ss

Tuesday, April 24, 2012

ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (19 )


உழைப்பு


உழைப்பு என்பது வாழும் உயிர் ஒவ்வொன்றின் அவசியக் கடமையாகும். எவ்வகையிலான உழைப்பு என்பதில்தான் வேறுபாடு. 


உண்பதையே உழைப்பாகச் செய்து கொண்டிருக்கும் உயிர்களில் இருந்து திட்டமிட்டுப் பல்வேறு வகையான தொழில்களைச் செய்யும், பிறர் உழைப்பையும் பயன்படுத்திக கொள்ளும் மனிதன் வரை பல்வேறு விதமாக உழைப்பு வெளிப்படுகிறது. எது எப்படியோ உண்பதற்காகவாவது சிறிதளவாவது உழைக்காமல் எந்த உயிரும் வாழ முடியாது. மனிதனைத் தவிர பிற உயிரினங்கள் உண்பதையும் உணவைத் தேடுவதையுமே வாழ்வின் பிரதான வேலையாக வைத்திருப்பதால் கூடு கட்டுவதற்கும் தங்குமிடங்களை தமக்குத் தோதாக அமைத்துக் கொள்வதற்கும் இனவிருத்திக்காக துணையைத் தேடும் முயற்சிக்குமாகக் குறைந்த அளவில் இருந்து ஓரளவுவரை உழைக்கின்றன.
ஆனால் மனிதனைத்தவிர உலகில் வேறு எந்த உயிரினமும் திட்டமிட்ட முறையில் கருவிகளை உருவாக்கிப் பயன்படுத்தி உழைப்பது இல்லை. யானை, குதிரை, மாடு, எருமை, ஒட்டகம், நாய் இன்னும் பல உயிரினங்களைப் பழக்கப் படுத்தி வேலை வாங்கினாலும் அவை தாமாக விரும்பி உழைப்பதுமில்லை கருவிகளைக் கையாள்வதுமில்லை. மனித உழைப்புடன்; ஒப்பிடவும் முடியாது.மனிதன் உணவுக்காகவும் பாதுகாப்பாக உயிர்வாழ்வதற்காகவும் மட்டும் போராடிக் கொண்டிருந்த காலத்தில் இருந்து இன்று நவீன அறிவியல் உலகில் எண்ணற்ற வசதிகளுடன் வாழும் காலம்வரை முன்னேறியதற்குக் காரணம் உழைப்பும் தொடர்ந்து வளர்ந்து வந்த அறிவியலும்தான்.என்னதான் நவீன அறிவியல் வளர்ந்திருந்தாலும் மனிதன் தன்னுடைய உழைப்பையும் செலுத்தியாக வேண்டும். காரணம் எத்தகைய நவீன கருவியும் மனிதனின் உழைப்பால்தான் உருவாக்கப் படுகின்றன. 

கருவிகள் மனிதனின் உழைப்பை எளிமைப் படுத்துமே தவிர அதை இல்லாமல் செய்துவிட முடியாது.

