ss

Tuesday, April 24, 2012

ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 18 )


கல்வி

ஆதிமனிதன் விலங்குகளோடு விலங்காய் வாழ்ந்தான். ஓரளவு விலங்கு நிலையில் இருந்து மாறுபட்டு குணாம்ச ரீதியில் முன்னேறிய பின்னும் காட்டுமிராண்டியாகவே வாழ்ந்தான். காரணம் விலங்கு நிலையில் இருந்து இன்னும் போதுமான தூரம் விலகி வரவில்லை. அதன்பின் மனித உடலமைப்பில் மேலும் மேலும் மாறுதல் ஏற்பட வாழ்க்கை முறைகளும் மாறுகின்றன. 

விலங்கொடு விலங்காய் வாழ்ந்தவன் வேறுபட்டவனாக மட்டுமல்ல அவற்றை அடக்கி ஆள்பவனாகவும் மாறினான். 

விலங்கினங்களை மட்டுமா! இயற்கைச் சக்திகளைக் கூடத் தன் தேவைக்குப் பயன்படுத்;திக் கொண்டான். இந்தப் பரிணாம வளர்ச்சியை ஒட்டியே மனிதனின் உணர்வுகளும் விலங்கு மட்டத்திலிருந்து படிப் படியாக உயர்ந்து சிந்திக்கும் ஆற்றல் பெறுகிறான். 

வாழ்க்கை முறை மேம்பாடு அடைய அடைய சிந்தனையை, தேவையை, கருத்தை, செய்தியை வெளிப்படுத்த வேண்டிய சமூகத்தேவை ஏற்பட்டது. வெறும் கத்தலாக இருந்த குரல் ஏற்ற இறக்கங்களைப் பெற்று செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் மொழியாக மாறியது. 

பறவைகளும் பிற விலங்குகளும் தங்கள் குரலால் சில செய்திகளைப் பரிமாறிக் கொண்டாலும் அது மிகக் குறுகிய வாழ்க்கையின் சில அடிப்படைத் தேவைகளைப் பரிமாறிக் கொள்ளும் சங்கேத மொழியாக மட்டும் உள்ளதே யொழிய மனிதனைப் போன்ற சிந்தனையின் பின்னணியில் வெளிப்படும் கருத்துக்களை உள்ளடக்கியதாக அவை இல்லை. 

எனவே உணர்வுகளையும் தேவைகளையும் சில ஒழுங்கமைந்த செயல்பாடுகளையும் மட்டும் வெளிப்படுத்தும் மற்ற உயிரினங்களின் குரலை மனித இனத்தின் மொழியோடு ஒப்பிட முடியாது.உலகம் முழுவதும் பரவிய மனிதன் உலகின் பல்வேறு பாகங்களில் பல்வேறு விதமாகப் பேசவும் அதை வரிவடிவில் எழுதவும் கற்றுக்கொண்டான். அவையே பல்வேறு மொழிகள் ஆயின. 

அவ்வப்போது எழும் கருத்துப் பரிமாற்றத்துக்காகப் பயன்பட்ட நிலையில் இருந்து வரையறுக்கப்பட்ட, அவ்வப்போது உருவாக்குகின்ற, உணருகின்ற வாழ்க்கை நெறிமுறைகளைப் போதிக்கும் சாதனமாகவும் மொழி மாறியது. 

இயற்கையைப் புரியாத பயங்கர அனுபவங்கள் நிறைந்த ஒன்றாக எண்ணி வாழ்ந்தது போய் அது சம்பந்தமாக மனித சிந்தனையிலும் அனுபவத்திலும் வளர்ந்த புதுப்புது கருத்துக்களையும் கண்டுபிடிப்புகளையும் எல்லா மக்களுக்கும் பரப்பவேண்டிய அவசியமும் இருந்தது. 

