ss

Friday, April 20, 2012

ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 7 )


எண்ணம் சொல் செயல் தூய்மை 


நமது உடலின் இயல்பான தொடர்ச்சியான இயக்கத்தைத் தவிர எணணம். சொல் செயல், என்ற மூன்று விதமாக நாம் விரும்பிச் செயல்படுத்தும் இயக்கங்களும் நடைபெறுகின்றன.



எண்ணம் என்றால் என்ன? சொல் என்றால் என்ன? செயல் என்றால் என்ன? அவை ஏன் தூய்மையாய் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கடைப்பிடிக்க வேணடும்.



குழந்தைப் பருவம் முதல் இறக்கும்வரை நாம் பல்வேறு சூழ்நிலைகளில் வாழ்கிறோம். அதில் கணக்கற்ற அம்சங்கள் அடங்கியுள்ளன. அந்த சூழ்நிலைகளே நமது எண்ணங்களுக்கு அடிப்படை ஆகின்றன. சூழ்நிலைகள் நமது எண்ணங்களை உருவாக்குகின்ற அதேவேளை நமது சொல்லுக்கும் செயலுக்கும் அதே எண்ணங்களே வழிகாட்டியாய் உள்ளன. சூழ்நிலையால் உருவாக்கப்படும் எண்ணங்கள் அதே சூழ்நிலையின் மேல் பாதிப்பை ஏற்படுத்தவல்ல சுழற்சியாக நமது வாழ்க்கை அமைந்துள்ளது.



சூழ்நிலைகள் எண்ணங்களை உருவாக்குகின்ற அடித்தளமாக இருந்தாலும் அவை எண்ணங்களைப் போல வாழ்வியல் சிந்தனை அம்சமாக இருப்பதில்லை. ஆனால் எண்ணங்கள் உருவாக்கப்பட்டாலும் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டவை. அந்த எண்ணங்களின் பல்வேறு அம்சங்கள் ஒன்றுபட்டும் முரண்பட்டும் சலனமடைகின்றன. 

எண்ணங்கள் தான் உருவான சூழ்நிலையின் தன்மையை ஒட்டி தேவை, தேவையற்றது, நல்லது, கெட்டது என்பது போன்ற அம்சங்களைத் தீர்மானிக்கின்றன. 

ஒருவருடைய வாழ்வில் அவருடைய செயல்களும் அதன் எதிர் விளைவுகளும் அனுபவங்களும் அவருடைய எண்ணங்களுக்குக் காரணமாக இருப்பதைப் போலவே அவருடைய எண்ணங்களில் ஏற்படும் சலனங்களும் அதனால் உருவாகும் புதுப்புது எண்ணங்களும் அவருடைய அடுத்துவரும் செயல்களுக்குக் காரணங்களாகின்றன.

ஓவ்வொரு மனிதருடையவும் எண்ணங்களும், அனுபவங்களும், தேவைகளும், கடமைகளும் வேறுபட்டுள்ளன. ஆனால் சமுதாயமாக வாழவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே ஒருவருடைய கருத்தை மற்றவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது. 

அந்த அவசியத்தின் காரணமாகவே ஆதிமனிதன் விலங்குகளைப் போன்றே குரலெழுப்பி வாழ்ந்த நிலையில் இருந்து மாறித் தன் கருத்தை வெளிப்படுத்த தன் குரலில் ஏற்ற இறக்கங்களைச் சேர்த்து தன்மைகளை மாற்றி படிப்படியாகப் பேசக் கற்றுக் கொண்டான். 

ஆதிமனிதனின் தேவைகளும் கருத்துக்களும் குறைவாக இருந்ததால் பேச்சும் மொழியும் குறைவாகத்தான் இருந்திருக்கும். ஆனால் நவீன மனிதனின் வாழ்வுமுறை உயர்ந்ததாகவும் சிக்கலாகவும் உள்ளதால் பேச்சு முறைகளும் மொழியும் மேலும் மேலும் சிறப்பாகவும் விரிவடைந்ததாகவும் இருக்கிறது. ஆகவே நமது எண்ணங்களை வெளிப்படுத்தும் ஓலி வடிவத்தைப் பேச்சு என்கிறோம்.


மனதால் எண்ணுவதும் குரலால் பேசுவதும் போலவே எல்லோருமே வித்தியாசமான சூழ்நிலையில் வித்தியாசமான முறையில் செயல்படுகிறோம். உலக வாழ்விற்காக செயல்படுவதற்கு எண்ணங்களும் பேச்சும் வழி காட்டுகின்றன. 