யார் யாரெல்லாம் நன்கு உழைக்கிறார்ககளோ யாருடைய உழைப்பெல்லாம் சரியான

விதத்தில் பிரயோகிக்கப் படுகின்றதோ யாரெல்லாம் பிறருடைய உழைப்பை அதிகமாகப் பயன் படுத்திக் கொள்கிறார்களோ யாருடைய உழைப்புக்கெல்லாம் உயர்ந்த சிந்தனையும் திட்டமும் வழி காட்டுகின்றதோ அவர்களெல்லாம் இவ்வுலகில் சிறப்பான வாழ்வு வாழ வாய்ப்புகள் அதிகம். இன்றைய காலகட்டதிதில் ஒழுங்கற்ற அராஜகமான பொருளாதார நிலைமைகள் நிலவுவதால் உழைப்பவருக்கு வேலையில்லாமல் போவதும் அறிவாளியின் சிந்தனை வீணாகப் போவதும் சகஜமாகி விட்டன. ஆனாலும் உழைக்காமல் வாழ வழியில்லை. எனவே அனைவரும் உழைப்பதோடு உழைப்பதற்கான வாய்ப்புகளை உத்திரவாதப் படுத்துவதையும் கடமையாகக் கொள்ள வேண்டும.; சிக்கலான வாழ்க்கைமுறையின் காரணமாக ஒரேமாதிரியாக அல்லாமல் பல்வேறு விதமாக உழைப்புப் பிரிவினை ஏற்பட்டு விட்டது. உடலுழைப்பு, அறிவுழைப்பு என்று இருவகையாகி விட்ட நிலையில் உடலுழைப்புத் தொழில்களுக்கு வழிகாட்டும் அறிவியல் தொழில்நுட்பத் துறையிலும் பொருளாதார, நிர்வாக, கல்வி, இலக்கியம், கலைத் துறையிலும் மூளையுழைப்பு பிரதான பங்கு வகிக்கிறது.ஆனால் ஓவ்வொருவரும் உழைக்கும் அளவுதான் வாழ்வில் முன்னேற முடியும். நேரடியாக உழைக்காமல் பிறருடைய உழைப்பைச் சார்ந்திருப்போர்கூட நிர்வாகத் திறமையுடன் உழைக்காமல் முன்னேற முடியாது. உழைப்பு என்பது மனித வாழ்வுக்கு அடிபபடை நிபந்தனையாக இருப்பதால் அதைக் கடினமான பணியாகக் கருதாமல் கலையம்சம்போல் கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வுலகில் மனிதனால் ஏற்பட்ட ஒட்டுமொத்தமான மாற்றங்களுக்கும் மனித உழைப்புதான் காரணம். எனவே தனிமனித வாழ்விலும் உழைப்பின் பாத்திரத்தைப் புறக்கணித்து யாரும் வாழமுடியாது. உழைப்பின் பயனாக உடலும் மனமும் ஆரோக்கிய வாழ்வுக்குத் தகுதி பெறுவதோடு இவ்வுலகின் அத்தனை நன்மைகளையும் அனுபவிக்கவும் தகுதி பெறுகிறோம்.


ஆக்கல் பணிக்கு மட்டுமல்ல இன்பமாய் வாழ்வை அனுபவிக்கவும் உழைப்பு நம்மைப் பக்குவப் படுத்துகிறது. இத்தனை சிறப்புக்கள் உழைப்புக்கு இருந்தாலும் உழைப்பு வாழ்க்கையின் அடிப்படைத் தேவையாகி விட்டாலும் அதன் எதிர் மறையான விளைவுகளையும் மறக்க முடியாது. எந்த உழைப்பு மனிதனை நாகரிகத்தின் உச்சிக்கும் அனைத்து உயிரினங்களையும் அடக்கியாள்வதற்கும் கொண்டு சென்றதோ அதே உழைப்பால் தான் மனித இனத்துக்கே பேரழிவு நேரவிருக்கிறது. 

மனித உழைப்பும் அறிவும் நம்மைத் தாங்கி நிற்கும் பூமியின் மீதும் இயற்கை வளங்கள் மீதும் பிரயோகிக்கப்பட்டுத்தான் இன்றைய சாதனைகள் எல்லாம் நிகழ்த்தப் பட்டுள்ளன. 

மனிதத் தேவைகளுக்காக மற்ற உயிரினங்களின் வாழ்வியல் தேவைகளைப் பற்றிக் கவலைப்படாமல் அனைத்துயிர்களின் வாழ்வுக்கும் அடிப்படையாக விளங்கும் இயற்கை வளங்களும் பசுமை நிறைந்த காடுகளும் சூரையாடப்பட்டு விட்டன. மனித வாழ்வுக்கும் சேர்ந்தே ஆபத்து வரும் என்ற உணர்வின்றி சுயநலமும் தாற்காலிக ஆதாயமும் மட்டும் நோக்கமாகக் கொண்டு உயிரினங்களின் ஆதாரத் தளங்கள் அழித்தொழிக்கப்பட்டு வருகின்றன. 

