ss

Saturday, May 19, 2012

அரசியல் ( 10 )

கருத்தோட்டம் (10)

மக்கள் விரும்பியோ விரும்பாமலோ அஹிம்சைவழியில்தான் வாழ்கிறார்கள்! அவர்களிடம் துப்பாக்கிகள் இல்லை. ஆனால் அஹிம்சைக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் நம் நாட்டில் நிராயுத பாணியான மக்களை நோக்கிமட்டும் எண்ணற்ற துப்பாக்கிகள் நீள்கின்றனவே அது எதனால்? அப்பாவிகளான மக்களுக்கு பயந்து துப்பாக்கிகளின் நிழலில் ஏன் தலைவர்கள் வாழவேண்டும்?


இன்றைய மிகப் பெருன்பாலான அரசியல் மற்றும் ஆட்சித் தலைவர்களின் உண்மையான தகுதியும் செயல்பாடும் சுயநல அடிப்படையில்தான் முடிவாகிறது. அடிப்படையிலேயே சுயநலம்தான் உயிர் என்று நினைக்கும், வாழும் இவர்கள் எப்போது தாங்களும் திருந்தி,மக்களுக்கும் விழிப்புணர்வை ஊட்டி எழுச்சிபெறச் செய்யப்போகிறார்கள்?

இருக்கும் நேர்மையாளர்களுடன் இணைந்து புதிய சமுதாயம் படைக்க பழம் பெருச்சாளிகளைத் தவிர்த்த நேர்மையான சக்திகள் முன்வரவேண்டும்! அரசியலில் பிரவேசிக்கும் இளைய தலைமுறைக்கு முந்தைய அவலங்களைப் பற்றியும் செல்லவேண்டிய புதிய பாதையைப் பற்றியும் கற்றுக் கொடுக்க வேண்டும்!

===============================================================================


மாநில சுயஆட்சி என்பது சில பொதுவான துறைகளைத் தவிர மற்ற பெரும்பாலான துறைகளில் அந்தந்த மாநிலஅரசுகளின் கையில்தான் அதிகாரங்கள் இருக்கவேண்டும். பொதுவான துறைகளில் மத்திய அரசுக்கு ஒத்துழைத்துத் தம்பங்கை நிறைவேற்றுவதைத் தவிர தனது மக்களின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் அந்நதந்த மாநில அரசுகளே பொறுப்பாகும். 

ஆனால் நமது நாட்டில் மாநிலங்களின் கூட்டமைப்பாக அறிவிக்கப்பட்டாலும் மாநிலங்கள் மத்திய அரசின் காலனிகளாகவே கருதப்படுகின்றன. மத்தியில் ஆள்பவர்கள் தம் பெரும்பான்மை என்ற ஆயுதத்தை ஒவ்வொரு மாநிலத்தின் மேலும் பிரயோகித்துத் தமது கட்டுக்குள் வைத்துக்கொள்கின்றனர். அதன்விளைவாகத்தான் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மத்திய அரசால் நியமிக்கப்படும் தனிநபரான ஆளுனரைக்கொண்டு தூக்கி எறிய முடிகிறது.

உள்கட்சி சண்டையின் காரணமாக கவர்னர் பதவி கொடுத்து சரிசெய்யப்படும் கீழ்த்தரமான நபர்கள் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கலைக்க முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவராக முடிகிறது. இது வெட்கக்கேடான ஜனநாயகம் ஆகும்.மாநில சுய ஆட்சி என்பது கட்டாயம் அவசியமானது. ஆனால் அது இல்லாததுதான் எல்லாக் குறைகளுக்கும் காரணமல்ல. 

இருக்கும் அதிகாரங்களை வைத்துக்கொண்டு மாநில சுயாட்சியை நோக்கிய திக்கில் மக்கள் சக்தியைத் திரட்ட நேர்மையான முயற்சிகளை சக்திமிக்க அரசியல் கட்சிகள் மேற்க்கொண்டனவா? இல்லையே! வெறும் கவர்ச்சி முழக்கமாகத்தான் இதுவரை இருக்கிறதே தவிர மைய ஆட்சியின் ஆணவத்தை அசைக்கும் அளவு வீரமிக்க போராட்டங்கள் இதுவரை நடந்ததுண்டா?

தங்கள் பைகளை நிரப்பிக்கொள்வதில் இருக்கும் அக்கறை இந்த விசயத்தில் இல்லையே!

அறுபதுகளில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைப்போல் அதன் பின் ஏன் இதுவரை எதற்காகவும் நடக்கவில்லை?


இப்போது நடக்கும் போராட்டங்கள் எல்லாம் ஆட்சி மாற்றத்துக்கான - சுயநல அடிப்படையிலான - போராட்டங்கள்தானே தவிர கொள்கைக்காக என்ன போராட்டங்கள் நடக்கின்றன? என்ன கொள்கைகளை முன்வைத்துப் போராடுகிறார்கள்? யார் போராடுகிறார்கள்?


அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்ற நோக்கம் நிறைவேறியவுடன் அவர்களின் ஆர்வம் திசைமாறியது இயற்கைதானே! வேளாண்மை செய்பவன் வெறுமனே உழைத்துக்கொண்டே இருக்கமுடியாது பாருங்கள்! அறுவடையும் செய்யவேண்டும்தானே?.... அறுவடையில் முடிவின்றி இறங்கிவிட்டார்கள்....

இப்போதெல்லாம் அறுவடைமட்டுமே மாற்றிமாற்றி நடக்கிறது!

No comments:

Post a Comment