ss

Friday, April 20, 2012

ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 8 )

மன ஒருமைப்பாடு



எண்ணற்ற விசயங்கள் நமது மூளையில் பதிவாகியுள்ளன. எண்ணற்ற விதத்தில் நமது சிந்தனைகள் செயல் புரிகின்றன. ஏதாவது ஒரு எண்ணத்தை வெளிப்படுத்த பேசவோ அல்லது இயங்கவோ செய்கிறோம். 


எண்ணங்கள் தனியாக இயங்கலாம். இயங்க முடியும். ஆனால் எண்ணத்தின் துணையின்றி முறையாகப் பேசவோ அல்லது செயல்படவோ முடியாது. எந்த அளவு எண்ணங்கள் உயர்ந்ததாக இருக்கிறதோ அந்த அளவு சொல்லும் செயலும் தூய்மையாக இருக்கும். எண்ணங்களின் தரம் சொல்லையும் செயலையும் தீர்மானிக்கிறது. அதுமட்டுமல்ல சொல்லிலும் செயலிலும் எந்த அளவு எண்ணம் ஈடுபாடு செலுத்துகிறதோ அதற்கீடாக செயலின் தரமும் இருக்கும்.



சாதாரணமாகவே நாம் சிக்கலான வாழ்க்கை முறையில் உழன்று கொண்டு இருப்பதால் எண்ணத்திற்கும் சொல்லுக்கும் செயலுக்கும் நிறைய முரண்பாடுகளும் வேறுபாடுகளும் உள்ளன. வாழ்க்கைப் பிரச்சினைகள் இந்த மூன்றையும் தனித்தனியாகப் பிரித்து இழுத்துச் சென்றுவிடுகின்றன. 

மனதால் ஒன்றை எண்ணுகிறோம். ஆனால் அந்த எண்ணத்துக்கு மாறாக அந்த எண்ணத்தின் அனுமதியுடனே ஒன்றைப் பேசுகிறோம். அதேபோல வேறொன்றைச் செய்கிறோம். இது சாதாரணமாக ஒவ்வொருவர் வாழ்விலும் கூடவோ குறையவோ இருக்கிறது என்றே சொல்லலாம். காரணம் பேச்சையும் செயலையும் பிறர் அறியாமல் ரகசியமாக வெளிப்படுத்த முடியாது. ஆனால் எண்ணங்கள் மூளையில் ஏற்படும் வெளித்தெரியாத தெரியமுடியாத சலனங்கள் என்பதால் அது அடிக்கடி நிலை மாறிவிடும் என்பதே.

பேச்சும் செயலும் எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது எண்ணம் தன் புதிய நோக்கத்தை நிறைவேற்ற முந்தய நிலைக்கு மாறான பேச்சையும் செயலையும் தூண்டுகிறது. அது தநதிரமாகவும் நல்ல நோக்கமுடையதாகவும் தீய நோக்கமுடையதாகவும் இருக்கலாம். அது சூழ் நிலையைப் பொருத்ததாகும். அது மனித நடைமுறை. அவசியமான செயல்முறையும்ட கூட. ஆனால் அதன் நோக்கம் நேர்மையானதாய் இருக்கவேண்டும்.

துவக்ககால மனித வாழ்வு கடினமாக இருந்தாலும் சிக்கலானதாக இல்லை. காரணம் இயற்கைக்கும் மனித வாழ்வுக்கும் இடையே நடந்த போராட்டத்தில் நல்லதோ கெட்டதோ முடிவு உடனே எடுக்கக்கூடியதாக இருந்தது. நன்மையோ தீமையோ உடனே நடந்தது. மனிதன் நிலைமாறவேண்டிய வாய்ப்புகளும் அவசியமும் குறைவாகவே இருந்தது. ஆனால் நவீன மனிதவாழ்வு வசதிகள் அதிகமான அளவு சிக்கல்கள் நிறைந்ததாகவும் உள்ளதால் எந்த முடிவையும் எளிதில் எடுக்க முடிவதில்லை. அடிக்கடி நிலைமாற்றம் ஏற்படுவதால் குழப்பமும் தெளிவும் மாறிமாறி ஏற்படுகிறது. 

