ss

Tuesday, May 22, 2012

விவசாயம் ( 19 )


வேலிக்காத்தான்

இந்த மரவகையை வேலிக்காத்தான் என்றும் வேலி முள்மரம் என்றும் சீமைக்கருவேல் என்றும் விஷமுள் மரம் என்றும் பல்வேறு இடங்களில் பல்வேறுவிதமாக வழங்கி வருகிறார்கள்.

இது நமது நாட்டுக்கு உண்டான மரவகையே அல்ல. கடந்த நூற்றாண்டில் வந்து சேர்ந்த ஒன்று. இதை அமெரிக்கக் கோதுமை வழியாக இந்தியாமேல் ஏவிவிடப்பட்ட ஒன்று என்றும் சொல்லி வருகிறார்கள். 

எப்படியோ இது நாடுமுழுக்க பரவிவிட்டது.

இது எப்பேர்ப்பட்ட வரட்சியிலும் காய்ந்துபோவது இல்லை. நீர் வளம் தேவையில்லை என்பதுமட்டுமல்ல நீரிலேயே பல நாட்கள் இருந்தாலும் உயிருடன்தான் இருக்கும்.

இதன்காய்கள் சற்று இனிப்புச் சுவையுடன் இருப்பதுபோல் இருப்பதால் ஆடுகள் அவ்வப்போது சிலவற்றை உண்ணும்; அதனால் ஆட்டுப் புழுக்கைகளுடன் சேர்ந்து வெகுவேகமாகப் பரவக் கூடியது.

எங்கள் பக்கம் ஆட்டுப்புழுக்கைகளை எருவாகப் போடும்போது, எப்படியோ வேலி முள்ளுச் செடிக்குப் பஞ்சமே இருக்காது என்பார்கள். காரணம் அதன்மூலம் இது பரவும் என்பதே!

இதன் முட்கள் மற்ற முட்களை விடக் கெட்டியானவை. அதே சமயம் கனமானவையும் கூட. அதனால் இதுபட்டால் முறிந்துபோகாமல் தைப்பது மட்டுமல்ல வலியும் அதிகமாக இருக்கும். அதனால் இதை விஷமுள் என்று சொல்வார்கள்.


இது எல்லாவகை நிலங்களிலும் வளரக் கூடியது. முக்கியமாக இதை வேலிக் கால்களில் வேலிப்யிராகவே வளர்த்தவர்கள் உண்டு. நான் கூட இதை ஒரு காலத்தில் ஓரங்களில் நட்டு வளர்த்திருக்கிறேன்.

ஆனால் இவை தன் அருகில் உள்ள பயிர்களை வளர விடாது என்று சொல்வார்கள். அதற்குக் காரணம் அதன் ஆழமான மற்றும் தூரமாகச் செல்லும் வேர்களே! இவை நிலத்தில் குறிப்பட்ட அளவுக்கு மேல் ஆழத்திலுள்ள ஈரப்பதத்தையும் இழுத்துவிடக்கூடிய தன்மை உள்ளதால் மற்ற மேல்மட்ட வேர்கள் உள்ள தாவரங்கள் இதன் அருகில் வளராது.

ஆனால் இவ்வளவு தீமைகள் இதனால் இருந்தாலும் கடும் வரட்சிக்காலங்களில் பல வரண்ட பகுதிகளில் வாழும் மக்கள் இதன் அடிமரங்களையும் கட்டைகளையும் வெட்டி எரித்துக் கரியாக்கி அதைக்கொண்டு வாழ்ந்த வரலாறும் உண்டு.

ஆனால் இவை எரிப்பதற்கும் கரி சுடுவதற்கும் தவிர மற்ற மரச்சாமான்கள் செய்யவெல்லாம் பயன்படாது.

நாள்பட்ட மரம் நிழலாகவும் பயன்படும் ஆனால் இதன் நிழலை யாரும் பெரிதாக விரும்புவதில்லை.

காரணம் இதன் முள்ளைப்பற்றிய அச்சமே.

இவை பல்கிப் பெருக இன்னொரு காரணமும் உண்டு.

