில் குறுகிய காலம் நோயுடன் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. 

எனவே உடல் நலம் பெற, மனம் நலம் பெற, நீண்ட வாழ்வு வாழ, நமது கடமைகளைச் சிறப்பாகச் செய்ய, இவ்வுலகை மேலும் மேலும் அழகுடையதாக்க, நமது சந்ததிகளுக்கு இன்னும் அற்புதமான உலகை விட்டுச்செல்ல நமது உடல் நலன் பேணல் மிக முக்கியம். அதற்கு உடற்பயிற்சி தவறாத கடமையாக இருக்க வேண்டும்.

உடற்பயிற்சி என்பது உடலுழைப்பு இல்லாதவர்க்கு தனியாக உடற்பயிற்சியாக இருக்கலாம். உடற்பயிற்சியும் விளையாட்டும் கலந்ததாக இருக்கலாம். உடலுழைப்பில் வாழ்வோர்கூட அளவான உடற்பயிற்சியிலும் விளையாட்டிலும் ஈடுபடுவதால் மனதையும் உயர்ந்த நிலையில் வைத்திருக்கலாம். எளிமையான முறையில் உடல்நலத்தை நல்ல நிலையில் வைத்துக்கொள்ள யோகக் கலையைப் பின்பற்றலாம். 

ஒருபாத்திரம் நல்லதாக இருந்தால்தான் அதில் வைக்கப்படும் பண்டமும் நல்ல நிலையில் இருக்கமுடியும். அதுபோல் நமது உடல்வாழ்வும் நலம்மிக்கதாக இருந்தால்தான் எத்தகைய நல்ல பண்புகளுக்கும் உயர்ந்த லட்சியங்களுக்கும் ஆதாரமாக விளங்க முடியும். ஒட்டுமொத்தமான வாழ்வும் நலன்மிக்கதாக இருக்கும். இல்லாவிட்டால் அந்த உடம்பை ஆதாரமாகக் கொண்டு இயங்கும் மனித வாழ்வே பாழாகிவிடும்.  அத்தகைய பாழ்பட்ட வாழ்வைக்கொண்டு நாம் எதைச் சாதித்துவிடமுடியும்?  

எனவே ஒருவரின் இலட்சியம் சிறியதாயினும் பெரியதாயினும் அதில் வெற்றிகரமாக நடைபோட முதலில் பேணவேண்டியது உடல்நலமே! அத்தகைய உடல்நலனுக்கு அடிப்படையாக விளங்கும் உடற்பயிற்சியைவிட ஒருவரின் வாழ்வில் முக்கியமாக வேறென்ன இருந்துவிடமுடியும்?


ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (1)

முன்னுரை

எனது வாழ்வின் பிரதானக் கடமையாக நான் இதுகாறும் எண்ணிவந்த ஒரு கடமையை இப்போது துவங்குகிறேன். இதுவரையிலும் எனது எண்ணத்தைச் செயல் படுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. இப்போதும் அது சரியான முறையில் கிடைக்கவில்லை. ஆனால் எனக்கு  வாழப்போகும் வயது  குறைந்துகொண்டே போகிறது. இனியும் தாமதித்தால் எனது எண்ணங்களை எனது ககோதர மக்களுடன் பகிர்ந்து கொள்ள இயலாமல் போகலாம். அதன்மூலம் எனது வாழ்வே பயனற்ற ஒன்றாகப் போய்விடும். காரணம் நான் எனது மக்களுடன் பகிர்ந்துகொள்ளப் பலகாலம் உள்ளத்துள் வைத்தும் ஏட்டில் எழுதி வைத்தும் பாதுகாத்து வைத்திருப்பது உபயோகமற்ற வெறும் குப்பைகள் அல்ல. உலகத்தில் நடைமுறையில் உள்ள குப்பைகளை எரித்துச் சாம்பலாக்குவதற்குப் பயன்படக்கூடிய நெருப்பு ஆகும். 

எனது தலைமுறையில் நான் நேரடியாக அனுபவித்து அறிந்ததும் அதற்குமுன் நடந்ததாக கல்வியின்மூலமும் வரலாற்றின் மூலமும் தெரிந்து கொண்டதும் மனித வாழ்வுக்குப் பொருந்தக்கூடிய உயர்பண்புகளாக பெரும்பாலும் இல்லை. மனித குலத்துக்கே தீங்குபயத்து வந்த எண்ணற்ற தத்துவங்களையும் அறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகளையும் துடைத்தெரிய அது பயன்படவேண்டும் என்று நான் விரும்புதில் தவறில்லை என்றே கருதுகிறேன். 

அத்தகைய முயற்சியில் எண்ணற்ற பெரியோர்கள் எல்லாக் காலத்திலும் முயன்று வந்திருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் இன்றுள்ள நிலைமைகளுக்குத் தக்கவாறு மக்களையும் மனித வாழ்வையும் மற்ற உயிரின வாழ்வையும் வரக்கூடிய பேரழிவில் இருந்து காக்கவல்ல ஒரு மாபெரும் சக்தி இம்மண்ணுலகில் இல்லை என்றே கருதுகிறேன். மற்ற உயிரினங்களில் இருந்து மனிதன் வேறுபட்ட பாதையில் பயணம் செய்யத் துவங்கிய பின்னால் எத்தனையோ அறிஞர்கள் தோன்றி இருக்கிறார்கள். எத்தனையோ க்ண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். எத்தனை எத்தனையோ தத்துவங்களை உலகிற்கு வழங்கியிருக்கிறார்கள். ஆனால் இவ்வளவுக்கும் மேலாக இன்று நடைமுறை வழக்கத்தில் மனித குலத்தை ஆட்டுவிக்கும் சக்திகளாக தீயசக்திகளும் தீய தத்துவங்களும்தான் இருப்பதைக் காணமுடிகிறது.