உணவும் நீரும் காற்றும் நஞ்சு நிறைந்ததாகிவிட்டன. உயிரின வாழ்க்கைக்கு உகந்த பூமிப்பரப்பு சுருங்கிக்கொணடே வரும் அதேநேரத்தில் உயிரின வாழ்வுக்குப் பயன்படாத - என்றென்றும் பயன்படாத - பூமிப்பரப்பு விரிவடைந்து கொண்டே வருகிறது. 

குடிதண்ணீர் ஆதாரங்கள் சாக்கடைகளாகவும் சுவாசிக்கும் காற்று மூச்சுத் திணரக்கூடியதாகவும் எந்த உணவில் எவ்வளவு நஞ்சு கலந்துள்ளதோ என்று பயப்படும்படியாகவும் நிலமை அபாயகரமாகப் போய்க் கொண்டுள்ளது.

அத்தகைய ஆபத்திலிருந்து மனித இனம் தப்பித்து நீண்ட காலம் வாழ வேண்டுமென்றால் அதற்கு ஒரேவழிதான் உள்ளது. ஆதாவது மனித இனத்துக்கே உரித்தான சிறப்புப் பண்பான சர்வ வல்லமை படைத்த உழைப்புச் சக்தியை இயற்கை வளங்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதை நிறுத்துவதுதான் அந்த ஒரே வழி. 

பூமியின் அடிப்படைக் கட்டமைப்பான நிலம், நீர், காற்று, நிலத்தடி வளங்கள் இவற்றைச் சீர் குலைக்காமல் தாவரங்களில் இருந்து கிடைக்கும் காய்கறிகள், பழங்கள், பருப்புகள், தானியங்கள், சாறுகள் போன்றவற்றையும் நீரையும் பயனற்ற மரங்களையும் அல்லது அடிக்கடி தேவைக்கேற்ப உருவாக்கக்கூடிய மரங்களையும் (குடியிருப்பு மற்றும் பல தேவைக்காக)கால்நடைகளையும் தேவைப்பட்டால் அவற்றின் மாமிசம், பால், தோல் போன்றவற்றையும் சார்ந்து வாழ்வதும் அந்தத் திசையில் உழைப்பைச் செலுத்துவதும் தான் சரியான வழி. 


ஆனால் அது முடியாது என்கிற அளவுக்கு மனித இனம் அழிவுப் பாதையில் திரும்ப முடியாத எல்லையைத்தாணடி விட்டதால் மனித இனத்தின் பேரழிவு தவிர்க்க முடியாது. மனிதன் தன் தவற்றைத் திருத்திக்கொண்டு இயற்கையைப் பாதுகாக்க கடும் முயற்சி மேற்காண்டால் நமது இனம் வாழும் காலத்தை வெகுகாலம் நீட்டிக்கலாம். 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையைப் பாழ்படுத்தி அதன்மேல் கட்டப்பட்ட மனித நாகரிகத்தைக் காக்க அதே அளவு உழைப்பையும் முயற்சியையும்  உலகு முழுவதும் அனைத்து உயிர்களுக்கும் ஏற்புடையதாக இயற்கையை மாற்ற காடுகளாலும் பசுஞ்சோலைகளாலும் நிறைந்திடச்செய்வதில்தான் மனித இனத்தின் எதிர்காலம் உள்ளது. அந்தத்திசை வழியில் நமது உழைப்பு என்னும் கடமையைச் செலுத்துவதும் அந்தத் திசைவழி மற்றவரையும் சிந்திக்கச்செய்ய உழைப்பதும்தான் உயர்ந்த ஒழுக்கமாகும். 

No comments:

Post a Comment