ஆதாவது முன்னர் மானாவாரி விவசாயம் நடந்துகொண்டிருந்த காலத்தில் எல்லா நிலங்களும் உழவு செய்யப்பட்டு மழைக் காலங்களில் பயிர் செய்யப்பட்டன. அதனால் இந்த வேலிக்காத்தான் மரங்கள் முளைக்கும் போதே விவசாய நிலங்களில் ஒழிக்கப்பட்டன. ஆனால் மானாவாரி விவசாயம்  கட்டுபடியாகாமல் போனதால் நாட்டில் ஏராளமான நிலங்கள் உழாமலும் பயிர் செய்யாமலும் தரிசாகப் போடப்பட்டன. அந்தத் தரிசு நிலங்களில் முளைத்த வேலிககாத்தான் செடிகள் அழிக்கப்படாமல் மரங்களாக வளர்ந்தது மட்டுமல்லாமல் அவற்றின் காய்களைத் தின்னும் ஆடுகள் மூலமாக தரிசாகக் கிடக்கும் அனைத்து நிலங்களுக்கும் தங்குதடையின்றிப் பரவிவிட்டன.

இது பரவியதற்குப் பிரதான காரணமே மானாவாரி விவசாயம் மிகப்பெரும்பாலான இடங்களில் கைவிடப்பட்டதுதான் என்பதை உணராமல் அது நமது சக்திக்கு மேல் வலிவுடன் பரவுகிறது என நினைப்பது  பாமரத்தனமான கருத்து. அதில் உண்மை இல்லை.

இன்னும் பலர் நினைத்துப்பார்க்காத ஒரு உண்மை இருக்கிறது.

முன்னர் மானாவாரி உட்பட அனைத்து விவசாய நிலங்களில் இது பரவுவது இயல்பாகவே தடுக்கப்பட்டதுபோக மீதமுள்ள புறம்போக்கு மற்றும் ஓடை மற்றும் சாலையோரங்களில் வளரும் இந்த வேலிக்காத்தான் செடிகளை ஏழை எளிய மக்கள் விறகுக்காக வேருடன் வெட்டிச் சென்று விடுவார்க்ள்.

பசுமையான வேலிக்காத்தான் வேலியில் ஆங்காங்கே இருக்கும் இடைவெளிகளில் இதேமுள்ளை வெட்டி அடைத்து விடுவோம். ஆனால் சில நாட்களில் அது காய்ந்துபோனதும் நாம் கவனிக்ககாமல் விட்டால் அதை விறகுக்காகப் பிடுங்கிக்கொண்டு போய்விடுவார்கள். அதுதான் நடந்தது. மக்களின் எரிபொருள் கஷ்டம் அந்த அளவில் இருந்தது.

ஆனால் இன்று மண்ணெண்ணெயும் இயற்கை எரிவாயுவும் பயன்பாட்டுக்கு வந்த பின்னால் அடுப்பெரிக்கும் விறகுக்காக வேலிக்காத்தான் மரங்கைள பயன்படுத்தும் போக்கு பெரும்பாலும் நின்று விட்டது.

அதனால் இயற்கையாகவே அதற்கு இருந்த பாதகமான அம்சங்கள் ஒழிந்து சாதகமான அம்சங்கள் அதிகரித்து விட்டன.

அதனால் அது கட்டுமீறிப்போய்ப் பாதைகளை வழிமறிக்கும் அளவுக்கும் பொது இடங்களை மக்கள் பயன்படுத்த விடாமல் தடுக்குமளவும் ஆதிக்கம் பெற்றுவிட்டன.

இதன் நடுவே நாட்டுப்புறத்தைப் பற்றி அறியாதவர்கள் விவசாயத்துக்கும் மக்களுக்கும் கால்நடைகளுக்கும் இந்த வேலி காத்தான் செடிகளுக்கும் உள்ள உறவை உண்மையாகவே உணராதவர்களால் இந்தத் தாவரத்துக்கு எதிரான ஒரு பூதாகரமான கருத்து பரப்பப்பட்டு வருகிறது.

ஆதாவது இந்தத் தவரம் ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுகிறது, நிலத்தடி நீரை வற்றச்செய்கிறது, அதன் விஷம் ஆபத்தானது, அதனடியில் தங்கும் கால்நடைகளுக்கு மலட்டுத்தனம் ஏற்படுகிறது அருகில் வேறு தாவரங்களை வளர விடாது போன்ற பல குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது.

