ss

Sunday, May 13, 2012

விவசாயம் ( 14 )


அருகும் கோரையும்

அருகுகூட நிறையப் பேருக்குத் தெரியும். காரணம் சாணத்தை பிடித்துவைத்த பிள்ளையார் மேல் அருகம் புல்லைக் குத்தி வைப்பார்கள். தற்காலத்தில் கொஞ்சம் பேருக்கு  அருகம்புல் ஜூஸ் சாப்பிடுவது நல்லதென்று தெரியும். 

ஆனால் கோரையைப் பற்றி நிறையப் பேருக்குத் தெரியாது. கோரைப் பாயைக்கூடத் தெரியாது. 

ஆனால் இப்போது நாம் பேசப் போவது விவசாயிகளோடு நெருக்கமான அருகம்புல்லும் கோரையும் பற்றி.

அருகம்புல் ஒரு அற்புத மூலிகை! கால்நடைத் தீவனம். முக்கியமாக அருகம்புல்லை விடக் கால்நடைகளுக்குச் சிறந்த பசுந்தீவனம் இருக்கமுடியாது. 

வரப்பு வாய்க்கால்களிலும் பூமியின் அனைத்துப் பகுதிகளிலும் நீர்வளத்தைப் பொறுத்து வளரும். 

எவ்வளவு வரட்சியையும் தாங்கும் எவ்வளவு ஈரத்தையும் தாங்கும். வரட்சியால் அருகு அழியுமென்றால் உலகத்தில் வேறொன்றும் இருக்காது. 


அவ்வளவு சிறப்பு வாய்ந்த அருகம்புல் எப்போதும் விவசாயிக்கு ஒரு பெரிய எதிரியாகவே இருந்து வந்துள்ளது. காரணம் அது ஒரு வலிமையான களையாகும். மற்ற களைகளெல்லாம் வெட்டினால் காய்ந்து போகும் காரணம் அவற்றின் வேர் மேல்மட்டத்தில் இருக்கும். ஆனால் அருகு ஆழமான வேர்களைக்கொண்டது. சாதாரணமாக வெட்டி அழிக்கமுடியாது. வெட்ட வெட்டத் தழைந்துகொண்டே இருப்பதால் பயிர் இல்லாத நேரத்தில் தோண்டி எடுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் நிலம் முழுக்கப் படர்ந்துவிடும். பயிர் செய்;யமுடியாது.

பயிர் செய்யும் நிலத்தில் அருகு இருந்தால் நீர் பாய்ச்சும்போது அந்த நீரை பயிர் எடுப்பதைவிட அதிகமாக எடுத்துக்கொண்டு வேகமாக வளர்ந்து பயிர் இருந்த இடம் தெரியாமல் செய்துவிடும். வெட்டியும் அப்புறப்படுத்த முடியாது. வெட்ட வெட்ட வேகமாகத் தழையும்.

அதனால் முன்பெல்லாம் அருகுதோண்டுவது என்பது விவசாயத் தொளிலாளரின் முக்கிய வேலையாக இருக்கும்.வேறு முக்pயமான வேலை இல்லாத காலங்களில் ஆண்கள் அருகு தோண்டி நிலத்தைச் சுத்தப் படுத்துவார்கள். 

புதிதாக நிலம் வாங்குபவர்கள்கூட அதில் அருகு நிறைய இருந்தால் அதைப் பெரிய குறையாக எடுத்துக்கொண்டு விலையைக் கணிசமாகக் குறைத்துவிடுவார்கள்.

ஆனால் அத்தகைய அருகை ஒழித்துக்கட்ட ஆபத்பாந்தவனாக வந்து சேர்ந்ததுதான் களைக்கொல்லிகள். அருகை மட்டுமல்ல எல்லாவிதக் களைகளையும் அழிக்கக்கூடிய ஆற்றல் களைக்கொல்லிகளுக்கு உண்டு.

அதனால் களையெடுப்பதற்கான செலவுகள் கணிசமாகக் குறைந்ததோடு மிகச் 
சுலபமாகக் களைகள் ஆட்களை விடாமல் ஒழிக்கப்பட்டு வருகின்றன.

