ss

Monday, April 23, 2012

சிறுகதைகள் ( 3 )புதுவீடு 

மாதவனும் மணிமாறனும் இப்படி ஒரு சிக்கல் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆசை ஆசையாய்க் கட்டிய புதுவீடு வேலை முடியப் போகிறது. குடிபோகும் நேரத்தில் அப்பா இப்படி தடை சொல்வார் என்று யாரும் நினைக்க முடியவில்லை.

வேதாச்சலம் தன் சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்தவர். நல்ல மனிதரும்கூட. மாதவனும் மணிமாறனும் பிள்ளைகள் வேறு பிள்ளைகள் இல்லை. அவர்களும் கல்யாணம் பிள்ளைகுட்டிகள் என்று பணக்காரர்களாக இல்லாவிட்டாலும்  கொஞ்சம் வசதியாகவே இருக்கிறார்கள்.

அண்ணன் தம்பி இருவரும் ஒரே குடும்பமாக இருக்கிறார்கள். அவர்களுடைய தாயர் இதையெல்லாம் பார்க்கக் கொடுத்துவைக்காமல் போய்விட்டார். அம்மா இல்லாத குறை தெரியாமல் அப்பாவும் பிள்ளைகளும் நடந்துகொண்டார்கள்.


ஸ்டீல் பர்னிச்சர் தொழிற்சாலை ஒன்று சொந்தமாக வைத்து நல்லமுறையில் நடத்தி வருகிறார்கள். குழந்தைகளைத் தவிர மற்ற ஆண் பெண் அனைவரும் தொழிற்சாலை முன்னேற்றத்துக்காக நல்லபடி பாடுபடுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு என்று எல்லோரும் அவரவர் வேலையை போட்டி போட்டுக்கொண்டு செய்கிறார்கள்.

வீட்டுக்கு வந்த மருமகப் பிள்ளைகளும் அப்படியே! அவர்களுக்குள் எந்த வேறுபாடு;ம் சின்னப் புத்திகளும் கிடையாது.

தாத்தா காலத்துப் பழைய வீட்டை இடித்துவிட்டு புதிதாகப் பெரிய வீடு கட்டியிருக்கிறார்கள்.

தாற்காலிகமாக இரண்டு கி.மீ தள்ளியிருந்த இந்த வாடகை வீட்டில் இருக்கிறார்கள்.

புதுவீட்டுக்குப் போவதில் என்ன சிக்கல்?

அப்பா புது வீட்டை நல்ல வாடகைக்கு விட்டுவிட்டு இந்த வீட்டிலேயே தொடர்ந்து இருக்கலாம் என்கிறார்.

அப்பாவின் வார்த்தையைப் பிள்ளைகளோ  பிள்ளைகளின் வார்த்தையை அப்பாவோ இதுவரை தட்டிப் பேசிப் பழக்கமே கிடையாது. ஆனால் இந்த விஷயத்தில் அப்பா பிடிவாதமாகவே இருக்கிறார்.

அவர்களுக்கு அப்பா எதனால் இப்படிச் சொல்கிறார் என்று தெரியவில்லை. இப்போது வாடகைக்கு இருக்கும் வீடு அப்படியென்றும் கட்டியுள்ள வீட்டைவிட வசதியான ஒன்றும் அல்ல. தொழிற்சாலைக்கும் தூரமாக உள்ளது. என்னகாரணமாக இருக்கும். அப்போதுதான் மூத்த மருமகளுக்கு ஒரு பொறி தட்டியது.

 அந்த வீட்டிலேயே ஒரு சிறிய பகுதியில் குடியிருந்தார் அந்த வீட்டு;ககார அம்மா. பெயர் காந்திமதி. கணவன் இல்லை ஒரே மகள் திருமணமும் ஆகி வெளியூரில் இருக்கிறார்கள். அந்த வீட்டைத் தவிர கொஞ்சம் பணம் பாங்கில் இருந்தது. அதோடு வீட்டுவாடகையும் கணவன் வகையில் வந்துகொண்டிருக்கும் பென்சனுமாக சிரமம் இல்லாமல் வாழ்ந்துகொண்டிருந்தார்.