எண்ணங்களும் பேச்சும் எந்த அளவு உயர்ந்ததாக இருக்கிறதோ அந்தஅளவு செயல்பாடும் உயர்ந்ததாக இருக்க வேண்டும். பெரும்பாலும் அப்படித்தான் இருக்கும். எனவே எண்ணங்களும் பேச்சும் செயலும் எப்படி இருக்க வேண்டும் என்பதை சரியாக வரையறுத்துக் கொள்ளவேண்டும். 



எண்ணம், சொல், செயல் இம்மூன்றுமே உலகில் வாழும் மனிதர் அனைவருக்குமே உண்டான குணங்கள் ஆகும். மனித வாழ்வு சிறப்புற இருக்க வேண்டுமானால் இதேபோன்ற குணங்கள் பிறர்க்கும் உண்டு என்பதைப்புரிந்து கொள்ள வேண்டும். 

இந்த மூன்றின் வாயிலாக நன்மையோ தீமையோ அனைவராலும் செய்ய முடியும் என்பதையும் உணர வேண்டும். இந்தக் குணங்களால் வேறுபட்டு, முரண்பட்டு எதிரும் புதிருமாக வாழ்வதைவிட அனைவருக்கும் ஏற்ற விதத்தில் அனைவருக்கும் நன்மை தரும் விதத்தில் இந்த குணங்கள் வெளிப்பட வேண்டும். அக் குணங்கள், தாம் வாழப் பயன்பட வேண்டுமே யொழிய பிறர்க்குத் தீங்கிழைக்கப் பயன்படுத்தல் கூடாது. மாறாக ஒவ்வொருவரும் பிறர்க்கு நன்மை விளைவிக்கும் விதத்தில் இக்குணங்கள் வெளிப்படுவது உயர்ந்த ஒழுக்கத்தின் வெளிப்பாடாகும்.

தவறின்றி வாழ்தல், தவறுசெய்து வாழ்தல், நன்மை செய்து வாழ்வதோடு தவறுகளையும் சமூக அநீதியையும் எதிர்ததுப் போராடுவது உள்பட சிறப்பான பண்புகளுடன் வாழ்தல் என்ற மூன்றுவகையான வாழ்க்கைப் பண்புகளுடன் வாழ்ந்து வருகிறோம். இவற்றில் தவறு செய்பவர்கள் திருந்தி நல்லவர் ஆவதற்கும் நல்லவர் மேன்மேலும் நல்லவராக வாழ்வதற்கும் இலட்சியவாதிகள் தங்கள் இலட்சியப்பயணத்தில் வெற்றிநடைபோடவும் எண்ணம் சொல் செயல் தூய்மை மிகவும் முக்கியமான பண்பு ஆகும். 


இரு தண்டவாளங்களும் ஒரே சீரானதாகவும் உறுதியானதாகவும் இருந்தால்தான் அதன்மேல் பயணம் செய்யும் வண்டித்தொடர் பாதுகாப்பாகப் பயணம் செய்யமுடியும். 

மனித வாழ்க்கைப் பயணமோ மூன்று தண்டவாளங்களின்மேல் செல்லக்கூடிய வகையிலானது. அவைதான் எண்ணம், சொல், செயல். 

இந்த மூன்றும் சீராகவும் உறுதியானதாகவும் இருந்தால்தான் வாழ்க்கைப் பயணமும் சிறப்பாக இருக்கமுடியும். சின்னஞ்சிறியது முதல் பிரம்மாண்டமானது வரை நினைத்த காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற இது அடிப்படையாகும்.

அப்படி இல்லாததால்தான் பெரும்பாலோருடைய வாழ்க்கைப்பயணம் கவிழ்ந்து சின்னாபின்னமாகிப் போய்விடுகிறது.



எனவே நாம் வாழ, நமது சமுதாயம் வாழ, இப்பூவலகில் மனித வாழ்வின் தரம் மேலும் மேலும் உயர ஒவ்வொருவருடைய வாழ்விலும் எண்ணம், சொல். செயல் தூய்மை மிகவும் முக்கியம்.


2 comments:

  1. எண்ணம், சொல், செயல் இம்மூன்றுமே உலகில் வாழும் மனிதர் அனைவருக்குமே உண்டான குணங்கள் ஆகும். மனித வாழ்வு சிறப்புற இருக்க வேண்டுமானால் இதேபோன்ற குணங்கள் பிறர்க்கும் உண்டு என்பதைப்புரிந்து கொள்ள வேண்டும். இந்த மூன்றின் வாயிலாக நன்மையோ தீமையோ அனைவராலும் செய்ய முடியும் என்பதையும் உணர வேண்டும். GOOD arumai anna arumai

    ReplyDelete