அதில் அருகைப்போன்ற இன்னொரு களைதான் கோரை!

கோரை அருகை விட மோசமானது. அதைச் சாதாரணமாக ஒழித்துவிடமுடியாது. அது பார்ப்பதற்கு நிலத்தின் மேற்பகுதியில் இருப்பதுபொல் தெரிந்தாலும் அதை அடியோடு வெட்டி எறிந்தாலும் ஒவ்வொரு கோரையும் மெல்லிய கம்பிபோன்ற ஒற்றை வேர்களால்  அடுத்த ஒரு கோரையுடன் இணைக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட பல இணைப்புகள் ஒரு சிறு கிழங்குடன் இணைக்கப்பட்டிருக்கும். அந்தக் கிழங்குகள் வேறு பல கிழங்குகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இது அழிக்கமுடியாத சங்கிலிப்பின்னல் ஆகும். இந்தக் கிழங்குகளை அழிக்காமல் வெறும் கோரையை வெட்டி அழிக்க முடியாது. கிழங்குகளைத் தோண்டி அழிக்கவும் முடியாது. 

நிலத்தை ஆழமாக உழும்போது இந்தக்கோரைகள் எல்லாம் தோண்டப்பட்டு அனைத்து இணைப்புக்களும் பிய்த்து எறியப்படும். எல்லாமே தனித்தனிக் கிழங்குகளாக ஆகிக் காய்ந்து மண்ணுடன் கலந்துவிடும்.

ஆனால் மழைபெய்தாலோ நீர்பாய்ச்சினாலோ மண்ணுக்குள் காய்ந்து கிடக்கும் கிழங்குகள் பீனிக்ஸ் பறவையைப்போல் வேகமாக உயிர் பெற்று புதுப் பொலிவுடன் முளைத்து மேலே வரும். இதில் ஒரு கொடுமை என்னவென்றால் தனித்தனியாகப் பிய்த்து எறியப்பட்ட ஒவ்வொரு கிழங்கும் பல கம்பிபோன்ற இணைப்புகளை உருவாக்கி அதன்மூலம் பலகோரைகளாக வளர்ந்து தமக்கெனத் தனியான ஒரு குடும்பத்தையே உருவாக்கிவிடும்.
அதனால் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும்.

பசமைப்புரட்சிக்கு முற்பட்ட காலங்களில் நிலத்தை கோடையில் நன்கு உழுவதன் மூலமும் பல்வேறு களைகளுடன் கலந்து இருந்ததால் தன்னினத்தை வேகமாக அதிகரிக்கமுடியாமலும் சிலவகைக் கோரைக்கிழங்குகளை மக்கள் வரட்சிக்காலத்தில் சேகரித்து உணவாகப் பயன்படுத்தியதாலும் ஒரு சம நிலையில் இருந்தது. 

முன்னர் வேலையாட்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் இருந்ததால் கோரையைத் தளையத் தளைய களைவெட்டி அப்புறப்படுத்துவதும் சாத்தியமாக இருந்தது. அதற்கும் மேலாக கால்நடைகளுக்கு வெட்டித் தீவனமாகப் போடுவதால் நிலம் இல்லாமல் கரவைமாடுகள் வைத்திருப்பவர்கள்கூட இவற்றைத் தீவனத்துக்காக வெட்டிப் போய்விடுவார்கள். 

இன்னும் பல காரணங்களால் முன்னர் அருகும் கோரையும் கட்டுப்படுத்தப்பட்டு விவசாயம் சிறப்பாகவே இயற்கை முறையில் நடந்தது.

ஆனால் பசுமைப்புரட்சிக்குப்பினார் களைக்கொல்லிகள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர் அருகும் கோரையும் விவசாயத்துக்குச் சவால் விடும் நிலையில் பூதாகரமாக வளர்ந்துள்ளன.

