ss

Friday, April 13, 2012

உணவே மருந்து ( 3 )


இன்ப வாழ்வு

ஒருவரிடம் நியைப் பணம் இருந்து அவர் அதை; தேவையற்ற செலவுகளைச் செயயாமல் வைத்திருந்தால் அதற்குப் பெயர் சிக்கனம். விளைவு மகிழ்ச்சியானது. அதேசமயம் ஒருவரிடம் அவ்வளவு பணம் இல்லாமல் ஆனால் செலவு செய்யவேண்டும் என்ற எண்ணமிருந்தும் செலவு செய்யாமல் இருந்தால் அதைச் சிக்கனம் என்று சொல்ல முடியாது. அதற்குப் பெயர் தரித்திரம் அல்லது வறுமை. அது துன்பமானது.




ஒருவருடைய இல்லத்தில் சமைக்கத் தேவையான அளவு எல்லாப் பண்டங்களும் இருக்கும் நிலையில் ஒருவர் உண்ணாமல் இருந்தால் அதை விரதம் என்று சொல்கிறோம். அது நல்ல அம்சமாகும் அதேசமயம் தேவையான அளவு எந்த உணவுப் பண்டமும் இல்லாத ஒரு நிலையில் ஒருவர் பசியோடு இருந்தால் அதை விரதம் என்று சொல்ல முடியாது. அதற்குப் பெயர் பட்டினி. அது கொடுமையானது.

அதேபோல் ஒருவர் நல்ல திடகார்த்தமான நிலையில் இருந்துகொண்டு சில பண்டங்களை உடல்நலன் கருதி உண்ணாமல் இருந்தால் அதை உணவுக் கட்டுப்பாடு என்று சொல்கிறோம். அது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நல்ல விஷயம். காரணம் எப்போது வேண்டுமானாலும் விரும்பினால் உண்ணமுடியும ஆனால் தனது உடலில் உள்ள கோளாறு காரணமாக மருத்துவர் ஆலோசனைப்படி தவிர்க்கமுடியாமல் ஒருவர் உண்ணாமல் இருந்தால் அதை உணவுக்கட்டுப்பாடு உன்று சொல்ல முடியாது. அதற்குப் பெயர் பத்தியம். அது வேதனையான விஷயம். காரணம் அவற்றையெல்லாம் உண்ணவேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் உண்ணமுடியாது.

எனவே வாழ்வை மகிழ்வுடன் அனுபவிக்கவேண்டும் என்றால் ஒருவர்,

தேவையான வசதியைத் தேடிக்கொண்டு அதே நேரம் சிக்கனமாக இருக்கவேண்டும்.

அனைத்துப் பண்டங்களும் கொட்டிக்கிடந்தாலும் அவ்வப்போது உடலையும் உள்ளத்தையும் மேம்படுத்தும் விரதங்ளைக் கடைப்பிடிக்கவேண்டும்.

அதேபோலக் குறையில்லாத உடல் நலத்துடன் அதேசமயம் தேவையானதை மட்டுமே உண்ணும் உணவுக்கட்டுப்பாட்டு முறையைக் கடைப்பிடிக்கவேண்டும்.

நாம் விரும்பியததைஉண்கிறோமோ இல்லையோ நமது உடல்நலம் அதை உண்ணக்கூடிய நிலையில் இருக்கவேண்டும்

அதுவே உயர்ந்த வாழ்வு முறையாகும்.

எனவே நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்னும் பழமொழிக்கேற்ப வாழ்வின் முதல் முக்கியக் கடமையாக உடல் நலனைக் குறைவற்றதாகப் பராமரிக்கவேண்டும். அது தவிர்த்த வாழ்வு மற்ற எந்த வகையான சிறப்புக்களைக் கொண்டும் முழு நிறைவடைய முடியாது.






No comments:

Post a Comment