இப்போது நடைமுறையில் உள்ள வாழ்க்கைமுறையாலும் உலக மக்களியையே நிலவும் உயர்தர்ம நெறிகளைப்பற்றிக் கவலைப்படாத பண்பாட்டுச் சீரழிவாலும் பலமுறை இந்த வாழ்வு தேவையா என்ற கேள்விக்கு ஆளாகியுள்ளேன். இந்த வாழ்வுமுறையில் உள்ள கேடுகளை எதிர்த்து ஏதாவது செய்தாலொழிய மற்ற எந்த ஒரு அம்சத்தைக் கொண்டும் இந்த உலகில் வாழவேண்டும் என்ற முடிவுக்கு வரமுடியவில்லை. இது கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக என்றுள் நடக்கும் மனப் போராட்டம் ஆகும். 

இதுகாலமும் என் சக மக்கள் என்னைப் பற்றியும் எனது உயர்ந்த எண்ணங்களைப் பற்றியும் அறிந்துகொள்ள துன்பகாலங்களிலும் நெறிதவறாமல் வாழ்ந்து காட்டிய ஒன்றை மட்டும்தான் என்னால் செய்ய முடிந்தது. உயர்தரமிக்க நூல்களைப் படிப்பதை வாழ்க்கையின் ஒரு பகுதியாக நினைத்ததோடு எனது எண்ணங்களை எல்லாம் எழுத்துவடிவில் பதிவும் செய்திருந்தேன். சொந்த வாழ்வுத் தேவைகளுக்காகவே உடலுழைப்பை நம்பி இருக்கவேண்டிய நிலையில் என் எண்ணங்களையும் உயர்ந்த சிந்தனைகளையும் என் மக்களுக்கு நூல்வடிவிலோ வேறு வடிவங்களிலோ வெளிப்படுத்த இயலவில்லை. 

இப்போதும் அறிவியல் வழங்கிய கணினி என்கிற சாதனம் இல்லாதிருந்தால் இதற்கு ஒரு வடிவம் கொடுக்க இயலாமலே போயிருக்கும். 

ஏற்கனவே எழுதி வைத்திருந்த எழுத்துக்களைச் சரிபார்க்கவும் மீண்டும்  அவசியமானவற்றைச் சேர்க்கவும் பிழைகள் இல்லாமல் ஒழுங்குபடுத்தவும் விரைவில் எழுத்து வேலையைச் செய்யவும் கணினி கைகொடுத்தது. இல்லாவிட்டால் இந்த முயற்சியைச் செய்யக்கூட முடியாமல் போயிருக்கலாம். கணினி மூலம் தட்டச்சு செய்ய இரண்டு மாதங்கள் தட்டச்சு வகுப்புக்கு எனது ஐம்பத்து எட்டாவது வயதில் சென்று பழகினேன். பகலில் தோட்டத்தில் எனது வேலைகளைச் செய்து கொண்டே ஒரு குறிப்பிட்டநேரத்தில் ஒரு மாணவனாக என்னை மாற்றிக்கொண்டு தட்டச்சைப் பயின்றேன். அது ஒரு இனிய அனுபவம்.

நான் ஒரு மனிதன் என்பதற்கு மேலாக எந்தவிதமான சிறப்பு அடையாளங்களையும் விரும்பவில்லை. இந்த உலகமக்களுள் ஒருவன் என்பதற்கும் இந்த உலகம் என்னுடைய வீடு என்பதற்கும் மேலாக என்னை ஒரு நாடு அல்லது ஒருபகுதி அல்லது ஒரு எல்லை என்பதுபோன்ற குறுகிய வட்டத்துக்குள் நிறுத்தி என்னை நானே என்றும் எண்ணிப் பார்த்தது இல்லை. என்னை ஒரு குறிப்பிட்ட ஊர்க்காரனாகவோ ஒரு வட்டாரத்தைச் சேர்ந்தவனாகவோ ஒரு மாநிலம் அல்லது ஒருநாடு அல்லது ஜாதி மதத்தைச் சேர்ந்தவனாகவோ என் சகோதர மக்கள் நினைப்பதை நான் விரும்பாததற்குக் காரணம் அப்படி எண்ணப்படுவதில் எந்த நியாயமும் இருப்பதாக எனக்குப் படவில்லை. 