அத்தகைய போதனைகளையும் அதிலிருந்தும் நூல்களிலிருந்தும் வாழ்க்கை அனுபவங்களில் இருந்தும் புதுப்புது விபரங்களை அறிந்து கொள்வதையுமே கல்வி என்கிறோம்

காலம் மாற மாற மனிதன் மேலும் மேலும் சகல துறைகளிலும் முன்னேறி இவ்வுலகில் தனிப்பெரும் வல்லமை மிக்கவனாக மாறிவிட்டான். மனிதனின் வரலாறும் வாழ்க்கை முறைகளும் மிக மிக சிக்கலாக மாறியது. 

எனவே இன்றைய உயர்ந்த நாகரிக வாழ்கையின் பின்னணி என்ன? வரலாறு என்ன? நமது தேவைகள் என்ன? பிரச்சினைகள் என்ன? வாழ்க்கையின் சகல அம்சங்களும் தினமும் மாறிக்கொண்டே இருக்கையில் அதற்கீடாக அல்லது மேலும் வழிகாட்டத் தக்க விதத்ததில் நாம் வாழ்வது எப்படி? சுருங்கக் கூறின் மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? என்பன போன்றவற்றை ஒவ்வொருவரும் உணர்தல் அவசியம். 

அதற்குக் கல்விதான் அடிப்படை. 

அனுபவக் கல்விக்கு முன்பாக அதுவரையிலான மனிதகுல அறிவைப் பல்வேறு முறைகளில் கற்பிக்கும் கல்வியின் வாயிலாகப் பெற்றால்தான்; அந்தந்தக் காலகட்டத்துக்கு ஏற்பவும் அதைத்தொடர்ந்தும் சிறப்பாக வாழ முடியும்.

எனவே வாழ்வாங்கு வாழ்ந்த பெருமக்களின் பொருத்தமான அறிவுரைகளையும் அறிஞர்களின் தத்துவங்களையும் கலை இலக்கியங்களையும் அறிவியலாளரின் கண்டுபிடிப்புக்களையும் மொழிகளின் நுணுக்கமான அம்சங்களையும் நாகரிகத்தையும் பண்பாட்டையும் மனிதாபிமானத்தையும் வாழ்கைக்கான தொழில்கள் பற்றியும் கற்க வேண்டும். 

கல்விக்கு யாரும் விதி விலக்கல்ல. 

எந்த அளவு ஒருவர் கல்வியில் சிறந்து விளங்குகிறாரோ அந்த அளவு உலகையும் வாழ்வையும் சரியாகப் புரிந்துகொள்ளவும் தான் கற்ற கல்வியையும் அதனால் கிடைத்த அறிவையும் தனக்கும் பிறர்க்கும் பயனுற்றதாகப் பயன்படுத்தவும் தகுதியைப் பெறுகிறார். ஆனால் அத் தகுதியை வளர்த்துக்கொள்வதைவிட பெற்ற கல்வியறிவைப் பயன்படுத்தி தன்னளவில் தான் விரும்பும் சுகமான வாழ்வு வாழ மட்டும் பெரும்பாலோர் விரும்புவதால் கல்வியின் பயன் இருக்கவேண்டிய அளவு மகத்துவத்துடன் இல்லை.

இவ்வுலகில் அடங்கியுள்ளவை ஏராளம். இவ்வுலகின், இயற்கையின் ஓர் அம்சமான மனிதன் இதுவரை கண்டறிந்துள்ளது கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் ஏராளம். இனி வருங்காலத்தில் சாதிக்கப்போவதையும் உலகில் அடங்கியுள்ள இதுவரை அறியப்படாத புதிர்களையும் ஒப்பிடும் போது மிகவும் அற்பம்தான். எனவே மேலும் மேலும் கற்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். 

சாகும்வரை கற்றல் அவசியம்.

