ss

Saturday, April 21, 2012

நாம் யார் தெரியுமா? ( 6 )


உணர்வு

இவ்வுலகம் பல்வேறு மூலக்கூறுகளாலானது. ஆதாவது ஏறக்குறைய ஒரு சில நூறு மூலகங்களினால் ஆனதுதான் இவ்வுலகம். அவை பல்வேறு விதங்களில் தனித்தும் கலவைப்பொருளாகவும் கூட்டுப்பொருளாகவும் தாவரங்களாகவும் உயிரினங்களாகவும் தோற்றமளிக்கின்றன. இயங்குகின்றன.

இந்தப் பூமி எந்தெந்த மூலக்கூறுகளால் ஆனதோ அந்த மூலக்கூறுகள் ஒவ்வொன்றின் அணுக்களுக்குள்ளும் ஒவ்வொருவிதமாக இயக்கம் நடைபெறுகிறது. அந்த இயக்கங்களின் வேறுபாடுகளே அம் மூலக்கூறுகளின் பண்புகளைத் தீர்மானிக்கின்றன. அல்லது அத்தகைய வித்தியாசமாக இயக்கங்களையும் அவை மற்றவையோடு கொண்டு;ள்ள உறவையும் அந்தந்த மூலக்கூறுகளின் பண்புகள் என்கிறோம். அந்த அடிப்படைப் பண்புகளே பல்வேறு மூலக்கூறுகளோடு பல்வேறுவிதமாக ஒன்றுபட்டும் முரண்பட்டும் கலந்தும் பல்வேறுவிதமான பண்புகளை வெளிப்படுத்துகின்றன. அவைதான் இவ்வுலகில் நாம் காணும் உணரும் அம்சங்களாக விளங்குகின்றன. ஆனால் அத்தகைய குணங்கள் அல்லது பண்புகளை உணர்வுகள் என்று சொல்வதில்லை. ஒளி, காந்தசக்தி, ஒலி, வேறு கதிர்வீச்சுகள் மின்சாரம் போன்றவற்றையும் உணர்வு என்று சொல்வதில்லை.

உதாரணமாக மேடான பகுதியில் சிந்தப்படும் நீர் பள்ளத்தைநோக்கி ஓடுகிறது. ஒரு கல்லை சுத்தியலால் அடித்தால் உடைகிறது. நம்பிச் சுருளுக்குள் காந்தம் சுற்றும்போது கம்பியில் மின்சக்தி ஏற்படுகிறது. நீரைக்கொதிக்கவைத்தால் அது ஆவியாகிறது. கம்பி வழியாகவும் அது இல்லாமலும்.ஒலி, ஒளி அலைகளை மின்காந்த அலைகளாக மாற்றி அனுப்பி வேறிடத்திலிருந்து கேட்க முடிகிறது. இன்னும் பல்வேறுவிதமான காரியங்கள் நடக்கின்றன. காற்று வீசுகிறது கடலலைகள் ஓயாமல் மோதுகின்றன. இரண்டு ரசாயனப் பொருட்கள் சேர்ந்து மூன்றாவதாக ஒரு பொருள் உருவாகிறது. இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் அவற்றின் இயற்பியல் வேதியியல் குணங்களே! அவற்றை நாம் உணர்வுகள் என்று சொல்வதில்லை. காரணம் இந்தக் காரியங்கள் எவையும் விரும்பிச் செய்யப்படுவதில்லை. சூழ்நிலைமைகளின் காரணமாக சிதைவடைந்தோ ஒன்று சேர்ந்தோ இடம் மாறியோ இடம் மாறாமலோ வலிய வேறொன்றின் மீது வினை புரியாமல் சூழ்நிலைகளின் சுழற்சியாக அடிப்படை மூலக்கூறுகளின் இயக்கம் என்ற தன்மையுடன் தன்னளவில் ஓயாமல் உலகத்தோடு ஒட்டி இயங்கிக்கொண்டிருக்கும். இனப்பெருக்கம் என்ற ஒன்றுக்கு இங்கு வேலை இல்லை.

இரண்டாவதாக தாவர வகைகளின் குணங்கள். இவை முன்னதற்கு மாறாக பல்வேறு மூலக்கூறுகளின் நிரந்திரமில்லாத ஆனால் பொருத்தமான கூடடாக இயற்கையில் இருந்து தனக்குப் பொருத்தமானதை உட்கொண்டு வளரும் தன்மையுடையதாக வளர்ச்சிக்குப் பொருத்தமற்ற தேவையில்லாததை பல்வேறு முறைகளில் வெளியேற்றும் இயல்புடையதாக இருக்கின்றன. குறிப்பிட்ட கால வரையரையில் அத்தகைய தன்மையை இழந்து. அழிந்து போனாலும் அதற்கு முன்னதாகவே பல்வேறு முறைகளில் இனவிருத்தி செய்து தன்னித்தைத் தொடர்ந்து வாழ வழிசெய்யும் குணத்தையும் பெற்றுள்ளன.