உயர்நிலைப் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க இயலாமல் பாதியில் வெளியேறி வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்த நான் என்னை ஒரு மாணவனாகவே எண்ணிக்கொண்டு இதுவரையிலும் கல்வியை ஒரு முதற் கடமையாகவே கருதியதோடு கற்றும் வந்திருக்கிறேன். கடப்பாறை மண்வெட்டி பிடிக்கும் கையால் பேனாவைப் பிடிக்கவோ எனது எண்ணங்களை எழுத்துக்களாக்கவோ நான் பயப்படவே இல்லை, காரணம் இந்த உலகில் மனித சமுதாயத்தில் நடக்கும் நியாயமற்ற போக்குகளின்பால் நான் அடைந்த எதிர்மறையான உணர்வின் வலிமை அத்தகைய அச்சத்துக்கு இடங்கொடுக்கவில்லை. 

நான் ஒரு இலக்கியவாதியாக இல்லாமல் இருக்கலாம். எனது எழுத்துக்களில் சொக்கவைக்கும் அழகியல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதில் ஒரு சத்திய ஆவேசம் இருக்கும். காரணம் இவ்வுலகின் இவ்வுலக மக்களின் நியாயமற்ற பல்வேறு தாக்குதல்களையும் தாங்கி இதுகாலமும் நெறிபிறழாமல் வாழ்ந்திருக்கிறேன். எனது எழுத்துக்களின் மூலம் நான் இது நாள்வரையிலும் வாழ்ந்த மேலோர் செய்த பணிகளுக்கு மேலாகப் புதிதாக எதுவும் செய்துவிடப் போவதில்லை. ஆனால் இன்னும் எண்ணற்ற மேலோர் தோன்றவும் அவர்கள்மூலம் இவ்வுலகு அழிவுப் பாதையிலிருந்து சரியானபாதைக்குப் பாதைமாறவும் நான் எனது புதுப்புதுக் கருத்துக்கள் மூலம் விதை விதைக்க விரும்புகிறேன்.

நான் விதைக்கப் போகும் விதைகள் முளைத்து எண்ணற்ற தத்துவ மரங்களாக வளரவேண்டும். அந்தமரங்களும் பூத்துக்காய்த்து அளவற்ற தத்துவ விதைகளைச் சிந்தவேண்டும். அவையெல்லாம் மீண்டும் மீண்டும் முளைத்து இந்த உலகையே உயர்தர்ம நெறிகளின் நிழலுக்குள் கொண்டுவரவேண்டும். உயர்ந்த மனிதருக்கும் உயர்ந்த பண்புகளுக்கும் மட்டும்தான் நிழலாக விளங்வேண்டும். அதற்கு மாறான மனிதருக்கும் பண்புகளுக்கும் அதுவே நெருப்பாக மாறவும் வேண்டும். உலகில் மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் மற்ற ஒவ்வொருவரையும் நேசிக்கக்கூடிய உலகாக அது இருக்கவேண்டும். மக்களாய் பிறந்தும் மாக்களாய் வாழ்ந்துகொண்டிருக்கிறோமே அப்படி இல்லாமல் உண்மையிலேயே மக்கள் வாழும் உலகாக இருக்கவேண்டும்.

என்னுடைய எழுத்துக்களில் எனது எண்ணங்களை மட்டும்தான் வெளிப்படுத்தப் போகிறேன். அது இதுவரையிலும் நாம் அறிந்திருப்பதிலும் மாறுபட்டதாக இருக்கும். ஏனென்று சொன்னால் இதுவரை எத்தனையோ தத்துவங்களைப் பயின்றிருந்தாலும் மேன்மக்களின் அறிவரைகளைக் கேட்டிருந்தாலும். அதைச் சரியாகப் பின்பற்றும் பழக்கம் போதுமான அளவு மக்களிடம் இல்லை. காரணம் உயர்ந்த தர்மங்களைக் கற்பிப்பவர்களாகட்டும் அதுபற்றி உயர்வாகப் பேசித் திரிபவர்களாகட்டும் நடைமுறை வாழ்வில் அதைப் பின்பற்றுகிறார்களா என்றுபார்த்தால் விடை மகிழும்படி இல்லை. இதனால் உயர் தர்மங்கள் மதிப்பிழந்து போகின்றன. மனிதன் ஏற்றுக்கொண்ட தர்மங்களும் அவனின் செயல்பாடுகளும் ஒரேமாதிரி இல்லாததால் இன்று மனித இனமே அழிவின் விளிம்பில் இருப்பதைப் பார்கிகிறோம். 

எனவே மனிதன் பேசும் உயர்தர்ம நெறிகளும் அவனால் பின்பற்றப்படும் செயல்பாடுகளும் இணையாக இருப்பது அவசியமாகிறது. அதற்குத்தடையாக இருப்பவற்றைத் துடைத்தெறிந்து அதன்தொடர்சியாக எண்ணம், சொல், செயல் மூன்றும் இணையாக உயர்தர்ம நெறிகளை அடிப்படையாகக் கொண்டதாக மாறவும் அதன் விளைவாக இன்று வெறும் கற்பனையாக இருக்கும் சுவர்க்கமாக இந்த பூமியையே மாற்றவும் எனது வாழ்வு பயன்படவேண்டும் என்ற எண்ணத்தில்தான் புது முயற்சியைத் துவங்கியுள்ளேன்.

