ss

Thursday, April 12, 2012

பசு வதை ( 1 )






பசுவைக் கொல்லாமா?

நமது நாட்டில் பசுவுக்கு பாரம்பரியமாகவே மிகுந்த சிறப்புகள் உண்டு. காரணம் நமது வாழ்வில் அதன் பங்கு மகத்தானது.

அதனால்தான் அவற்றைக் கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தினாலும், அவற்றின் +பாலைச் சுண்டக் கரந்தாலும் வெட்டிக் கூறு கூறாக்கி மாமிசமாக உண்டாலும் அப்போதும் புனிதமான ஒன்றாகவே கருதுகிறோம்.

அதன்காரணமாக  பசுவை வணங்குவதும் மக்களின் வாழ்வில் ஒரு அம்சமாகிவிட்டது.

பசுவை மக்கள் இரண்டுவிதமாக அணுகுகிறார்கள். ஒன்று அதன் மாமிசத்தை உண்பவர்கள். இரண்டாவது பசுமாமிசம் உண்ணாதவர்கள்.



பசுமாமிசம் உண்பவர்கள் மற்ற பலவகையான மாமிச உணவைப்போலவே பசுமாமிசத்தையும் கருதி உண்கிறார்கள். மற்றவற்றைவிட மலிவானதும்கூட.

அப்படி உண்ணும் வழக்கம் இல்லாதவர்கள் மாமிசம் உண்ணாதது மட்டுமல்ல அப்படி உண்பது தவறென்றும் பாவச் செயலென்றும் கருதுகிறார்கள். அப்படி எண்ணுவது மட்டுமல்ல உண்பவர்களைத் தவறான பார்வையிலும் பார்க்கிறார்கள். வெறுக்கவும் செய்கிறார்கள்.

ஆனால் ஒரு கேள்வி என்னவென்றால் பசு மாமிசம் உண்ணாதவர்கள் அப்படி உண்ணாமல் இருக்கும் பழக்கத்தைத் தவிர பசுவை அணுகுவதில் உண்பவர்களைவிட எந்த அம்சத்தில் வேறுபடுகிறார்கள் என்பதே?

பசு மாமிசம் உண்பவர்கள் எல்லாம் அப்படிப்பட்ட பாவகாரியத்தைச் செய்தே தீரவேண்டும் என்ற எண்ணத்தில்தான் உண்கிறார்களா? 

உண்ணாதவர்கள் எல்லாம் அப்படிப்பட்ட பாவத்தைச் செய்யக்கூடாது என்ற எண்ணத்தில்தான் உண்ணாமல் இருக்கிறார்களா? 

அப்படி ஒரு பழக்கம் இல்லை என்பதைத் தவிர வேறு வித்தியாசம் இல்லை என்பதே உண்மை!

பசுவைக் கொன்று தின்னக்கூடாது என்று எண்ணுபவர்கள் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அப்படிச் சரியான பதில் சொல்லும்போதுதான் அவர்களின் நிலை நியாயமானது என ஒப்புக்கொள்ள முடியும்.

ஆதாவது பசு ஒன்றைத் தவிர மற்ற விலங்குகளையும் பறவைகளையும் கொன்று தின்னலாமா என்பதே அது.

பசுவைக் கொன்றால் என்னதவறோ அந்தத் தவறு எருமை, ஆடு, பன்றி, கோழி, முயல், காடை, கவுதாரி, புறா இவற்றையெல்லாம் கொன்று தின்றால் பொருந்தாதா?

கடைசியாகச் சொல்லப்படும் ஒரே காரணம் மற்றவிலங்குகள் எல்லாம் உணவுக்காகவே இருப்பவை. ஆனால் பசு மட்டும் நமக்குப் பால் கொடுக்கிறது. வயலில் உழுகிறது. வணங்குவதால் புனிதமானது என்பதுதானே? எருமைகூட அதைத்தானே செய்கிறது?

சரி. மற்ற விலங்குகளை விட்டுவிட்டு பசுவை மட்டும் எடுத்துக்கொள்வோம். அதைப் புனிதமான ஒன்றாகக் கருதிக் கொல்லக்கூடாது உண்ணக்கூடாது என்பவர்களுக்கு சில கேள்விகள்:

ஏன் மற்றவிலங்குகள் ஏராளமாககக் கொல்லப்படும்போதும் உண்ணப்படும்போதும் பசுவைமட்டும் விதிவிலக்காகக் கருதுகிறீர்கள்?

