ss

Monday, April 23, 2012

விரதம் ( 1 )


விரதம் எதற்காக?

இயற்கை நல்வாழ்வில் முக்கியப் பங்கு வகிப்பது உபவாசம் அல்லது விரதம் ஆகும்.


விரதம் என்றாலே கட்டுப்பாடு என்பது பொருள் . ஆனால் தற்காலத்தில் விரதம் இருப்பவர்களில் பெரும்பாலோர் அரிசிச் சாதத்தைத் தவிர மற்ற எல்லாவற்றையும் கட்டுப்பாடின்றி உண்பதைத்தான் விரதம் என்று இருக்கிறார்கள்.


விரதத்தை உயர்ந்த நோக்கத்துடன் சரியாகக் கடைப்பிடித்தால் உடலுக்கும் உள்ளத்துக்குமான சர்வரோக நிவாரணியாகப் பயன்படுத்தமுடியும்!


உண்ணா நோன்பு என்பது விரதத்தில் ஒரு வகை. இன்னும் அதை எப்படி உண்பது? எப்போது எத்தனைநாள் விரதம் இருப்பது? என்ன நோக்கத்துக்காக விரதம் இருப்பது எந்த வழிபடும் கடவுளுக்காக விரதம் இருப்பது என்பதுபோன்ற பல அம்சங்கள் உள்ளன.


                                                          
ஒன்றை நாம் நினைவில் கொள்வது பொருத்தமாக இருக்கும். ஆதாவது காடு வனங்களில் சுற்றித்திரிந்து கிடைத்ததைத் தின்று வாழும் உயிரினங்கள் இருக்கின்றன அல்லவா? அவைகள் நம்மளவு நோயின்றி வாழ்கின்றன. காரணம் அவற்றுக்கு மனிதரைப்போல காலாகாலத்துக்கு நேரம்தவறாமல் உணவளிக்க எந்தவிதமான ஏற்பாடும் கிடையாது. அவை கிடைத்தபோதுதான் உண்ணமுடியும். உணவுகிடைக்கும் வரை அவை பலநாட்கள்கூட பட்டினி கிடப்பது கூட உண்டு.


அப்படிப் பட்டினி கிடக்கும்போதும் பசித்திருக்கும்போதும் அவற்றின் உடலில் ஏற்கனவே இருக்கும் சேமிக்கப்பட்ட உபரி அல்லது இருப்பில் உள்ள சக்தியைக்கொண்டு தாக்குப்பிடிக்கின்றன. இதனால் அவற்றின் செரிமான உறுப்புக்கள் ஓய்வெடுப்பதும் அடுத்துக்கிடைக்கும் இறையைச் செரிக்கத் தம்மைத் தயார்நிலையில் வைத்துக்கொள்வதுமான பயிற்சியைப் பெறுகின்றன. 


கிடைத்தபோதும் பசித்தபோதும் மட்டும் உண்பதால் அவற்றுக்கு நோய்கள் ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைந்துபோகிறது.


ஆனால் மனிதஇனம் மட்டும் தான் வல்லமை மிகுந்த இனமாக இருப்பதால் இயற்கையையும் பிற உயிரினங்களையும் தன்னிஷ்டம்போல் கையாள முடிகிறது. அதனால் அதிகப்பயனடைந்த இனமாக இருப்பதால் அது உணவுக்காகத் தேடி அலைவதோ பட்டினிகிடப்பதோ இல்லை. மாறாக பசிக்காக மட்டுமின்றி ருசிக்காகவும் மிகுஉணவை உண்கிறோம். அதனாலதான்; மனிதருக்கும் மனிதரை அண்டிப்பிழைக்கும் உயிரினங்களுக்கும் அதிகமான நோய்கள் தாக்குகின்றன.


