ss

Saturday, April 21, 2012

ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 9 )


புலனடக்கம்.

மெய், வாய், கண், மூக்கு, செவி என நமது புலனுறுப்புக்களை ஐந்தாகப் பிரித்துப் பார்க்கிறோம். வாய், மூக்கு, கண், செவி ஆகியவை தனித்தனி உணர்வுறுப்புக்களாக செயல்படும் அதே நேரத்தில் மெய் என்பது மற்ற எல்லா உணர்வுகளையும் குறிப்பதாகிறது. 


புற உலகின் சூழ்நிலைகளை நாம் இந்த ஐந்து வகையால் உணர்கிறோம் ஆதாவது சூழ்நிலை நமது உடம்பில் ஏற்படுத்தும் விளைவுகள் இந்த ஐந்து வகை உறுப்புகளின் மூலமாகப் பெறப்பட்டு நரம்புகள் மூலம் மூளைக்கு அனுப்பப் படுகின்றன. நல்லதாயினும் தீயதாயினும் இந்த முறையில்தான் உணர்வுகள் பதியப்படுகிறது.


மனிதனின் பரிணாம வளர்ச்சியை ஒட்டியே இந்த ஐந்து வகையான உணர்வுகளின் தரமும் தொடர்ந்து வளர்ந்து வந்துள்ளது. 


ஒரு வண்டியில் பூட்டப்பட்டுள்ள மாடுகளோ அல்லது குதிரைகளோ அவற்றைச் செலுத்துபவனின் கட்டளைக்கேற்ப இயங்குகின்றனவே அல்லாமல் தமது சொந்த விருப்பப்படி செயல்படுவதில்லை. அவற்றை விடுவிக்கும்போது அவற்றின் விருப்பப்படிதான் நடக்க முயல்கின்றன. 

அதுபோலவே மனிதனின் ஐம்புலன்களும் மனதின் கட்டளைக்கு ஏற்ப மூளையின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றனவே அல்லாமல் தம் சொந்த குணத்தைக் கொண்டு அல்ல. பொதுவாகவே இந்த ஐந்துமே தான் விரும்பக் கூடியதை எதிர்பார்க்கும், தான் விரும்பாததைப் புறக்கணிக்கும் குணம் கொண்டவை. இது பொதுவான உடலியல் நியதியானாலும் விளைவுகளைக் கணக்கில் எடுக்காமல் செயல் படத்தூண்டும் இயல்பையும் இவை கொண்டுள்ளன. 


இந்த ஐம்புலன்களின் மூலம் பெறப்படும் இன்ப துன்பம் அத்தனையையும் வகைப்படுத்தி வழிகாட்டும் பொறுப்பு மூளைக்குத்தான். ஆதாவது மூளையில் நிலைபெற்றிருக்கும் அறிவுக்கு. 

என்றாலும் புலனுணர்ச்சிகள் மூளையைத் தடுமாற வைக்கும் இயல்பு கொண்டவை. மூளையின் பலவீனமான பகுதியைப் பயன்படுத்திக் கொண்டு அடிக்கடி தவறு செய்யவும் இவை காரணமாகின்றன. 

ஆதாவது ஒட்டுமொத்தமான உடலுறுப்புக்கள் மூளையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் மூளை தன் செயல்பாட்டில் சற்று கவனக் குறைபாட்டுடன் இருப்பினும் அந்தந்தப் புலனுணர்வுகள் ஒட்டு மொத்தமான நலனைக் கருதும் இயல்பின்றித் தத்தம் தேவையை நோக்கி ஓட முயலும். காரணம் நன்மை தீமைகளை எண்ணிப் பார்க்கும் திறன் மூளையைத் தவிர மற்ற புலனுறுப்புகளுக்குக் கிடையாது. 

எனவே புலன்களின் வாயிலாகப் பெறப்படும் அத்தனை உணர்வுகளையும் ஏற்றுக் கொள்ளும் மூளை அந்தப் புலன்களை சரியானபடி கட்டுப்படுத்தி இயக்காவிட்டால் தீங்கு ஏற்படும். ஆதாவது தனித்தனியான புலனின்பங்களை மூளை தனது இன்பமான அனுபவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. 