இந்த பிரபஞ்சத்தில் நாம் ஒரு அணுவைக்கூட புதிதாக உருவாக்கவோ அல்லது இல்லாமல் அழித்தொழிக்கவோ முடியாது என்பது அறிவுடைய அனைவருக்கும் தெரியும். ஒன்றை இன்னொன்றாக மாற்றித்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். அதுதான் வாழ்க்கைமுறையும்கூட. அத்தகைய சக்தியை இழக்கும்போதுதான் மரணம் அடைந்து எதிலிருந்து உருவானோமோ அந்த இயற்கையிலேயே ஐக்கியமாகிவிடுகிறோம். 

ஓன்றை தனக்கேற்ற முறையில் இன்னொன்றாக மாற்றி வாழ்வதுதான் வாழ்க்கை என்பதால் ஒவ்வொருவரும் இயற்கையை மட்டுமல்ல தம்மையொத்த மனிதரையும் தனக்கேற்ற முறையில் இருந்தால் நல்லது என்று எண்ணுவதோடு மட்டுமல்ல அதற்காக எல்லா முயற்சியையும் செய்கிறார்கள். அதேமாதிரி ஒவ்வொருவரும் தமது செயல்பாடு இயற்கைக்கும் தம்மையொத்த பிற மனிதர்க்கும் ஏற்புடையதாக இருக்கின்றதா என்று சிந்திப்பதே இல்லை. மற்றவர் தமக்காக வாழவேண்டும் என்று எண்ணுமளவு தாம் பிறர்க்காக வாழ்கிறோமா என்று எண்ணிப்பார்ப்போர் மிகமிகக் குறைவாகவே இருப்பதுதான் சமுதாயத்தில் உள்ள எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணமாகி விடுகின்றது.

அப்படியானால் இவ்வுலகம் தனக்கேற்றதாக இருக்கவேண்டுமானால் ஒவ்வொருவரும் தான்வாழும் இவ்வுலகுக்கு ஏற்றவர்களாக வாழவேண்டும் என்பது அடிப்படை நிபந்தனை ஆகிவிடுகிறது. இந்த எளிய நிபந்தனையைக் கூடப் புரிந்துகொள்ளாமல், உணராமல்தான் வாழ்வையே நரகமாக்கிக்கொண்டு ஒடடுமொத்தமான சமுதாயத்தையே நாசமாக்குவதிலும் அவரவர் பங்கைச் சிறப்பாகச் செய்து வருகிறோம். அதுமட்டுமல்ல எந்த இயற்கையை ஆதாரமாகக்கொண்டு அனைத்து உயிர்களும் வாழ்ந்து வருகின்றோமோ அந்த இயற்கையையே விட்டுவைக்காமல் எதிர் கால உயிரின வாழ்வுக்கே பயனற்றதாக மாற்றும் விதத்தில் அழித்தொழித்து வருகிறோம்.

இந்தப்போக்குகள் எல்லாம் மாற, இப்போது மனித சமுதாயத்துக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் தத்துவங்கள் பயன்படுகிறதா? அப்படிப் பயன்படும் தத்துவங்களைப் பின்பற்றுகிறோமா? பயனுள்ள தத்துவங்கள்தான் இன்று மனித சமுதாயத்தை வழிநடத்துகிறது என்றால் இன்று நம் கண்முன் நடக்கின்ற சமுதாய அவலங்கள் ஏன்? 

எந்தத் தத்துவத்தின்படி மனிதசமுதாயம் நடந்தாலும் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட தத்துவங்கள் மனிதகுலத்துக்கு வழிகாட்டுவதாக இருந்தாலும் ஒன்றைமட்டும் அவை உள்ளடக்கமாகக் கொண்டிருத்தல் அவசியம். 

ஆதாவது இந்த உலகமும் அதன் சூழ்நிலைகளுமே மனிதகுலத்தை உருவாக்கின. சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஒவ்வொருமனிதரையும் பாதிக்கின்றன. அதேபோல் ஒவ்வொரு மனிதரின் செயல்பாடும் நாம் வாழும் சூழ்நிலையிலும இந்த உலகத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சூழ்நிலையில் ஏற்பட்ட இணக்கமான மாற்றத்தால்தான் நாம் உருவானோம். அதேபோல் அதே சூழ்நிலையின் எதிர்மறையான மாற்றத்தால் ஒருகாலத்தில் நாம் அழியவும் செய்வோம். அதனால் இந்த உலகின் சூழல் இணக்கமானதாக இருக்கும்வரைதான் மனிதகுலமும் மற்ற உயிரினங்களும் வாழமுடியும்.  மனிதகுலத்தின் வாழும் காலத்தைத் தீர்மானிப்பதில் இயற்கையாக ஏற்படும் மாற்றங்களுடன் மனித இனத்தால் ஏற்படுத்தப்படும் சாதக பாதகமான மாற்றங்களும் சேர்ந்துகொள்கின்றன. எனவே மனித குலத்தின் வாழுங்காலத்தைத் தீர்மானிப்பதில் மனித இனத்துக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்பதுதான் அநதப் பேருண்மை ஆகும். 

இந்த உண்மையை ஒத்துக்கொள்ளாத அல்லது உள்ளடக்கமாகக் கொள்ளாத எந்தத் தத்துவமாக இருந்தாலும் அது மனித குலத்துக்கு உதவாது. மாறாக அதை அழிவுப் படுகுழியில்தான் தள்ளும். அப்படித்தான் தள்ளிக்கொண்டுள்ளன. 