இந்தக் களைகள் முன்னர் மற்றவற்றுடன் இணக்கமாக பிரச்சினை யில்லாமல் இருந்தன. ஆனால் அதற்கு இருந்த இயற்கை எதிரிகளான கால்நடைகள், சக களைவகைகள், மனிதப்பயன்பாடு(உணவுக்காக), மாடுகளைப்பயன்படுத்தி உழுதல் போன்றவை வழக்கொழிந்து போன நிலையில் எதிரியாக இருப்பது ஒன்றே ஒன்றுதான்! அதுதான் களைக்கொல்லி!

ஆனால் அருகு கோரை ஆகியவற்றுக்கும் களைக்கொல்லிக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் வெல்லப்போவது இந்தக் களைகள் தோல்வியடையப்போவது மக்களாகிய நாம்!

ஆம்! இந்தக்களைகளைக் கட்டுப்படுத்தும் கால்நடை மேய்ச்சல் முறைகள் ஒழிக்கப்பட்டு கட்டுத்தரையோடு கால்நடைகள் நின்றுவிட்டன. தற்காலத்தில் யாரும் கால்நடைகளுக்கு பசும் புல் சேகரித்து தீவனமாகப் பயன்படுத்தும் முறையும் ஒழிந்துவிட்டது. கோடையில் ஆட்களைவிட்டு அருகுதோண்டும் முறை வழக்கொழிந்து போய்விட்டது. இன்றைய நிலையில் செலவும் கட்டுபடியாகாது.

எல்லாவற்றுக்கும் மேலாக பலவீனமான களைகள் சீக்கிரம் களைக்கொல்லிக்கு இரையாகிவிடுகின்றன. ஆனால் அருகும் கோரையும் தாக்குப்பிடிக்கின்றன.அதனால் தப்பிக்க்கூடியவை மேலும் பல்கிப் பெருகுவது இயல்பே!

ஆக இவற்றைக் கட்டாயம் களைக்கொல்லி மூலம்மட்டும் அழிக்கவேண்டிய நிலைக்கு நிலமை ஆகிவிட்டதால் களைக்கொல்லி தவிர்க்கமுடியாதது ஆகிவிட்டது.

களைக்கொல்லியின் பயன்பாடு தவிர்க்கமுடியாதது ஆனதுதான் இப்போது பிரச்சினையே. ஒவ்வொரு பயிர் சாகுபடியின் போதும் களைக்கொல்லிப் பயன்பாடு கட்டாயம் ஆகிவிட்டதால் நிலத்தில் பிரதானப்பயிரைத் தவிர வேறு எதுவும் விட்டுவைக்கப்படுபதில்லை.

களைகள் வெட்டப்பட்டகாலத்தில் வெட்டப்பட்ட களைகள் நேரடியாகவும் கால்நடைத் தீவனமாக மாறிப்பின்னர் சாணமாகவும் மீண்டும் நிலத்துக்கே இயற்கை உரமாகப்பயன்பட்டன. 

ஆனால் களைக்கொல்லிப்பயன்பாட்டால் களைகள் முளைக்கும் முன்னரே கொல்லப்படுவதால் அவை எந்த வகையிலும் நேரடியாகவோ கால்நடைகளின் மூலமாகவோ மீண்டும் எருவாகத் திரும்புவது இல்லை. அதனால் இற்கையான தாவர உணவு நிலத்தில் குறைந்துபோவதால் விவசாயிகளின் நண்பனான மண்புழுக்களுக்கு உணவின்றி அழிந்துபோவது தவிர தப்பிப் பிழைக்கும் புழுக்களும் களைக் கொல்லிகளாலும் பூச்சி மருந்துகளாலும் கொல்லப்படுகன்றன.

ரசாயன உரப்பயன்பாடும் அதிகமாக இருப்பதால் அதன் தொடாச்சியாக நிலங்கள் இயற்கைத் தன்மையிலிருந்து விலகி வேதிப்பொருட்கள் நிறைந்த களர்நிலங்களாக மாறிவருகின்றன. மண்புழு ஒழிக்கப்படுவதாலும் களைவெட்டுவது குறைந்துவிட்டதாலும் நிங்கள் பாறைபோன்ற கடினத்தன்மையை சீக்கிரம் அடைந்துவிடுகின்றன. என்ன செய்தாலும் எவ்வளவு செலவு செய்தாலும் அதற்கீடாக விளைச்சல் இன்றி விவசாயம் கட்டுபடியாகாமல் போய்க்கொண்டுள்ளது.