உதாரணமாக எடுத்துக்கொண்டால் புகை பிடிக்கிறோம். மது அருந்துகிறோம். அதனால் நன்மை ஒன்றும் இல்லை. ஆனாலும் சில உணர்வுறுப்புகளின் தூண்டுதல் காரணமாக புகை பிடிக்கிறோம். அந்தச் செயலை மூளை -மூளைகெட்டு- அனுமதிக்கிறது. 

அப்படி அனுமதிப்பதற்குக் காரணம் மூளை அந்தநேரத்தில் அந்தச்செயல் தீங்கானது என்றாலும் ஒட்டுமொத்தமான உடல்நலனை மறந்து குறிப்பிட்ட – அதை வேண்டுமென்கிற - உணர்வுறுப்புகளின் தவறான வேண்டுகோளுக்கு இணங்கிவிடுகிறது அதுதான் மூளையின் பலவீனமாகும். 

ஒட்டு மொத்தமான உடலியக்கத்தின் ஒருபகுதியாக உடம்பின் எந்தப்பகுதியில் எந்த உணர்வுறுப்பு தனக்கு இது வேண்டும் என்கிற வேண்டுகோள் உணர்வைத் தூண்டினாலும் அதனை நிறைவேற்றுவதன் மூலம் அனைத்து உறுப்புக்களின் நலனும் பேணப்படும் என்கிற நிலையில்தான் மூளை அதை இன்பமான அனுபவமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆனால் அப்படிப்பட்ட தவறுகளை மூளை அனுமதிப்பதற்குக் காரணம் அதன் பலவீனம் ஆகும். புலன்களைச் சரியாக வழிநடத்தாமல் தறிகெட்டு ஒடவிடுவது பலவீனம். ஆனால் அவற்றைச் சரியாக வழிநடத்தி ஆக்கரீதியாகச் செயல்பட உதவுவது பலம். 

ஐந்து புலனுறுப்புக்களில் மூக்கு பெரும்பாலும் மூளைக்கு அதிக சிரமம் கொடுப்பதில்லை. மூளையின் விருப்பப்படிதான் பெரும்பாலும் நடக்கிறது. அதனால் அதைக் கட்டுப்படுத்தும் வேலை மிகவும் குறைவு. கண்களும் காதுகளும் நடுத்தர இயல்பு கொண்டவை. அவ்வப்போது உள்மனம்  (அறிவு)   வேண்டாமென்று எண்ணுவதைக்கூடக் காண்பதற்கும் கேட்பதற்கும் தடுமாறுவதைத் தவிர பெரிய அளவு கட்டுப்பாட்டை மீற முயல்வதில்லை. 

ஆனால் வாயும் மெய் என்பதில் அடங்கியுள்ள மற்றவையும்தான் அடிக்கடி கட்டுப்பாட்டை மீறும் இயல்பு கொண்டவை. அவைதான் பெரும்பாலும் மூளைக்கு வேலை கொடுப்பவை. 

வாய் எனப்படுவது பேசும் உறுப்பாக இருந்தாலும் அந்த வேலையைப் பொருத்தவரை அது பெரும்பாலும் மூளையின் எண்ணப்படிதான் நடக்கும். அதனுள் அடங்கியுள்ள சுவையுறுப்பான நாக்குத்தான் பிரதான உணர்வுறுப்பாகக் கருதப்படுகிறது. 

நாம் உண்ணும் உணவில் அடங்கியுள்ள பல்வேறு கூட்டுப் பொருள்களும் தனிப்பொருள்களும் நாவினால் ருசிக்கப்படுகின்றன. உமிழ்நீரில் கரையும் போது நாக்கின் ஒவ்வொரு பாகத்திலும் அமைந்;துள்ள நரம்புகளின் மூலம் ருசி உணரப்படுகிறது. அவற்றில் நாக்கின் உணர்வுக்கு விருப்பமானதை மேலும் மேலும் விரும்புகிறது. வேண்டாததை வெறுக்கிறது. அப்படிப்பட்ட விருப்பு வெறுப்பு மனதில் உருவாகக் காரணமாய் உள்ள விளைவுகள் நாக்கில் நடக்கின்றன என்பது பொருள்.