சூழ்நிலைகள் மனித வாழ்வின்மேல் பாதிப்பு ஏற்படுத்துவதையும் அதேபோல் மனிதன் சூழ்நிலைகளின்மேல் பாதிப்பு ஏற்படுத்துவதையும் போலவே ஒவ்வொரு மனிதனும் சக மக்களின் மேல் பாதிப்பை ஏற்படுத்துகிறான் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படி ஏற்படுத்தும் பாதிப்பு சாதகமாகவும் பாதகமாகவும் உணரப்படுகிறது. ஒவ்வொருவரும் பிறரால் தனக்கு ஏற்படும் பாதிப்புகள் சாதகமாகவே இருக்கவேண்டும் என்று கருதுகிற அதே வேளையில் தன்னால் பிறருக்கு சாதகமான பாதிப்புகள் மட்டும்தான் ஏற்படுகிறதா என்று எண்ணிப் பார்ப்பது இல்லவே இல்லை. அதன்காரணமாக மனிதருக்குள் அன்பும் பாசமும் பொங்கிப் பிரவாகமாக ஓடுவதற்குப் பதிலாக கசப்பும் வெறுப்பும் பகையுணர்ச்சியுமாக வாழ்வே அசிங்கப்பட்டு விகாரமாக ஆகிவிட்டது. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் உலுத்தர்களாகத்தான் பெரும்பாலோர் வாழ்ந்துகொண்டு உள்ளோம். 

எனவே நாம் விரும்பும் வண்ணம் வாழவேண்டுமானால் பிறரால் நமக்கு ஏற்படும் பாதிப்பு சாதகமாகவே இருக்கவேண்டும். அப்படிப் பிறரால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் நமக்குச் சாதகமாகவே இருக்கவேண்டுமானால் நம்மால் பிறர்க்கு ஏற்படும் பாதிப்புகளும் அவர்களுக்குச் சாதகமாகவே இருக்கவேண்டும். இவை இரண்டும் நடக்காவிட்டால் யார்தான் உயர்ந்த வாழ்வு வாழ்ந்துவிடமுடியும்? அத்தகைய உயர்ந்த வாழ்வு வாழ்வதற்கு உதவும் தத்துவங்களே சிறந்த தத்துவங்கள். அத்தகைய உயர்ந்த வாழ்வு வாழ்வதற்கு வழிகாட்ட இயலாத தத்துவங்கள் துடைத்தெறியப்படவேண்டிய குப்பைகள்.

அத்தகைய உயர்ந்த தத்துவங்கள் உருவாகவேண்டுமென்றால் மக்களின் மனதிலே உயர்ந்த எண்ணங்கள் உருவாகி வளரவேண்டும். ஓவ்வொரு காலகட்டத்திலும் வாழும் மக்கள் அப்போது தாங்கள் வாழும் உலகையும் வாழ்வுமுறைகளையும் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். தங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் மூலம் கற்றுக்கொண்டவற்றுடன் தங்கள் வாழ்வில் நடப்பதையும் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் அடுத்து வரும் தலைமுறையினர்க்கு சரியான அறிவுச்செல்வத்தை விட்டுச்செல்ல முடியும். 

ஆனால் இத்தகைய அறிவுத்திறன் மக்கள் அத்தனை பேரிடமும் எதிர்பார்க்க முடியுமா? நிச்சயம் முடியாது. மனித சமுதாயத்தில் எப்போதுமே ஒரு பகுதியினர் முன்னோடிகளாகவும் பெரும்பகுதியினர் பின்செல்பவர்களாகவும்தான் இருப்பர். அந்த முன்னோடிகள் தாம் உணரும் உயர்ந்த வழியில் மற்ற அப்பாவி மக்களையும் வழிநடத்திச் செல்லவும் அவர்களையும் அறிவுமிக்கவர்களாக ஆக்கவும் தம்முடைய பணியைச் செம்மையாகச் செய்ய வேண்டும். 

ஆனால் துரதிருஷ்டவசமாக மனித வரலாறு அப்படிப்பட்டதாக இல்லை. 

சமுதாயத்தை வழிநடத்திச்செல்பவர் யார் என்று பார்த்தால் பேரறிவு பெற்றிருப்போர், பெருஞ்செல்வம் பெற்றிருப்போர், அதிகாரம் மிகுந்திருப்போர் இவர்களே! 

பேரறிவு பெற்றிருப்போரில் பெரும்பாலோர் செல்வத்துக்கும் அதிகாரத்துக்கும் தலைவணங்குபவர்களாகவும் அவர்களின் தயவில் வாழ்பவர்களாகவும் இருப்பதால் உண்மையில் செல்வமும் அதிகாரமும் படைத்தோரே சமுதாயத்தை வழிநடத்தும் பணியைச் செய்கிறார்கள். 