வாழ்வில் ஒரே நேரத்தில் பல்வேறு பிரச்சினைகளையும் பணிகளையும் எதிர் கொள்கிறோம். பல்வேறு செய்திகளை ஒரே நேரத்தில் கேட்கிறோம். பல்வேறு கருத்துக்கள் ஒரே நேரத்தில் உதிக்கின்றன. இத்தனை அம்சங்களையும் சீராக, முறையாகப் பதிவு செய்து தேவையான நேரத்தில் தேவையான ஒன்றைப் பற்றியோ சீராகப் பலதைப் பற்றியோ சிந்திப்பதற்குப் பதிலாக ஒரே நேரத்தில் மன ஓட்டங்கள் ஒழுங்கற்ற பாதையில் தறிகெட்டு ஓடுவதைப் பார்க்கிறோம். காரணம் எண்ணங்களை உருவாக்கும் சூழ்நிலைகளும் அந்த எண்ணங்களின் பிரதிபலிப்பும் ஆன இரு அம்சங்களுமே நாளுக்கு நாள் சிக்கலாகவும் குழப்பமாகவும் மாறிக்கொண்டே இருக்கிறது.

இது அனேகமாகப் பெரும்பாலோரைப் பீடித்துள்ள வியாதியாகி விட்டது. தனிமனித வாழ்வில் மட்டுமல்ல சமூக வாழ்விலும் விரைவில் எந்த முடிவையும் எடுக்க முடியாத அளவு சிக்கல்கள் நிறைந்துவிட்டன.

இத்தகைய எண்ணச் சிதறல் காரணமாக எந்த ஒன்றிலும் மனம் ஆழமாக லயிப்பதில்லை. அத்தகைய ஆழமான பாதிப்பை மூளையில் ஏற்படுத்தாத மேலெழுந்தவாரியான சிந்தனைகள் பலவீனமானவை. அவை மனதில் நீடித்திருப்பதில்லை. அதன் காரணமாக நல்ல  ஆழமான எண்ண ஓட்டங்களும் அவசியமற்ற குப்பைகளும் ஒரேநேரத்தில் மூளையில் புகுந்து அவசியமானதின் முக்கியத்துவத்தையும் கூட பாதித்துக் குழப்புகின்றன. 

முக்கியமான ஒரு செய்தியைக் கேட்கும்போது கூட மனம் வேறு திக்கிலிருந்து முழுவதும் விடுபடாமல் போகும்போது அதனால் அந்த செய்தி ஆழமாகப் பதியாமல் போகிறது. அதுமட்டுமல்ல தேவையானபோது அது நினைவுக்கு வராமலும்; போகிறது. ஒன்றைப்பற்றிப் பேசும்போது தோடர்ச்சியாகப்பேச முடியாமல் தடுமாற்றம் ஏற்படுகிறது. அதையே ஞாபக மறதி என்கிறோம். தேவையற்ற விசயங்களில் கவனம் செலுத்துவதும், சிந்தனைச் சிதறலும், மிகவும் அதிகமான சிந்தனைகளும் ஞாபக மறதிக்குக் காரணங்களாகி விடுகின்றன.

அதைத் தடுக்க வேணடுமென்றால் எண்ணத்தைச் சீரான பாதையில் செலுத்த வேண்டும். எத்தனை விதமாகச் சிந்தித்தாலும் அது முறையாக இருக்க வேண்டும். 

எது நம் எண்ணத்துக்குப் பொருளாக எது அந்த நேரத்தில் இருக்கிறதோ அதுதான் நம் எண்ணத்தில் பெரும் பகுதி நிறைந்திருக்க வேண்டும். அதற்குத் துணையாக மனதில் இருந்து எழும் எண்ணங்களும் வேறு புற அம்சங்களும் எச்சரிக்கை யுணர்வுகளும் நினைவூட்டல்களும் அதைச் சுற்றியே இருக்க வேண்டும். 

ஒரு அரங்கத்தில் பண்பற்றவர் சிலர் இருந்தாலும் அங்கு அமைதியற்ற சூழல் இருப்பதைப் பார்க்கலாம். அதேசமயம் பண்புடையவர்கள் அரங்கு நிறைந்திருந்தாலும் அரங்கு அமைதியாகவும் அறிவுத் தெளிவுடனும் இருக்கும். அதுபோல இயன்றவரை மனதில் உள்ள தேவையற்ற குப்பைகளைக் களைந்து தேவையானது மட்டும் நிறைந்திருக்கும்படி செய்யவேண்டும். அப்போதுதான் நமது சிந்தனையில் தெளிவு இருக்கும். நடைமுறை அறிவுபூர்வமானதாக இருக்கும். ஞாபகசக்தியும் போதுமான அளவு இருக்கும்.

