உலகிற்கு ஏற்ற இகம்!
ஒருவர் பின்பற்றி வாழ்வது ஆத்திகமா நாத்திகமா என்பது முக்கியம் அல்ல!
யாரொருவர் உலகில் வாழும் உயிர்கள் அனைத்தின் மீதும் அன்பு செலுத்துகிறாரோ
யாரொருவர் உலகமக்கள் யாவரையும் ஒன்றுபோல் பாவிக்கிறாரோ
யாரொருவர் எண்ணம்,சொல், செயலால் பிறர் மகிழும்படி அல்லது ஆறுதல் பெறும்படி நடந்துகொள்கிறாரோ
யாராருவர் தாம் பிறரிடம் எதிர்பார்க்கும் நற்பண்புகளையெல்லாம் தன்னிடத்தே கொண்டிருக்கிறாரோ
யரொருவர் தான் பிறரிடம் எதிர்பார்க்கும் மரியாதையைப் பிறர்க்கும் கொடுக்கிறாரோ
யாரொருவர் பிறருக்குத் துன்பம் கொடுக்காதவராயும் பிறருடைய துன்பங்களையும் தன்னுடையதைப் போல் பாவித்து உதவுங் குணம் கொண்டவராயும் விளங்குகிறாரோ
யாரொருவர் பிறரைத் தனக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்ற எண்ணம் இல்லாதவராகவும் தான் பிறருடைய நற்பண்புகளுக்குக் கீழ்ப்படியத் தயங்காதவராயும் விளங்குகிறாரோ
யாரொருவர் நல்லதற்கு ஆதரவாகவும் தீயவற்றுக்கு எதிராகவும் தம் உயிரையும் அர்ப்பணிக்கத் தயங்காதவராக இருக்கிறாரோ
யாரொருவர் உலகில் நடக்கும் அனைத்தையும் தன் வாழ்வில் நடப்பதைப்போல் பாவித்து அக்கரையும் கவலையும் மகிழ்வும் கொள்கிறாரோ
யாரொருவர் தான், தனது, தனக்கு, செல்வத்தில் மயக்கம், புகழில் மயக்கம் என்ற உணர்வுகளே இன்றி உலகினுக்காகவே உயர்வாழ்வு வாழ்கிறாரோ
யாரொருவர் தன்னை மனித சமுதாயத்தின் ஒரு அங்கமாகவும் இயற்கையின் ஓர் அங்கமாகவும் பாவித்து மனித சமுதாயமும் இயற்கையும் தன்னால் மேலும் சிறப்புப் பெறவேண்டும் என்றும் நினைக்கிறாரோ
யாரொருவர் அணுவில் இருந்து அண்டம்வரை மனித அறிவுக்கு எட்டியவரை அனைத்து இயக்கங்களையும் சரியாகப் புரிந்து இயற்கையின் இயங்கு இயலுக்கு மாறான தவறான நம்பிக்கைகளைக் கலவாமல் சமுதாயத்துக்கும் நல்வழி காட்டுகிறாரோ
யாரொருவர் கடலலைகள்போல் துன்பங்களும் வாழ்க்கைப் பிரச்சினைகளும் முட்டிமோதினாலும் தன் மனதை அமைதியிலேயே வைத்திருக்கிறாரோ
யரொருவருடைய எண்ணம், சொல், செயல் ஆகியவை எப்போதும் பரிசுத்தமாக இருக்கிறதோ
யாராருவர் தான் வாழும் அடிப்படையாக இருக்கும் இயற்கையை நேசிக்கிறாரோ
யாரொருவர் உலகம் முழுவதும் சமாதானம் நிலவவேண்டும் என்ற எண்ணத்தில் ஊறிப்போனவராக இருக்கிறாரோ
யாரொருவருடைய சிந்தனைகள் உலகமக்கள் அனைவருக்கும் முரணின்றிப் பொருந்துகிறதோ
மொத்தத்தில் யாரொருவரைப்போல் அனைவரும் வாழ்ந்தால் மனித சமுதயம் முழுமையும் வாழ்வாங்கு வாழுமோ
அத்தகையவர் பின்பற்றி வாழும் இகமே மனித சமுதாயத்துக்கு ஏற்ற இகம்! அவருடைய வாழ்வே அற்புதமான தத்துவம்! மற்றவையெல்லாம் குறைகள் நிறைந்தவையே!
No comments:
Post a Comment