ss

Tuesday, April 24, 2012

ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 13 )


செயலூக்கம்.


உலகத்தைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் பல்வேறு தத்துவங்களைப் பற்றியும் பண்பாடு, நாகரிகம், தொழில,;;; முன்னேற்றம் போன்றவை பற்றியும் நாம் எவ்வளவு தெரிந்திருந்தாலும் செயல்பாடுதான் உண்மையான தகுதியைத் தீர்மானிக்கும், பிரதிபலிக்கும். 


நாம் என்ன கறறிருக்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதை விட என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்துத் தான் வாழ்க்கை அமைகிறது. 

ஏனென்று சொன்னால் இவ்வுலகம் பல்வேறு குணாம்சத்தை உள்ளடக்கிய நெருப்புப் பந்தாக இருந்த நிலை மாறி இன்றைய நிலைக்கு வந்ததற்குக் காரணம் இயற்கையின் தொடர்ந்த இயக்கத்தினாலான நிலைமாற்றமும் இயற்கையின் ஒரு பகுதியான மனிதனின் தொடர்ந்த செயல்பாடும் தான். 

மனித வாழ்வில் அவ்வப்போது எதை விரும்புகிறோமோ அல்லது எந்தத் தேவையை நோக்கி நமது உணர்வுகள் தூண்டப்படுகிறதோ அந்தத்திசை வழியில் செயல் படுவதுதான் வாழ்க்கையின் வளர்ச்சி விதியாக உள்ளது. எனவே செயல்பாடு சிறந்திருக்குமளவு வாழ்க்கைப் போக்கும் இயல்பான வளர்ச்சிக்கு இயைந்தாற் போல் சிறப்பாக இருக்கும்.                             

ஆனால் நடைமுறையில் எண்ணம், சொல், செயல்பாடு எப்படி இருந்தால் சிறப்பாக இருக்குமோ அப்படி இல்லை. அவை இணக்கமாக நல்லுறவு கொண்டதாக பெரும்பாலும் இல்லை. 

மனித வாழ்வில் அனைவருடைய தேவைகளையும் கணக்கில் கொள்ளாமல், தமது தேவை பிறருடைய தேவைகளுடன் முரண்படுவதைக் கணக்கில் கொள்ளாமல் தத்தம் தேவைகளை மட்டும் தீர்த்துக் கொள்ளப் போராடும் வாழ்க்கை முறைதான் அதற்குக் காரணம். 


அதன் காரணமாக குழப்பமும் பூசல்களும் கலாச்சாரச் சீரழிவுகளும் போட்டி பொறாமைகளும் ஒழுக்கக்கேடுகளும் இன்னும் பல பொருந்தா வாழ்க்கை முறைகளும் மலிந்து விட்டன. 

இந்த நிலையில் முக்குணங்களும் சீரழிந்து போயிருக்கும் நிலையில் செயல்பாட்டில் ஈடுபாடும் பொதுவாகவே போதுமான அளவு இல்லை. ஆனால் செயல்பாடு மந்தமாக இருக்குமளவு வாழ்க்கைப் பிரச்சினைககள் மேலும் கடினமாகவும்; சிக்கலாகவும் மாறுகின்றன. 

எனவே சராசரித் தேவைக்கு ஈடாகவோ அல்லது அதிகமாகவோ செயல்பாடு இருக்குமளவு தான் வாழ்க்கை சிறப்படையும், குறைபாடுகளைக் களைய முடியும். வாழ்க்கைப் பயணத்தை மேலும் ஒரு படி வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லமுடியும்.

உபயோகமற்றிருக்கும் இரும்புகூட துருப்பிடித்து பலமிழந்து போய்விடும். அதுபோல செயல்பாடற்ற மனித வாழ்வும் பலவீனப்பட்டு கடமைகளைச் செய்யும் தகுதியை இழந்து விடுகிறது. அதுமட்டுமல்ல சிந்தனையை மழுங்கடித்துச் சோம்பலை வளர்க்கிறது. செயலூக்கம் இல்லாதவர்கள் தம்மால் ஏதும் செய் இயலாதவர்களாக இருப்பதால் பிறர்க்குச் சுமையாகத்தான் இருப்பார்கள். 


ஆனால் செயல்பாடு இத்தகைய குறைபாடுகளைக் களைவதோடு நமது வாழ்வின் கடமைகளைச் செய்ய உதவுகிறது. 

சாதாரணமாகக் கிடக்கும் பஞ்சை நமது விருப்பம்போல் பிய்த்துப் பிய்த்து எறியலாம். ஆனால் அதே பஞ்சுடன் முறுக்கேற்றப்படுதல் என்னும் செயல்பாடு சேர்ந்து கயிறாக மாறிவிட்டால் நம்மால் எளிதாக பிய்த்து எறிய முடியாதபடி பலம் பெற்று விடுகிறது. 

ஒரு இயந்திரம் இயங்கிக்கொண்டிருக்கும்போது அதன் அருகில் செல்லக்கூட யோசித்துத்தான் செல்கிறோம். ஆனால் வெறுமனே நிற்கும் இயந்திரத்தைக்கண்டு யார் பயப்படப் போகிறார்கள்? 

அதுபோல்தான் மனித வாழ்விலும் செயல்பாடு என்பது பிரதான பங்கு வகிக்கிறது. ஒரு சோம்பேரியைப் பார்ப்பதற்கும் ஒரு செயலலூக்கமுள்ளவனைப் பார்ப்பதற்கும் நமது பார்வையிலேயே வேறுபாடு உள்ளதல்லவா? 