ஆக இரண்டு வகையான சிக்கலில் விவசாயமும் விவசாயிகளும் சிக்கிக்கொண்டுள்ள நிலைமையைக் காண்கிறோம்.

ஒன்று இந்த அருகும் கோரையும் இல்லாமல் போக களைக்கொல்லியைப் பயன்படுத்தியே ஆகவேண்டும். அதன்மூலம் நிலங்கள் களர்த்தன்மை அதிகமாகிப் பாழாக வேண்டும்.

இல்லாவிட்டால் களைக்கொல்லிப்பயன்பாட்டை நிறுத்துவதன் மூலம் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கும் பலதாவரங்கள் களைகளாக வளர அவற்றின் ஊடே களைவெட்டிப்பாதுகாக்கப்படும் பயிர்களாக விவசாயம் நடக்கவேண்டும். அப்படிச்செய்வதற்கு அருகையோ கோரையையோ கட்டுப்படுத்திச் சமநிலையில் வைத்திருக்கும் கால்நடைகள் சார்ந்த மனித உழைப்புக்கு முக்கியத்துவம் உள்ள இயற்கை வேளாண்மைக்கு மாறியாகவேண்டும். 

ஆனால் இயற்கை வேளாண்மையின் மு;ககியத்துவத்தை உணர்ந்திருந்தாலும் நடைமுறையில் உள்ள பொருளாதாரச் சிக்கலுக்குத் தீர்வுகாணும் வகையில் விவசாயிக்குக் கட்டுபடியாகும் வகையில் வேலையாள் பிரச்சினையும் விளைபொருட்களுக்குக் கட்டுபடியாகும் விலைப் பிரச்சினையும் சாதகமாக இல்லை! இயற்கை வேளாண்மை முறையில் இருந்து விலகி வெகுதூரம் வந்தாயிற்று. விரும்பினாலும் திரும்ப முடியாத நிலை உள்ளது.

அதிலும் குறிப்பாக இந்த அருகும் கோரையும் இயற்கை வேளாண்மைக்கு எதிரான இரு பெரும் சவால்கள் ஆகும்! 

ஆக இருதலைக்கொள்ளி எறும்புபோன்ற நிலையில் உள்ள நமது விவசாயத்தை எப்படிக்காப்பது என்பது தலையாய பிரச்சினை ஆகும்.

அதற்கு இன்றைய விவசாயத்தில் உள்ள யதார்த்த நிலைகளையும் அதன் பிரச்சினைகளைத் தீர்க்கும் விதத்தில் விரிவாகத் திட்டமிடவேண்டும். இயற்கை வேளாண்மையைக் கட்டுபடியாகும் விதத்தில் செய்வதை உள்ளடக்கி சரியான திட்டங்கைள அரசுமட்டத்தில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படா விட்டால் வருங்காலம் இன்னும் சிக்கலாகவே செய்யும்!

6 comments:

  1. ethu pondra karuththukkal peruka veendum marutham selikka malarthoovuom naam

    ReplyDelete
  2. தங்களின் படைப்பு சிறப்பாக உள்ளது, விவசாயத்தில் மாற்றம் வரவேண்டிய காலம் இது என்ற தங்களின் கருத்து வரவேற்ககூடியது . வாழ்க உங்கள் பணி.

    ReplyDelete
  3. ஒரு விவசாயியின் குமுறல், என் தாத்தன் பாட்டன் எல்லோரும் உழைத்த நிலம் இன்று கேள்விக்குறியாகி நிற்கிறது. தாங்கள் மேற்கொள் காட்டிய அணைத்தும் ஒரு பெரிய சவால்களே...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே!

      உங்களைப் போன்ற நண்பர்களின் விமர்சனங்கள் மதிப்புக்கு உரியவை!அனைவர்க்கும் வாழ்த்துக்கள்!

      Delete