ss

Tuesday, April 24, 2012

ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 11 )


பொறுமை, சகிப்புத்தன்மை, பெருந்தன்மை.

இவை மூன்றும் மனவியல் சம்பத்தப்பட்டவை. நம்மைச் சுற்றிலும் உடன்பாடானதும் எதிர்மறையானதுமான பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து இடைவிடாமல் நடந்துகொண்டே உள்ளன. அதுதவிர மனதிலும் எண்ண அலைகள் இடைவிடாமல் மோதிக்கொண்டே உள்ளன. அவை மனதை அமைதியாக இருக்க விடாமல் இடையூறு செய்துகொண்டே இருக்கின்றன. பொறுமை, சகிப்புத்தன்மை, பெருந்தன்மை, நிதானம் போன்ற பல நற்பண்புகளுக்கு அடிக்கடி சோதனைகளாக அமைந்துவிடுகின்றன. 


பல நேரங்களில் இலக்கை அடைவதற்காக அவகாசத்தைப் பொறுமையுடன் நல்ல தயாரிப்புக்காகப் பயன் படுத்துவதை விட்டுவிட்டு அக்கணமே அது நடக்க வேண்டும் என்று துடிக்கிறோம். அதுதான் பொறுமையின்மை.அதே போல நமது உணர்வுகளுக்கு ஏற்றதாக இல்லாததும் ஆனால் எதிர்நோக்கியே ஆகவேண்டும் என்ற தன்மையுடையதுமான பிரச்சினைகளில் அல்லது சூழ்நிலைகளில் அதைத் தாங்கிக்கொண்டு, அதைச் சமாளித்து சரிசெய்யும் முறையில் சிந்தனையையும் செயல்பாட்டையும் செலுத்துவதற்குப் பதிலாக மனப் பதட்டமும் துயரமும் எதிர்மறையான செயல்பாடும் நிலைகுலைந்த நடைமுறையுமாக ஆகிவிடுகிறோம். அதுதான் சகிப்பின்மை.
அதேபோல தவறுகளைக் காணும்போது அல்லது தமக்கே பிறர் தீங்கு விளைவித்து விடும்போது அது சிறு தவறாக இருந்தாலும்கூட சம்பத்தப்பட்டவர்கள் அப்பாவிகளாக அல்லது பலவீனர்களாக அல்லது செய்த தவற்றை எண்ணி மனம் வருத்தப்பட்டுக் கொண்டு இருப்பவர்களாக இருந்தால்கூட அதைக் கணக்கிலெடுக்காமல் பதிலுக்கு கடுமையான எதிர்நடவடிக்கை எடுத்துவடுவார்கள். அது சுடு சொற்களாக இருக்கலாம். அல்லது துன்புறுத்தலாக இருக்கலாம். அப்படித்தான் பெருந்தன்மை இல்லாதவர்கள் செய்வார்கள்.ஆனால் இந்த மூன்று குறைபாடுகளும் உயர்ந்த மனிதர்களுக்கு உண்டான பண்புகள் அல்ல.

முதலாவதாக பொறுமையின்மையால் அவதிப்படும் நேரத்தில் சரியாக சிந்திக்கத் தவறுகிறோம். அதன்காரணமாக அந்தநேரத்தில் எடுக்கும் முடிவுகளோ செய்யும் செயல்களோ உருப்படியாக இருக்காது. எதிர்நோக்கியுள்ள எந்த ஒன்றையும் இடைப்பட்ட காலத்தில் மேலும் சிறப்பாக்குவதற்குப் பதிலாக அவசர கோலத்தில் சில நேரங்களில் கெடுத்தும் விடுவோம். சில நேரங்களில் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியைக்கூடப் பொறுமையின்மையால் வேண்டாத அல்லது தேவையில்லாதவர்களிடம் உளறிவிடுவோம். காரியம் கைகூடும் முன்பு கெடுத்து விடுவோம்.


