ss

Wednesday, April 25, 2012

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 3 )
ஆன்மிகத்தின் மூன்று படிகள்

நடப்பில் உள்ள ஆன்மிகத்தை முதல் தரம் இரண்டாம் தரம், மூன்றாந்தரம் அல்லது கடைத்தரம் என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

இதில் முதல்தர ஆன்மிகத்தின் கீழ் வரக்கூடிய தகுதிபெற்றோர் உலகில் மிகமிகச் சிலர்தான் இருக்கமுடியும்! 

இந்த முதல்தர ஆன்மிகத்தில் மதங்களோ சாதிகளோ மக்களுக்குள் ஏற்றத்தாழ்வுகளோ பல்வேறு கடவுளர்களோ உருவ வழிபாடுகளோ கிடையாது. வேதங்களோ மந்திரங்களோ சடங்கு சம்பிரதாயங்களோ கிடையாது. மூடநம்பிக்கைகள் கிடையாது. சொர்க்கம், நரகம், பாவம், புண்ணியம், மறுபிறவி போன்ற கருத்துக்கள் கிடையாது. 
                                 
அதில் உள்ளதெல்லாம் அனைத்துமாக உள்ள பரம்பொருளும் அதன் அங்கங்களாக உள்ள ஒவ்வொன்றும் என்பதே! அதாவது எல்லாமுமாக உள்ள பரமாத்மா அதன் உள்ளுறுப்புக்களாக உள்ள ஜீவாத்மாக்கள் என்பதே!

உயிரற்ற அனைத்தும் பரமாத்மாவுடன் ஐக்கியப்பட்ட நிலையில் அடிப்படைக் கட்டமைப்பும் அதன் இயற்பியல் வேதியியல் பண்புகளுமான இயக்கத்துக்கு மேல் வேறு சலனமற்று இருக்கின்றன. 

உயிருள்ளவை அனைத்தும் இயற்பியல் வேதியியல் பண்புகளுக்கு அப்பால் தோன்றி, தன்மயமாக்கல் மூலம் வளர்ந்து வாழ்ந்து இனவிருத்தி செய்து குறிப்பிட்ட காலத்தில் மறையும்  இரண்டாம் சுற்று இயக்கத்துடன் வாழ்கின்றன.

உயிருள்ளவை உயிரற்றவையாகவும் உயிரற்றவை உயிருள்ளவையாகவும் மாறும் இயக்கம் தொடர்ந்து நடக்கும் நிலையில் உயிருள்ளவற்றைமட்டும் ஜீவாத்மாக்கள் என்று கூறுகிறது. மற்றவை பரம்பொருளுடன் ஒரு அங்கமாக தனித்தனியான பண்புகள் இல்லாமல் பொதுவான பண்புகளுடன் இயங்குவதால் அவற்றை தனியாக ஆத்மா என்று சொல்வதில்லை. 

ஆனால் அவை உயிருள்ளவற்றுக்கு மட்டும் உண்டான இன்பம் அல்லது துன்பம் இவற்றால் பாதிப்படைவதில்லை. காரணம் அவற்றுக்கு அப்படியாக உணரும் தன்மை இல்லை. 

ஆனால் உயிர் உள்ள அனைத்துக்கும் இன்பதுன்பங்களால் பாதிக்கப்படும் பண்பு இருக்கிறது. முக்காலத்தையும் பற்றிச் சிந்திக்கத்தெரிந்த உயிரினமாக இருப்பதால அவற்றுள் மிக உயர்ந்த உயிரினமான மனிதஇனம் மட்டும்; இன்பதுன்பங்களற்ற பரம்பொருளின் ஒரு அங்கமாக ஆவதே உயர்ந்த நிலை என்று கூறுகிறது.

அப்படிப்பட்ட ஒரு நிலையை அடையும் வரை வாழும் வாழ்வைத் துன்பமாக எடுத்துக்கொள்ளாமல் எல்லா உயிர்களையும் நேசிப்பதன்மூலம் எல்லோரும் அமைதியாக வாழமுடியும் என்று கூறுகிளது. அப்படி நேசிப்பதற்கான பயிற்சியாக வாழ்வைத் தூய்மையாக்கப் பல்வேறு வழிமுறைகளையும் வலியுறுத்துகிறது.

இந்த முதல்தர ஆன்மிகத்துக்கு அறிவும் அன்பும் கருணையும் அடிப்படையாக விளங்குகிறது.அறிவியல் கருத்துக்களுக்கும் முற்போக்கு சிந்தனைகளக்கும் நெருக்கமாக விளங்குகிறது.