வீட்டுக்குச் சொந்தக்காரர் என்ற தோரணையில்லாமல் முதலில் இருந்தே இவர்கள் மேல் மிகவும் அன்பாக இருந்தார் அந்த அம்மா. இவர்களும் வாடகைக்குக் குடியிருப்பவர்கள் என்ற எண்ணமே இல்லாமல் நடந்துகொண்டார்கள். குழந்தைகளும் பாட்டி பாட்டி என்று எந்நேரமும் அந்த அம்மாவை விடுவதில்லை. அந்த அம்மாவின் மேல் இவர்கள் குடும்பத்தில் யாருக்கு அதிகப் பாசம் என்று சொல்லவே முடியாது. அந்த அளவு ஒவ்வொருவரும் பாசம் வைத்திருந்தனர்.

இந்த அன்பான சூழல்தான் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் மூத் மருமகளுக்கு வந்தபோது எல்லோருமே அதை சரியான ஒன்றாகத்தான் நினைத்தார்கள். அதை அவரிடம் நேராகக் கேட்கும் துணிவு யாருக்கும் இல்லை.

அந்த அம்மா காந்திமதிக்கும் இவர்கள் வீடுகட்டியிருப்பது சந்தோசமாக இருந்தாலும் இவர்களை விட்டுப் பிரிவதற்கு மனம் இல்லை.

அந்த அம்மாவிடம் சொல்லச் சொல்லலாம் என்ற முடிவில் அப்பா இல்லாத நேரம் முத்த மகன் மாதவனும் அவன் மனைவியும் அந்த அம்மாவிடம் பேச்;சுக் கொடுத்தார்கள்.

"அம்மா! அப்பாவுக்கு இந்த வீட்டை விட்டுப் போகவே மனம் இல்லை. நீங்களாவது சொல்லுங்கள்" என்றனர்

அதற்கு அந்த அம்மா சுரத்தின்றி "அப்படித்தான் அவர் இங்கேயே இருக்க ஆசப்பட்டா விட்டுருங்களே! புதுவீடு நல்ல வாடகைக்குப் போகுமில்லியா? விட்டுட்டு இங்கியே இருங்களே! பெரிய மனுஷர் உங்களுக்குக் கெடுதலா செஞ்சுடுவார்? எனக்கு வேண்ணா நீங்க வாடகை சேத்தித் தரவே வேணாம்"  என்றார்.

அவர்கள் இருவருக்கும் ஒரு அதிர்ச்சி! அப்பாவுக்கு ஆதரவா அந்த அம்மா பேசுனதோடு எதுக்காக நம்மகிட்ட வாடகைகூட அதிகம் கேக்காம விடணும்?  ஓ!......இப்படியும் இருக்குமோ!

அதன்பின்பு அந்த அம்மாவை அவர்கள் வற்புறுத்தவில்லை. அப்பாவுடனும் பேசவில்லை. ஆனால் அப்பாமேலேயும் அந்த அம்மா மேலேயும் ஒரு கண் வைத்திருந்தர்கள். தம்பி மணிமாறனும் அவன் மனைவியும்கூட அப்படித்தான் செய்தார்கள்.

அப்பாவின் சம்மதத்தை எதிர்பார்க்காமல் புதுவீடு குடிபோக நாள் நிச்சயித்தர்கள். அவர்கள் வாழ்வில் அப்பாவை மீறி அவர்கள் செய்த முதல் வேலை அதுதான்! வேறு வழி இருக்கவில்லை.