கல்வியின் மூலம்தான் ஒவ்வொருவரும் தமது வாழ்வையும் ஆற்றியுள்ள பணிகளையும் உயர்ந்த தர்மங்களுடன் ஒப்பிட்டு தவறுகளைக் களைந்து சரியான நெறிசார்ந்து  வாழ்க்கைப் பயணத்தைத் தொடர முடியும். 

நம் கண் முன்னால் விரிந்து செல்லும் அண்டத்தில் கற்பதற்கு அளவற்ற செய்திகள் அடங்கியுள்ளன. ஒருவரே அனைத்தையும் கற்றுவிட முடியாது. ஆனால் ஒருவர் கற்கும் கல்வியானது குறைவானதாக இருந்தாலும் கூடுதலாக இருந்தாலும் அது முழுமையானதாக இருக்கவேண்டும். 

இந்த உலகையும் உலக நடைமுறையையும் சரியாகப் புரிந்துகொள்ள உதவக்கூடியதாக இருக்கவேண்டும். அந்த மட்டத்தில் நின்று தான் கற்றதை பிறர்க்கு அவர் ஏற்றுக்கொள்ளும் அளவு விளக்கக்கூடியதாக இருக்கவேண்டும். 

ஒருவர் கற்ற கல்வி சிறந்ததாக இருப்பின் அவர் அதற்கும் மேலான எந்த ஒரு துறையைப் பற்றியும் உடனே சரியாகப் புரிந்துகொள்ளக் கூடியவராக இருப்பார். அப்போதுதான் அக்கல்வியால் தானும் தான் வாழும் சமூகமும் பயன்பெறமுடியும்.

இன்று உலகில் மாபெரும் கல்வி நிறுவனங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் இருக்கின்றன. ஆவற்றின்மூலம் கற்பதும் கற்ற கல்வியின் மூலம் சாதிப்பதும் முடிவின்றிப் போய்க்கொண்டுதான் உள்ளது. 

ஆனால் எந்தக்கல்வி மனித சமுதாயத்துக்கு மகத்தான வழிகாட்டியாக இருக்கவேண்டுமோ அந்தக்கல்வி அப்படிப்பட்டதாக இருக்கிறதா?

ஒருபக்கம் கல்விமூலம் சாதித்துக்கொண்டிருந்தாலும் மறுபக்கம் அந்தக் கல்வி அனைத்து மக்களுக்கும் சரியாகப் போய்ச் சேரவில்லை என்பதுதானே உண்மை? மனித குலத்தின் உயர்ந்த மேம்பாட்டுக்குப் பயன்படவேண்டிய கல்வி விற்பனைப் பொருள் ஆகிவிட்டதால் அதில் உயர் தர்மங்களின் முக்கியத்துவம் மங்கிவருகிறது. 

இன்று மனித குலம் அழிவைநோக்கிப் போய்க்கொண்டிருப்பதைப்பற்றிக்கூட போதுமான அளவு விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் இந்தக் குறைகளைக் களைந்து மனித சமுதாயம் சரியான பாதையில் பயணம் செய்யவேண்டுமானால்கூட அதற்கும் கல்விதான் அடிப்படையாக இருக்க முடியும். 

வயது முதிர்ந்த மரணத்தை எதிர்நோக்கியுள்ள காலத்தில்கூட அதுவரை தான் வாழ்ந்த அனுபவத்தால் கிடைத்ததை சிந்தனையால் கண்டறிந்ததை இவ்வுலகுக்கு எப்படிப் பயனுள்ளமுறையில் பயன்படுத்துவது என்பதைக் கற்க வேண்டும். ஓரு மனிதன் சாகும்போது உதிர்க்கும் கடைசி வார்த்தைகூடத் தனது வாழ்நாளில் கற்றதன் ஒரு உயர்ந்த வெளிப்பாடாக இருக்க வேண்டும். 

எனவே நமது இன்றியமையாத வாழ்க்கை நெறிகளில் கல்வி அடிப்படையான ஒன்றாகும்.
No comments:

Post a Comment