ss

Saturday, April 21, 2012

நாம் யார் தெரியுமா? ( 9 )


அது என்ன சிந்தனை?
அது என்ன சிந்தனை?
உயிர், உணர்வு, மனம், அறிவு இவற்றை அடுத்து சிந்தனை. மற்றவற்றுக்கு புறச் சூழல்களே காரணமாகும்போது சிந்தனைக்கு மட்டும் அறிவே பிரதான காரணமாகிறது.

மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் சிந்திக்கிறோம். எதைக்கொண்டு எதனால் எப்படி ஏன் சிந்திக்கிறோம்? சிந்தனை என்றால் என்ன?

உணர்வுகளின் உயர்ந்த பகுதியான அறிவின் சுய இயக்கமே சிந்தனை ஆகும். அது ஏன் அப்படிச் சிந்தனை என்ற பெயரால் சுயமாக இயங்க வேண்டும்?

அறிவு என்பது ஒரு திடப்பொருள் அல்ல. அது ஒருவிதமான இயக்கம். அது உணர்வுகளின் மூலம் உருவாகி அதன் தெளிவடைந்த பகுதியாக உருமாறி விளங்குகிறது. அறிவுக்கு ஆதாரமாக இருக்கும் உணர்வுகளைக் கொண்டு அடுத்த கட்டத்தில் பிரவேசிக்க முடியாது. காரணம் உணர்வுகள் ஒழுங்கற்ற உதிரிப் பொருட்கள். அதனை ஒரு வழியாகக் கருத முடியாது. அந்த உதிரிகளைக்கொண்டு பாதை உருவாக்கிக் கொண்டுதான் அடுத்த நிலைக்குச் செல்லமுடியும். அந்தப்பணிதான் அறிவினுடையது அதுதான் சிந்தனை என்பது.
சிந்திப்பது என்பது இருப்பில் உள்ளவற்றையும் புதிதாக சேர்வனவற்றையும் அலசி ஆராய்ந்து சிக்கலை நீக்கி ஒழுங்குபடுத்தி புதுவடிவம் கொடுத்து அடுத்தகட்ட இயக்கத்துக்கு தயார் செய்வது. அது இருவிதமாக வேலை செய்கிறது. தான் எந்த மனிதனின் உள்ளுணர்வாய் விளங்குகிறதோ அந்த மனிதனின் சொந்த வாழ்க்கையைப் பற்றியும் அந்த மனிதன் சார்ந்த வாழும் உலகையும் பற்றி அது சிந்திக்கிறது.

அந்தச் சிந்தனை வட்டம் என்பது சின்னஞ்சிறு தனிமனித வாழ்விலிருந்து பிரம்மாண்டமான அண்டசராசரம்வரை வியாபிக்கக்கூடியதாக இருக்கிறது. சிந்திக்காமல் வழியே இல்லை. ஒவ்வொரு மனிதனது தேவைகளும் வேறுபட்டதாக இருக்கிறது. வேறுபட்ட வாழ்க்கைச் சூழலில் வாழவேண்டியதாய் உள்ளது. வேறுபட்ட உறவுகளைப் பேண வேண்டியதாய் உள்ளது. இயற்கையோடும் சக மக்களோடும் பிற உயிரினங்களோடும் சதாகாலமும் போராட வேண்டியுள்ளது. இத்தனைக்கும் ஆக ஒவ்வொரு மனித உணர்வுகளும் சிந்தனையின் மூலம் அலசி ஆராயப்பட வேண்டியுள்ளது.

ஒரு மனிதனுக்கு உள்ளே உணர்வுகளாகவும் செய்திகளாகவும் அனுபவங்களாகவும் செல்லும் ஒவ்வொன்றும் அறிவால் செழுமைப்படுத்தப்பட்டு வெளிவரும்போது விருப்பங்களாகவும் கட்டளைகளாகவும் வெளிவருகின்றன. தனக்குக் கீழ்ப்படிந்துள்ள நிலைமைகளில் தனது முடிவைக் கட்டளைகளாகவும் தன்னால் கட்டுப்படுத்த முடியாத அயல் நிலைமைகளில் இதுதான் தனது விருப்பம் அல்லது கருத்து என்று தனது வேண்டுகோளாகவும் ஒரு மனிதன் வெளிப்படுத்த அவனின் அறிவு சிந்தனையின் மூலம் செயல்பட்டு வௌ;வேறுவிதமாக வெளிப்படுகிறது. எவ்வழியிலும் வெளிப்பட இயலாத நிலைமைகளில் தேங்கிய சிந்தனைகளாக ஒரு ஓரத்தில் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறது.

