ss

Saturday, May 19, 2012

அரசியல் ( 11 )

கருத்தோட்டம் (11)
(ஒன்பது மாதத்துக்கு முன்பு எழுதியது)

ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரே போராட்டத்தைப் பற்றியும் அவருக்கு ஆதரவாக மக்கள் எழுச்சியையும் பார்க்கும் போது மக்கள் இப்போதைக்குத் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை சிதறடிக்கப்படுகிறது.

தனி நபருக்குப் பின்னால் கண்மூடித்தனமாக துதி பாடிச்செல்வது நமது நாட்டைப் பிடித்த பெருநோய்! அந்த நோய் இப்போதும் குனமாகிவிடவில்லை, மாறாக முற்றித்தான் போய் இருக்கிறது என்பதற்கு அண்ணா ஹசாரே பஜனை மீண்டும் ஒரு உதாரணம்!

ஹசாரே எப்படி என்பது முக்கியமல்ல, எந்தக் கொள்கையின் அடிப்படையில் எந்த அமைப்பின் வழிகாட்டுதலில் இந்த இயக்கம் சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் முக்கியம்!

எத்தனையோ பேர்களின் பின்னால் போய் எமாற்றப்பட்டும் இன்னும் தனிநபர் துதியில் நம்பிக்கை வைக்கப்படுகிறது என்றால் அது நாட்டுக்கு நல்லதல்ல!

இந்தப் பாணியைப் பின்பற்றினால் ஹசாரே சுத்தமான ஆசாமியாக இருந்தாலும் அவரின் செல்வாக்கைப் பயன் படுத்தி பயனடையப்போவது ஊழல் பேர்வழிகளும் முடிச்சவிக்கிக்களுமாகத்தான் இருக்க முடியும்!காந்தி, அம்பேத்கர், பெரியார், முத்துராமலிங்கத் தேவர் ஜெயப்பிரகாஷ் நாராணன் போன்ற உயர்நோக்கத்துடன் பொதுவாழ்வில் வாழ்ந்து சென்ற மகான்களுக்குப் பின்னால் மக்கள் கடல்போல் திரண்டார்கள். மாபெரும் வெற்றிகளைக் குவித்தார்கள். ஆனால் அடுத்து வந்த தலைவர்களோ(பெரும்பாலோர்) மக்களை ஏமாற்றும் விஷக்கிருமிகளாக, சுயநலவாதிகளாக , நயவஞ்சகர்களாக மாறிப் போனதைக் கண்கூடாகப் பார்த்தோம்.

இதற்குப் பின்னாலும் ஒரு பொதுத் திட்டத்தின்படி திட்டவட்டமான ஒரு கொள்கையின்கீழ்தான் மக்களைத் திரட்டிப் போராடவேண்டும் தனிநபர்களை முன்னிறுத்தக் கூடாது என்ற உணர்வு ஹசாரேவுக்கோ அவரைச் சேர்ந்த முன்னணியினர்க்கோ இருப்பதாகத் தெரியவில்லை.

ஆகையால் இது பழைய மொந்தையில் ஊற்றப்படும் பதிய கள் என்பதைத் தவிர வேறு நினைக்கமுடியவில்லை.

ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் அவசரநிலைக்காலத்தில் உருவான மக்கள் இயக்கம் மகத்தான வெற்றி பெற்றதைப்போல் அன்னா ஹசாரேயை முகமூடியாகப் பயன்படுத்தி வெற்றிபெற சில சக்திகள் திட்டமிட்டுச் செயல்படுவதாகவே தோன்றுகிறது. 

