ss

Tuesday, April 24, 2012

ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 12 )


தீய பழக்கங்களை ஒழித்தல்.

தீய பழக்கங்கள் எனும்போது அவை எவை என்னும் கேள்வி உடனே எழும். அதற்குச் சுருக்கமாகப் பதில் சொல்வதெனில் நமது வாழ்க்கைக்கு, வளர்ச்சிக்கு, முன்னேற்றத்துக்கு எதிரான செயல்கள் சிந்தனை, சொல், செயல் எதுவாக இருந்தாலும் அவை தீய பழக்கங்களே. 

அதில் எண்ணம், சொல், செயல் என்பதுபற்றி வேறு அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருப்பதால் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க தீய பழக்கங்களான குடிப்பழக்கம், சூதாட்டம், புகை பிடித்தல், கூடாநட்பு, ஒழுக்கக்கேடு(பாலியல்)மற்றும் சிலவற்றை எடுத்துக்கொள்வோம்.

பொதுவாக நியாயமான முறையில் உழைத்து அனைவரும் நலமுடன் வாழ முடியும் என்ற இயற்கைச் சூழல் உலகில் இருந்தும்கூட சமுதாயச் சீர்கேட்டின் விளைவாக சூதாட்டம் என்ற கொடிய நோய் மக்களை வாட்டுகிறது. 

உழைப்பே இல்லாமல் பிறருடைய உழைப்பின் பயனை அபகரிப்பதற்கான முயற்சியே சூதாட்டம்என்பது. 

இயற்கைச் சூழ்நிலை எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்கும்படி இருந்தும்கூட சமுதாயச் சீரழிவால் தன் தேவையைத் தீர்த்துக் கொள்ளப் போதுமான வருவாய் உள்ள தொழில் அனைவருக்கும் உத்திரவாதம் இல்லை. அப்படி இருப்பவர்கள்கூட பழக்க தோசத்தால் உழைத்து வாழ்வதில் ஈடுபாடு காட்டாமல் சோம்பேறித் தனமாகச் சூதாடிப் பிழைக்க எண்ணுகிறார்கள்.

                             

சூதாட்டத்தால் நல்ல குணநலன்கள் கெட்டுப்பொகின்றன. பிறரை வஞ்சித்து வாழ்வதில் நாட்டம் ஏற்படுகிறது. மனிதாபிமானம் கொல்லப்படுகிறது. பிறருடைய துன்பத்தின்மேல் அற்ப சுகம் அடையப்படுகிறது. பின் அது தலைகீழாய் மாறுகிறது. 

சூதாட்டத்தின் பயன் எதுவென்றாலும் அது எல்லோருக்கும் பொதுவான ஒன்றே. சந்தர்ப்பத்தால், சூழ்ச்சியால் கிடைக்கும் ஆதாயத்தைக் கருதி திட்டவட்டமான நன்மைதரும் கடமைகளை அலட்சியம் செய்வதால் சூதாடிகள் அனைவருக்குமே மாறி மாறிக் கேடு வருகிறது. 

எனவே சூதாட்டத்தின் தீங்கை எண்ணி, அதனால் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல அவர்களைச் சார்ந்தவர்களும் துயரப்பட நேர்வதை எண்ணி, அது மனித வாழ்வியல் நியதிகளுக்குப் பொருந்தாத தீய பழக்கம் என்பதை உணர்ந்து, அத்தகைய பழக்கங்களுக்கு ஆளாகாமல் இருப்பதோடு அப்படி ஆளானவர்களும் திருந்தி நல்வழிப்பட்டு அவ்வழி செல்லாமல் இருக்க உதவ வேண்டும்.