அதுமட்டுமல்ல பல்வேறு விதமான சுவைமிக்க பண்டங்களை உண்பதால் அவற்றில் தனக்குப் பிடித்ததை அதன் சுவைக்காகவே வேண்டுமென்ற உணர்வைத் தூண்டுகிறது. அதன்வழியாக இன்பமான ருசியுணர்வைப் பெரும் மூளையும் ஒட்டுமொத்தமான தனது கடமையில் இருந்து அடிக்கடி தவறுகிறது. அதனால் வேண்டாததை அடிக்கடி உண்கிறோம். அதுவே உடலில் பல்வேறு கோளாறுகளும் நோய்களும் ஏற்படக் காரணமாகி விடுகின்றது. நாக்கைத் தவிர வாயின் இதர உறுப்புகள் நாக்கின் விருப்பத்தைத் தடையின்றி நிறைவேற்றும் குணங் கொண்டவை.

எனவே நாவினால் பெறப்படும் சுவையுணர்வைப் பெறும் மூளையானது கட்டுப்பாடாக இருந்து தேவைக்கான உணவை மட்டும் உண்ண அனுமதிக்க வேண்டும். ருசிக்காக மட்டும் தேவையற்றதை உண்ண அனுமதிக்கக் கூடாது. நாவுக்கு உடலின் மற்ற அவயங்களைப் பற்றிச் சிந்திக்கும் திறன் இல்லை. ஆனால் மூளைக்கு உண்டு. எனவே மூளை பொதுவான இயக்க உறுப்பாக செயல்படும் கடமையில் இருந்து விலகக்கூடாது. 

கடைசியாக, மெய் என்று சொல்லக்கூடிய புலனுறுப்பு தனியாக ஒன்றுமில்லை. 
மற்ற நான்கின் பணிகளைத்தவிர பிற பணிகளைச் செய்யக் கூடிய ஒட்டுமொத்தமான உடம்பைக் குறிக்கும். 

இதில் கைகளால் வேலை செய்தல், பேசுதல், பாடுதல் போன்ற சாதாரணமான வேலைகளில் அதிகமான முரண்பாடுகள் ஏற்படுவதில்லை.மூளை மற்றும் சக உறுப்புகளுடனான  தொடர்புகளிலும் சிக்கல் இல்லை.

ஆனால் உடலின்பம், சோம்பல், குளிர், வெப்பம் போன்ற இயற்கைச் சூழல்கள், சொகுசான பழக்கங்கள் போன்ற அம்சங்களில் உடல் மூளையின் நிர்ணயிப்புகளுக்கு மாறாக நடக்க மூளையைத் தூண்டுகிறது. ஆதாவது சிற்றின்ப உணர்வுகள், மூளையின் தீர்மானத்துக்கு மாறாக சராசரி மனித நடைமுறையில் இருந்து மீறும்படி மூளையை நிர்பந்திக்கிறது. 

அது ஒழுக்கமாகவோ ஒழுக்கமின்மையாகவோ சமுதாயத்தால் எப்படி வேண்டுமானாலும் கருதப்படலாம். வரம்புமீறல் என்பது மூளையின் நிர்ணயிப்புக்கும் தெளிவான நிலைக்கும் மாறான ஒன்றாகும். தீங்கானது என்று மனதுக்குப் பட்டாலும் தவறு செய்ய அனுமதிக்கும்படி உணர்வுகள் மூளையைச்சரி செய்து விடுகின்றன.

அதுபோலவே உழைப்பால் அல்லது அலைச்சலால், மன உழைச்சலால் சோர்வடையும் உடம்பை ஓய்வெடுப்பதன் மூலம் தெம்பூட்டுகிறோம். ஆனால் ஓய்வின்போது உழைப்புக்கு மாறான சுகங்காணும் உடம்பு பல நேரங்களில் தேவைக்கு அதிகமாக ஓய்வு நிலையிலேயே இருக்க விரும்புகிறது, அது தவறென்று பட்டாலும் மூளை அனுமதிக்கிறது.