ஆனால் செல்வமும் அதிகாரமும் பெற்றிருப்போரில் பெரும்பாலோர் ஒட்டுமொத்தமான சமுதாய நலனில் அக்கரையற்றவர்களாகவும் சுயநலவாதிகளாகவும் இருப்பதால் சமுதாயத்தை வழிநடத்தும் தகுதி அற்றவர்களாக இருப்பதோடு தங்களின் சுயநலத்துக்காக மனித இனத்துக்கும் இயற்கைக்கும் பெருங்கேடு விளைவிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் மனித சமுதாயம் அறிவாற்றல் பெறுவதற்குத் தடையாகவும் இருக்கிறார்கள். தங்கள் சுயநலத்துக்காக அவர்களிடையே வாழ்வுக்குப் பொருந்தாத தத்துவங்களை உயர்தர்ம நெறிகளாகப் பரப்பவும் செய்கிறார்கள். அதனால் ஒட்டுமொத்தமான உலக சமுதாயம் அவர்களின் துன்பதுயரங்களுக்கு யார் காரணமோ அவர்களின் செல்வாக்கின் கீழ் அவர்களையே தமது லட்சிய புருஷர்களாகக் கொண்டும் வாழ்ந்து வருகிறார்கள்.

சுயநலமற்ற ஞானிகள் பலர் தோன்றி இவ்வுலகம் உய்யப் பாடுபட்டிருந்தாலும் கீழ்த்தரமான பண்புகளே உலகு முழுவதும் நிறைந்து விட்டன. காரணம் ஒப்புயர்வற்ற ஞானிகள் காலத்துக்குப்பின் அவர்களின் உயர் தத்துவங்கள்கூட சின்னாபின்னப்படுத்தப்பட்டு சமுதாயத்தின் மேல்மட்டத்திலுள்ள ஒட்டுண்ணிகளின் சுயநலத்துக்கு ஏற்றபடி புதுப்புது விளக்கங்கள் கொடுக்கப்பட்டு பயனற்றுப் போய்விடுகின்றன. இன்று நாம் உலகில் காணும் அத்தனை கேடுகளுக்கும் இந்தக் கேடுகெட்ட வாழ்வுமுறையே காரணமாகும்.

இந்த நிலை மாறவேண்டுமென்றால் மனித இனம் மேம்பட்ட வாழ்வு வாழவேண்டுமென்றால் சில புது வழிமுறைகளைக் கையாண்டு அவை தவறுகளுக்குப் பலியாக விடாமல் பாதுகாக்கப்பட்டுக்கொண்டே உலகம்முழுவதும் பின்பற்றப்படும் வாழ்வுமுறையாக மாற்றப்படவேண்டும். அந்த வழிமுறைகள் அனைத்து மக்களுக்கும் பொருந்தக்கூடியதாகவும் மெல்ல மெல்ல அதைப் பின்பற்றக்கூடிய உயர்ந்த சிந்தனையாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும் விதத்திலும் இருக்க வேண்டும். 

உலகில் அளவில்லாமல் தீயபண்புகள் வளர்ந்திருந்தாலும் நல்லவையும் இல்லாமல் ஒழிந்துவிடவில்லை. ஆனால் நல்லவை வலிமையில்லாமலும் இருக்குமிடம் தெரியாமலும் இருக்கின்றன. அந்த நல்ல உள்ளங்கள் இந்த உலகம் தப்பிப்பிழைக்க வழி ஏதும் இல்லையா என்று ஏங்கிக்கொண்டிருக்கின்றன. இவ்வுலகில் நடக்கும் தவறுகளை எண்ணியும் இது மாறுமா என்று எண்ணியும் உள்ளுக்குள்ளே ரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டுள்ளார்கள். 

அதே நேரம் இந்த உலகத்தைத் திருத்துவது பற்றிநம்பிக்கை இல்லாமல் மனங் குமைந்து கொண்டும் உள்ளார்கள். அறிவாலும் துணிவாலும் ஆகாதது அவநம்பிக்கையாலும் அச்சத்தாலும் ஆகாது என்பதை எண்ணத் தவறுகிறார்கள். தவிர்க்க இயலாத அளவு தீமைகள் வளர்ந்துவிட்டன. அதை எதிர்த்து துன்பப்படுவதைவிட அனுசரித்துப்போய்விடுவதுதான் நல்லோர்க்கு நல்லது என்ற எண்ணத்திலும் அனேகம் நல்லவர்கள் வாழ்கிறார்கள்.


ஆனால் இந்த பலவீனமான எண்ணங்களைத் தவிர்த்து உலகில் உள்ள நல்லோர் அனைவரையும் ஒன்றுபடுத்த முடியுமா? அத்தகைய திறமையுள்ளவர் உருவாகி உலகில் உள்ள நல்லோர் அனைவரையும் ஒன்றுபடுத்துவதன் மூலம் மனித சமுதாயத்தை அழிவில் இருந்து காப்பற்றுவார்களா என்று ஏங்குகின்றேன். அதற்கான உபாயங்களைப் பற்றி சதா சிந்தனை செய்தும் வருகிறேன். 

ஆனால் தாய்மொழியான தமிழைத் தவிர ஆங்கிலம் போன்ற அவசியமான மற்ற மொழியறிவு இல்லாததால் நேரடியாக அந்த முயற்சியைச் செய்ய சக்தியற்றவனாக இருக்கிறேன். எனவே நானறிந்த தமிழ்மொழியின் துணையுடன் தமிழறிந்த மக்களிடம் என் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டுசெல்லவும் அதன்மூலம் தமிழறிந்த உயர்பெருமக்களின் உள்ளங்களில் உலகநலன் என்னும் தீபத்தை ஏற்றவும் அதை மேன்மேலும் விரிவாக்கிச் செல்வதன்மூலம் உலகளாவிய அமைப்பாக அது விரிவடைந்து செல்வதைக் கண்கூடாக என்வாழ்நாளில் காணவேண்டும் என்றும் விரும்புகிறேன்.