ஒரு பசுவை விலைகொடுத்து வாங்கும்போது எத்தனைபேர் அது புனிதமான ஒன்றானதால் எல்லாப் பசுக்களையும் ஒன்றுபோல் பாவித்திருக்கிறீர்கள்?

எத்தனைபேர் பசுவின் ஆரோக்கியம், உடம்பில் இருக்கக்கூடிய கறியின் எடை, அதற்கான கூறுகள் பற்றிக் கலைப்படாமல் வாங்கியிருக்கிறீர்கள்?

எத்தனைபேர் அதன் உத்தேச வேலைத்திறன், கறவைத்திறன் போன்றவற்றைச் சோதிக்காமல் வாங்கியிருக்கிறீர்கள்?

வாங்கும் பசுமாட்டையோ காளைமாட்டையோ அடித்து உதைத்து வேலை வாங்காமல் எத்தனைபேர் இரக்கம் காட்டியிருக்கிறீர்கள்?

எத்தனைபேர் பசுவில் பால்கரக்கும்போது அதன் கன்றுக்குத் தேவையான அளவு பால் குடிக்க அனுமதித்திருக்கிறீர்கள்?

பசு மற்றும் காளைமாடுகளின் கரவை மற்றும் உழைப்புத் திறன் குறைந்த பிறகும் எத்தனைபேர் அவற்றை நல்லமுறையில் பராமரித்து வருகிறீர்கள்?

அதைவிடுங்கள் எத்தனைபேர் அவை பயனற்றுப்போனபின் கொல்லப்படும் என்று அறிந்தே அடிமாட்டுக்கு காசுக்கு விற்காமல் எப்படியோ போகட்டும் என்று அவிழ்த்து விட்டிருப்பீர்கள்? 

இவற்றுக்கெல்லாம் தொடர்பே இல்லாமல் வெறும் கருணைபற்றிப் பேசுபவர்களில் எத்தனைபேர் தரித்திரத்துக்காக விற்பவனிடம் இரக்கப்பட்டுக் காசுகொடுத்து வாங்கிப் பராமரித்து வருகிறீர்கள்?

அடித்துத் தின்றவனைப் பழிக்கும் நம்மில் எத்தனைபேர் பசுமாமிசம் உண்பதைத்தவிர மற்ற அதன் செத்த உடம்பிலிருந்து தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்களை உபயோகிக்க மறுத்திருக்கிறோம்? 

குறைந்தபட்சம் அதற்காக வருந்தவாவது செய்திருக்கிறோமா?

இதில் சம்பந்தப்படாதவர்கள் என்று சொல்லி யாரும் தப்பிக்கமுடியாது! குறைந்தபட்சம் அப்படிச் செய்பவர்கள் யாரையாவது காட்டவாவது முடியுமா?

இது எதுவுமே முடியாதென்றால் அப்புறம் பசு, கருணை, ஜீவகாருண்யம் என்றெல்லாம் பேசுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

அப்படியானால் நாம் என்ன செய்யவேண்டும்? உயிரினங்கள் சம்பந்தமாக நாம் கடைப்பிடிக்கவேண்டிய கருணை எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்?

சிந்திக்கவேண்டும்!


2 comments:

