ss

Friday, April 6, 2012

நாம் யார் தெரியுமா? (1)


முன்னுரை

உலக மக்கள் தொகை எழுநூறு கோடியை அடைந்து விட்டது. ஆனால் மனதளவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உலகில் வாழ்ந்துகொண்டுள்ளோம். காரணம் உலகையும் வாழ்வையும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் புரிந்துகொண்டிருப்பதே!

யானையைப் பார்த்த குருடர்களைப்போல் வேறுபட்ட கோணங்களில் நமது இருப்பையும் வாழ்வையும் வாழ்க்கைப் பிரச்சினைகளையும் பார்ப்பதால் ஒருவருக்கு நல்லதாகப் படுவது வேறொருவருக்குக் கெட்டதாகப்படுகிறது. இதனால் முரண்பாடுகளும் பூசல்களும் மோதல்களும் வளர்ந்து வாழ்வை அர்த்தமற்றதாக்கி அல்லல் பட்டுக்கொண்டு உள்ளோம்.

அதன் காரணமாக உலக மக்களை வழிநடத்தும் வாழ்க்கைத் தத்துவங்களும் ஒன்றாக இல்லாமல் பலவாக இருப்பதால் மக்களிடையே பாசமும் நேசமும் வளர்வதற்குப் பதிலாக கசப்புணர்வும் போட்டி பொறாமைகளும் சச்சரவுகளுமாக சொர்க்கமாக இருக்கவேண்டிய உலகவாழ்வு உண்மையில் நரக வேதனையாகப் போய்க்கொண்டுள்ளது.

இந்த நிலை மாறவேண்டுமானால் இந்த உலகைப்பற்றியும் வாழ்வைப்பற்றியும் நமது தவறான பார்வைகள் களையப்பட்டு சரியான திசையில் சிந்தனைகள் வளர்க்கப்படவேண்டும்.

அதனால் அணுவில் இருந்து அண்டம் வரையிலான அத்தனை பற்றியும் அதில் மனித இனமாகிய நமது பங்கு பற்றியும் இதில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

ஒரு விஞ்ஞானியின் கல்வியறிவின் துணைகொண்டோ ஏராளமான புள்ளிவிபரங்களின் துணைகொண்டோ இது ஆராயப்படவில்லை. சராசரி மனிதனின் பார்வையில் படும் அணுவில் இருந்து அண்டம் வரையான விஷயங்கள் பரந்த விரிந்த அனைத்து மக்களுக்கும் அனைத்து உயிர்களுக்கும் அனைத்து உலக இயற்கைக் கட்டமைப்புக்கும் உகந்த விதத்தில் எழுதப்பட்டதாகவே எண்ணுகிறேன். பொத்தாம் பொதுவில் அர்த்தமற்ற நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொள்ளாமல் அறிவியல் பூர்வமாகவே ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது.அதன் உண்மையான தரத்தைப் பற்றியும் பயனைப் பற்றியும் சரியாகச் சிந்திக்கத் தெரிந்தோர் தான் தீர்மானிக்க வேண்டும்.

இதில் பல கட்டுரைகள் இடம் பெறப் போகின்றன. அதனால் உலகளாவிய எனது உயர்ந்த நோக்கத்துக்குப் பயன் இருக்கும் என்றால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.

No comments:

Post a Comment