அதே போலப் பொறுமையாகச் செய்யவேண்டிய காரியங்களையும் முடிவை உடனே எட்டிப்பிடிக்கும் ஆர்வத்தில் குழப்படி செய்வதும் சிலநேரங்களில் செயலிழப்பதுமான தவறுகளும் நடக்கும்.ஆனால் காலாகாலத்தில் விரைந்து முறையாகச் செய்ய வேண்டியதை அசட்டையாக, சோம்பேறித் தனமாகக் காலதாமதம் செய்வதைப் பொறுமை என்று எண்ணித் தன்னையும் பிறரையும் ஏமாற்றுவதான நடவடிக்கையும் தவறே. எனவே பொறுமை என்பது அதனுடைய உண்மையான பொருளில் கடைப்பிடிக்கப்;பட வேண்டியது அவசியமாகும்.சிலநேரங்களில் நாமொன்று நினைத்துக் கொண்டிருப்போம். ஒன்றை விரும்பிக் கொண்டிருப்போம். ஓன்றைச் செய்து கொணடிருப்போம். ஆனால் எதிர்ப்படுவதெல்லாம் அதற்கு நேர் மாறாக இருக்கும். அந்தநேரத்தில் நமது நிலைதான் சரி என்று விளக்குவதன் மூலமாகவோ, நடைமுறையிலோ நிரூபிப்பதை விட்டு அத்தகைய எதிர்மறையான நிலைமைகளின் மேல் சகிப்பற்றவர்களாக, ஆத்திரப் படுபவர்களாக நல்ல முடிவுக்குப் பதிலாக மோசமான முடிவு ஏற்படுவதற்கு நாமே காரணமாகிவிடுமளவு நிலைகுலைந்து போய்விடுபவர்களாக ஆகிவிடுவோம். அத்தகைய நடைமுறையும் தீயதே.அதேபோல நமக்கு விருப்பம் இல்லாததைக் கண்டிப்பாக ஏற்றுத்தான் தீரவேண்டும் என்ற நிலையிலும், நாம் பதில் சொல்வதற்கோ, பதிலுக்கு ஏதாவது செய்வதற்கோ அனுமதி இல்லாத சூழ்நிலையிலும் வரம்பற்ற ஒன்றாகக் காலதாமதம் ஏற்படும் போதும் பொறுமையிழந்து சகிக்க முடியாதவர்களாகி விடுகின்றோம். நமது உணர்வுகளைப் பிறர் உதாசீனப் படுத்தும் போதும் நமது வார்த்தைகளுக்கு உரிய மதிப்பு இல்லாதபோதும் சகிப்பின்மை ஏற்படும்.

அத்தகைய நேரங்களில் எல்லாம் எதிர்வரும் பிரச்சினைகளை, சூழ்நிலைமைகளை, தவறுகளை எப்படிச் சமாளிக்கலாம் என்று சிந்தனையைச் செலுத்த வேண்டும். எதிர்நிற்கும் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணங்கள் என்ன? என்ன செய்தால் அதற்குப் பொருத்தமாக இருக்கும், இதுபோனற சூழ்நிலைமைகள் வராமல் தடுப்பது எப்படி என்று யோசிக்க வேண்டும். சகிக்க முடிந்தால்தான் சரியான மாற்றை உருவாக்க நம்மால் இயலும். இல்லாவிட்டால் தவறானவர்களின் செயலுக்கும் சரியானவர்களின் செயலுக்கும் விளைவில் வித்தியாசம் இருக்காது. 


எனவே சகிப்புத் தன்மையைக் கையாண்டு ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து சரியானதை நடைமுறைப் படுத்த முயலவேண்டும். அத்தகைய நேரங்களில் மனதை பலவீனமாக்கிக் கொள்ளாமல் புற உணர்வுகளில் இருந்து பாதுகாப்பதோடு எதிர்த்தாக்குதலை முறையாகச் செய்யத் தயார்ப் படுத்தும் விதத்தில் நமது நடைமுறை சகிப்புத்தன்மை நிறைந்ததாக இருக்க வேண்டும். அதேபோல் பொறுமைக்கும் சகிப்புத் தன்மைக்கும் மிக நெருங்கிய பண்பான நிதானம் மிக அவசியமான ஒன்று. ஆடிக்கொண்டே இருக்கும் ஊசியில் நூலைக் கோர்க்க முடியாது. அதுபோல் நிதானமின்றி அலைபாயும் தடுமாறும் உள்ளத்தைக் கொண்டும் செயலைக் கொண்டும்
ஏந்தக் காரியத்தையும் உருப்படியாகச செய்ய முடியாது.வாழ்வின் ஒவ்வொரு செயல்பாட்டின் போதும் சிந்தனையின் போதும் அந்த நேரத்திய சூழ்நிலைகள், வாய்ப்புகள், நமது சக்தி, எதிர்நிற்கும் பிரச்சினைகளின் அல்லது கடமைகளின் தன்மை இவை யெல்லாவற்றையும் கணக்கில் கொண்டு, மிகத் தெளிவாக நமது எண்ணம், சொல், செயல் ஆகியவை விளங்கவேண்டும். அத்தகைய நிதானம் என்பது ஒரு பெரிய பாறையைப் போன்ற அல்லது பெரிய மலையைப் போன்ற வலிமையானதாகும். அத்தகைய நிதானத்துடன் செய்யப்படும் ஒவ்வொரு காரியமும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக, மற்றவர்க்கு வழிகாட்டக் கூடியதாக அமையும். எனவே நமது வாழ்க்கை நெறிமுறைகளில் பொறுமை, சகிப்புத்தன்மை. பெருந்தன்மை, நிதானம் என்பவை நடைமுறைக்கு அவசியமான உயர்ந்த பண்புகள் ஆகும். அவற்றைக் கடைபிடிப்பதும் உயர்ந்த ஒழுக்கமாகும். தமது வாழ்வு சமூகத்துக்குப் பயன்படவேண்டுமென்னும் உயர்ந்த நோக்கம் கொண்டவர்கள் இத்தகைய பண்புகளிலும் முன்னோடிகளாக விளங்கவேண்டும்.No comments:

Post a Comment