ss

Wednesday, April 11, 2012

ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 5 )


அளவான உறக்கம்



நமது வாழ்நாளில் ஒரு பெரும் பகுதியை நாம் அனைவருமே தூக்கத்துக்காகச் செலவிடுகிறோம். நேரத்தில் வேறுபாடுகள் இருப்பினும் அனேகமாக அனைத்து உயிரினங்களுமே உறங்கும் வழக்கம் உடையனவாகவே இருக்கும். சில விதிவிலக்குகள் இருக்கலாம். அதற்கான காரணமும் நிச்சயம் இருக்கும். 



சவாசனம் என்பது பற்றி யோகாசனம் செய்பவர்களுக்குத் தெரியும். ஆதாவது யோகக்கலையைப் பயிற்சி செய்யும்போது இடையிடையே ஒருசில நிமிடங்கள் சவாசனத்தில் இருப்பர். ஆதாவது சவம் போன்று எந்தவிதமான அசைவும் உணர்வும் இன்றி உடலையும் உள்ளத்தையும் (தூங்காமல்)ஓய்வுநிலையில் வைத்திருப்பர். அதன்மூலம் ஒரு யோகாசனம் செய்துவிட்டு அதன்மூலம் ஏற்பட்ட களைப்பைப் போக்கிக் கொள்வதும் அடுத்த யோகாசனம் செய்யத் தயார்படுத்திக் கொள்வதும் சாத்தியமாகிறது. அதேபோலத்தான் ஓயாது இயங்கிக்கொண்டிருக்கும் உடம்புக்கும் உள்ளத்துக்கும் ஒருநாளின் குறிப்பிட்ட நேரம் ஓய்வு கொடுத்தால்தான் மறுநாளைய இயக்கத்துக்குத் தன்னைத் தயார் செய்துகொள்ளமுடியும். அத்தகைய ஓய்வு நிலையையே தூக்கம் என்கிறோம்.









மனிதர்களாகிய நாமும் பிறந்தது முதல் இறக்கும் வரை ஏறக்குறைய மூன்றிலொரு பகுதியை தூங்குவதற்காகவே செலவழிக்கிறோம். தூக்கம் என்பது பழக்கம் மட்டுமல்ல. அது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம். உழைப்பின் காரணமாக உடல் களைப்படைவதுபோல் சதா சிந்திப்பதன் காரணமாகவும் உடல் இயக்கங்களைக் கட்டுப்படுத்தி இயக்குவதன் காரணமாகவும் மூளையும் சோர்வடைகிறது. எனவே உடலும் மூளையும் ஓய்வெடுக்கும் முறையில் தினமும் உறங்குகிறோம். அதிகமாகத் தூக்கம் கெடும் போது உடலும் மனமும் சோர்வடைவதையும்  இயல்பான நிலையில் இருந்து மாறுபடுவதையும் அனுபவத்தில் காண்கிறோம். எனவே தூக்கம் என்பது ஒவ்வொவருக்கும் இன்றியமையாத ஒன்றாகும்.

சாதாரணமாக அசையாமல் படுத்திருப்பதற்கும் தூஙகுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன? சாதாரணமாகப் படுத்திருக்கும் போது உடல் ஒய்வாக இருப்பினும் மூளை வேலை செய்து கொண்டுள்ளது. அது உடலைப்பற்றியும் சுற்றுப்புறத்தைப் பற்றியும் வெளியுலகையும் தனது பணிகளையும் பிரச்சினைகளையும் பற்றியும் சிந்தித்துக் கொண்டுள்ளது. சிந்தனை என்னும் இயக்கம் இல்லாத நிலையைத்தான் உறக்கம் என்று சொல்ல முடியும். உறக்கத்தின் மூலம் களைப்பைப் போக்கிக் கொள்ளும் மூளை விழித்தெழும்போது தனது பணியைத் தொடர்கிறது.

மூளை செயல்பட்டுக்கொண்டு இருக்கும்போது உடலுக்கு ஓய்வு கொடுக்க முடியும். ஆனால் உடல் செயல்பட்டுக்கொண்டு இருக்கும்போது மூளை ஓய்வெடுக்க முடியாது. அதனால் தூங்கும்போது மட்டுமே மூளை ஓய்வெடுக்கிறது! 