ஒவ்வொரு துறையிலும் இருக்கும் உலகநலம் விரும்பும் உயர்பெருமக்கள் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து இவ்வுலகைக் காக்கவேண்டும் அதற்கு நம்மாலான அனைத்தையும் செய்யவேண்டும் என்ற உயர்நோக்கமுடையவர்களாக மாறவேண்டும். இவ்வுலகுக்கு ஏதாவது செய்யமுடியும் என்ற வாய்ப்பும் சக்தியும் உள்ளவர்கள் அந்த வாய்ப்பை வீணடிக்காமல் பயன்படுத்தவேண்டும். 

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பலதுறைகளிலும் நிபுணர்களாக விளங்குபவர்களில் உலக நலன் நாடுவோர் ஒரு அமைப்பினை உருவாக்கி அதன்கீழ் ஒன்றுதிரள வேண்டும். அந்த அமைப்பு அந்தந்த நாடுகளில் தமது செயல்பாடுகள் மூலம் மக்களின் பேராதரவைப் பெறவேண்டும். அதேபோல் உலகம் முழுக்கவும் அதன் செல்வாக்கு விரிவடைவதன் மூலம் உலகளாவிய அமைப்பாக மாற வேண்டும். அந்த அமைப்பு உலகம் முழுமைக்கும் நல்வழிகாட்டும் அமைப்பாக மாறவேண்டும். அதன் வளர்ச்சி ஒரு காலகட்டத்தில் உலகின் வாழும் விதிகளைத் தீர்மானிக்கும் அமைப்பாக மாறவேண்டும். இதுவே என் விருப்பம் இதற்காக என் வாழ்நாளைச் செலவிடவேண்டும் என்பது லட்சியம்.

அந்த உயர் லட்சியத்தை நோக்கி நகரும் விதத்தில் ஒரு உயர் திட்டம் வகுக்கவேண்டும். அத்தகைய திட்டம் வகுத்து அதன்படி செயல்பட விரும்புவோர் எப்படிப் பட்டவர்களாக இருக்கவேண்டும்? சொந்த வாழ்விலும் பொதுவாழ்விலும் எத்தகையநெறிகளைப் பின்பற்றவேண்டும்? அத்தகையோருக்கு இருக்கவேண்டிய உலக அறிவு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது போன்ற உயர்கருத்துக்களை வெளிப்படுத்துவதன் மூலம் பணியைத்துவங்க விரும்புகிறேன். 


வகை வகையான உணவு வகைகளை உண்ண விரும்புபவன் போல இந்த உலகம் எப்படி எப்படி எல்லாம் சிறந்து இருக்கவேண்டும் இருக்கமுடியும் என்பதைமட்டும் தெரிவிப்பவனாகவே நான் இருப்பேன். விரும்பும் உணவை சமைத்துத் தரும் சிறந்த சமயல்காரரைப் போல இந்த உலகிலுள்ள சகலகலா விற்பன்னர்கள் நான் விரும்பும் ஒரு உன்னத உலகில் நான் வாழ உடனே உருவாக்க முடியாவிட்டால் பரவாயில்லை, அடுத்து வரும் தலைமுறையினராவது அனுபவிக்கவேண்டி உருவாக்குவார்கள், உருவாக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.


அந்தவகையில் ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள்  என்ற தலைப்பில் இருபத்தைந்து கட்டுரைகள் கொண்ட ஒரு சிறு தொகுதியை அறிமுகப்படுத்துகிறேன். அதன்மூலம் ஒரு சிறந்த பண்பாளனுக்கு இருக்கவேண்டிய அடிப்படைப் பண்புகளான அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளேன். 

இதனைத் தொடர்ந்து அணுமுதல் அண்டம் வரையிலான அத்தனை பற்றியும் எனது விருப்பங்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்துவேன். 

இது எந்த அளவில் உலகில் நல்லவர் மனங்களில் பரவுமோ எந்த அளவு எனது கனவு நனவாகும் என்ற நம்பிக்கையை வளர்க்குமோ தெரியாது.  அதுவரை மட்டுமல்ல, அதற்குமேலும் எனது மூச்சு இருக்கும்வரை அதைத் தொடர்வேன். 

காரணம் அப்படியொரு செயலைச் செய்தாலொழிய எனதுயிர் என்னுடலில் தங்கியிருப்பதற்கு எந்தவிதமான நியாயமான காரணமும் இல்லை!


Tuesday, March 20, 2012

வாழ்க்கை!

பிறந்தேன்

தவழ்ந்தேன்

வளர்ந்தேன்

வாழ்ந்தேன்

வீழ்ந்தேன்

எழுந்தேன்

வீழ்ந்து வீழ்ந்து

எழுந்தேன்!

வாழ்வு இதுதான் என

உணர்ந்தேன்...!

உணர்ந்தபோது...!

வாழத்தான்

வயதில்லை...!

வாழும் விதி!