  1. மான்களும், புலிகளும் கூடத்தான் ஒருகாலத்தில் வேட்டையாடப்பட்டு வந்தது.. அதை மன்னர்களும் செய்தார்கள்.. வெள்ளையர்களும் ஊக்கத்தொகை வழங்கி ஊக்கப்படுத்தினர். பல இனக்குளுக்களுக்கு அது குலத்தொழில்-முன்னோர்கள் கலாசாரம் கூட!. ஏன் வேடர் என்ற சாதியே அரசு பட்டியலில் உண்டு. அதற்காக மான்களை/புலிகளை கொல்ல கோருவது இன்றைய சூழலுக்கு ஒப்புமா..??
    மான்கள்/புலிகளை போலவே நாட்டு பசுக்களின் எண்ணிக்கையும் மிகவும் அபாய கட்டத்தில் இருக்கிறது. பல நாட்டு பசு இனங்கள் மிக மிக அருகி விட்டன. தமிழகத்தில் மட்டுமே முற்காலத்தில் 122 க்கும் மேற்ப்பட்ட நாட்டு பசு இனங்கள் இருந்துள்ளன. தற்போது அது விரல்விட்டு என்னிவிடும் அளவு குறுகி விட்டது. புலிகளின் எண்ணிக்கை கருத்தில் கொண்டு அதன் வேட்டை தடை செய்யப்பட்டுள்ளது. மான்கள்/புலிகளுக்கு ஒரு நியாயம், பசுக்களுக்கு ஒரு நியாயமா..?
    நம் பாரதத்தில் பசுக்களை வெறிபிடித்தது போல வெட்டி உண்ணும பழக்கம் இல்லை. இறந்த பசுக்களை மட்டுமே உண்டு வந்தனர்; அதுவும் சில இனக்குழுக்கள் மட்டுமே. விலை குறைவு என்று பார்த்தால் மார்சுவரியில் இருக்கும் அநாதை பிணங்கள் பசு மாமிசத்தை விட சீப், நாய்க்கறியும் சீப்பாக கிடைக்கும். ஏன் சும்மாவே கிடைக்கும். சீப் என்று பார்த்தால் தற்போது இயற்கை வேளாண் பொருட்கள் மரபணு மாற்றப்பட்ட-செயற்கை உரங்கள் கொண்டு விளைவித்த உணவை விட விலை கூடவே இருக்கின்றன-அப்போது மட்டும் பணத்தை பார்க்காமல் இயற்கை உணவை பரிந்துரைப்பது ஏனோ..??
    பசு மாமிசம் என்பது வெளிநாட்டு பொருளாதார வளர்ச்சிக்காக கையாளப்படும் தந்திரம். இங்கு மற்ற விலங்குகள், ஆன்மிகம் இத்யாதிகளை கொண்டு குழப்பாமல் இயற்கைக்கு, தற்கால சூழலுக்கு நன்மை எது என்று ஆலோசிப்பது சரியான பாதையாக இருக்கும்.
    சீமை மாடுகளை வெறி அடங்கும் வரை அதன் மேல் பாய்ந்து பச்சையாக அதன் கறியை கடித்து குதறினாலும் இந்த மாமிச வெறியர்களை யாரும் கேள்வி கேட்க போவதில்லை. அக்கரை நாட்டு பசுக்களின் மீதுதான். நாட்டு பசுக்கள் இருந்தால் வெளிநாட்டு உரம், பூச்சி மருந்துகள், மருத்துவம் என பல லட்சம் கோடி வணிகத்துக்கு வேலை இன்றி போகும்!
    இவற்றை விட்டுவிட்டு பல்வேறு முகமூடிகளில் திரியும் கம்யுனிஸ்ட்கள் கற்று தந்த குதர்க்கமான கேள்விகளை கேட்டு தன்னை அறிவாளி என்று நிறுவி கொள்ள முனைவதால் எந்த பயனும் யாருக்கும் இருக்கபோவதில்லை.இதை உணர்ந்து நாட்டு பசுக்களை காக்கவும், மீட்கவும் இயற்கை/வேளாண் ஆர்வலர்கள் முன்வர வேண்டும்..!

    ReplyDelete
    Replies
    1. மதவெறியர்கள் என்ற முகமூடியை அணியாமல் நாட்டுமாடுகளின் மேல் அக்கரையுள்ளவர்கள்போல் நடிக்கும் வேடதாரிகளுக்கும் உண்மைக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது!. காரணம் அவர்கள் உண்மையைத் திரும்பிப் பார்க்கக்கூடத் தயாராக இல்லை!...கதைகளை நம்புவதைவிட உண்மைகளை நம்பவேண்டும். நாட்டு மாடுகளின்மேல் அக்கரையுள்ளவர்களாக நடிப்பவர்களில் எத்தனை பேர் வயதான மாடுகளை வைத்துக் காப்பாற்றுகிறார்கள்? அடிமாட்டுக்காரனிடம் காசுக்கு விற்காதவர்கள் எத்தனைபேர்?.சும்மா கதைவிடக் கூடாது!..நடப்பதையும் நடக்கக் கூடியதையும் பற்றிச் சிந்திக்க வேண்டும்....

      Delete