ss

Friday, April 6, 2012

நாம் யார் தெரியுமா? (2)

மனிதன் ஆறறிவு படைத்தவனா?

அப்படித்தான் நாம் எல்லோருமே சொல்லிக் கொள்கிறோம். மற்ற ஐந்து அறிவுகள் என்னென்ன என்பது பற்றிக் கவலையில்லை. ஆறாவது அறிவான பகுத்தறிவு என்பதுமட்டும் மனிதனுக்கே உரித்தான சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது.

ஆறாவது அறிவான பகுத்தறியும் ஆற்றல், சிந்திக்கும் ஆற்றல், திட்டமிடு;ம் ஆற்றல் மனிதனது சிறப்பம்சம் என்றால் மற்ற உயிரினங்களுக்கு அத்தகை குணங்களே இல்லையா? …உண்டு என்பதே சரியான விடை!

எறும்புக்கூட்டம் சாரைசாரையாகக் குறிப்பிட்ட பாதையில் ஊர்ந்து செல்கின்றதென்றால் எப்படிச் சாத்தியமாகின்றது? ஆயிரக் கணக்கான தேனீக்கள் ஒழுங்கமைந்த திட்டப்படி கூடு கட்டி தேன் சேகரித்து அதில் வைக்கிறதென்றால் திட்டமிடாமல் எப்படிச் சாத்தியமாகும்? பறவைக்கூட்டம் பிசகின்றி ஒழுங்கான பாதையில் செல்வது மட்டுமல்ல குறிப்பிட்ட ஒரு வினாடியில் அனைத்துமே ஒருசேர திசைமாறிப் பறக்கிறது அல்லது அமர்கின்றதே அது எப்படி?ஒரு நாய் தன் எஜமானனைக் கண்டால் வாலைக் குலைக்கிற அதேநேரம் அன்னிரைக் கண்டால் உறுமுகிறதே அது பகுத்தறிவில்லாமல் எப்படிச் சாத்திமாகும்? ஆயிரக்கக்கான ஆடுகள் கொண்ட மந்தையில் தன்னுடைய தாய் ஆட்டைக் குட்டியும் தன் குட்டியைத் தாயும் இனங்கண்டு அன்புடன் பாலூட்டுகிறதே அது பகுத்தறிவின்றித்தானா?


ஒரு சிலந்திக்கு அழகாக வலைபின்ன யார் கற்றுக் கொடுத்தார்கள்? தூக்கணாங் குருவியால் எப்படி அப்படியொரு நேர்த்தியான கூட்டைக் கட்ட முடிகிறது?

கரையான் புற்றைப் போன்ற ஒரு கட்டமைப்பை நவீன மனிதனால் உருவாக்கிட முடியுமா? எலியைக் கவ்விப் பிடிக்கிற அதே கோரைப் பற்களால் வலிக்காமல் தன் குட்டிகளைப் பாதுகாப்பாகத் தூக்கிச் செல்லப் பூனைக்கு எப்படித் தெரிந்தது?

வெளிநாடுகளில் இருந்தெல்லாம் யாருடைய அனுமதியையும் பெறாமல் வேடந்தாங்கலுக்கும் கோடிக்கரைக்கும் ஆயிரக்கணக்கான பறவையினங்கள் வந்துபோகின்றனவே அவைகளுக்குப் போக்குவரத்து மார்க்கத்தையும் பருவகால மாற்றத்தையும் எந்தப் பண்டிதர்கள் சொல்லிக் கொடுத்தார்கள்?

இன்னும் எண்ணற்ற உதாரணங்கள்மூலம் மனிதனைத் தவிர மற்ற உயிரினங்களுக்கும் பகுத்தறிவு உண்டு என்பதைக் காணலாம்.

அப்படியானால் மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் வேறுபாடே இல்லையா? நிச்சயம் உண்டு. மாபெரும் வேறுபாடுகள் உண்டு. அதில் முதன்னையானதும் முக்கியமானதும் எல்லா வேறுபாடுகளுக்கும் அடிப்படையானதுமான ஒரே வேறுபாடு ஆயுதங்களைத் தயாரிப்பதும் கையாள்வதுதான் என்று அறிஞர்களே முடிவுக்கு வந்துள்ளனர்.