சூதாட்டம் என்பது ஒருசிலர் ஆங்காங்கே செய்யும் தவறுகள் மட்டும் அல்ல பொழுது போக்கு மையங்களும் வணிக நிறுவனங்ஙகளும் பலவகையான சூதாட்டங்களை நடத்துகின்றன. அரசாங்கமேகூட லாட்டரி போன்ற சூதாட்டங்களை நடத்துகிறது. இவை யாவற்றையும் புறக்கணிக்க வேண்டியதும் ஒவ்வொரு மனிதனின் தலைசிறந்த ஒழுக்கமாகும். 

அதேபோல் குடிப்பழக்கம். அனேகம் பேர் மதுவுக்கு அடிமையாக இருக்கிறார்கள். மதுவுக்கு அடிமையானோரின் குடும்பத்தார் பெரும்பாலும் வறுமைக்கு ஆளாக நேரும்.. அத்தோடு தன் குடும்பத்தார் உட்பட மற்றவர்களின் வெறுப்புக்கு ஆளாவதோடு அப்படிப்பட்டவர்களின் வாழ்வே அர்த்தமற்றதாகி விடுகிறது.

பொதுவாக வாழ்வில் பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. பலர் அதைத் தாக்குப்பிடித்துப் போராடி முன்னேற முயல்கிறார்கள். ஆனால் வேறுபலர் மனத் துன்பங்களை எதிர்த்து நின்று வென்று அல்லது அத்தகைய முயற்சியிலேயே மனநிறைவடைவதற்குப் பதிலாக மனதை ஓர் அலாதியான இன்ப நிலையில் வைத்துக்கொள்ள மதுவை நாடுகிறார்கள். 

போதைப் பழக்கம் தாற்காலிகமாக மனதை அவயங்களில் இருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் வேறுபடுத்தி மனதை மயக்க நிலையில் இன்பமாக நினைக்கும் வண்ணம் வைத்துக் கொண்டாலும் அம்மயக்கம் தெளிந்தவுடன் எதையெல்லாம் மறக்க நினைத்து மதுவை நாடுகிறார்களோ அந்தப் பிரச்சினைகளும் துன்பங்களும் புத்துணர்ச்சியுடன் எதிர்நிற்கும். 

ஏனென்று சொன்னால் மதுவுக்காக நிறைய செலவாகிறது. ஒரு கட்டத்துக்கு மேல் சாதாரண மதுவகைகள் போதுமானதாக இல்லாமல்போய் நாசகரமான போதை மருந்துகளுக்கெல்லாம் அடிமையாக நேருகிறது. தொழில், உடல் நலம், மனநலம் அனைத்தும் பாதிக்கப் படுகின்றன. அதேநேரம் எதிர்நிற்கும் பிரச்சினைகள் பூதாகரமாக வடிவெடுக்கும். 

எனவே கவலையை மறக்கக் குடிக்கும் மதுவோ அந்தக் கவலையை மேலும் உரமிட்டு வளர்க்கிறது. தாற்காலிக மயக்கத்திற்காக நிரந்தரமான துன்பத்துக்கு வழிதேடும் செயலே மதுப் பழக்கமாகும். அதன் காரணமாக அழிந்த மனிதரும் சின்னாபின்னமான குடும்பங்களும் ஏராளம். 

எனவே மதுவை அறவே விரும்பாமல் இருப்பது மிக உயர்ந்த நிலை. அடிமையாகாமல் இருப்பது ஓரளவு நலம். ஆகவே மதுவை அறவே புறக்கணித்து உயர்ந்த நெறியில் வாழ உறுதி எடுப்போம்.

அடுத்ததாக பாலியல் ஒழுக்கக்கேடு. இதுவும் சமுதாயத்தில் சர்வ சாதாரணமாக இருந்து வரும் சீர்கேடாகும். ஆணும் பெண்ணுமாய் நிறைந்துள்ள இவ்வுலகில் ஒவ்வொரு ஆணும் பெண்ணையோ பெண் ஆணையொ விரும்புவது நியாயமே. 