அத்தகைய கேடுகளைத் தவிர்க்கத்தான் நாமாகவே நிர்ப்பந்தமாக விரதம் இருந்து நமது உடம்பைப் பக்குவப்படுத்திக் கொள்கிறோம். அத்தகைய விரத காலங்களில் அமிலச் சுரப்பினால் பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சவேண்டியது இல்லை. காரணம் நமது உடலமைப்பு சரியான திட்டத்துடன் தான் உருவாகியுள்ளது. அது உண்ணும் உணவுக்குத் தேவையான அளவுதான் சுரப்பிகளும் அமிலத்தைச் சுரக்கும். தேவை இல்லாதபோது உடலுக்குத் தீங்கு பயக்குமளவு சுரக்காது. அப்படிச்சுரக்கும் சிறிதளவும் நாம் நீரருந்துவதால் மற்ற கழிவுகளுடன் சேர்ந்து வெளியேறிவிடும்.


எனவே என்னால் முடியவில்லை என்னும் பலவீனத்தை மனக்கட்டுப்பாடு என்ற பலமாக மாற்றி உண்ணாவிரதம் உட்பட சில விரதங்களைக் கடைப்பிடிப்பது மிக்க நன்மை தரும்.


ஒரு நாள் முழுக்க உண்ணாமல் விரதம் இருக்கலாம். ஒரு நேரம் மட்டும் உண்ணாமல் இருக்கலாம். சில நாட்களும் இருக்கலாம். உப்பில்லாமல் விரதம் இருக்கலாம். பழங்கள் அல்லது பழச்சாறுகள் மற்றும் இளநீர் மட்டும் உண்டு விரதம் இருக்கலாம். இயற்கை உணவைமட்டும் உண்டும் விரதம் இருக்கலாம்.


கண்டிப்பாகக் காபி, டீ, குளிர் பானங்கள், புகை போன்றவை யெல்லாம் தவிர்க்கவேண்டும்.


நாம் விரதம் இருக்கிறோம் என்பதைவிட அந்த விரதம் உடலுக்கும் உள்ளத்துக்கும் பயனுள்ளதாக இருக்கவேண்டும்.


விரதம் என்பது மற்ற சதாரண நாட்களில் நாம் பின்பற்ற வேண்டிய பழக்கங்களுக்குப் பயிற்சியாக இருக்க வேண்டும்.


உப்பில்லாமல் சாப்பிடுவது என்பது ஒரு நல்ல விரத முறை ஆகும். உப்பில்லாமல் சாப்பிடுவதில் ஒன்றுக்கு மேற்பட்ட பலன்கள் இருக்கின்றன. ஆதாவது உப்பு சர்க்கரை எண்ணெய் இவையெல்லாம் வாய்க்கு ருசிக்காகச் சாப்பிடுவதுதானே அல்லாமல் அது அவசியமானது அல்ல.


சில நாட்டுவைத்தியங்களில் உப்பில்லாத பத்தியம் வைப்பார்கள். அப்போது கொடுக்கப்படும் மருந்துகளை விட உப்பில்லாத பத்தியத்தினால் கிடைக்கும் பலன்களால்தான் நோய் குணமாகும்.


உப்பில்லாமல் உண்ணும் போது அதோடு சேர்த்து காரம், எண்ணெய் தாளிப்பு போன்றவை யெல்லாம் தவிர்க்கப்படுகிறது. அதனாலும் நன்மை விளைகின்றன. இயற்கை உணவுமட்டும்தான் உப்பில்லாமல் போதுமான அளவு சாப்பிடமுடியும். எனவே இயற்கையுணவுப் பழக்கமும் இதனால் தூண்டப்படுகிறது.

ஆகவே விரதம் என்றால் கண்டதைத் தின்பது என்ற ஒரு நிலையை மாற்றி வேண்டாத உணவுவகைகளையும் பழக்க வழக்கங்களையும் ஒழிக்க ஒரு பயிற்சியாக எடுத்துக்கொள்ளவேண்டும். அதுதான் சிறந்த வாழ்க்கைமுறை!

No comments:

Post a Comment