ss

Monday, April 16, 2012

உணவே மருந்து ( 4 )


நாற்காலிக்கு மூணே கால்
என்ன இது, நாற்காலிக்கு மூன்றே கால்கள்தானா? முயலுக்குத்தானே மூணுகால் என்று சொல்வார்கள்? அதுவும் விதண்டாவாதிகள்! அறிவுடையவர்களின் வாதம் அப்படியல்லவே. அதற்கு இங்கென்ன வேலை? இப்படியெல்லாம் நீங்கள் நினைத்தால் அது மிகத் தவறு. ஏனென்று சொன்னால் இந்தக் குற்றச்சாட்டு மற்றவர்கள்மேல் அல்ல. உங்கள்மேல்தான். ஏன் நம் மேல் என்றுகூடச் சொல்லலாம். 



ஆம். நாம் வாழ்வதற்கு உணவும் காற்றும் நீரும் அடிப்படைத் தேவைகள். அது இல்லாமல் நாம் இல்லை. இவை நமக்கு இயற்கையாகவே கிடைக்கின்றன. மனித வாழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு விட்டதால் இவற்றை நாம் தேடிச்செல்ல வேண்டியதில்லை. இருக்கும் இடத்திலேயே பெரும்பாலும் கிடைக்கிறது. 

நாம் அவற்றில் காற்றையும் நீரையும் நிறையக் கெடுத்திருந்தாலும் இன்றும் அனேகமாக அப்படியேதான் ஓரளவு பயன்படுத்தி வருகிறோம். ஆனால் உண்ணும் உணவில்தான் மிகப்பெரும் மாற்றங்களைச் செய்திருக்கிறோம். ஆதாவது வகைவகையான உணவுப்பண்டங்களை விதவிதமாகத் தயாரித்து உண்டு வருகிறோம். ஏழையில் இருந்து பணக்காரன் வரை அவரவர் வசதிக்கேற்ப தயாரிக்கப்பட்ட உணவைத்தான் உண்கிறோம். அதில் பொதுவான விசயம் என்னவென்றால் எல்லோருமே சமைத்துத்தான் உண்கிறோம்.

உலகில் வாழும் உயிரினங்களில் சமைத்துண்ணும் உயிரினம் மனிதன் மட்டும்தான். ருசியை மேலும் மேலும் கூட்டவே இயற்கையில் கிடைக்கும் உணவுப்பொருட்களை விதவிதமாகச் சமைத்து உண்கிறோம். உணவைச் சமைப்பதால் ஒருபக்கம் ருசி அதிகமானாலும் மறுபக்கம் அதன் இயற்கைக் கட்டமைப்பு சிதைக்கப்படுவதால் அதன் குணங்கள் உடல் நலனுக்கு எதிராக மாறுகிறது.

மண்ணில் விளையும் உணவுப் பொருட்களில் நமக்குத் தேவையான சத்துக்கள் இயற்கையாகவே சரிவிகித அளவில் பொதிந்திருக்கின்றன. ஆனால் நெருப்பைக்கொண்டு சமைக்கும்போதும் எண்ணெயில் பொரித்தெடுக்கும்போதும் நெருப்பில் நேரடியாகச் சுடும்போதும் அந்த சரிவிகிதத்தன்மை சிதைக்கப்படுகிறது. அதாவது நமது உடல்நலனுக்கு சாதகமான நிலையில் இருந்து பாதகமான நிலைக்கு மாற்றப்படுகிறது. ஆதாவது நாற்காலியின் ஒன்றிரண்டு கால்கள் ஒடிக்கப்படுகின்றன. அந்த நிலைதான் நோய்களுக்கான காரணங்களாகிவிடுகிறது. ஒரு நாற்காலியின் நான்கு கால்களும் சமமாக ஊன்றியிருந்தால்தான் நாம் பாதுகாப்பாக அமரமுடியும் அதில் ஒன்று பலவீனமானாலும் அது நமக்கு ஆபத்துதானே? அதைத்தான் நம்மில் அனேகமாக அனைவரும் செய்து வருகிறோம். நாற்காலிக்கு நான்கு கால்கள் என்று நீங்கள் எண்ணுவது உண்மையானால் இயற்கை உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!

No comments:

Post a Comment