ss

Saturday, May 19, 2012

அரசியல் ( 12 )

கருத்தோட்டம் (12)


தலைவன் பின்னால் தொண்டன் செல்வதுதான் தலைவனுக்குப் பலம், தலைவனுடைய பலம்தான் கட்சியின் பலம் என்ற கொடுமையான மனோபாவம் மக்களிடம் உருவாக்கப்பட்டிருக்கிறது.


முதலில் தலைவன், தொண்டன் என்ற உறவே ஒழிக்கப்படவேண்டிய பண்பாகும்.

அதென்ன தொண்டன்?...தலைவனுக்கு எடுபிடியா? ஏவலாளா? 

அப்படியானால் தலைவன் தொண்டனல்லவா?

ஒருவன் மக்களுக்குத் தொண்டனாக இருக்கலாம். அனால் தலைவனுக்குத் தொண்டனாக இருக்கக்கூடாது.

தாம் மக்களுக்குமட்டுமே தொண்டர்கள் என்பதை மறந்து தலைவனுக்குத் தொண்டராகிப் போகும்போதுதான் தனிநபர் வழிபாடும் அதைத் தொடர்ந்து சகல மக்கள்விரோதப் பண்புகளும் ஏற்படுகின்றன!

தலைவனுக்கும் தொண்டனுக்கும் பொறுப்புக்களில்தான் வேறுபாடு இருக்கவேண்டும். போற்றப்படும் சிறப்புக்களில்தான் வேறுபாடு இருக்கவேண்டும். இருவருமே சாராம்சத்தில் தொண்டர்களே என்பது நினைவில்கொள்ளவேண்டும்!


தனிநபர் துதி என்கிற விஷ வட்டத்திலிருந்து நாட்டு மக்கள் வெளிவந்தாலன்றி கதிமோட்சம் இல்லை! அப்படியொரு வெளிச்சம் கீற்றாகக்கூடக் காணப்படவில்லை!


மக்கள் தாங்கள் ஆதரித்து ஆட்சியதிகாரத்துக்கு வரும் நபர்கள் வரம்புமீறித் தவறுகள் செய்தால் அடுத்த தேர்தல் வரும்வரை காத்திராமல் உடனுக்குடனே கிளர்ந்தெழுந்து போராட்டங்கள்மூலம் ஆட்சியாளர்களைத் தூக்கி எறியவேண்டும். அத்தகைய கத்தி தலைக்குமேல் தொங்கிக்கொண்டிருந்தால்தான் சரியான ஆட்சியை எதிர்பார்க்கமுடியும் 

அதுவன்றி ஐந்து வருடங்களுக்கொருதடவை ஒட்டுப்போடுவதுடன் தங்களின் கடமை முடிந்தது என்று இருந்தால் இந்த ஏமாளிகளை ஐந்துவருடத்துக்கு ஒருமுறை ஏமாற்றினால்போதும் அல்லது நாலுகால் பிராணிகளுக்கு வீசி எறிவதைப்போல சிலபல இலவசங்களை விட்டெறிந்தால் போதும் என்பதுதான் அரசியலாக இருக்கும்!



மக்கள் மத்தியில் மறுசிந்தனை வேண்டும். அவர்களை வழிநடத்த நல்லறிவும் நாட்டுப்பற்றும் நேர்மையும் செயலூக்கமும் கொண்ட நல்லோர் தங்களை மறைவிடத்திலிருந்து வெளிப்படுத்திக்கொண்டு களத்தில் இறங்கவேண்டும்!

மக்கள் தாங்கள் யாரை நம்புகிறார்களோ அவர்கள் நம்பகத் தன்மை மாசுபடாமல் நடக்கிறார்களா என்று கண்காணிக்க வேண்டும். சரியில்லாத பேர்வழிகளைக் குப்பைகளைக் களைவதைப்போல் தூக்கி எறியவேண்டும்!


எனவே மதங்களைப் புறக்கணித்து அனைத்துமக்களின் நலனைமட்டும் முன்வைத்து அனைத்துமக்களுக்கும் பொருந்தும்படியான கொள்கையின்கீழ் மக்கள் ஒன்று சேரவேண்டும் , சரியான தொண்டர்களாகிய தலைவர்களின் வழிகாட்டுதலில் ஒரு சமுதாய மாற்றத்துக்கான போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் சரியான பாதை! கொள்கை முதல் முக்கியம். அதன் வழிநின்று மக்களை வழிநடத்தும் தலைவர்களும் முக்கியமே! ஆனாலும் கொள்கைதான் தலையாயது!


வேறுபட்ட உணர்வுகளுடன் வேறுபட்ட தேவைகளுடன் வேறுபட்ட விதத்தில் மக்கள் வாழ்ந்தாலும் அனைவரும் இப் புவியில்தான் வாழ்கிறோம்!

எனவேதான் அனைத்து மக்களுக்கும் பொருந்தும்படியான பாராபட்சமற்ற ஒரு கோட்பாட்டால் உலகமக்கள் அன்புமழையில் நனைந்து சகோதரத்துவ வாழ்வு வாழ அதற்குத் தடையாக இருக்கும் அனைத்து வஞ்சக நெறிகளையும் உடைத்தெரியப் போராடவேண்டும் !





No comments:

Post a Comment