மரக்கிளையின் உச்சியில் இருந்த அந்தச் சின்னஞ்சிறு பறவையின் கூட்டில் இரண்டு குஞ்சுகள் இருந்தன. தாய்ப்பறவை எங்கோ சென்று இறைதேடிக்கொண்டு தன் குஞ்சுகளுக்குப் புகட்ட திரும்பிவந்தபோது திடுக்கிட்டு அலறியது.ஒரு பாம்பு மெதுவாக ஊர்ந்தபடி அந்தக் கூட்டை நெருங்கியது. அந்தப் பறவைக் குஞ்சுகளை உண்பது அதன் நோக்கம்.

தாய்ப்பறவையால் அந்தப்பாம்பை என்னசெய்ய முடியும்? பாம்பண்ணா! பாம்பண்ணா!
என்று அலறியது.

பாம்பு சட்டை செய்யவில்லை.

பாம்பண்ணா! பாம்பண்ணா! ஒரு நிமிஷம் நான் சொல்றதக் கேளண்ணா! மீண்டும் மீண்டும் தாய்ப்பறவை அலறியது. திரும்பிப்பார்த்த பாம்பு,

ஏன் எதற்காகக் கத்துகிறாய்? என்றது

அண்ணா! நீங்க எவ்வளவு பெரியவங்க! உங்களக் கண்டு பயந்துட்டு இருக்கிற எங்கமேலெ நீங்க இரக்கப்படக் கூடாதா?

அப்படியா?

ஆமாங்க அண்ணா உட்டுடுங்க! நாங்க பொழைச்சுப் போறோம்

நான் ஒண்ணு கேக்கறேன் பதில் சொல்லுவியா?

சொல்லுங்க அண்ணா!

உன் வாயிலெ என்ன வெச்சிருக்கே?

என் குஞ்சுகளுக்கு கொஞ்சமா இரை கொண்டுவெந்தேன் அண்ணா!

என்னது?

சின்னப் புழுக்கள் அண்ணா!

இப்பச் சொல்லு! நீ ஏன் அந்தப் புழுக்களுக்கு இரக்கங் காட்டலே?

அந்தப்பறவையால் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை.

இதுதான் நமது வாழ்க்கை விதி! உன்னைவிட பலங் குறைந்தது உனக்குத் தீனி! என்னைவிட பலங்குறைந்தது எனக்குத் தீனி! அப்படி இல்லாம வாழ வழி இருக்கிற மனுஷங்களே அப்படி வாழ்றது இல்லே! நம்மாலெ எப்படி வாழமுடியும்? இருந்தாலும் என்னை அண்ணான்னு அன்போடு பலமுறை கூப்பிட்டெ இல்லே, அதனால உனக்கு என்னாலெ எந்த ஆபத்தும் இல்லெ. என் பசிக்கு நான் வேறெ வழி பாத்துக்கிறேன்!

பாம்பு போய்விட்டது. அந்தத் திசையையே பார்த்துக்கொண்டு திகைத்து நின்றது தாய்ப்பறவை!

எனது மொழி (1)


1. ஆறுகளும் அடர்ந்த மேகங்களும் அளவற்ற நன்னீரைக் கொட்டினாலும் கடல்நீர் உப்பாகவே உள்ளது. அதுபோல் என்னதான் அறிவுரைகள் கற்றாலும் பிறர் சொன்னாலும் சிலர்மட்டும் திருந்தாத கீழ்மக்களாகவே இருக்கிறார்கள்.


2. ஆடுகளின் நலன் பற்றி ஓநாய்கள் பேசினால் அது நயவஞ்சகம். மக்களின் நலன் கெடுத்தோர் நாட்டு நலன் பற்றிப் பேசுவதும் அத்தகையதே!  

3. களைப்படைந்த உடம்பைப் பிடித்து விடுவதால் சுகமும் தெம்பும் கிடைக்கிறது. அதுபோல் சோர்வுற்ற மூளைக்கு சுகத்தையும் தெம்பையும் ஊட்டுபவையே நல்ல கலை இலக்கியங்கள் ஆகும்.

4. வலியவனின் வாழ்வுக்கும் எளியவனின் தாழ்வுக்கும் வயது வித்தியாசம் கிடையாது.

5. காலத்துக்கும் தூரத்துக்கும் எல்லை இல்லை. நம் அறிவும் ஆற்றலும் அப்படியே!

6. துன்பங்கள் முட்டாள்களுக்கும் தீயவர்களுக்கும் தண்டனைகளாகவும் அறிவாளிகளுக்கும் நல்லவர்களுக்கும் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுக்களாகவும் அமைகின்றன.

7. உணர்வுகள் வேறுபட்டால் தாயன்பும் தீயதாகும். 

8.அறிவின்பால் ஈர்க்கப்படும் காதல் உயர்ந்தது. உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும்.  உணர்வின்பால் ஈர்க்கப்படும் காதல் பலவீனமானது. மீளமுடியாத துன்பத்தில் தள்ளிவிடும்.

9. உயர்ந்த நோக்கம் நிறைவேறுதலும் அந்தநோக்கத்துக்காகத் துன்பப்படுதலும் மனத்தளவில் ஒன்றுதான்.

10. ஒருமுட்டாளின் நூறு தவறுகளைவிட ஒரு அறிவாளியின் ஒருதவறு மோசமானது.