ss

Wednesday, May 23, 2012

தனிநாடு கோரிக்கை நியாயமா?( 1 )


தனிநாடு கோரிக்கை நியாயமா?( 1 )

நண்பர்களே! தனி நாடு என்கிற கோரிக்கையை சிலர் பலமாக ஒலிக்கிறார்கள்.

தனிநாடு எனும் கோரிக்கை புதுமையானது அல்ல. தொன்றுதொட்டு அவ்வப்போது எழுவதும் நடப்பதும் நடக்காமல்போவதும் வரலாற்றில் நிறையக் காணலாம்.

தனிநாடு எனும் கோரிக்கையை சரி என்றும் சொல்லலாம், தவறென்றும் சொல்லலாம்.

அதை யாருக்கு எதிராக எந்த நியாயத்தின் அடிப்படையில் கேட்கப்படுகிறது என்பதைப் பொறுத்து முடிவுசெய்ய வேண்டும்.

எனவே தனிநாடு கோரிக்கையை எழுப்ப என்ன மாதிரியான காரணங்களை அடிப்படையாகக் கொள்ளலாம் என்பதை சரியாக ஆராஈந்து முடிவு செய்யவேண்டும்.



நாம் சொல்லும் கருத்துக்கள் உலகமக்கள் அனைவருக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கவேண்டும்!



பல் வேறு தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில் ஒரு இனமக்கள் மற்ற இனமக்களுக்கு நிகராக நடத்தப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் பட்சத்தில் அதனால் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வாய்ப்புக்கள் மறுக்கப்படும் பட்சத்தில் அந்த இன மக்களின் பிரிவினைக் கோரிக்கை நியாயமானதே!

அதேபோல ஒரு குறிப்பட்ட இனமக்களுக்கு பாதகமாக எதுவும் இல்லாமல் சிலரின் சுயநலத்துக்காகவோ அல்லது சிலரின் அதிகார ஆசைக்காகவோ தூண்டிவிடப்பட்டு பெரும்பான்மை மக்களின் நலன்களுக்கு எதிராகப் பிரிவினைவாதம் கிளப்பப்படுமானால் அது நியாயமானது அல்ல. 


அப்படிப்பட்ட போராட்டங்களில் ஈடுபடுவதோ தூண்டுவதோ ஆதரவளிப்பதோ தவறாகும். இந்த இரண்டுவிதமான போக்குகளும் உலகில் நிலவ வாய்ப்பிருக்கிறது.

கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான வஞ்சனைகள்தான் மைய அரசின் ஆட்சி முறை என்றால் பிரிவினை எண்ணங்கள் வளரத்தான் செய்யும். அந்த நிலையில் பிரிவினை எண்ணங்களுக்கு அடிப்படைக் காரணகர்த்தா பிரிவினைவாதிகளைவிட மைய அரசுகளே என்றாகிவிடும்.


சில நண்பர்கள் சர்வ சாதாரணமாக தனிநாடு என்கிறார்கள்!

அதை அவ்வளவு சாதாரணமாகப் பார்ப்பது சரியல்ல என்று கருதுகிறேன்.

அப்படியெல்லாம் பேச நம்மை அனுமதிக்கிறார்கள் என்பதற்காக நாம் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பது சரியல்ல!

அதேநேரம் தனிநாடு என்ற வார்த்தை வாயால் உச்சரிக்கவே கூடாத ஒன்றும் அல்ல. 

அப்படிப்பட்ட கோரிக்கை வைக்கவேண்டிய அளவு ஒரு குறிப்பட்ட பகுதி மற்றவர்களால் அல்லது ஆளும் அரசுகளால் புறக்கணிக்கப்பட்டு துயரமான நிலை இருக்கிறதா என்பது முக்கியம்.



அடுத்ததாக தனிநாட்டு கோரிக்கை சம்பந்தமாக கவனிக்கவேண்டிய முக்கிய அம்சங்களாக சிலவற்றை நான் கருதுகிறேன்!

தாம் அதுவரை இருந்த ஒரு நாட்டின் பகுதியாக இனியும் நீடிக்கமுடியாத அளவு புறக்கணிக்கப்பட்ட நிலைமை மாற்றத்தக்கதாக இல்லையா என்பது.

அடுத்து எந்த ஒரு பகுதி தான் முன்பிருந்த ஒரு நாட்டிலிருந்து பிரிந்து தனிநாடாகவேண்டும் என்று விரும்புகிறதோ அந்தப்பகுதி மக்களாகட்டும் அவர்களின் தலைவர்களாகட்டும் அவர்களை வழிநடத்தும் அரசியல் தலைமையாகட்டும் எந்தவிதமான தவறான அடிப்படையுமின்றி சரியாகத்தான் முடிவெடுத்தார்களா என்பது.

அதேபோல இருக்கும் நாட்டின் பிறமக்களுடன் இணைந்து சமாதானமாக வாழ முன்னேற வழியே இல்லையா என்பது.



தங்களை வழிநடத்தும் அரசியல் தலைமை நம்பகமானதா அடக்குமுறையின் முன் தாக்குப் பிடிக்கும் திறன்பெற்றதா? தலைவர்கள் நேர்மையாளர்களா என்பது.

தனிநாடு கோரிக்கைக்கு முன்பாக ஒன்றுபட்ட நாட்டில் தங்களின் பிரதேச நல்வாழ்வுக்காக அனைத்துவிதப் போராட்டங்களும் நடத்திப் பயனற்றுப்போனதா என்பது.

எல்லாவற்றுக்கும் மேலாக தாங்கள் தனிநாடு கோருவதற்கான காரணங்கள் உலகநாடுகளால் அங்கீகரிக்கத்தக்க அளவு மறுக்கமுடியாத அளவு நியாயமானவைதானா என்பது.

No comments:

Post a Comment