அது சரியான பார்வை அல்ல. 

ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்டை ஆக்ஸைடை வெளியிடுகிறது என்பது அறிவியலுக்கும் தாவர வியலுக்கும் எதிரான கருத்து. அப்படிப்பட்ட கண்டுபிடிப்பு எதுவும் இதுவரை நிகழ்த்தப்படவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. தாவரங்கள் ஒவ்வொன்றுமே ஒளிச் சேர்க்கையினபோது சூரிய ஒளியைப் பயன்படுத்தி கார்பன்டை ஆக்ஸைடை உட்கொண்டு ஆக்ஸிஜனைத்தான் வெளிப்படுத்தும்.

தனக்கு அருகில் வேறு தாவரங்களை வளரவிடாது என்பதும் நிலத்தடி நீரை அதிகமாக உறுஞ்சிவிடுகிறது என்பதும் சரியான குற்றச்சாட்டு அல்ல. வரட்சியைத் தாங்கி நின்று நிலைக்கக்கூடிய எல்லாத் தாவரங்களுக்கும் உண்டான பொதுக்குணம் அது. 

உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் கற்றாளை, கிழுவன், புளிய மரம், கொடுக்காப்புளி, வேலமர வகைகள் போன்ற பல வகைகளைச் சொல்லலாம். அதுமட்டுமல்ல வெப்ப மண்டலப் பகுதிகளில் வரட்சியைத் தாக்குப்பிடித்து வளரக்கூடிய அனைத்துக்கும் இது பொருந்தும்.

அவை கிடைக்கும் கொஞ்ச ஈரத்தையும் எடுத்துக்கொண்டு வாழும் குணம் படைத்திருப்பதால் அதன் அருகில் வளரும் எளிய தாவரங்கள் தங்களுக்குப் போதுமான ஈரமும் ஊட்டமும் கிடைக்காமல் வாடிப்போய் காணாமல் போய்விடுகினறன.

அதனால்தான் பாசன நிலங்களில் இந்த வேலியைச் சற்றுத் தள்ளித்தான் போடுவார்கள். அல்லது வேலியில் இருந்து சற்று தூரம் தள்ளித்தான் பயிர் செய்வார்கள். 

ஆனாலும் வேலிக்காத்தான் உட்பட அனைத்து வெப்பமண்டலத் தாவரங்களுக்கு அடியிலும் பக்கத்திலும் மழைக் காலங்களில் ஈரம் அதிகமாக இருக்கும் போது பல்வகைத் தாவரங்களும் வளர்ந்து புதர்போல் மண்டிக்கிடப்பைதக் காணலாம்.

இந்தப் படத்தில்கூட அதைப் பார்க்கலாம்!

எனவே இது பொதுவான பண்பே அல்லாமல் வேலிக்காத்தானுக்கே உண்டான தீங்கு பயக்கும் தனிக் குணம் அல்ல.

இது தவிர இது விஷத் தன்மையுடையது. ஆபத்தானது என்பதெல்லாம் உண்மை அல்ல. உண்மையாகவே அந்த தாவரத்துடன் வாழ்ந்து பயன்படுத்தி முள்தைத்து அனுபவப்பட்டவர்களின் கருத்து அல்ல. இந்த முள்தைத்து பலமுறை வலியை அனுபவித்திருக்கிறேன். அது ஒரு பெரிய விஷயமே அல்ல. அப்படியொருவருக்கு இதனால் மரணம் சம்பவிக்குமென்றால் அதற்கு உண்மையான வேறு காரணம் இருக்கவேண்டும். இந்தக் குற்ச்சாட்டு உண்மையென்றால் அதை வெட்டிக் கரி சுட்டு வாழ்ந்த மக்கள் தினசரி முள்குத்து வாங்குகிறார்களே எத்தனைபேர் செத்திருப்பது?

