ss

Saturday, May 26, 2012

பிற உயிரினங்கள் ( 1 )


பாவம் கழுதைகள்!

இது ஒரு பாவப்பட்ட ஜென்மம்.

காலங் காலத்துக்கும் மனிதருக்காகவே பாடுபட்டதல்லாமல் ஒரு சுகமும் அறியாமல் வாழ்ந்து மடிந்துகொண்டிருக்கும் ஜென்மம்.

இது துவக்க காலத்திலிருந்தே மனிதனுக்குப் போக்குவரத்து வாகனமாகவும் சுமை தூக்கிச்செல்லும் சரக்கு வாகனமாகவும் பயன்பட்டிருக்கிறது.
இதன் முதுகில் வேண்டியமட்டும் சுமையை ஏற்றி வெளியூர் கொண்டு சென்று விற்பனை செய்வதும் வெளியூரில் வாங்கப்படும் சரக்குகளை மீண்டும் திருப்பி ஏற்றிக்கொண்டு வருவதுமாக வியாபாரம் இதன் மூலமாக சிறப்பாக நடந்தது. 

இப்போதும் சொல்வார்கள் கழுதைக்குப் போகும்போதும் சுமை, வரும்போதும் சுமை என்று! 

வாகனப்போக்குவரத்தும் இயந்திரப் பயன்பாடும் வளர்ந்த காலத்தில்கூட கழுதையின் உழைப்புக்காகவே சில வேலைகள் இருந்தன.

சமீபகாலம் வரை கழுதைகள் மேல் விறகுச்சுமை ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டதைப் பார்த்தவர்கள் நிறையப்பேர் இருக்கலாம்.

சலவைத் தொழிலாளர் கழுதைகளின் மேல் துணி மோழிகளை ஏற்றி;க்கொண்டு துவைப்பதற்காகத் தூரத்தில் இருக்கும் ஆற்றங்கரைகளுக்குச் செல்வார்கள். அப்படிப் போகும்போது துணி மூட்டைகளுக்குமேல் நடக்கமுடியாத சிறுவர் சிறுமிகளை ஏற்றிச் செல்லும் காட்சிகளை முன்னெல்லாம் அடிக்கடி காணலாம்.

அதுமட்டுமல்ல இப்போது போல அந்தக் காலத்தில் துணிகளை வெளுக்க கண்ட வேதிப்பொருட்கள் கிடையாது. அதற்கென இருக்கும் பகுதிகளில் உப்புப் படிந்த சாரைமண் என்று சொல்லக்கூடிய ஒரு வகை மண் படிந்திருக்கும். அந்த மண்ணைச் சேகரித்துக் கழுதைகளின் மேல்தான் ஏற்றிக்கொண்டு வருவார்கள். அதனுடன் சேர்த்துத் துணிகளை நனைத்து ஆவியில் சூடுசெய்து நீங்காத அழுக்கையும் நீக்குவார்கள். அந்த முறைக்கு வெள்ளாவி என்பது பெயர்.

ஆனால் இப்படிப் பலவேலைகளும் வாங்கப்பட்ட கழுதைக்கு ஆட்டைப்போலவோ மாட்டைப் போலவோ சரியான பராமரிப்பு இரு;காது. தங்கள் வேலை முடிந்த பின்னால் அவை தூரமாகப் போய்விடக்கூடாது என்பதற்காக முன்கால்க்ள இரண்டையும் நெருக்கமாகச் சேர்த்து விலங்கிட்டதுபொல் கட்டிவிடுவார்க்ள்.

அந்த நிலையில் வெளியில் விரட்டிவிடுவார்கள். அவை முன்கால்களை அடியெடுத்து வைக்கமுடியாமல் இரண்டு கால்களையும் சேர்த்து ஒரேநேரத்தில் குதித்த மாதிரி தான் முன்கால்களைப் பயன்படுத்தமுடியும். அதனால் அதுபடும் வேதனை சொல்லமுடியாது. 

இது தனது மனம்போன போக்கில் கிடைத்ததை மேய்ந்துகொண்டெ ஊர் எல்லைகளுக்கு உள்ளாகவே திரிந்துகொண்டிருக்கும். சில நேரங்களில் அருகில் உள்ள விளைநிலங்களுக்குச் சென்று அங்கு விளைந்திருக்கும் கதிர்களை மேய்ந்துவிடுவதும் உண்டு. அதற்குத் தெரியுமா இது மனிதன் பட்டா போட்டுக்கொண்ட நிலங்கள், மற்ற உயிரினங்களுக்கு அனுமதி இல்லை என்று? 

அந்த விவசாயி பார்த்துக்கொண்டால் போச்சு! தர்ம அடிதான்! அந்தக் கழுதைக்குச் சொந்தக்காரர் மேல் உள்ள ஆத்திரத்தையெல்லாம் அந்தக் கழுதையின்மேல் காட்டுவார்கள். பல நேரங்களில் விளை நிலங்களுக்குப்பக்கம் போகாவிட்டால்கூட இவற்றுக்குச் செம்மையாக அடிவிழும்.காரணம் அடித்தால்தான் அந்தப்பக்கம் வராதாம்!