உலகில் உள்ள மற்ற உயிரினங்களெல்லாம் தாம் வாழ்வதற்காக இயற்கையுடனும் பிற உயிரினங்களுடனும் தாமே நேரடியாகப் போராடி வாழ்ந்துகொண்டுள்ளன. புற்களும் நகங்களும் கால்களும் வாலும் சிலவற்றுக்கு தும்பிக்கை போன்ற உறுப்புக்களும் இறக்கைகளும் கூர்மையான அலகுகளும் இன்னும் வேறுவகையான உறுப்புக்களும்தான் ஆயுதங்களாகப் பயன்படுகின்றன. யானை, குரங்கு, சிலபறவைகளும்கூட கல், குச்சி, போன்ற சிறுசிறு பொருட்களை உபயோகப்பொருளாகச் சிலநேரங்களில் பயன்படுத்தலாம். ஆனால் அவைகூட எந்த ஒரு கருவியையும் தன் உபயோகத்துக்காகத் திட்டமிட்டு உருவாக்குவது இல்ல. 

ஆனால் மனித இனமாகிய நாம்மட்டும்தான் இயற்கையுடனும் பிற உயிரினங்களுடனும் போராடி வாழ இயற்கையாகக் கிடைப்பதை மட்டுமல்ல தேவைக்குத் தகுந்தபடி திட்டமிட்டுத் தாயாரிக்கப்பட்ட கருவிகளையும் பயன்படுத்தி வருகிறோம்.

விலங்கு நிலையில் இருந்த மனிதர்களின் மூதாதையர்களின் முன்னங் கால்கள் மற்ற எல்லா உயிரினங்களையும்விட பிற பொருட்களைக் கையாள்வதற்கு ஏற்றவகையில் இருந்தன. அதனால் முன்ங் கால்களை நடப்பதற்காக உபயோகிப்பதற்குப் பதிலாக பிற பொருட்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வதற்காகப் பன்படுத்துவது அதிகரித்துக்கொண்டே வந்து ஒரு கட்டத்தில் பின்னங்கால்களால் மட்டுமே நடக்கக் கற்றுக்கொண்டனர். முன்னங்கால்களுக்கு நிரந்தரமாக விடுதலை கிடைத்தது. அதுவே பின்பு கைகளாக மாறியது. கட்டைவிரல் ஒரு பக்கமும் பிற நான்கு விரல்களும் எதிர்ப் பக்கமுமாகப் பொருட்களை நன்கு கையாள்வதற்கு ஏற்ப கைகள் சிறப்பான மாற்றம் அடைந்தன்.இரண்டு கால்களால் நடந்து பழகியபின்பு காலப்போக்கில் நிமிர்ந்து நடக்கும் உடல் அமைப்பாக மாற்றம் அடைந்தது. இதுதான் விலங்கினமாக இருந்த மனிதன் மனிதனாகப் பரிணாம வளர்ச்சிபெற்ற முறை என்று ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்தனர். சார்லஸ் டார்வின் அத்தகைய கருத்துக்களின் முன்னோடியாகவும் ஆசானாகவும் விளங்குகிறார்.

இத்தகைய ஒரு மாற்றம் ஏற்படும்வரை மனித இனத்துக்கும் மற்ற உயிரினங்களுக்கும் எந்தவிதமான தரவேறுபாடும் இருக்க வாய்ப்பு இல்லை. அறிவுத்தரத்திலும் எந்தவித ஏற்றத் தாழ்வும் இருக்கவில்லை. இருந்திருக்கவும் முடியாது. 

மனிதன் நிமிர்ந்து நடக்கவும் கைகளால் பிற பொருட்களைத் திறமையாகக் கையாளவும் துவங்கிய பின்புதான் வித்தியாசமான பாதையில் தன் பயணத்தைத் துவங்குகிறான்.

கைகளால் பொருட்களைக் கையாளத் தெரிந்தபின்பு பிற உயிரினங்களால் இயலாத செயல்களையெல்லாம் மனிதனால் செய்ய முடிந்தது. கரடுமுரடான கற்களில் துவங்கி மனிதன் பயன்படுத்திய ஆயுதங்கள் மேம்பட்டுக்கொண்டே வரவர அதற்கு இணையாக இயற்கையோடும் பிற உயிரினங்களோடும் போராடும் சக்தியும் கூடிக்கொண்டே போனதால் இன்றைய நவீன வாழ்க்கைமுறையை எட்ட முடிந்தது. இதையே மிகப் பழமையானதென்று சொல்லத்தக்க ஒர் எதிர் காலத்தை நோக்கி பயணம் செய்துகொண்டும் உள்ளோம்.

அதையொட்டி அதற்கிணையாகவே பிற உயிரினங்களிலிருந்து அறிவிலும் சிந்தனையிலும் மாறுபட்டு ஒப்பிட முடியாத அளவுக்கு அறிவு வளம் பெற்றது.