ஆக இந்த வேலிக்காத்தான் செடி அல்லது மரங்களைப் பொருத்த வரை அது பெருகியதற்குக் காரணம் அதன் வீரியமான பரவும் தன்மை அல்ல. அதற்கு எதிர் மறையாக இருந்த மானாவாரி விவசாயம் குறைந்து போனதும் நிறைய நிலங்கள் தரிசாகப் போடப்பட்டதும் மக்கள் விறகுக்காகப் பயன்படுத்துவது நின்று போனதும்தான் காரணம்.

இப்போது அது விறகுக்காகப் பயன்படுத்துவது நிகழ்ந்தாலும் நிலங்கள் தரிசாகப்போடப்படுவது மாறி உழவு செய்து பயிரிடப்படுவது நடந்தாலும் இந்தத் தாவரம் கட்டுக்குள் வந்துவிடும். கட்டுக்குள் வருவதுமட்டுமல்ல அதன் தேவை அதிகரித்து அது தேவையான ஒன்றாகிவிடும்.

இன்று இதை ஒழிக்க எண்ணினால் அது பெரிய விஷயமல்ல. இயந்திரங்களின் உதவியால் வேருடன் பிடுங்கி எரிப்பதாக இருந்தால் எரித்துவிடலாம். இல்லை அப்படியே விட்டு விட்டாலும் கொஞ்சகாலத்தில் இற்றுப்போய்விடும். இதற்கு வேரின் மூலமாகவும் அதன் பசுமையான தண்டுப் பாகத்தின் மூலமாகவும் மீண்டும் துளிர்த்து வளரும் பண்பு கிடையாது. விதைமூலம் மட்டுமே பரவும்.

அதன் பின் மழைக்காலங்களில் மீண்டும் அதன்விதைகள் முளைத்தால் அதை முளைக்கும்போதே பிடுங்கி எறிந்து விடலாம். 

ஆக இந்தத் தாவரம் அழிக்க முடியாமல் விடப்பட்ட ஒன்றல்ல. அதை அழிக்கவேண்டிய அவசியம் குறைந்துபோனதால் வளர்ந்து விட்ட ஒன்றாகும். அது இன்று பல இடங்களிலும் மனித நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துமளவு வளர்ந்துவிட்டதால் அதற்குக் காரணம் என்னவென்று சிந்திக்கவேண்டுமே தவிர உண்மைக்கு மாறான முடிவுகளுக்குப் போகக் கூடாது.

அதனால் எந்தப்பயனும் கிடையாது!

இயற்கை எப்போதும் தவறு செய்வது இல்லை. அது மனித வாழ்வை அனுசரித்து இயங்குவதும் இல்லை. மனிதராகிய நாம் தான் நிறையத் தவறுகளுக்குக் காரணம் ஆகிறோம். நாம்தான் இயற்கையை அனுசரித்து வாழப் பழகிக்கொள்ளவேண்டும். 

மனிதத் தவறுகள் வரம்பு மீறுவதால் இந்த வேலிக்காத்தான் தாவரம் மட்டுமல்ல ஒட்டுமொத்தமான இயற்கையே மனித இனத்துக்கு எதிராகத் தாக்குதல் தொடுக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை! இயற்கையைச் சரணடைவதே தப்பிவாழும் உன்னதமான ஒரே வழி!

22.4.13 அன்று இணைக்கப்பட்டது....


Subash Krishnasamy ஒருகாலத்தில் இது பலவகையிலும் பயன்பட்டது.

தற்காலத்தில் இதனால் பெரிய நன்மை எதுவும் இல்லை !

விறகுக்குத் தவிர வேறு எதற்கும் பயன்படாது.

பெரிய மரங்கள்தான் நிழலுக்கு ஆகும்!

அதற்காக இதை வளர்க்கவேண்டிய அவசியம் இல்லை!

ஆனால் இவை மனித நடமாட்டத்துக்கு இடையூறு செய்கின்றன.

வலிமையான முட்கள் பட்டால் வலி அதிகமாக உள்ளது!

வாகனங்கள் பஞ்சர் ஆவதற்கு இந்த முட்கள் பெரிதும் காரணமாக இருக்கின்றன.

ஆட்கள் கிடைக்காத இக்காலத்தில் இவற்றை அழிப்பது சிரமமாக உள்ளது.