இதுதவிரச் சிறுவர்கள் தாங்கள் குறிவைத்துப் பழகுவதற்குக் கழுதைகளைப் பயன்படுத்துவது வழக்கமான ஒன்று! ஆதாவது கழுதைகளின் உடம்பு, தலை, முன்னங்கால் பின்னங்கால் காது என்று ஒவ்வொரு இடமாகக் கல்லால் அடிப்பதன் மூலம் தங்களின் குறிபார்த்து அடிக்கும் திறனை வளர்த்துக் கொள்வார்கள்.

காரணமே இல்லாமல் கழுதைகள் பலமாக அடிபடுவதும் உண்டு. செய்யாத தவறுக்காகக் கழுதையைப்போல் தண்டனை அனுபவித்த உயிரினம் உலகில் வேறு எதுவும் இருக்காது என்றே சொல்லலாம்.

அதற்காக அந்தக் கழுதைகள் படும் துன்பத்தை எண்ணிப்பார்ப்பவர் யாரும் கிடையாது. 

இவ்வளவு துன்ப துயரங்களுக்கு மத்தியிலும் அனைத்து உயிரினங்களுக்கும் உண்டான பொதுப்பண்பின்படி தன்னினத்தினைப் பெருக்கும் வகையில் குட்டிகளையும் ஈனும். கழுதைப் பால் சில மருத்துவப் பயன்பாட்டுக்கும் தேவைப்படும் பொருளாகும்.

அதனால் சுமை சுமக்கமுடியாது என்ற ஒரு நிலைமை வந்தால் அதன் வாழ்வு முடிவுக்கு வரும். ஆதாவது அவற்றை அனுசரிக்காமல் தேடாமல் அடித்து விரட்டிவிடுவார்கள். அவை தங்களால் முடிந்த அளவு தாக்குப்பிடித்து உயிர் வாழ்ந்து விட்டு எங்கேயோ ஊர் எல்லையில் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் படுத்தால் எழுந்திருக்கமுடியாத நிலையில் நாய்களும் காகங்களும் கொத்திப்பிடுங்கித் துன்புறுத்தும் நிலையில் உயிரை விடும்.

ஆனால் அது இறந்த பின்னால்கூட அதன் சொந்தக்காரர் யாரும் வந்து தங்களுக்காக அத்தனை காலம் பாடுபட்ட ஒரு சீவன் என்ற அனுதாபத்துக்காகக்கூட அதை எடுத்து அடக்கம் செய்யமாட்டார்கள். 

கடைசியில் அது நாற்றம் எழும்பிப்போய் வெகுதூரத்திலிருந்து வரும் மலைக் கழுகுகளால் தின்னப்பட்டு வெறும் எலும்புக்கூடு ஆக்கப்படும்.

ஆக வரலாற்றுக் காலம் முழவதும் மனிதனுக்காகவே உழைத்துவிட்டு எந்தவிதமான  சுகத்தையும் காணாமல் அடியும் உதையும் என வாழ்ந்து விட்டு கழுகுகளுக்கு உணவாகிப்போகும் கழுதைகளுக்கு மனிதன் இரக்கங் காட்டவில்லை என்பது மட்டுமல்ல அதை இயன்றவரை நிந்திக்கவும் செய்தான்.

ஆம் இன்றும் வேலை செய்யாதவனைச் சோம்பேறிக்கழுதை என்கிறோம். திருடனைத் திருட்டுக்கழுதை என்கிறோம். சும்மா சுத்திக்கொண்டிருப்பவனை ஊர் சுத்தும் கழுதை என்கிறோம். பொறுப்பில்லாதவனைத் தெல்லவாரிக் கழுதை என்கிறோம். 

இன்னும் என்னென்ன தவறுகள் உண்டுமோ அத்தனைக்கும் பின்னால் கழுதை என்ற பெயரை உடன் சேர்த்து;ககொள்கிறோம்.

ஆளால் அந்தப் பாவப்பட்ட பிராணி செய்து வந்த வேலைகள் எல்லாம் இப்போது வேறு வாகனங்களால் செய்யப்படுகின்றன.     அதனால் கழுதைகளின் பயன்பாடு வெகுவாகக் குறைந்து ஏதோ மனிதன் சுமையைத் தூக்கிச்செல்லமுயாத அதே சமயம் வாகனங்களும் செல்லமுடியாத மலைப்பகுதிகளில்தான் இதன் பயன்பாடு இருப்பதுபோல் தெரிகிறது.

ஆனால் மற்ற கால்நடைகள் எல்லாம் பயனற்றுப்போனாலும் மாமிசத்துககாக வளர்க்கப் படுகின்றன. ஆனால் கழுதையினால் அந்தப்பயன் இல்லாததால் அதற்கு வேலை இல்லை என்றால் அது பல்கிப் பெருக யாரும் உதவப்போவதில்லை. அதனால் அது எண்ணிக்கையில் குறைந்துபோய்க் கடைசியில் காணாமல்போய்விடும் என்றே நினைக்கிறேன். 

எப்படியோ துன்பம் ஒன்றைத் தவிர வேறொன்றும் அறியாத அந்த ஜீவன்களுக்கு அப்படியாவது விடுதலை கிடைக்கட்டும் என்றே விரும்புகிறேன்!

பாவம் கழுதைகள்!

No comments:

Post a Comment