புதுவீடு குடிபுகும் நாள் வந்துவிட்டது. சாமான்கள் எல்லாம் பெரும்பகுதி புது வீட்டுக்குப் போயாகிவிட்டது. அழைப்பிதழ் எல்லாம் இல்லை. சுருக்கமாக அவர்கள் குடும்பத்தினரும் நெருங்கிய உறவினர் சிலரும்தான். காந்திமதி அம்மாவின் மகளும் அழைக்கபபட்டு குடும்பத்தோடு வந்திருந்தர்கள். எல்லோருக்கும் புதுத் துணிகள் எடுக்கப்பட்டிருந்தது. காந்திமதியம்மா உட்பட. ஆனால் அந்த அம்மாவும் அப்பாவும் மட்டும் இந்த மகிழ்ச்சியில் பங்கெடுக்கவே இல்லை.

காலையில் பால்காய்ச்சியதுடன் குத்துவிளக்கேற்றி எளிமையாக புதுவீடு குடியேறும் விழாவை முடித்துவிட்டு யாரும் எதிர் பாராத விதமாக மாதவனும் மணிமாறனும் அப்பாவை வீட்டுக்கு உள்ளே அழைத்தார்கள்.

அதற்குள் மருமகள்கள் இருவரும் காந்திமதி அம்மாவை உள்ளே அழைத்து வந்திருந்தார்கள்.

அவர்களைப் பார்த்து மாதவன், "உங்கள் இரண்டு பேருக்கும் நாங்கள் புதுவீடுவர கொஞ்சமும் இஷ்டம் இல்லே. எதனால்னு நாங்க இப்போ தெரிஞ்சாகணும். சொல்லாம விடமாட்டோம்" என்றான்.

இருவரும் ஒன்றும் பேசவில்லை. காந்திமதியம்மா கண்களில்மட்டும் கண்ணீர் வழிகிறது. அப்பா இறுக்கமான மனநிலையில் ஒன்றும் பேசாமல் இருந்தார்.

மாதவன் மீண்டும், "எங்க மேல இருந்த பாசத்தை விட உங்க ரெண்டுபேரும் ஒருத்தர் மேல் ஒருத்தர் வச்சிருந்த பாசம் அதிகம்ணு நெனைக்கிறோம். அதனாலெ உங்களுக்கு அந்த வீட்டெவிட்டு வரவும் அந்த அம்மாவுக்கு உங்களை அனுப்பவும் மனம் வரலே!... இப்போ சொல்லுங்க நான் சொல்றது உண்மையா இல்லையா?" அவன் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டதால் குரல் தழுதழுத்தது.

அப்பாவோ காந்திமதியம்மாவோ ஒன்றும் பேசாமல் தப்பு செய்து பிடிபடட்வர்கள்போல் அமைதியாக இருந்தர்கள். அது மாதவன் சொன்னதை உறுதி செய்தது.

அடுத்த நிமிடம் காந்திமதியம்மாவின் மகள் எழுந்து வந்து அம்மாவின் கைகளைப் பிடித்து ,

"ஏம்மா! எனக்கும் தானே அப்பா இல்லே? இந்த அப்பாவை எனக்கும் இந்த அம்மாவை அவங்களுக்கும் எப்படிப் பிடிக்காமப் போகும்? எந்திரீங்க மேலே " என்று மகிழ்ச்சியாகவும் குஷியாகவும் அம்மாவின் கையைப் பிடித்து   இழுத்துவர மருமகள்களும் மகன்களுமாக அப்பாவை இழுத்துவர ஆளுக்கு ஒரு மாலையைக் கையிலும் கொடுத்து மாற்றக்கொள்ளச்சொல்ல அவர்களால் ஏதுவும் பேச முடியாத நிலையில் அனைத்தும் நடந்து முடிந்தே விட்டது.

இது அவர்கள் நடத்திய திட்டமிட்ட நாடகம் என்பது அப்பாவுக்கும் காந்திமதியம்மாவுக்கும் புரிந்து விட்டது. தாத்தாவுக்கும் பாட்டிக்கும் நடந்த திருமணத்தைப் பார்த்து பேரக்குழந்தைகள் பேந்தப் பேந்த விழித்தன! இரண்டு வயதான உள்ளங்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தன.

1 comment:

  1. Good story.It communicate love ,affection,social dependence and remarriage at any age.I like it.-A.Vallinayagam.

    ReplyDelete