இத்தனைக்கும் மேலாக ஒரு முக்கியக் காரணம் உள்ளது.

ஆதாவது நமது நாடு வறண்ட நிலங்களில்கூட மூலிகை வளம் நிறைந்துள்ளது!

இவற்றின் வளர்ச்சியாலும் ஆழமான வேர்களாலும் வேகமாகவும் அதிகமாகவும் பரவுவதாலும் மூலிகைகளுக்கு ஆபத்தான தாவரமாக உள்ளது!

இப்படிப் பல உண்மையான காரணங்கள் இருக்க இல்லாத காரணங்களைச் சொல்வதும் நம்புவதும் எந்த வகையிலும் சரியானதோ பயனுள்ளதோ இல்லை......

http://www.facebook.com/media/set/?set=a.504369772964040.1073741837.100001730669125&type=3

11 comments:

 1. ஒரு அருமையான ஆராய்ச்சி கட்டுரை. தெளிவான எண்ணம். நன்றி. - Prabee

  ReplyDelete
 2. நன்றி நண்பரே!

  ReplyDelete
 3. மிகப்பயனுள்ள கட்டுரை சுபாஷ் ஐயா, இதை எங்கள் பக்கம் (தருமபுரி) விவசாய மரம் என்று அழைப்பார்கள், நன்றாக வளர்ந்த மரத்தை அடிக்கட்டை வரை வெட்டிய முழுவதுமாக வெட்டிய பின்பும் வேரிலிருந்து இது வளர கூடியதாகவே எண்ணுகிறேன். ஆனால் தனியாக வேரை எடுத்து நடலாகாது. எனது சிறுவயதில் கலர் நிலம் எனும் பயன் படாத நிலத்தில் இது வியாபித்திருப்பதை பார்திருக்கிறேன், வேறு எந்த தாவரமும் இந்த கலர் நிலத்தில் வளராது, இது இந்த தாவரத்தின் சிறப்பம்சம். இதன் முள் தடிமனாக கட்டையாக இருக்கும் எனவே காலில் ஆழமாக இறங்கும், இதில் என்ன ஒரு ஒரு விந்தை என்றால் சாதாரணமான காலணியில் ஊடுருவி உங்கள் காலை பதம் பார்க்கும் திறன் கொண்டது. இதன் முள் மிகவும் விசத்தன்மை வாய்ந்தது என்பது உண்மையே எனினும் ஒரு உயிரை கொல்லும் அளவுக்கு விசத்தன்மை கிடையாது. இதன் முள் குத்திய‌ இடத்தில் ஒருவகை கற்றாலை இலையை (மெல்லிய இலை அமைப்பு கொண்டது) நெருப்பில் வாட்டி இரவு தூங்கும் முன்பு கட்டிவிட்டல் அடுத்த நாள் இதன் விசத்தன்மை குறையும். இதன் இலை ஆடுகள் தின்னாது. காய்களைப் தின்னுமா என்பது பற்றி எனக்கு தெறியாது (;). வெயில் காலங்களில் கருவேள மர இலை உதிரும் ஆனால் இதன் இலை உதிராது. ஏரி ஓரங்களில் ஆடு மாடு மேய்ப்பவர் ஒக்காருவதற்க்கு இந்த செடி பயன்படுகிறது.

  பொதுவாகப் பார்தால் இதன் உபயோகம் மனிதனுக்கு மிகக்குறைவு. எனவே இது எதிரியாக கருதப்படுகிறது என்பது வியப்பில்லை.

  ReplyDelete
 4. விமர்சனத்துக்கு நன்றி நண்பரே!

  இதன் இலை ஆடுகள் தின்னாது. காய்களைப் தின்னுமா என்பது பற்றி எனக்கு தெறியாது \\\\\\

  நன்கு காய்ந்த காய்களை ஆடுகள் தின்னும் நண்பரே! அதன்மூலம்தான் அது வேகமாகப் பரவியது என்பதைக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்!....

  ReplyDelete
 5. // தனக்கு அருகில் வேறு தாவரங்களை வளரவிடாது என்பதும் நிலத்தடி நீரை அதிகமாக உறுஞ்சிவிடுகிறது என்பதும் சரியான குற்றச்சாட்டு அல்ல. வரட்சியைத் தாங்கி நின்று நிலைக்கக்கூடிய எல்லாத் தாவரங்களுக்கும் உண்டான பொதுக்குணம் அது.

  உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் கற்றாளை, கிழுவன், புளிய மரம், கொடுக்காப்புளி, வேலமர வகைகள் போன்ற பல வகைகளைச் சொல்லலாம். அதுமட்டுமல்ல வெப்ப மண்டலப் பகுதிகளில் வரட்சியைத் தாக்குப்பிடித்து வளரக்கூடிய அனைத்துக்கும் இது பொருந்தும்.

  அவை கிடைக்கும் கொஞ்ச ஈரத்தையும் எடுத்துக்கொண்டு வாழும் குணம் படைத்திருப்பதால் அதன் அருகில் வளரும் எளிய தாவரங்கள் தங்களுக்குப் போதுமான ஈரமும் ஊட்டமும் கிடைக்காமல் வாடிப்போய் காணாமல் போய்விடுகினறன. // சரியான குற்றச்சாட்டு அல்ல என்று கூறிவிட்டு நீங்கள் இறுதியாக எளிய தாவரங்கள் தங்களுக்குப் போதுமான ஈரமும் ஊட்டமும் கிடைக்காமல் வாடிப்போய் காணாமல் போய்விடுகினறன என்று கூறியுள்ளீர்களே... ஒரு தகவலை பிறர் சொன்னால் குற்றம். நீங்கள் கூறினால் தகவலா ஐயா?

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. // இயற்கை எப்போதும் தவறு செய்வது இல்லை. அது மனித வாழ்வை அனுசரித்து இயங்குவதும் இல்லை. மனிதராகிய நாம் தான் நிறையத் தவறுகளுக்குக் காரணம் ஆகிறோம். நாம்தான் இயற்கையை அனுசரித்து வாழப் பழகிக்கொள்ளவேண்டும் // அய்யா இயற்கையை அனுசரித்து வாழ பழகிக் கொள்ளவேண்டும் என்பது சரிதான். ஆனால் இயற்கையின் அங்கமாக இருக்ககூடிய இந்த மரங்களோடு அனுசரிக்க இயலாது. சோறு உண்ண நெல் விளைவித்த இடங்களின் என்ன முளைத்தாலும் அது களையாகவே பாவிக்கப்பட்டு அகற்றப்பட வேண்டும்.

  ReplyDelete
 8. // ஆக இந்தத் தாவரம் அழிக்க முடியாமல் விடப்பட்ட ஒன்றல்ல. அதை அழிக்கவேண்டிய அவசியம் குறைந்துபோனதால் வளர்ந்து விட்ட ஒன்றாகும்.// அழிக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம் அய்யா. உங்கள் பதிவுகளை முகநூலில் பார்க்கும்போது சந்தோசமாக இருக்கும். ஏனெனில் நீங்கள் இயன்றதை விளைவித்து நிம்மதியாய் இருக்கின்றேன் என்று பறைசாற்றி வருகின்றீர்கள். உங்களைபோல ஒவ்வொரு விவசாயியும் தான் விரும்பிய தாவரங்கள் பயிரிட்டு நிம்மதியாய் வாழவேண்டும் என்ற கருத்துள்ள என்னைப்போன்றவர்களுக்கு இருப்பதால்தான் இம்மரங்களை அழிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

  ReplyDelete
 9. // ஆட்கள் கிடைக்காத இக்காலத்தில் இவற்றை அழிப்பது சிரமமாக உள்ளது // தீமைகள் இருப்பதாகவும் ஒத்துக் கொண்டா நீங்களே சிறிதளவான மாற்று சிந்தனையின் கட்டுரைகள் எழுதி முகநூல்களில் பகிரும்போது தானாக முன்வரும் இளைஞர்கள் கூட குழம்பித்தான் போவார்கள். ஆயினும் அந்த சிரமங்களைத் தாங்கிக் கொண்டு அழிப்போம்!

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. ஒரு அருமையான ஆராய்ச்சி கட்டுரை. தெளிவான எண்ணம். நன்றி

  ReplyDelete