ss

Friday, April 20, 2012

ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 6 )


அளவான பேச்சு

நாம் நமது கருத்துக்களையும் தேவைகளையும் தெரிவிப்பதற்கும் வெளியில் இருந்து தெரிந்து கொள்வதற்கும் பல்வேறு மொழிகள் மூலமாகப் பேசுகிறோம். பிறருக்குக் கற்பிக்கவும் நாம் கற்றுக் கொள்ளவும் பேச்சு அடிப்படையாகிறது. பேசும் சக்தி இல்லாவிட்டால் இவ்வளவு நவீன வாழ்க்கை முறைக்கு மனிதன் முன்னேறியிருக்க முடியாது.


பல்வேறு மிருகங்களும் பறவைகளும் உயிரினங்களும் குரலெழுப்பி வாழ்ந்தாலும் அவையெல்லாம் மிகமிகக் குறுகிய தேவைகளை மட்டும் பரிமாறிக்கொள்ளும் ஓசையாகத்தான் இருக்கின்றன. ஆனால் மனிதனின் பேச்சு வழக்கம் மற்ற பண்புகளைப் போலவே அதியற்புதமான வளர்ச்சியடைந்த ஒன்றாகும். 

ஊமையரைத் தவிர மற்ற அனைவரும் பேசத் தெரிந்திருக்கிறோம். அத்துணை பேருடைய பேச்சும் ஒரே மாதிரியானவை அல்ல. உணர்வால், அறிவால், தேவையால், பழக்கத்தால், பண்பாட்டால் நாம் எத்தனை விதமாக மாறுபட்டிருக்கிறோமோ அத்தனை விதமாகப் பேசுவதிலும் மாறுபட்டே இருக்கிறோம். 

குழந்தை மழலைமொழி பேசுகிறது. வளர்ந்தபின்பு முறையாகத் தத்தமக்கு ஏற்ற முறையில் பேசுகிறோம். ஆசிரியர் கற்பிக்கிறார். மாணவர் கற்கின்றனர். குழந்தைகளில் இருந்து முதியவர்; வரை அத்தனை பேரும் அன்பு, கோபம், இன்பம், துன்பம், கடமை, நல்லெண்ணம், கெட்டெண்ணம் போன்ற பல்வகை உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறோம். ஓருவர் வாயில் இருந்து புறப்படும் வார்த்தை அதைக் கேட்பவர் உணர்வைச் சாதகமாகவோ பாதகமாகவோ பாதிக்கிறது. 

ஒரு வார்தையால் ஏற்படும் பாதிப்பு அந்த வார்த்தை அல்லது பேச்சில் பொதிந்துள்ள பொருளைப் பொருத்தும் அதைக் கேட்பவரின் குணாம்சத்iதைப் பொருத்தும் மாறுபடும்.

ஒருவர் தகாத வார்த்தையால் தரக்குறைவாகத் திட்டினாலும் அது உள்ளத்தை ரணமாக்கினாலும் எதிர்த்து எதுவும் பேச முடியாதவர்களும் உண்டு. சாதாரண தரக்குறைவான அல்லது முரண்பாடான வார்த்தைகளுக்காகவே பொங்கி எழுபவர்களும் உண்டு. 


ஒருவர் எவ்வளவு மோசமாகத் திட்டினாலும் அதனால் பெரிதும் மனம் பாதிப்படையாத அப்பாவிகள் உண்டு. அதேபோல் தீயவர்களின் அசிங்கமான வார்தைகளை சட்டை செய்யாமல் பொகும் சாதாரணமானவரும் நல்லோரும் உண்டு. ஆனால் இரண்டின் தன்மை வேறு. அதேபோல் அறிவு படைத்த சிலர் அறிந்தோ அறியாமலோ தவறு செய்துவிட்டால் அதற்காக தன்னிலும் மேலோர் அல்லது மரியாதைக்குறியோர் ஏசினாலும் அமைதியாகக் கேட்டுக்கொள்வர். தன் தவறுக்காக வருந்துவதோடு அதற்கான நியாயமான பதிலும் கூறுவர். அதேசமயம் தரம் குறைந்தோருக்குப் புத்தி சொல்லப் போய் அதன் விளைவு அருவெறுப்பாகப் போய் விடுவதுமுண்டு. 

பேசுபவர், கேட்பவர் இருவரின் தரத்தைப் பொறுத்துப் பேச்சின் விளைவு வேறுபடுகிறது. எனவே நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பொருள் நிறைந்ததாக இருக்க வேண்டும். 


சிலர் மணிக்கணக்கில் சொற்பொழிவு நிகழ்த்துவார்கள். ஆனால் அதன் பெரும் பகுதி சாரமற்றதாகவே இருக்கும். அதனைக் கேட்பவர் மனதில் எவ்வித சலனமும் ஏற்படாது. காரணம் அவர்கள் பேச்சில் உள்ள கருத்துக்களைவிட பேச்சின அளவு சலிப்பூட்டுமளவு அதிகமாக இருக்கும். 