அதுமட்டுமல்ல ஒளியையும் தமக்குத் தேவையான உணவையும் நாடி தனது இயல்பான வளர்ச்சித் தன்மையில் இருந்து வித்தியாசமாக எட்டியவரை வளைந்து நீண்டு செல்லும் குணமும் உண்டு. இலைகள் மலர்கள் நேரத்துக்குத் தக்கபடி சுருங்கி விரியும் குணம்கூட பல்வேறு தாவரங்களில் பல்வேறு விதமாக உள்ளன. ஒன்று இன்னொன்றின்மேல் இயல்பான குணத்துடன் படர்கின்றன.

ஆனாலும் இவ்வளவும் தான் தோன்றிய இடத்தைவிட்டு நகராமல்தான் நடக்கின்றன. இனவிருத்தியோ இடம்விட்டு இடம்மாறுவதோகூட சூழ்நிலைகளைப் பொருத்துத்தான அமைகிறதே தவிரஇடம்விட்டு இடம் விரும்பி நகர்ந்து செல்வதோ இனப்பெருக்கத்துக்காக நாடிச் செல்வதோ இல்லை.எந்த ஒரு தாவரத்துக்கும் நன்மை தீமையை விரும்பிச்செய்யும் குணமும் இல்லை. எனவே உயிரியல் தன்மை இருந்தும்கூட தாவரங்களின் குணங்களை உணர்வுகளாக நாம் மதிப்பது இல்லை.

அடுத்ததாக குறைந்த அளவிலோ மிக அதிக அளவிலோ மெதுவாகவோ வேகமாகவோ இடம்விட்டு இடம் நகர்ந்து செல்லும் தன்மையுள்ள தன்மயமாக்குவதையும் சிதைவடைவதையும் குணங்களாகக் கொண்டுள்ள இனப்பெருக்கம் செய்வல்ல உயிரினங்கள் கோடிக் கணக்கில் உள்ளன. இவை தம் தேவைகளுக்காக இடம் விட்டு இடம் நகரும் இயல்புள்ளவை. மிகச் சிறிய அளவில் இருந்து மிக அதிகமான அளவு வரை விருப்பு வெறுப்பு என்னும் குணம் உள்ளவை. அவற்றின் செயல்களைத் தீர்மானிப்பவைகளாக அக்குணங்கள் அமைகின்றன. சூழ்நிலைகளுக்கேற்ப அவற்றின் குணங்கள் வேறுபடுகின்றன. சூழ்நிலைகளே அவற்றின் குணங்களுக்குக் காரணங்களாகவும் அமைகின்றன. அதே குணங்கள் இயற்கைச் சூழல்மேல் பாதிப்பையும் ஏற்படுத்துகின்ளன.

உதாரணமாக ஒரு பொருளைச் சரிவான இடத்தில் உருட்டிவிட்டால் அது கிடைமட்டமாக நிற்கத் தோதான இடம் வரும்வரை அந்த விசை உள்ளவரை உருண்டுசென்று பின் நின்றுவிடும். குறிப்பட்ட இடத்தில் விரும்பி நிற்கவோ உருளவோ அப்பொருளால் இயலாது. மின்சாரத்தைச் செலுத்தினால் இயங்கும் மோட்டாரும் எரியும் விளக்கும் சுடரும் ஒளியும் அப்படியே. அதேபோல் படரும் இயல்புடைய ஒரு கொடியை ஒருமரத்தின்மேல் படரவிட்டால் அது படர மறுப்பது இல்லை. அதுபோலவே பூப்பதும் காய்ப்பதும் இயல்பாகவே நடக்கிறது.

ஆனால் ஒரு பாம்புகூட தனக்குத் தீங்கு வருமோ என்னும் நிலை வந்தால் எதிர்க்கிறது, கடிக்கிறது. இல்லாவிட்டால் இல்லை. பசியெடுத்தால் உயிரினங்கள் உண்கின்றன என்பதுமட்டுமல்ல விரும்பினால்தான் உண்கின்றன. இல்லையேல் பசியெடுத்தாலும் உண்ணாமல் விடுகின்றன. தன் குட்டிகளையோ குஞ்சுகளையோ அன்பு பாராட்டும் அதே நேரம் அதுமாதிரி உள்ள வேறு பிராணிகளிடம் பகைமை காட்டுகின்றன. மிகக் குறுகிய அளவில் இருந்து பிரம்மாண்டமான அளவுவரை இத்தகைய குணங்களும் செயல்களும் வேறுபடுகின்றன. அதுவும் உலகின் மிகவும் சக்திமிக்க உயிரினமாகிய மனிதன் அதி அற்புதமான பண்புகளைப் பெற்றுள்ளான். அத்தகைய பண்புகளையே உணர்வு என்று கூறுகிறோம்.

ஆதாவது இயற்கைச் சூழலால் உருவாகி அந்தச் சூழ்நிலைகளின் மேல் பாதிப்பை உண்டுபண்ணக் கூடிய – தோன்றி, வளர்ந்து, வாழ்ந்து, இனவிருத்திசெய்து, இடம்விட்டு இடம்நகரும் பண்புடன், விருப்பு வெறுப்பு என்னும் பண்புகள் நிறைந்த, உயிரினங்களின் குணங்களாக வெளிப்படுகின்ற – நுணுக்கமான பண்பையே உணர்வு என்று சொல்கிறோம்.

அந்த உணர்வின் அதி அற்புத வடிவமாக மனித இனத்தின் அறிவு உயர்ந்து நிற்கிறது.

No comments:

Post a Comment