இரண்டாம்தர ஆன்மிகம் என்பது முதல்தர ஆன்மிகத்தை மறுப்பதில்லை. ஆனால் அதை ஏற்றுக்கொண்டாலும் அதற்குப் பொருந்தாத அது களையவேண்டும் என்று சொல்வதை யெல்லாம் இருக்கமாகப் பிடித்துக்கொண்டே மற்றவர்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்வதோடு நிறுத்திக்கொள்கிறது. செயல்பாட்டில் அறிவுக்கு இடம் கொடுக்காமல் தவறான உணர்வுகளையே பின்பற்றி நடக்கிறது. நல்ல விஷயங்களை ஏற்றுக்கொள்வதும் மூடநம்பிக்கை மற்றும் தவறான வழிகளில் நடப்பதுமான இரட்டைவாழ்வு வாழ வழிகாட்டுகிறது.

இதில்தான் பலகடவுள் வழிபாடு, மதம், சாதி, சடங்கு சம்பிரதாயம், மனிதருக்குள் ஏற்றத்தாழ்வு போன்றவையெல்லாம் பல்வேறு விளக்கங்கள் மூலம் நியாயப்படுத்தப்படுகிறது. ஆதாவது ஒழிக்கப்படவேண்டிய நம்பிக்கைகளுக்கெல்லாம் சப்பைக்கட்டுக் கட்டி உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்படுகிறது. 

இவர்களுடைய ஆன்மிகத்தின் அடிப்படையாக சுயநலமும் பயமும் முதல் இரண்டு இடங்களையும் அறியாமை மூன்றாம் இடத்தையும் வகிக்கிறது.

பாம்புக்கு வாலையும் மீனுக்குத் தலையையும் காட்டுவதுபோன்ற இரட்டை நிலை இவர்களுடையது. இவர்களின் ஈடுபாடு என்றும் முதல்தர ஆன்மிகத்தைவிட மூன்றாந்தர ஆன்மிகத்தில்தான் இருக்கும். 

மூன்றாந்தர ஆன்மிகம் என்பது சுத்தமான மூடநம்பிக்கைகளைமட்டும் அடிப்படையாகக்கொண்டது. இதற்கு எந்தவிதத் தத்துவ அடிப்டையும் கிடையாது. முதல்தர ஆன்மிகம் என்ற ஒன்றைப்பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால் ஆன்மிகவாதிகள் என்று இவர்கள் தங்களைக் கருதுவதுமட்டுமின்றி அதைமறுப்பவர்களை மூர்கமாகத் தாக்குவதில் முன்னணியில் நிற்பவர்கள் இவர்களே!

இந்த மூன்றாம் தர  ஆன்மிகத்துக்கு அடிப்படையாக அறியாமையும் பயமும் முதல் இரண்டாமிடத்தையும் சுயநலம் மூன்றாமிடத்தையும் வகிக்கிறது. 

இவற்றில் முதல்தர ஆன்மிகவாதிகள் என்பவர்கள் நடைமுறைவாழ்வில் அனேகமாக நாம் காணமுடியாதவர்கள். ஆனால் உலகமக்கள் பின்பற்றத் தகுதி வாய்ந்தவர்கள். 

இரண்டாம் தர ஆன்மிகவாதிகள் ஏராளமாக இருக்கின்றார்கள். அவர்கள் தங்களைக்காட்டிலும் உயர்தகுதி உடைய முதல் தர ஆன்மிகவாதிகள் பற்றியும் தங்களைவிடத் தாழ்ந்த தகுதி பெற்ற மூன்றாம் தர ஆன்மிகவாதிகள் பற்றியும் அறிந்தவர்கள். நல்ல அல்லது கெட்ட அம்சங்களை உள்ளபடியே உணர்ந்து நல்ல வழியில் தாங்களும் நடந்து முன்றாம் தர ஆன்மீகவாதிகளையும் சேர்த்து வழிநடத்தி முதல் நிலையை நோக்கி அழைத்துச் செல்லும் தகுதியும் வாய்ப்பும் உள்ளவர்கள்.

மூன்றாம்தர ஆன்மிகவாதிகள்தான் உலகமக்களில் பெரும்பாலோராக இருக்கிறார்கள்.

மூன்றாம் தர ஆன்மீகவாதிகளும் இரண்டாம்தர ஆன்மிகவாதிகளும் என்று முதல் தரத்தை அடைகிறார்களோ அப்போதுதான் ஆன்மிகம் என்பது மதிப்புப் பெறும் 

அதுதான் உண்மையான ஆன்மிகம்! அத்தகைய ஆன்மிகத்துக்கு மக்களை அழைத்துச் செல்லும் பாதையே சரியான பாதை!

அதுதான் ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை!

4 comments:

 1. அருமையான பதிவு.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி.
  Please remove Word Verification in your Blog and you may have moderation.

  ReplyDelete
 2. பாராட்டுக்கு நன்றிகள் நண்பரே!

  ReplyDelete
 3. i am in 2 nd stage i like to be with you in first stage anna

  ReplyDelete
  Replies
  1. நல்லது தம்பி! நிச்சயம் ஒரு நாள் முதல் நிலையை அடைவீர்கள்....

   Delete