ஒவ்வொருவருடைய அறிவும் தனது சிந்திக்கும் ஆற்றலை பிற மக்கள் மற்றும் சூழலைத் தனக்கு ஏற்புடையதாக மாற்றும் திசையிலேயே பயன்படுத்துகிறது. அதற்குக் காரணம் ஒவ்வொரு மனிதனின் நிம்மதியான வாழ்வையும் தாழ்வையும் சக மக்களோடும் இயற்கையோடும் கொண்டுள்ள உறவுகளே தீர்மானிக்கிறது. சிந்தனை என்பது மனிதன் என்ற உயிரினத்தின் ஓர் உறுப்புக்கு அல்லது ஒவ்வொரு நொடியும் ஓயாமல் மாறிவரும் இயக்கமான மனித உயிருக்கு அன்னியமானதல்ல. 

எப்படி இயற்கையைத் தன்மயமாக்கிக்கொண்டு கழிவுகளை வெளியேற்றி இரண்டாம் சுற்று இயக்கத்துடன் குறிப்பிட்டகாலம் வாழுந்தன்மையை உயிர் என்று சொல்கிறோமோ அதேபோல அந்த இயங்கு நிலையின் பிரிக்கமுடியாத ஓர் அங்கமே சிந்தனை ஆகும். உயிர் என்பது உடல் சம்பந்தப்பட்டது என்றால் சிந்தனை என்பது உணர்வு சம்பந்தப்பட்டது.

அந்த சிந்தனையானது உறங்கும் நேரம்தவிர மற்ற நேரங்களில் எல்லாம் ஓயாமல் செயல்புரிகிறது. வாழுங்காலமெல்லாம் எப்படி ஒருமனிதன் தனது வாழ்க்கைக்கான சூழலை ஏற்படையதாக வைத்துக்கொள்ள வேண்டுமோ அதேபோல சிந்தனையும் அதற்கு உதவும் வகையில் உடல் வாழ்வுக்கு வழிகாட்டும் பணியை நிறுத்தவே முடியாது. வாழ்வு முடியும்போது உயிர் முடிவுக்கு வரும்போது சிந்தனையும் முடிவுக்கு வரும்.

சிந்தனை என்பது சிலருக்குமட்டும் உரித்தான சிறப்புத் தகுதி அல்ல. ஆனால் அனைவரும் ஒரேமாதிரி சிந்திப்பது இல்லை. ஒவ்வொருவருடைய சிந்தனைக்குண்டான அடிப்படையும் மாறுபடுகிறது. காரணம் அனைவருடைய அனுபவமும் அறிவும் ஒன்றுபோல இருப்பதில்லை. பெரும்பாலானவர்களின் சிந்தனை சொந்தநலன் சார்ந்ததாக மட்டுமே இருக்கிறது. அத்தகைய சிந்தனை முறை அனைவருக்கும் பொதுவானது. ஆகையால் ஒன்றையொன்று முரண்பட்டு எதிரும் புதிருமான செயல்பாடுகளுடன் பகைமை உணர்வுடன் வாழ்ந்துகொண்டுள்ளோம்.

சிலர்மட்டுமே, ஒவ்வொருவரும் தன்னிலையில் இருந்து சுயநலநோக்குடன் சிந்திப்பதுதான் பிரச்சினைகளுக்குக் காரணம் என்றும் பொதுநோக்கில் சிந்தித்தால் முரண்பாடுகளைத் தவிர்த்து அனைவரும் நல்வாழ்வு வாழலாம் என்றும் சிந்திக்கின்றனர்.

அத்தகைய பொதுநோக்கும் குறுகிய எல்லைகளுக்குள் இருக்கும்வரை முரண்பாடுகள் அந்தந்த மட்டத்தில் எழவே செய்யும். எனவே சில சிந்தனையாளர்கள் உலகளாவிய பொதுநலன்களைப் பற்றிச் சிந்திக்கிறார்கள். அவர்களின் சிந்தனைகளைத் தத்துவங்களாக வெளியிடுகிறார்கள். அது அனைவருக்கும் ஏற்படையதாக இருப்பின் சிறப்புப் பெறுகிறது.

ஆக சிந்தனை என்பது எல்லையற்றது. அதன் பிறப்பிடம் ஒரு புள்ளியாக இருந்தாலும் ஒரு புள்ளியில் இருந்து பிரபஞ்சமே உருவானதுபோல் ஒரு சிறு புள்ளியில் உருவாகும் சிந்தனை அண்டங்களைத் தொடக்கூடியது. அவற்றையும் தாண்டிச் செல்லக்கூடியது.

No comments:

Post a Comment