நமது உடலியக்கமும் மூளையும் ஒன்றோடொன்று இணைபிரியாத தொடர்புடையவையாகும். உடல்நலன் உள்ளத்தையும் உள்ளத்தின் நலன் உடலையும் பாதிக்கக்கூடிய வகையில் சிக்கலான நுண்ணிய விதத்தில் பிணைக்கப்பட்டுள்ளது. எனவே உறக்கம் என்பது இந்த இரண்டு இயக்கங்களுக்கம் அவசியமாகிறது. 

மற்ற உயிரினங்கள் உணவைத் தேடி அலைகின்றன. பசிக்கும்போது கிடைத்ததை உண்கின்றன. மற்ற நேரங்களில் ஓய்வெடுக்கின்றன. நினைத்த நேரம் தூங்கவும் செய்கின்றன. ஆனால் மனிதராகிய நாம் வேறுவகையான சமூக வாழ்வு வாழ்வதால் தூங்கும் நேரத்தையும் ஏன் உண்ணும் நேரத்தையும்கூட ஒழுங்கமைக்க வேண்டியுள்ளது. 

அதனால் நமது வாழ்வில் உறங்கும் நேரம் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை நாம் ஓரளவு வரையறுத்து செயல்படுவதுதான் நன்மையாக இருக்கும். 



உழைப்பினாலும் அதனையொட்டிய எண்ணங்களாலும் உடலும் உள்ளமும் சோர்வடையும் போது அந்தச் சோர்வை நீக்கி மீண்டும் புத்துணர்வைப் பெறும்வரை தூக்கம் அவசியம். ஆனால் எவ்வளவு தூக்கம் அவசியமோ ஆதாவது மூளை சாதாரண நிலையை அடையும்வரை மட்டும் தூங்க வேண்டும். அதிகமாகத் தூங்கிப் பழகிவிட்டால் உடல் களைப்பு இல்லாவிட்டாலும் ஓய்வில் இருந்தாலும் தூக்கம் வரும்.  குறைந்த அளவு மூளைக்கு வேலை கொடுத்தாலும் தூக்கம் வரத் தொடங்கிவிடும். 

அதுமட்டுமல்ல மூளையின் பதிவுத்திறனும் சிந்தனைத்திறனும் அடங்கியுள்ள விசயங்களின் அளவும் குறையும். தன்னுள் நிறைய விசயங்களை ஏற்றுக்கொள்ள விரும்பாத அல்லது இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும்.

அதேபோலப் போதுமான அளவுக்குத் தூங்காவிட்டாலும் தீங்கு ஏற்படும். மூளையானது தனது சக்திக்கும் பழக்கத்துக்கும் மாறான அதிக அளவு வேலைப் பழுவைத் தாங்கும் போது மிகவும் துன்பப்படுவதால் அதன் இயல்பான இயக்கம் பாதிக்கப்படும். அதன் பணிகளை முறையாகச் செய்ய முடியாது. அப்படிச் செய்தாலும் குறிப்பிட்ட அந்த வேலையைத் தவிர மற்ற வேலைகளில் நிலை தடுமாறும். அதன் காரணமாக செயலிலும் சிந்தனையிலும் ஒழுங்கு இருக்காது. உணர்வின்றிச் செய்யும் வேலைகளால் உடலும் தீங்கான எதிர் விளைவுகளைச் சந்தித்து உடல் உபாதைகளால் துன்பப்பட நேரும். 


எனவே உடலும் மூளையும் நரம்பு மண்டலமும் எப்போதும் முறையான செயல்பாட்டுக்கு ஏற்றதாக இருக்க வேண்டுமானால் போதுமான அளவில் தூங்க வேண்டும். கூடுதல், குறைவு இரண்டுமே நன்மை பயக்காது. தொடர்ந்த பழக்கத்தினாலும் பயிற்சியினாலும் உறங்கும் நேர அளவைச் சரியான அளவில் வைத்துக் கொள்ள உடலையும் உள்ளத்தையும் பக்குவப் படுத்தலாம். ஆனால் ஒரேயடியாகத் துன்புறுத்தக் கூடாது. எனவே நம் உடல் மற்றும் தார்மிக வாழ்வின் நலனுக்கு அளவான உறக்கத்தைக் கொடுப்பதை நமது கடமைகளில் ஒன்றாகக் கொள்ளவேண்டும்.


No comments:

Post a Comment