சந்தோஷ் பார்ம்ஸ்
நண்பர்களே!
இந்தப் படத்தில் உள்ள நண்பர் திரு. மது ராமகிருஷ்ணன்.
பொள்ளாச்சி பகுதியில் நரிக்கல்பதி என்ற கிராமத்தில் அறுபது ஏக்கரில் இயற்கை வேளாண் பண்ணை வைத்திருக்கிறார். அந்தப் பண்ணையின் பெயர் சந்தோஷ் பார்ம்ஸ்.
அந்தப்பண்ணை அமைந்துள்ள இடம் மேற்குத் தொடர்ச்சி மலைச் சாரல். கண்களுக்கு விருந்து படைக்கும் இயற்கைச் சூழல்.
பார்க்கும் ஒவ்வொருவரையும் நாம் ஏன் இங்கேயே தங்கிவிடக்கூடாது என்ற எண்ணத்தை எண்ணவைக்கும்.
சிங்கத்தைத் தவிர மற்ற விலங்கினங்கள் பறவையினங்கள் எல்லாமே ஏதாவது ஒரு சமயத்திலாவது இங்கு வந்து போயிருக்கிறதாம்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு நம்மாள்வார் அவர்களும் பசுமை விகடனும் சேர்ந்து நடத்திய இயற்கை வேளாண் பயிற்சிமுகாம் நடந்தபோது நான் அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்திருக்கிறேன்.
நாங்கள் அங்கு தங்கியிருந்த நாளில்கூட இரவு ஒரு யானை வந்து ஒரு தென்னை மரத்தைச் சாய்த்து மிதித்துவிட்டுப் போயிருந்ததைப் பார்த்தோம்.
அங்கு இயற்கை வேளாண்மை சம்பந்தமான அத்தனை அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. ஆராய்ச்சி மாணவர்கள்கூட தங்கள் இங்கு வந்து தங்கள் ஆய்வுகளுக்கான பயிற்சியைப் பெறுகிறார்கள்.
திரு மது ராமகிருஷ்ணன் அவர்கள் திரு. நம்மாழ்வார் அவர்களுக்கு நெருக்கமானவர்.
ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற இயற்கை வேளாண் தத்துவத்தின் மூலம் உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய அறிஞர் மசானபு புகோகா இந்தியா வந்திருந்தபோது அவருடன் இருந்து நேரடியாகப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர்.
தன் பண்ணைக்கு வருகை தருபவர்களுக்குத் தானே பயிற்சியளிக்கும் வல்லமை பெற்றவர்.
அங்கு வந்து தங்கும் விருந்தினர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இயற்கைச் சூழலில் அமர்ந்து உண்ணும் கல் மேடைகளால் ஆன திறந்த வெளி உணவுக்கூடம் மிகவும் சிறப்பானது.
அறுபது ஏக்கர் பண்ணையிலும் தென்னை மற்றும் பலவகை மரப்பயிர்களும் நிறைந்துள்ளன.
கால்நடைவளர்ப்பு மண்புழு தயாரிப்பு நீர் மேலாண்மை மற்ற இயற்கை வேளாண்மை சார்ந்த அத்தனை செயல்முறை அம்சங்களும் இங்கு இடம் பெற்றுள்ளன.
ஒரு முறை நேரில் சென்றால்தான் அதன் முழுச் சிறப்பையும் உணர முடியும்.
கூடுதல் தகவல்களுக்கு.....
No comments:
Post a Comment