ஜெயப்ரகாஷ் நாராயண் இயக்கத்தால் உருவான ஜனதா கட்சி பின்னாளில் அந்த வெற்றியைப் பாதுகாக்கமுடியாமல் சிதறிப் போனதைப்போல் ஹசாரேயை முன்னிருத்தி வெற்றி பெற்றாலும் முன்னர் ஜனதாகட்சிக்கு நேர்ந்த கதிதான் ஏற்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.ஆனால் கண்மூடித்தனமாக ஆதரவு கொடுத்த கொடுக்காத அத்தனை மக்களுக்கும் கிடைக்கப்போவது என்னவோ வழக்கம்போலப் பட்டை நாமம்தான்!

உதைப்பது யார் என்பதுதான் இப்போதைய பிரச்சினை! உதைபடப் போவது மக்களே!


தனிமனித முயற்சியும் தனிநபர் துதியும் நேர் எதிரானது என்பது உணரப்படவேண்டும்.


ஒருமனிதருடைய தனித்தன்மை சிறப்பாக இருந்தால் போற்றி மதிக்கப்படவேண்டும். பெரும்பொறுப்புக்களை அவரை நம்பி ஒப்படைக்கலாம்.

ஆனால் தனிநபர்துதி என்பது ஒருவருடைய சிறப்பைவைத்து முழுக்கமுழுக்க அவரே எல்லாம் என்கிற பாணியில் அவரைப் பின்பற்றுவோர் அவருடைய செயல்களைக் கண்காணித்து விமர்சனம் செய்யத் தவறுவதும் அவரை எட்டாத உயரத்தில் வைத்து தங்கள் சுதந்திரத்தின் அருமை தெரியாமல் துதிபாடுவதும் தான்.

அதன்காரணமாக இயக்கங்கள் தனிநபர்களின் வாலாக மாறி அவர் தவறுசெய்யும்போது இயக்கமே தவறு செய்ததாக ஆகி நம்பகத்தன்மையை இழக்க நேர்கிறது!

அதனால்தான் கூட்டுத் தலைமையும் கூட்டு முடிவுக்களும்தான் சிறந்த ஜனநாயகமாக மதிக்கப்படுகின்றன!இவையிரண்டையும் அடிப்படையாகக்கொண்டதுதான் உண்மையான ஜனநாயகமாக இருக்கமுடியும் . அது வல்லாத எந்தொரு முறையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எதேச்சதிகாரத்துக்குத்தான் இட்டுச் செல்லும். 

அது தனிநபர் சர்வாதிகாரமாக இருக்கலாம். குடும்ப சர்வாதிகாரமாக இருக்கலாம். ராணுவசர்வாதிகாரமாக இருக்கலாம். வேறு வடிவங்களிலும் இருக்கலாம். ஆனால் ஜனநாயகம் இருக்காது சுதந்திரத்துக்கு மதிப்பிருக்காது!ஒவ்வொருவரும் சமூகத்துக்காக! சமூகம் முழுமையும் ஒவ்வொவருக்காக!

இந்தக் கோட்பாடு நேரடியாகவோ தங்களின் பிரதிநிதிகள் மூலமாகவோ நேர்மையாகவும் உத்தரவாதமானதாகவும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்!

மெஜாரிட்டி முடிவுகளை மைனாரிடிகளும் மனப்பூர்வமாக செயல்படுத்தவேண்டும்! விமர்சனம் சுயவிமர்சனம் என்ற அடிப்படையில் கடந்தகாலத் தவறுகள் சரிசெய்யப்பட்டு சரியானதிசையில் முன்னேற அனைவரும் ஒத்தமனதுடன் கடமையாற்றவேண்டும்! அனைத்து வேற்றுமைகளும் களையப்பட்டு மனித இனமே ஒரு குடும்பமாக ஒன்றுபடவேண்டும்! 

அதுதான் உண்மையான ஜனநாயகம்! அதுதான் மக்கள் ஜனநாயகம்! அதுவரை நாம் செய்யவேண்டியதும் செய்யக்கூடியதும் அந்தத் திசைவழியில் சமூகத்தை நடத்திச் செல்வதற்கான போராட்டங்களே!No comments:

Post a Comment