இன்னும் சிலர் அர்த்தமற்றபடி ஏதாகிலும் சதா உளறிக்கொண்டு இருப்பார்கள். கேட்பவருக்கு எரிச்சல் வருமேதவிர அதனால் பயன் ஒன்றும் இருக்காது. 

நுணுக்கமான தையலுக்கு கடப்பாரை போன்ற ஊசி பயன்படாது. அதுபோல நலன்பயக்கும் கருத்துப் பரிமாற்றத்துக்கு மிகுதியான பேச்சும் பயன்படாது.

நாவன்மையால் மக்களைக் கிளர்ச்சியடையச்செய்து அதன்மூலம் வரலாற்றில் சாதனை படைத்தவர்களும் உண்டு. 

அவர்களெல்லாம் தாம் அறிந்த உண்மைகளையும் அதை மற்றவர்களும் உணரவேண்டிய அவசியத்தையும் உண்மையை உணர்ந்த பின்பு ஆற்றவேண்டிய கடமைகளைப் பற்றியும். அனைவர் மனதையும் கவிவிப் பிடிக்கும் வண்ணம் தம் பேச்சாற்றலால் கவர்ந்தவர்கள் ஆவர். பேச்சாற்றல் என்பது வெறும் வர்த்தை ஜாலமாக இல்லாமல் உண்மையிலும் சத்தியத்திலும் ஊறிப்போனதாக இருக்கவேண்டும். உயர்ந்த எண்ணங்களை வெளிப்படுத்தும் கருவியாக இருக்கவேண்டும். உயர்ந்த செயல்பாட்டுக்கு மற்றவர்களைத் தூண்டும் அற்புத சக்தியாக இருக்கவேண்டும்.


உலகில் சிறந்த மொழி மௌனம் என்பார்கள். அதன் பொருள் அறிவற்றவனும் பேசாமல் மௌனமாக இருந்தால் அது சிறந்ததாகக் கொள்ளப்படும் என்பதல்ல. அவனைப் பொருத்தவரை உபயோகமில்லாமல் நிறையப் பேசுவதைவிட அமைதியாக இருப்பது மேல் என்பதாகும். 

அறிவுத் திறனும் பேச்சுத் திறனும் செயல்திறனும் உள்ள ஒருவர் பேசாமல் அமைதிகாத்தல் என்பதும் அவர் பேசுவதைவிடச் சிறந்ததே. காரணம் அவர் பேச்சின் மூலம் வெளிப்படுத்தும் கருத்து சிறந்ததாக இருப்பினும் அவர் அமைதிகாக்கும் நேரத்தில் அதைவிடச் சிறந்த கருத்துக்கள் அவர் மனதில் ஓடிக் ஓடிக்கொண்டிருக்கும் என்பதே.


ஆகவே நமது பேச்சு ரத்தினச்சுருக்கமாக இருந்தாலும் எவ்வளவு அதிகமாகப்பேசினாலும் அல்லது அமைதி காத்தாலும் அதை மேலும் மேலும் பிறர் விரும்புமளவு கருத்தாழமிக்கதாகவும் கேட்போர் மனதை ஊடுருவிச் செல்லும் சக்தி படைத்ததாகவும் இருத்தல் வேண்டும். இன்றைய உலக சமுதாயம் மகத்தான வளர்ச்சி பெற்றிருந்தாலும் அந்த வளர்ச்சியால் அனைத்து மக்களும் சிறந்த பயன் பெறாத நிலையில் உடலாலும் உள்ளத்தாலும் சதா போராடும் ஒரு கொந்தளிக்கும் போர்க்களமாகவே இருக்கிறது. 

இந்த நிலையில் உயர்ந்த நோக்கங்களைக் கொண்ட ஒவ்வொருவரும் தமது சொந்தக் கடமைகளையும் தனது நாட்டுக்கான கடமைகளையும் உலகளாவிய கடமைகளையும் சிறப்பாகச் செய்ய தமது நாவன்மையைச் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

ஒரு சிறு நெருப்பு பெரும் காட்டையே அழிக்கவல்லது . பொருள்பொதிந்த பேச்சும் அத்தகையதே! அதனுள் பொதிந்துள்ள கருத்துக்களின் சாரத்தைப் பொறுத்துப் பெரும் விளைவுகளை ஏற்படுத்த முடியும். 

எனவே சிறப்பான வாழ்வுக்கு அத்தகைய பேச்சு வழக்கத்தைக் கடைப்பிடிப்பதும் பேச்சுத் திறனை வளர்த்துக்கொள்வதும் மிகவும் அவசியம்.

No comments:

Post a Comment