ss

Friday, April 20, 2012

நிலத்தடி நீர் ( 1 )




நீர் சோதிடம் உண்மையா?

நிலத்தடியில் நீர் இருக்கிறதோ இல்லையோ இன்ன இடத்தில் இவ்வளவு நீர் இருக்கிறது என்று கூறும் சோதிடர்களுக்குப் பஞ்சமில்லை.

இவ்வளவு அடி ஆழத்தில் இவ்வளவு வேகத்தில் தண்ணீர் வரும் என்று அடித்துச் சொல்லும் சோதிடர்களும் இருக்கிறார்கள்.



அறிவியல் கண்டுபிடிப்பால் உருவான பல லட்சக்கனக்கான ரூபாய் மதிப்புள்ள ஆழ்துளைக் கிணறுதோண்டும் இயந்திரங்கள் எல்லாம் இந்தக் கைநாட்டுச் சோதிடர்களுக்குப் பின்னால் அணிவகுப்பதை கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களிலும் பார்க்கலாம்.

படித்த பொறியியலாளர்கள்கூட இந்தமாதிரி சோதிடர்கள் சொல்லும் இடங்களில் கிணறுகள் தோண்டுவதைப் பார்க்கலாம்.

இந்தமாதிரி சோதிடர்கள் எதை அடிப்படையாக வைத்து நிலத்தடி நீர் பற்றி மக்களுக்குச் சொல்லி காசு பார்க்கிறார்கள் என்று கேட்டால் அறிவுபூர்வமான பதில் கிடைக்காது. ஆனாலும் நம்புகிறார்கள்.

கிராமங்களில் அந்தக் காலத்தில் பசுமாட்டின் கன்றை கிணறுவெட்ட வேண்டிய பூமியில் அவிழ்த்துவிடுவார்கள். அது சுற்றிச் சுற்றி வந்து எதாவது ஓரிடத்தில் சிறுநீர் கழித்தால் அங்கு கிணறு தோண்டுவார்கள்.

அதன் பின்னால் சிலர் ஏதாவது வேம்பு கருவேல் போன்ற மரங்களின் ஆங்கில y வடிவக் கவட்டையை இறு கைகளிலும் இறு முனைகளில் பிடித்துக்கொண்டு எதிர் திசையில் உள்ள ஒற்றை முனையை நோக்கி வளைப்பது மாதிரி பிடித்துக் கொண்டு அது நீர் இருக்கும் இடத்தில் தானாகவே சுழலும் என்று சொல்லி நீர் சோதிடம் பார்த்தார்கள்.

இப்போதெல்லாம் ஒரு கெட்டியான மெல்லிய கயிற்றின் நுனியில் ஒரு இரும்பு நட்டு , தங்க மோதிரம், எலுமிச்சம்பழம், தண்ணீர் பாத்திரம், தேங்காய் இன்னும் பலவற்றையும் கட்டித் தொங்கவிட்டு அது நீர் உள்ள இடத்தில் சுற்றும் என்று சொல்லி சோதிடம் சொல்கிறார்கள்.

தேங்காயின் குடுமி ஆடுவதைக்கொண்டும் தண்ணீர் இருக்குமிடம் இவர்களுக்குத் தெரியுமாம்.

இன்னும் சிலர் பூமியின் வரைபடத்தின் மேல் எதையோ செய்து இன்ன இடத்தில் நீரிருக்கிறது என்று சொல்லி அவர்கள் இருக்குமிடத்தில் இருந்துகொண்டே காசு பார்க்கிறார்கள்.

இது சம்பந்தமான பித்தலாட்டங்கள் இன்னும் ஏராளமாக உள்ளன.

இவற்றில் எல்லாம் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று ஆராயப்படுவதில்லை. ஆனாலும் நடைமுறையில் இருக்கிறது. நம்பவும் படுகிறது.

இன்றைக்கு கிராமங்களிலும் நகரங்களிலும் விவசாயத்துக்காகவும் குடிநீருக்காகவும் தோண்டப்படும் கிணறுகளும் ஆழ்குழாய் கிணறுகளும் அளவே இல்லை.

அதிலும் கிராமங்களில் விவசாயிகள் கிணறு தோண்டுவதற்கு செய்யும் செலவைவிட ஆழவாக்கிலும் பக்கவாட்டில் கிணற்றுக்குள்ளும் ஆழ்குழாய் துளை போடுவதற்கு செய்யும் செலவு அதிகம் ஆகும்.

ஆனால் இத்தனை கோடானு கோடிக்கணக்கான ரூபாய்கள் குருட்டு நம்பிக்கை அடிப்படையில் செலவு செய்யப்படுகின்றன. இதனால் கிடைக்கும் பயனைவிட இழப்புகள் பலமடங்கு அதிகமாகும்.

இதைத் தவிர்க்கவேண்டுமானால் அரசாங்க புவியியல் நிலத்தடி நீர் ஆய்வாளர்கள் குழு விவசாயிகள் கேட்கும்போது உடனடியாக உதவிசெய்ய அரசு ஆவன செய்யவேண்டும். அது இப்போதும் பேரளவுக்கு இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் உண்மையான சேவையை விவசாயிகளுக்கு வழங்கவில்லை. வழங்க வேண்டும்.

நிலத்தடிநீரை வரைமுறை இல்லாமல் உறுஞ்சுவதால் ஒருவகையில் இயற்கைக்குக் கேடு விளைகிறது என்றால் அத்தோடு சேர்த்து விவசாயிகள் மூடநம்பிக்கையால் தண்ணீருக்காக செலவு செய்து தங்களுக்குத்தான் கேடு விளைவித்துக் கொள்கிறார்கள்!

No comments:

Post a Comment