ஆனால் கோடானு கோடிக் கணக்கான ஆண்களும் பெண்களும் நிறைந்துள்ள இச் சமுதாயத்தில் ஆண் பெண்;;;; உறவில் திட்டவட்டமான நெறிமுறைகள் அவசியமாகின்றது. தாய், மகள், சகோதரி அல்லது தந்தை, மகன், சகோதரன் போன்ற நெருக்கமான உறவுகளிலோ அதற்கு இணையான அல்லது மதிப்புமிக்க உறவுகளிலோ பாலியல் ரீதியான தவறுகள் அதிகம் ஏற்படுவதில்லை. ஆனால் மற்றபடி வயதுக்கேற்றாற்போல் பல்வேறு விதமாகப்  பாலியல் ஒழுக்கக் கேடுகள் நிறைய நடக்கின்றன.

பாலியல் ஒழுக்கக் கேடுகளுக்குக் காரணம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான நியதிக்கு உட்பட்ட வழிகளில் பாலுணர்வுகளைத் திருப்தி செய்யும் வாய்ப்பு கிடைக்கப் பெறாததும் திருப்தி யடையாததும் வயதுக்கும் சூழ்நிலைக்கும் பொருந்தாத தவறான பழக்கவழக்க பண்பாட்டுக் குறைபாடுகளுமே ஆகும். 

இதன் காரணமாய் அநாகரிகமும் பண்பாட்டுக் குறைபாடும் உடல்நலக்கேடும் ஏற்பட்டு சமுதாய நோக்கும் கடமைகளும் இன்னும் பல நல்ல அம்சங்களும் பாதிக்கப் படுகின்றன. ஆண்பாலோரை விடச் சமூகரீதியில் பெண்பாலோர் நிறையப் பாதிக்கப் படுகின்றனர். அமைதியாய் அழகாய்க்; கழிய வேண்டிய வாழ்வு விகாரப்பட்டு, சிறுமைப்பட்டுப் போகிறது.

எனவே அங்கீகரிக்கப்பட்ட அல்லது எல்லோர்க்கும் பொதுவான, நியாயமான, முரண்படாத, பிறருடைய வாழ்வில் குறுக்கிடாத, இழிவாகக் கருத முடியாத எவருக்கும் தீங்கு பயக்காத முறையில் பாலியல் தேவைகளைத் தீர்த்துக் கொள்வதுதான் சமுதாய நடைமுறைக்குப் பொருத்தமாகும். அதில் கணவன் மனைவி உறவுகளும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடும் மிகவும் உயர்ந்த முறைகள் ஆகும்.

கணவனை இழந்த கைம்பெண்கள், கணவனால் புறக்கணிக்கப்பட்ட இளம்பெண்கள், பலவந்தமாக அல்லது பல்வேறு சமூகச் சூழல் காரணமாக பாலியல் தொழிலில் சிக்கிச் சீரழிந்தவர்கள், உடல்ஊனமுற்றேர், அழகுக் குறைபாடுடையோர் மற்றும் வேறுமாதிரி குறைபாடுடையோரைப் பொருத்தவரை அவர்களுக்கு உதவுவதை விட பாலியல்ரீதியான குற்றச்சாட்டுககள் அல்லது அவதூறுகளைக் கூறும் இழிவான செயல்களைத் தவிர்க்கவேண்டும். 

அத்தகைய பாதிப்புக்கு ஆளானோர்கூட அதை சமுதாயத்தின் நோய் எனப் புறக்கணித்துவிட்டுத் தம் வாழ்வினை எந்த முறையைக் கையாண்டு சிறப்பானதாக்கிக் கொள்ளலாம் எந்தமுறையில் பயன்பாடுமிக்க வாழ்க்கையாகத் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்று சிந்தித்து வாழவேண்டும். 