வயலில் வேலை செய்யும் மாடுகூட நன்கு சுறுசுறுப்பாக இயங்கும் மாடு விலைபோகுமளவு சண்டிமாடு விலைபோகாது.எனவே செயலூக்கம் என்பது இன்றியமையாதது. அது சரியான வழியில் செலுத்தப்பட வேண்டும். சிக்கல்களை அறுத்துத் தெளிவான வாழ்க்கைப் பாதையில் முன்னேறக்கூடிய முறையில் செயல்பாடு இருக்க வேண்டும். உலக மாந்தரின் ஒட்டுமொத்த செயல்பாட்டில் ஒவ்வொருவர் பங்கும் சிறப்பாக இருக்க வேண்டும். அந்த அளவு ஒட்டு மொத்த செயல்பாடு மேலும் மேலும் பலமும் சிறப்பும் பெற்று உலகமும் உலகவாழ்வும் அதற்கேற்றாற்போல் அற்புதமாக இருக்கும். நமது வாழ்நாள் என்பது குறிப்பிட்ட காலஅளவுள்ளதாக இருப்பதால் நமது செயல்பாடும் செயலூக்கமும்தான் அதனைப் பயனள்ளதாக்குகிறது. நோய்க்கிருமிகள் ஒருவரிடமிருந்து ஒருவருக்குத் தொற்றக்கூடியது. அதேபோலச் சோம்பலும் செயலின்மையும் தம்மோடு சேர்ந்த பிறரையும் தொற்றிக்கொள்ளக் கூடியதாகும்.

களை எடுக்கப்படாத பூமியில் களைகள் மேலும் பலம் பெற்று பயிர் நாசமடையும். அதுபோல் சோர்வால் அல்லது மனத்துயரத்தால் அல்லது வேறு எந்தக் காரணத்தாலும் செயல்படாமல் இருக்குமளவு துன்பங்கள் பெருகி வாழ்வு நாசமடையும். எனவே வாழ்வின் சகல அம்சங்களிலும் முக்கியமான பாத்திரம் வகிக்கும் செயலூக்கமானது புறக்கணிக்கமுடியாத அம்சமாகும். 


வரலாற்றை எடுத்துக்கொண்டாலும் வெற்றிபெற்றவர்களின் வரலாறெல்லாம் செயலூக்கமுள்ளவர்களின் வரலாறாகத்தான் இருக்கும். மனித இனத்துக்கு அளப்பறிய கண்டுபிடிப்ப்புகளை வழங்கி மனித சமுதாயத்தை மேன்மைப்படுத்திய மேதைகள் எல்லாம் செயலூக்கமற்றவர்களாக இருந்திருந்தால் இன்றும் நாம் குகைகளிலும் மரப் பொந்துகளிலும்தான் இருந்திருப்போம். தனிமனித முன்னேற்றத்துக்கு எப்படி தனிமனித செயல்பாடு முக்கியமானதோ அதுபோல ஒட்டுமொத்தமான சமுதய முன்னேற்றத்துக்கு மொத்த சமுதாயத்தின் செயல்திறனும் முக்கியம். அத்தகைய செயல்திறன் மேலோங்கியுள்ள சமூகங்கள் வலிமைவாய்ந்ததாக விளங்குவதையும் செயல்திறனற்ற சமூகங்கள் முன்னேறாததுமட்டுமல்ல பிறர்க்கு அடிமைப்படவேண்டி இருப்பதையும் வரலாற்றில் காண்கிறோம்.ஆங்கிலேயர்களும் ஐரோப்பாவின் மற்ற நாடுகளும் ஜப்பானும் சீனாவும்கூட செயலூக்கத்துடன் இருந்ததால்தான் இன்று உலகின் முன்னணி நாடுகளாகப் பலமும் வளமும் பெற்று விளங்குகிறார்கள். 

ஐரோப்பிய நாடுகளில் தொழிற்புரட்சி நடந்ததும் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதும் கடற்பயணங்களின்மூலம் புதுப்புது நாடுகளைக் கண்டறிந்து குடியேறியதும் தங்கள் செயல்பாடுகளின் சிறப்பால்தான் என்பதை யாரால் மறுக்கமுடியும்? 

ஆனால் இந்தியா போன்ற நாடுகள் பழம்பெருமையைப் பேசிக்கொண்டு மனித இனத்துக்குத் தேவைப்படாத குணங்களையெல்லாம் கொண்டிருப்பதால்தான் பிறர்க்கு அடிமைப்படவேண்டியதாய் இருந்தது. இன்றும் சின்னஞ்சிறு நாடுகளிடம்கூடக் கையேந்தி நிற்கும் அவலநிலையில் அல்லவா இருந்துவருகிறோம்! எனவே தனிநபர் வாழ்விலும் சமூக வாழ்விலும் செயல்பாடும் செயலூக்கமும் தவிர்க்கமுடியாத அடிப்படைகளாக உள்ளன. அதை எந்த அளவு உணர்ந்து நடைமுறையில் பின்பற்றுகிறோமோ அந்த அளவு தனிநபர் வாழ்வும் சமூகவாழ்வும் சிறப்பாக இருக்கும்.
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா 
ஊக்க முடையா னுழை – குறள்No comments:

Post a Comment