அதேபோல சராசரி நிலையில் இருந்து குளிரான அல்லது வெப்பமான சூழ்நிலைக்குச் செல்ல உடல் தயக்கம் காட்டுகிறது. பல்வேறு சூழ்நிலைகளிலும் வாழவேண்டிய கட்டாயத்தில் உள்ள நம்மை குறிப்பிட்ட இன்பம் தரும் சூழ்நிலைகளிலேயே இருக்குமாறு தூண்டுகிறது. அதனால் உடல்ரீதியான பாதிப்பு பெரிய அளவில் இல்லாவிட்டாலும் பல்வேறு கடமைகளைச் செய்ய இடையூறு ஏற்படுகிறது. 

இதுபோல புலன்கள் மூளையின் கட்டுப்பாட்டுக்கு மீறிச்செல்ல முயன்று மூளையும் அனுமதிக்கும் முரண்பாடான செயல்முறை ஒவ்வொருவரிடமும் கூடவோ குறையவோ இருக்கிறது. 

புலன்கள் ஒவ்வொன்றும் எந்தப் பணிக்காக வளர்ச்சி பெற்றதோ அந்தப் பணிகளை அவையவை சிறப்பாகச் செய்யும்போதுதான் உடலும் உள்ளமும் வாழ்வும் நலம் பெறும். ஆனால் இதம் தரும் மேம்போக்கான உணர்வுகளுக்கு அதிக இடம் கொடுத்தால் அவ்வுறுப்புக்களின் பொதுவான பணி, அந்த உறுப்புக்களின் தனித்தனியான உணர்வுகளுக்கேற்ற முரண்பட்ட, தீங்கு பயக்கும் தன்மையுடையதாய் மாறி விடுகின்றன. 

எனவே ஒவ்வொரு உறுப்பின் வாயிலாகவும் கிடைக்கப்பெறும் உணர்வுகளை சேகரித்து வைத்திருக்கும், அந்த உணர்வுகளைக் கொண்டே உடலியல், மனவியல், மற்றும் உலகியல் வாழ்க்கை பற்றிய நெறிகளை வகுத்துக் கொண்டிருக்கும் மூளை அந்த உறுப்புக்களின் செயல்பாடுகளின் விளைவுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் உணர்வுவழிச் செல்லாமல் எல்லாப் புலனுறுப்புக்களையும் கட்டுப்படுத்தி முறையாக இயக்க வேண்டும். மூளை தன் பலவீனமான பகுதியைப் பயன்படுத்தி தீங்கு பயக்கும் செயல்களைச் செய்ய உடலின் எந்தப் பகுதியையும் அனுமதிக்கக் கூடாது. 

நமது புலன்கள் அனைத்தும் நமது கட்டளை உறுப்பான மூளையின் அறிவுறுத்தலின்படி நடக்கவேண்டும். அந்த அறிவுபூர்வமான செயல்களே வாழ்வினை நல்ல நெறியில் கொண்டுசெல்லும். அதைவிட்டு புலன்களின் விருப்பப்படி நடந்தால் எடுக்கும் முடிவுகள் உணர்வுபூர்வமாகவே இருக்கும். அது பலநேரங்களில் நன்மையைவிடத் தீமையை விளைவிக்கும் குணம்கொண்டவை. 

எனவே உயர்ந்த நெறி நடப்பவர்கள் தவறாமல் கடைப்பிடிக்கவேண்டிய பண்புகளில் புலனடக்கமும் முக்கியமான ஒன்றாகும்.

ஆனால் புலனடக்கம் என்ற பெயரால் தேவையில்லாம உடலை வருத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை! 

ஞான வாழ்க்கை என்கிற பெயரால்  உடம்பை வருத்துகின்ற பல நியதிகள் பல கோட்பாடுகளின் வாயிலாக வலியுறுத்தப் படுகின்றன. 

அவை உண்மை வாழ்வுக்குப் பயன்படாத துன்பங்களாதலால் கணக்கில்கொள்ளத் தேவை இல்லை! No comments:

Post a Comment