பாலியல் தவறுகளுக்கு எவையெல்லாம் காரணங்களாக இருக்கின்றனவோ அந்தத் தனிநபர் மற்றும் சமூகக் கேடுகளைக் களைவதிலும் அக்கரை கொள்ளவேண்டும். அதுமட்டுமல்ல பாலியல் தவறுகளுக்குப் பெரிதும் காரணமாக இருக்கும் ஆண்களைமட்டும் யோக்கியர்களைப்போலவும் பெண்களைமட்டும் குற்றவாளிகளைப் போலவும் பார்க்கும் சமூகக் கொடுமைக்கு முடிவுகட்டவேண்டும்.

அதே போல் புகை பிடிக்கும் பழக்கமும் மிகவும் தீங்கான ஒன்றாகும். 

சுவாசிக்கும் காற்றின் மூலம் கொடிய விஷத்தன்மையுள்ள நச்சுப் புகையை உள்ளிளுப்பதன் மூலம் நரம்புகளுக்கும் மூளைக்கும் புத்துணர்ச்சி யூட்டுவதாய் எண்ணிக் கொண்டு தீங்கு விளைவிக்கிறோம். 

சோர்வடையும் உடலையோ மனதையோ உடலியல் ரீதியிலும் தார்மீகரீதியிலும் ஓய்வெடுத்தல், பயிற்சி செய்தல், சிந்தனை செய்தல் போன்ற நல்வழிகளில் தெம்பூட்டுவதற்குப் பதிலாக கொள்ளிக்கட்டையால் முதுகைச் சொறிந்து கொள்வதைப் போல் நச்சுப் புகையால் கிளர்ச்சியூட்டி நமக்கு நாமே தீங்கு விளைவித்துக் கொள்கிறோம். 

அதன் விளைவாக ஏராளமான பொருள் விரையமாவதோடு மீளமுடியாத உடல் நோய்களுக்கு இலக்காகிறோம். 

ஆனால் எந்த உணர்வை எதிர்பார்த்து நாம் புகை பிடிக்கிறோமோ அந்த உணர்வு உண்மையில் புகை பிடிக்காமல் இருந்தால்தான் கிடைக்கிறது. 

புகை பிடிப்பதால் உண்மையில் உடல், மனரீதியாகத் தீங்குதான் விளைகிறது. ஆனால் பழக்கத்தின் காரணமாக விட மனமில்லாமல் அதை நியாயப்படுத்த நாம் பல்வேறு காரணங்களைக் கூறிக் கொண்டாலும் அக்காரணங்கள்; உண்மைக்குப் புறம்பானவை.

உண்மையில் புகைப்பழக்கம் உடையவர்களின் அது சம்பத்தப்பட்ட உடலுறுப்புக்கள் அடிக்கடி அதை விரும்பும் வண்ணம் குணம் மாறுவது இல்லை. ஆதாவது புகையை எதிர்பார்த்து ஏங்கும் குணம் உடல்ரீதியாக ஏற்படுவது இல்லை. மனரீதியாக ஏற்பட்டு விடுகிறது. 

ஆனால் பழக்கத்துக்கு அடிமையாகிப் போன பின்பு விட முடியாமல் சிலநாள் அவதிப்பட்டாலும் பிடிவாதமாக விட்டு விட்டால் நஞ்சை உட்கொண்டு பாதிப்படைந்த உடல் படுவேகமாக மாற்றமடைந்து புத்துணர்வு பொங்குவதைக் காணலாம். நிறுத்துவதுதான் சிரமம். நிறுத்தி விட்டால் ஆனந்தம்தான். 

ஆனால் சிறிது சிறிதாகக் குறைப்பதென்பது எளிதானதல்ல. ஒருநாளைக்குக் குறைத்தால் மறுநாள் அதையும் சேர்த்து அதிகமாக புகை பிடித்தால் தான் திருப்தி ஏற்படும். எனவே தயை தாட்சண்யமின்றி மனோ திடத்துடன் புகை பிடிப்பதை உடனே நிறுத்த வேண்டும். அதுதான் எளிதாகும்.

