ss

Monday, May 7, 2012

விவசாயம் ( 10 )




அடுத்த கட்டம்


சமீப காலம் வரை கூட கிராமங்களில் ஒரு பழக்கம் இருந்தது.

ஆதாவது விவசாய வேலைகளுக்குச் செல்லும் ஆண்களும் பெண்களும் பதிதாக யாராவது ஒருவரை அவ்வப்போது அவர்களுடன் வேலைக்கு அழைத்துச் செல்வார்கள்.

வேலை தெரியாத அவர்களுக்கு உதவியாக வேலை தெரிந்த இருவர் இருபக்கமும் தங்களுடைய வேலையையும் செய்துகொண்டே புதியதாக வேலை பழுகுபவர்களுக்கும் உதவியாக அவருடைய வேலையில் கொஞ்சம் இவர்களும் பகிர்ந்து கொள்வார்கள்.


ஆண்கள் பையன்களுக்குக்கூட வேட்டி கட்டவைத்து அழைத்து வந்துவிடுவார்கள்.

பெண்கள் என்ன செய்வர்கள் என்றால் இன்னும் வேலை பழக்கும் வயது ஆகாத குழந்தைகளைக்கூட பொம்மையைப்போல தாவணியோ சேலையோ அணிவித்து தங்களுடன் அழைத்து வந்துவிடுவார்கள். 

அது எதற்கென்றால் விவசாயி வேலைக்கு வேண்டாம் என்று சொல்லிவிடக் கூடாதே என்பதும் அவர்களும் வேலைக்குப் போனால்தான் கட்டுபடியாகும் என்ற ஏழ்மை நிலையும் தான்! விவசாயியும் தெரிந்தே நாம் அனமதிக்காவிட்டால் அவர்கள் எப்படி வேலை பழகுவர்கள் என்ற பெருந்தன்மையுடன் அனுமதிப்பார்கள்.

அதுதான் கிராமப்புறப் பண்பாடு!

ஆனால் அத்தகைய பழக்கம் அநேகமாகக் கிராமங்களில் ஒழிந்துவிட்டதென்றே சொல்லலாம். அது ஒரு விதத்தில் அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு நல்லதென்றாலும் இப்போதுள்ள வேலையாட்கள் அவர்கள் ஆண்களாயினும் சரி பெண்களாயினும் சரி வயதானவர்கள் குறைவதற்குப் பதிலாகப் புதியவர்கள் விவசாய வேலைகளில் ஈடுபடுவது இல்லை!

இது எதைக் குறிக்கிறதென்றால் விவசாயம் முழுமையாக இயந்திரமயமாவதையும் அதைத்தொடர்ந்து பாரம்பரியத் தொழிலாக இருந்ததுபோய் பெரும் பண்ணைகளாக ஆகி இயந்திரத் தொழில்மயமாக ஆகப்போகும்காலம் நெருங்கிவருகிறது என்பதையுமே!

பழுத்த இலைகள் தாமாக மரத்தில் இருந்து சருகுகளாக உதிர்வதைப்போல பாரம்பரிய விவசாய முறை வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. 

அடுத்தகட்ட இயந்திரமுறை விவசாயத்துக்கு அல்லது இயற்கை வேளாண் முறைக்கு இதில் எந்தத் திசையில் அடியெடுத்து வைத்தாலும் அதை இப்போதுள்ள விவசாயிகள் திறம்பட ஒன்றிணைந்து தங்களை மீட்டு;க்கொள்வர்களா? அல்லது தங்களின் வீழ்ச்சியை ஏற்றுக்கொண்டு பெரும் ஏகபோக விவசாய நிறுவனங்கள் உருவாக வழிவிடுவர்களா என்பதை காலம் விரைவில் அறிவிக்கவிருக்கிறது.

இரண்டாவது நிலை உருவாவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்! முன்கூட்டியே சரியாகக் கணித்து முன் முயற்சி எடு;பபவர்கள் வருங்காலத்தில் பெரும் சாதனையாளர்கள் ஆவார்கள்! அது நிச்சயம்!


No comments:

Post a Comment