ss

Thursday, April 26, 2012

ஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 5 )
ஆன்மிகத்தின் அவலம்

உலகமக்களால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு விஷயம்தான் ஆன்மிகம்.

ஆன்மிகவாதிகள் என்றால் ஜீவாத்மா பரமாத்மா என்ற கோட்பாட்டின்படி அனைத்தும் இயங்குகிறது அனைத்தும் நடக்கிறது என்பதை உறுதியாக ஏற்றுக்கொண்டவர்கள்.

அத்தகைய பரமாத்மாவை உலகினைப்படைத்த இறைவனாக ஏற்றுக்கொண்டவர்கள். வாழும் உயிர்கள் மற்றும் புலப்படும் மற்றும் புலப்படாத அனைத்தும் அந்த இறைவனின் கிருபையால் உருவானவை என்பதை ஏற்றுக்கொண்டவர்கள்.

அந்த இறைவன்தான் நம்மையெல்லாம் படைத்து நமது சுகதுக்கங்களுக்கெல்லாம் காரணமாக இருப்பவன் என்று நம்புபவர்கள்.


அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதில் ஆழமான நம்பிக்கை உள்ளவன். நல்லவரைக்காப்பதும் கெட்டவரைத் தண்டிப்பதும் அந்த இறைவன் செயல் என்று நம்புபவர்கள்.

வாழும் மனிதர் ஒவ்வொருவரும் பயபக்தியுடன் தொழவேண்டிய மகிமைவாய்ந்த சக்தி என்று நம்புபவன். அதற்காக எண்ணற்ற ஆலயங்களையும் வழிபாட்டுத் தலங்களையும் உருவாக்கி அவற்றை மையமாகக்கொண்டு வழிபாடு செய்வதும் ஆன்மிக உணர்வுகளை வளர்ப்பதும் என்ற சதாகாலமும் ஆன்மிகத்திருப்பணியில் ஈடுபாடு கொள்பவர்கள்;.

இதில் உள்ள மகா கொடுமை என்னவென்றால் மனச்சாட்சி உள்ளவர்கள் மறுக்க முடியாத உண்மை என்னவென்றால் இத்தகைய மகா வல்லமை படைத்த இறைவனுக்கு உலகில் எங்குமே ஆலயம் இல்லை என்பதுதான். அந்த இறைவனுக்காக ஒரு மதமோ ஒரு வேதமோ அல்லது வேத மந்திரங்களோ புனிதச் சடங்குகளோ வேண்டுதல்களோ உயிர்ப்பலியோ புனித யாத்திரைகளோ இல்லை என்பதுதான்.

அப்படியென்றால் எல்லாம்வல்ல இறைவனின்பெயரால் இவர்கள் என்னதான் செய்கிறார்கள்?

அந்த மகா இறைவனைக் கூறு கூறாக எண்ணற்ற கூறுகளாக்கி அந்த ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயரிட்டு இதுதான் கடவுள் மற்றதெல்லாம் பிசாசுகள் என்று சொல்கிறார்கள். ஒரு குழற்தையைப் பலகூறுகளாக்கி ஒவ்வொரு கூறையும் இதுதான் என்னுடைய குழந்தை என்று சொல்வதற்கும் இதற்கும் என்னவேறுபாடு உள்ளது?

இறைவன் ஒருவன்தான் அனைத்தையும் படைத்தான் என்றால் அந்த இறைவனுக்குப் பல பெயர்கள் எதற்கு? 

இறைவன் ஒருவன்தான் இத்தனையுமாக இருந்து இத்தனையையும் ஆட்டிப்டைக்கிறான் என்றால் இத்தனை மதங்கள் எதற்கு?

இறைவனை அடையும் பாதையில் ஏற்பட்ட முரண்பாடுகள்தான் புதுப்புதுத் தத்துவங்களும் மதங்களும் தோன்றியதற்கு அடிப்படைக்காரணம் என்றால் ஏற்கனவே இருக்கும் இறைத்தத்துவத்தில் சிர்திருத்தத்துக்கும் மாற்றத்துக்குமாகத்தான் முயன்றிருக்கவேண்டுமே தவிர புதுப்புது மதங்கள் தோன்றியதால் மக்கள் பிளவு பட்டதைத்தவிர இறைவன் இன்னார் என்று மக்கள் உணரமுடியாமல் குழப்பமும் குத்துவெட்டுமாக வாழ்ந்ததைத் தவிர வேறு என்ன பயன் கண்டார்கள்?

