ss

Saturday, April 14, 2012

நாம் யார் தெரியுமா?( 3 )




உயிர்

கண்ணுக்குப் புலப்படாத உயிரினங்களில் இருந்து மனிதன் உள்பட பிரமாண்டமான திமிங்கிலங்கள்வரை உயிரினங்கள் என்கிறோம்.

அவை ஒவ்வொன்றும் தமக்கே உண்டான தனித்தனிப் பண்புகளுடன் வாழ்கின்றன. ஆனால் அவற்றுக்கிடையே பொதுவான பண்புகளும் உண்டு.

பல்வேறு விதமான உயிரினங்களின் பல்வேறுவிதமான வாழ்க்கையம்சங்கள், தோற்றம், வயது, உணவுப் பழக்கங்கள், இனவிருத்தி, தன்னுடைய இனத்துடன் வைத்திருக்கும் தொடர்பு, பிற உயிரினங்களுடன் வைத்திருக்கும் தொடர்பு, இயற்கையுடன் கொண்டுள்ள தொடர்பு, உணர்வு இவற்றால் வேறுபடுகின்றன.




ஆனால் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவான பண்பு ஒன்று உண்டு. அதுதான் தோன்றி, வளர்ந்து, வாழ்ந்து, இனவிருத்திசெய்து, மறைவதும் அதற்காக இயற்கையில் தனக்குப் பொருத்தமானதை உட்கவர்ந்து, தேவையற்றதை வெளியேற்றும் உணவுப் பழக்கமும் ஆகும்.

பல்வேறு இயற்பியல் வேதியியல் பண்புகளை உள்ளடக்கிய அடிப்படை மூலக்கூறுகளின் கட்டமைப்பாக விளங்கும் இவ்வுலகின் ஒவ்வொரு அணுவும் எக்காலமும் இயங்கிக் கொண்டேதான் இருக்கிறது. அவை பல்வேறு பொருட்களாகக் கண்களுக்குப் புலப்படுவதாகவும் புலப்படாததாகவும் இருக்கின்றன. அவையெல்லாம் பல்வேறு காரணங்களால் இயற்பியல் வேதியியல் மாற்றங்களால் ஒன்று இன்னொன்றாக மாறி அமையுமே தவிர சுழற்சியான வாழ்க்கைமுறை அவற்றுக்கு இல்லை. அவை எதையும் உணவாகக் கொண்டு தோன்றி வளர்ந்து வாழ்ந்து மறையும் (அடிப்படை இயக்கத்துக்கு மேலான) இரண்டாம் சுற்று இயக்கத்தை பூமியின் கட்டமைப்புக்குள் தொடர்ந்து நடத்துவதில்லை. எனவே அவற்றை உயிரினம் என்று சொல்வதில்லை. தாவரங்கள் இரண்டாவது சுற்று இயக்கத்துடன் வாழ்ந்தாலும் அவற்றுக்கு விருப்பு வெறுப்பு என்னும் உணர்வுகள் இல்லாததால் அதையும் உயிரினங்களில் சேர்ப்பதில்லை.



ஆக சூழ்நிலையில் தமக்கேற்றதை கிரகித்து வெளிப்படுத்தி தோன்றி வளர்ந்து வாழ்ந்து இனவிருத்திசெய்து மறைகின்ற, குறையவோ கூடவோ விருப்பு வெறுப்பு என்கிற உணர்வையும் சேர்த்து வாழ்கின்ற வற்றைத்தான் உயிரினங்கள் என்று சொல்கிறோம். அப்படிச் சொல்வதுதான் சரியாக இருக்கும்.



இதில் தாவரங்கள் விருப்பு வெறுப்பென்னும் குணம் அற்றவை. மற்ற உயிரினங்கள் அத்தகைய உணர்வு பெற்றவை. தாவரங்களும் தேவையானதை எடுத்துக்கொண்டு தேவையற்றதை வெளிப்படுத்தும் வளர்ச்சிமுறை வேறு. விருப்பு வெறுப்பு என்பது வேறு.

ஆனால் உயிர் என்பது தாவரங்களுக்கும் உயிரினங்களுக்கும் பொதுவானது. இவையிரண்டுக்கும் விருப்பு வெறுப்பு என்னும் உணர்வுதான் வித்தியாசமானது. 

ஆகவே சூழ்நிலையைத் தன்மயமாக்கல் மூலம் தோன்றி வளர்ந்து வாழ்ந்து இனவிருத்தி செய்து வாழ்கிற இரண்டாம் சுற்று இயக்கத்தைத்தான் உயிர் என்று கூறுகிறோம்.

அத்தகைய இரண்டாம் சுற்று இயக்கம் இருக்கும் வரை உயிர் வாழ்வதாகவும் அத்தகைய இயக்கம் நின்றுபோவதை உயிர் போவதாகவும் கூறுகிறோம்.

ஆகவே மேற்சொன்ன இரண்டாம் சுற்று இயக்கம்தான் பொதுவாக உயிர் என்று சொல்லப்படுகிறது.

உயிருள்ள ஒன்று இயக்கத்தாலும் சூழ்நிலையாலும் ஒவ்வொரு கணமும் சிதைவடைந்தாலும் அந்த இழப்பை ஈடுகட்டுமளவு மீண்டும் வளர்ந்துவிடுகிறது. ஆனால் உயிரற்ற ஒன்று சிதைவடையுமே தவிர முன்பிருந்த நிலைக்குத் தன்னை வளர்த்துக்கொள்ள முடியாது.

இத்தகைய இயக்கத்துடன் வாழ்நாளில் அனுபவத்தால் பெறும் குணாம்சமான விருப்பு வெறுப்பு என்னும் பல்வேறு தரத்திலான உணர்வுகளையும் சேர்த்து உயிரினங்கள் தாவரங்களிலிருந்து வேறுபட்டுவிடுகின்றன.




எனவே உயிர் என்பது பொதுவான இரண்டாம் சுற்று இயக்கமே ஒழிய உடம்பின் அல்லது ஒரு தாவரத்தின் ஏதாவது ஒரு பகுதியில் அல்லது முழுப்பகுதியில் ஒட்டிக்கொண்டிருக்கும் அமானுஷ்ய சக்தி அல்ல. உயிருள்ள ஒன்றின் உடல் இயக்கத்தை நிறுத்திய பின்பு ஆதாவது உயிரை இழந்த பின்பு சிதைவடையும் அந்த உடலின் பல்வேறு பகுதிகள் பல்வேறு இயற்பியல் வேதியியல் காரணங்களால் பல்வேறு மூலக்கூறுகளாகப் பல்வேறு காலங்களில் பிரிந்து பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாகப் படிந்தும் சஞ்சரித்தும் அதனோடு கிரியை செய்கின்ற வேறு மூலக்கூறுகளின் தன்மைக்கேற்ப பொருட்களாகவும் உயிரினங்களாகவும் மாறும் இயக்கத்துக்கு தம் பங்கை நிரந்தரமாக ஆற்றும். 

எனவே உடலைவிட்டு உயிர் என்கின்ற ஒன்று தனியாகப் பிரிந்து எங்கோ நிலவுவதாகவோ வேறு வடிவெடுப்பதாகவோ எண்ணுவதும் நம்புவதும் அறியாமை ஆகும்.


No comments:

Post a Comment