அடுத்ததாக தீய சகவாசம். ஒட்டு மொத்தமான சமுதாயத்தில் மனித வாழ்வு என்பது தான், தனது குடும்பம், தனது உறவு என்ற அளவில் நிற்கக்கூடியது அல்ல. எட்டியவரையில் பரந்துபட்ட சமூகத்துடன் தொடர்புடையது. 

சமுதாயத்தில் வாழும் மனிதர் அனைவருமே உயர்ந்த பண்பாடுடையவர்கள் அல்லர். நல்லவரும் கெட்டவரும் சராசரி மனிதரும் நிரம்பியதுதான் மனிதசமூகம். அதில் வாழ்கின்ற சிறுவர் முதல் பெரியவர்வரை, அறிஞரில் இருந்து அறிவற்ற மூடர்வரை அத்தனை விதமானவரும் மாறுபட்ட குணமுடையவர்கள். ஒவ்வொருவருடைய பண்பும் மற்றவரை பாதிக்கக்கூடியது. அது சாதகமாகவும் இருக்கலாம் பாதகமாகவும் இருக்கலாம். 

இரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள் என்றால் இருவருடைய குணமும் ஒன்றுபோல இருக்குமென்று எதிர்பார்க்கமுடியாது. இருந்தால் நல்லதே. அப்படி இல்லாதபோதுதான் அதிலும் நிறைய வேறுபாடுகள் இருக்கும்போதுதான் முக்கியமான அதிலும் கவலைப்படவேண்டிய ஒன்று உருவாகிறது. 

ஆதாவது நல்ல பண்புகள் இருப்பவர் அது குறைவாக இருப்பவர் மூலம் தானும் அப்படிப்பட்டவர் ஆகிவிடக்கூடாதே என்பதுதான் அது. 

எதிர்மறையான இரு பண்புகள் உள்ளவர் நண்பராகும்போது அந்தப் பண்புகளில் எது மேலோங்கியுள்ளதோ அது மற்றவரைப் பாதிக்கும். 

அப்படியொரு பாதிப்பு வராது என்றால் அந்தப்பழக்கத்துக்கு அவசியமே இல்லை. 

கெட்டவர் ஒருவருடைய கெட்ட  பழக்கத்தால் அவருடன் பழகும் நல்லவர் கெட்டுப்போகாமல் சமாளிக்கிறார் என்பதற்காக அவருடன் பழகியும் நண்பராக இருந்தும் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளாத மற்றவருடைய நட்பு என்றுமே நல்லதல்ல. 

காரணம் ஒரு நாள் அந்தத் தீயவரால் நல்லவருக்குத் தீங்கு நேரும் என்பதுமட்டுமல்ல மற்ற நல்லவர்கள் மனதில் கெட்ட அபிப்பிராயத்துக்கும் ஆளாக வேண்டிவரும்.

நல்ல பண்புள்ளவராக இருப்பது பலம். தீயபண்புள்ளவராக இருப்பது பலவீனம். இரண்டும் சேரும்போது கெட்டவர் நல்லவர் ஆகும் வாய்ப்பைவிட நல்லவர் கெட்டுப்போகும் வாய்ப்புக்கள் அதிகம். 

காரணம் பலவான் ஆவது கடினமான ஒன்று. பலவீனன் ஆவது எளிதான ஒன்றாகும். 

ஆதாவது பாலும் நஞ்சும் கலக்கும்போது பால் தான் நஞ்சால் பாதிக்கப்படுகிறது. நஞ்சு பாலால் தன் நச்சுத் தன்மையை இழப்பதில்லை. எனவே தீயவர்களும் தன்னைப் பார்த்துத் திருந்தும் வண்ணம் ஒருவர் நல்லவராக இருக்கலாமே யொழிய தீயவர்களை நண்பராக்கிக்கொள்ளக் கூடாது.