வாழும் சூழ்நிலைதான் எண்ணங்களுக்கு அடிப்படைக் காரணம் என்பது வரையறுக்கப்பட்ட உண்மை. பிற உயிரினங்களைப் பொருத்தவரை வாழ்க்கைச் சூழுலில் எந்தவித மாற்றமும் இன்றி இயற்கைச் சூழலுக்கு ஏற்ப வாழ்வதால் எண்ணத்திலும் அறிவிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்ப இல்லை. மனிதனாலும் மனிதனின் நவீன வளர்ச்சியாலும் பாதிக்கப்பட்டு மிரண்டுபோய்க் குறுகிய வட்டத்துக்கள் முடங்கிப்போன உயிரினங்களும் மனிதனால் அடக்கப்பட்டு உணவுக்காகவும் வேலைவாங்கவும் வளாக்கப்படுவனவும் மனிதனுக்கு அடிமையாகிப் போனவையுமான சில விலங்கினங்களும் உயிரினங்களும்கூட அறிவு வளர்ச்சிபெற வாய்ப்பு இல்லை. தேவையும் இல்லை.

இந்த நிலையில் உடலமைப்பிலும் வாழ்க்கைமுறையிலும் இயற்கையுடனான போராட்டத்pலும் தொடர்ந்து மாற்றங்களைச் சந்தித்துவந்த மனிதன் தன் எண்ணங்களிலும் அறிவிலும் தொடர்ந்த மாற்றத்தைச் சதாகாலமும் செய்துகொண்டே இருக்கிறான். அப்படித் தொடர்ந்து சூழலுக்கும் பிரச்சினைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப மாறுபடும் உணர்வுகளைத்தான் சிந்தனைகள் என்கிறோம்.

பிற உயிரினங்களின் வாழ்க்கைச்சூழலில் பெரிய மாறுதல் இல்லாததால் சிந்திக்கும் திறனும் ஒரு மட்டத்துக்கு மேல் வளரவில்லை. ஆனால் மனிதன் மட்டும் வித்தியாசமான பாதையில் பரிணாம வளர்ச்சி பெறும் வாய்ப்புப் பெற்றதால் அவன் உருவாக்கிய பிரம்மாண்டமான வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப சிந்தனைத் திறனும் பிரம்மாண்டமாக வளர்ந்தது.

மற்ற உயிரினங்கள் காலங்காலமாக ஒரேமாதிரியான வாழ்வு வாழ்ந்துகொண்டிருப்பதால் அறிவும் ஒரேமாதிரி இருக்கிறது. மாற்றமும் வளர்ச்சியும் இல்லை.

மனித இனத்தின் வாழ்க்கைமுறையும் புதிதாக உருவாக்கப்படும் வாழ்க்கைச் சூழலும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால் அறிவிலும் அதற்கு இணையான மாற்றம் தொடர்;ந்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது.

ஆக சின்னஞ்சிறு பூச்சி இனங்களில் இருந்து நாகரிக வளர்ச்சிபெற்ற மனித இனம் வரை அனைத்து உயிரினங்களுக்கும் அறிவு என்பது அதன் வாழும் சூழலுக்கும் தேவைக்கும் இணையாகவே இருக்கிறது. உருவத்திலும் எடையிலும் பலத்திலும் வாழும் முறையிலும் மாற்றங்கள் இருந்தாலும் அறிவைப் பொருத்தவரை அறிவுக்கும் வாழ்வுக்கும் உள்ள உறவு எல்லா உயிரினங்களுக்கும் ஒரேமாதிரிதான் அமைந்துள்ளது.

ஒரு எறும்புக்கு எவ்வளவு அவசியமோ அந்த அளவு அறிவு அதற்கு உள்ளது. ஒரு குருவிக்கும் காக்கைக்கும் பருந்துக்கும் ஏன் இருப்பவற்றிலேயே மிகச்சிறிய உயிரினத்திலிருந்து இருந்து காட்டு யானை அல்லது கடலில்வாழும் திமிங்கலம் வரை அனைத்து உயிரினங்களுக்கும் எந்த அளவு அறிவு இருந்தால் போதுமானதோ அந்த அளவு அறிவு உள்ளது. அதேபோல மனித இனத்துக்கும் எந்த அளவு இருந்தால் இன்றைய வாழ்க்கைச்சூழலில் போதுமானதோ அந்த அளவு உள்ளது.