அன்பே கடவுள் என்று அனைத்து மதங்களும் ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் பிரச்சினை என்று வரும்போது எந்த மதம் தன்னால் வழிநடத்தப்படும் மக்களுக்கு அன்பு மார்க்கத்தை நினைவுபடுத்தி சமாதானமும் சாந்தியும் நிலவச்செய்தது?

நாடுகளிடையே மோதல் வரும்போது எத்தனை மதங்கள் அந்த நாடுகளுக்குத் தூதுபோய் போர்களைத் தடுத்தன?

ஒரே மதத்தைப் பின்பற்றும் நாடுகளுக்குள்ளேயே போர்களும் கூட்டங்கூட்டமாக மனிதக் கொலையும் எதற்காக? 

தனிமனித வாழ்வில்கூட ஒவ்வொருவரும் மனமாச்சர்யமின்றி சகோதரத்துவத்தடன் வாழ பொதுவான மார்கத்தை எந்தமதமாவது விலியுறுத்தியதா? ஒவ்வொன்றின் போதனையும் அதனதன் போதனைகளையும் அதனதன் கடவுள்களையும் பின்பற்றவேண்டும் என்பதில்தான் முடியும்.

ஒரே கணக்கு பலவிடைகள் எப்படி இருக்கமுடியும்? அப்படிப் பலவிடைகள் வந்தால் அவை எவையும் சரி என நிரூபிக்கப்படவில்லை என்றால் அனைத்துமே தவறு என்று பொருள். அனைத்துமே பொய் என்பது பொருள்.

இந்தத் தவறுகளின்மேல் இந்தப் பொய்களின்மேல் ஒருவாக்கப்படும் மனித நாகரிகத்துக்கும் ஓட்டைக்கப்பல்களை நம்பிப் பயணம் செய்வதற்கும் என்ன பெரிய வேறுபாடு இருக்கமுடியும்?

எல்லாம் வல்ல இறைவன் ஒன்று என்று சொல்லிவிட்டு அடித்தட்டுமக்களை நீங்கள் எதைவேண்டுமானாலும் வணங்கலாம், எதை வேண்டுமானாலும் சாஸ்திரங்கள் என்று சொல்லிக்கொள்ளலாம் கடவுளின் பெயரால் யார் எதைவேண்டுமானாலும் சொல்லி ஏமாற்றிப் பிழைக்கலாம், எந்த உயிரினத்தை வேண்டுமானாலும் கடவுளின்பேரால் பலி கொடுக்கலாம், அந்தச் சடங்கை நடத்திக் கொடுக்க மதத்தின் முன்னோடிகள் தயாராகவே இருப்பார்கள் என்பதுதான் ஆன்மிகமா?

சின்னச் சின்னக் குற்றங்களுக்கெல்லாம் இன்னின்ன தண்டனை என்று சட்டப்புத்தகங்களில் எழுதிவைத்து அதைக் கல்லூரிகளில் பாடமாகக் கற்றுக் கொடுப்பவர்கள் எல்லாம் வல்ல இறைவன்மட்டும் தவறுகளுக்கு மறுபிறவியில் தண்டனை கொடுப்பான் என்று கடவுளையே சோம்பேரியாகச் சித்தரித்து மக்களை ஏமாற்றுவதுதான் ஆன்மிகமா?

மொத்தத்தில் சத்திய சொரூபியாகச் சித்தரிக்கப்படும் கடவுள்பெயரால் ஆன்மிகத்தின் பெயரால் உண்மையைத் தவிர அத்தனை அவலங்களும் நடக்கின்றன.

இந்த அவலங்கள் ஆன்மிகமா? இல்லை இத்தகைய முடத்தனத்தை ஒழித்துக்கட்டுவதன் மூலம் உண்மையான பரம்பொருள் அல்லது பரமாத்மாவை மனதில் நிறுத்தி அனைத்து மக்களும் ஒரே நோக்கில் சகோதரத்துவத்துடன் உயர்வாழ்வு வாழ்வது ஆன்மிகமா?

அதுவே ஆன்மிகத்தின் புதுப் பாதை!

No comments:

Post a Comment