அதேபோல் நாம் ஒரு செயலைச்செய்யும் போது மனம் ஒன்றை எண்ணிக் கொண்டிருக்கும். வாய் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருக்கும். கைகள் ஒன்றைச்செய்து கொண்டிருக்கும். இவற்றின் இடைவெளி அதிகமாக இருக்குமளவு செயல் பலவீனமானதாக இருக்கும். ஓன்றுக்கு ஒன்று தொடர்பு நெருக்கமாக இருக்குமளவு செயல் சிறப்பாக இருக்கும். எனவே நாம் எந்தச் செயலைச் செய்தாலும் மனம் அதில் லயித்திருக்க வேண்டும். அப்பொதுதான் அந்தச்செயல் தொடர்பான பல்வேறு விதமான கருத்துக்களும் மனதில் பதியப் பெறுவதோடு ஏற்கெனவே மனதில் இருக்கும் அத்தகைய செயல்கள் பற்றிய சரியான தகவல்களும் எச்சரிக்கைகளும் தேவையான கோணங்களில் நமக்குப் பயன்படுவதோடு பிறர்க்கும் வழிகாட்டும் சிறப்பம்சமாகவும் தரம் உயரும்.

சாதாரணக் கண்ணாடி மீது சூரிய ஒளி ஊடுருவிச்சென்று ஒரு பொருளின் மேல் பட்டால் அது ஒன்றும் ஆவது இல்லை. ஆனால் ஒரு குவியாடி வழியாகச் செல்லும் சூரிய ஒளி அது குவியும் இடத்தில் வெப்பத்தால் தீப்பற்றுகிறது. காரணம் சாதாரணக் கண்ணாடி வழியாகச் செல்லும போது வெப்பக்கதிர்கள் தம் போக்கில் போய்விடுவதால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவது இல்லை. ஆனால் குவியாடி வழியாகச் செல்லும் போது வெப்பக்கதிர்கள் தம் போக்கில் இருந்து திசைமாறி ஒரேசீராக ஒரு புள்ளி வழியாகச் செல்லுகின்றன. அதனால் வெப்பம் ஒன்று குவிக்கப்பட்டு பொருள் பற்றியெரிகிறது. 

அதுபோலவே பல்வேறு திசைகளில் சிந்திக்கவல்ல மனதை ஒரு குறிப்பிட்ட செயலில் செலுத்தினால் அந்த செயலோ கருத்தோ மகத்தான சக்தி வாய்ந்ததாக இருக்கும். எனவே சிந்தனையில் தெளிவிருக்க, செய்யும் செயல் சிறப்பானதாக இருக்க, உலகினையும் வாழ்வினையும் நமது கடமைகளையும் சரியாகப் புரிந்துகொள்ள, சிக்கலான பிரச்சினைகளிலும் தெளிவான முடிவெடுக்க பிறருக்கு வழிகாட்டக் கூடிய அளவு உயர்ந்த தரமுடையதாக நமது சிந்தனைகள் விளங்க மன ஒருமைப்பாடு மிகவும் அவசியம். 

அத்தகைய ஒருமைப் பாட்டின் அவசியத்தை உணர்ந்ததால்தான் மனதை ஒரு இடத்தில் நிலை நிறுத்தும் பயிற்சியாக தியானம் அல்லது தவத்தை ஞானியர் கடைப் பிடித்தார்கள். 

இன்றும் யோகக்கலை பயிலும் இடங்களில் சிறிது நேரம் தியானம் என்பதாக சில நிமிடங்கள் மவுனமாக இருக்கச் செய்வார்கள். 

ஆனால் உண்மையாகவே ஒவ்வொருவரும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ஒரு இடத்தில் தனிமையாக அமர்ந்து மனதை ஒருமுகப் படுத்தும் தியானப் பயிற்சியைச் செய்யலாம். 

அந்த நேரங்களில் வேண்டாத எண்ணங்களில் இருந்து மனம் விடுபட்டு ஏதாவது ஒரு உயர்ந்த பொருளில் லயிப்பதை உணரலாம். மற்ற நல்ல கெட்ட உணர்வுகள் எல்லாம் பின்னுக்குப் போய் மனம் நல்ல விஷயங்களில் ஈடுபாடு கொண்டு தெளிவடையும். 

எனவே மன ஒருமைப்பாட்டின் அவசியத்தை உணர்ந்து அதை தினசரி வாழ்வில் ஒரு அம்சமாகப் பின்பற்ற வேண்டும்.

No comments:

Post a Comment