இந்த நிலையில் பிற உயிரினங்களின் அறிவுடன் மனித இனத்தின் அறிவை ஒப்பிட்டு அதைவிடச் சிறந்த அறிவு வேறெதுவும் இல்லை, மற்ற உயிரினங்களிடம் இல்லாத உயர்ந்த அறிவு மனிதனிடம் மட்டும் உள்ளது என்பது சரியானது அன்று.

ஒவ்வொரு உயிரினமும் கூடவோ குறையவோ பிற உயிரினங்களின் வாழ்க்கையிலும் இயற்கையின் போக்கிலும் குறுக்கிடுகின்றன.எந்த உயிரினமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. மற்ற எந்தஒரு உயிரினத்தையும் விட மனித இனத்தின் குறுக்கீடு அதிகமாக உள்ளது.

பிற உயிரினங்களின் வாழ்விலும் இயற்கையின் போக்கிலும் குறுக்கிடும் ஒரு அம்சத்தில்தான் மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் அளவற்ற வேறுபாடு உள்ளது. அதுதான் பிற உயிரினங்களைவிட மனித இனத்திடம் உள்ள சிறப்பம்சமாக உள்ளது. மற்றவை கூடவோ குறையவோ குறுக்கீடு மட்டும் செய்கின்றன. மனித இனமோ மற்ற உயிரின வாழ்க்கையில் குறுக்கீடு செய்வது மட்டும் அல்ல சகல உயிரினங்களின்மேலும் ஆதிக்கம் செலுத்தி இயற்கையின் போக்கிலும் கடுமையான தாக்குதல் தொடுத்து தன்னிகறற்று விளங்குகிறது.

தன்னைத்தவிர பிற உயிரினங்கள் அனைத்தின்மீதும் ஆதிக்கம் செலுத்தும் வல்லமை பெற்ற ஒரே உயிரினம் மனித இனம் மட்டும்தான். (தன்னினத்தின் ஒரு பகுதி வேறொரு பகுதி மீது ஆதிக்கம் செலுத்துவது தனி)

அந்த வல்லமைகூட இயற்கையாகத் துவக்க காலத்திலிருந்தே உடன் உருவான ஒன்று அல்ல. உடற்கூறு அம்சத்தில் இருந்த தோதான அம்சங்களின் காரணமாக ஏற்பட்ட தொடர்ந்த பரிணாம வளர்ச்சியால் கடந்த சில பத்தாயிர ஆண்டுகளுக்குள் அல்லது ஒருசில லட்சம் ஆண்டுகளுக்குள் ஏற்பட்டதுதான் என்பது அனைவருக்கும் தெரியும்.
அந்த வல்லமையைத்தவிர வேறு எதையும் மனித இனத்துக்கு மற்றஉயிரினங்களைவிட சிறப்புடையதாக அல்லது மேம்பட்டதாகக் கொள்ளமுடியாது. 

ஓவ்வொரு உயிரினத்துக்கும் தேவையான அறிவுத்திறன் அதனிடம் இருப்பதைப்போலவே மனித இனத்துக்குத் தேவையான அறிவு அதனிடமும் இருக்கிறது. தேவைக்கும் நடப்பில் இருப்பதற்கும் ஒப்பிட்டுப்பார்த்தால் மற்ற உயிரினங்களுக்கும் மனித இனத்துக்கும் அறிவைப்பொருத்தவரை எந்த விதமான ஏற்றத்தாழ்வும் இல்லை என்ற முடிவுக்கு வரலாம்.

ஓரறிவு ஈரறிவு என அறிவுத்தரத்தைப் பட்டியலிடுவது சில குணங்களைப்பிரித்துப் பார்த்ததினால் உருவான கருத்தே ஒழிய வேறில்லை.

எல்லா உயிரினங்களுக்கும் உள்ள ஒரே அறிவு தேவை சார்ந்த அனுபவ அறிவுதான் ஆறாவது அறிவு என்று ஒன்று இருப்பதாகவும் அது மனித இனத்துக்குமட்டுமே உரித்தானதாகவும் கருப்படுவது நமக்கு நாமே பெருமைப்படுத்திக்கொள்ளப் பயன்படுத்தப்படும் கருத்துக்களே அன்றி அது நியாயமோ உண்மையோ அல்ல.

எனவே மனிதன் எனப்படுபவன் ஆறறிவு படைத்தவன் அல்ல! மற்ற உயிரினங்களைப் போலவே ஓரறிவு படைத்தவன்தான்! அந்த அறிவை அவன் வாழும் முறையும் சூழலும் தேவையுமே தீர்மானிக்கின்றன.
==============================================================

No comments:

Post a Comment