பொதுவாக எந்த ஒரு தீய பழக்கத்துக்கும் ஆளாகக் கூடாது. ஆளாக விடவும் கூடாது. அப்படி ஆளாகிவிட்டால் திருந்த வேண்டும், திருத்த வேண்டும். 

தீய பழக்கத்தில் மூழ்கியிருக்கும் நேரங்களில் எல்லாம் அதன் நன்மை தீமைகளைப் பற்றி நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதனால் நேரும் பண நெருக்கடி, குடும்ப நெருக்கடி, சமூகத்தில் நேரும் அவமானம், தானும் தன்னைச் சார்ந்தவர்களும் படும் துயரம் போன்றவற்றை சதா எண்ணிப்பார்க்க வேண்டும். தன்னுடைய கெட்ட பழக்கத்தால், தனக்கேற்பட்ட கதியால் தன்னைச் சேர்ந்தவர்களின் வாழ்வு பாழாவதை எண்ணிப் பாரக்க வேண்டும். 

மதுக் கோப்பையைக் கையில் எடுக்கும் போது, சிகரெட்டோ பீடியோ பற்றவைக்கும்போது, கெட்ட வழியில் விபச்சாரத்துக்குப் போகும்போது, சூதாட்டம் ஆடும்போது வேறு தீய பழக்கங்களில் மனம் ஈடுபாடு கொள்ளும்போது அதன் வழியாக ஒவ்வொருவரும் அவரவர்களைச் சார்ந்த தாய்தந்தையர், உடன் பிறந்தோர், அன்பு மனைவியர், அருமைக் குழந்தைகள், அற்புதமான வாழ்வு, உயர்ந்த கடமைகள் இவற்றுக்கெல்லாம் நேரப்போகும் கதியைப் பார்க்க வேண்டும். 

அதுமட்டுமல்ல தவறான பாதையில் செல்லும் ஒவ்வொருவரும் தம்மைப்போலவே உலகில் ஒவ்வொருவரும் இருந்தால் உலகம் எப்படி இருக்கும் என்று சிந்திக்கவேண்டும்.

அப்படிப் பார்க்கப் பார்க்கத் தீய பழக்கங்களின் மேல் உள்ள ஈடுபாடு குறைந்து படிப்படியாக வெறுப்பும் அருவெறுப்பும் ஏற்பட்டு முற்றாக ஒழிக்கும் மனப்பக்குவம் ஏற்பட்டு பின்னர் ஒழித்தும் விடலாம். 

துவக்கத்தில் தடுமாற்றம் ஏற்பட்டாலும் அதன் பின்னர் ஏற்படும் புத்துணர்வு, வரப் போகும் புதுவாழ்வு, மானம் மரியாதை இவற்றை யெல்லாம் கருதும்போது முற்றாகப் புது மனிதராகி விடலாம். 

எனவே ஒவ்வொரு மனிதரும் தம் வளர்ச்சிப் போக்கில், இயற்கையின் நியதிக்கு மாறான, சமூக நலனுக்கு எதிரான தவறான பழக்கங்களை விட்டொழித்து அனைவருக்கும் இயைந்த இயற்கையோடு ஒத்த நல்ல பழக்கங்களைக் கடைப்பிடிப்பது மிக உயர்ந்த நெறியாகும். 

அதன் காரணமாக எல்லோருடைய வாழ்வும் செம்மைப் படுகிறது. முரண்பாடுகளின் தன்மை குறைந்து சீரான நன்மை தரும் போக்குகள் உலகின் வாழ்க்கை முறையாக மாறும். மானிடராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வினைப் புரிந்து கொள்ளவே பெரும்பகுதி வாழ்நாட்களைச் செலவழிப்பது மாறி உயர்ந்த பண்பாட்டு வளர்ச்சியின்; காரணமாக வாழ்வு துவக்கம் முதல் கடைசிவரை தென்றலைப் போன்று கழிந்து உலக வாழ்வே ஆனந்தமாகும்.

No comments:

Post a Comment