ss

Monday, May 21, 2012

கேள்வி பதில் ( 2 )

கேள்வி பதில் ( 2 )

கேள்வி:
தமிழகத்தில் உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?


பதில்:
அப்படி யாரையும் சொல்லமுடியாது! காரணம் அப்படிப்பட்ட எண்ணத்தையே நான் அவமானமாகக் கருதுகிறேன்!

சமூகத்தில் ஒருவருடைய பங்களிப்பை விமர்சனம் செய்யலாம்.  நாளை அவர் தவறுசெய்தாலும் நமக்கு அதில் பங்கில்லை. ஆனால் ஒருவனைத் தலைவன் என்று சொன்னால் நாளை அவன் காலித்தனம் செய்யும்போது நாமும் தலைகுனிய வேண்டும்....

கேள்வி:

காங்கிரசின் தலைமை பொறுப்பு உங்களை தேடி வந்தால் என்ன செய்வீர்கள்?


பதில்:

அப்படி ஒரு கோரிக்கை வந்தால் முதலில் நான் சில நிபந்தனைகள் வைப்பேன்.

முதலாவது இதுவரையிலான அவர்களின் சரித்திரம் பொய்யும் புரட்டுமானதும் மக்களை எமாற்றியதுமாகும் என்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவேண்டும். 

இரண்டாவது அதற்குப் பிராயச் சித்தமாக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதல்லாமல் நான் சொல்லும் முறையில் அந்தக் கட்சியின் கொள்கை கோட்பாடுகளை புதிதாக அறிவிக்கவேண்டும்.

கட்சியின் முழு அதிகாரத்தையும் என்னிடம் ஒப்படைக்கவேண்டும். 

முதல் இரண்டு நிபந்தனைகளின்படி நடக்காவிட்டால் மூன்றாவது நிபந்தனையைப் பயன்படுத்திக் கட்சியைக் கலைத்துவிடுவேன்....

கேள்வி:

அருணாச்சலம் படத்தைப்போல நீங்கள் ஒரு மாதத்தில் முப்பது கோடிகள் செலவழிக்கனும் என்றால் எப்படி செலவழிப்பீர்கள்?


பதில்:

சர்வ சாதாரணமாக செலவு செய்துவிடுவேன்.

உலகில் உள்ள அத்தனை நாடுகளில் உள்ள சமூக அக்கறையுள்ள நிறுவனங்களை அழைத்து பயனுள்ள அறிஞர்களின் அவசர மாநாடுகளை அத்தனை நாடுகளிலும் கூட்டி உலகம் மேம்படுவதர்க்கான திட்டங்களை ஆராய்ந்து ஒரு அறிக்கையாக ஒருமாதத்துக்கு முன்பாகவே என்னிடம் கொடுக்கச் சொல்வேன். 

அதற்கான அனைத்து செலவுகளையும் செய்வேன். 

முப்பதுகோடி எம்மாத்திரம்?

கேள்வி:

இந்திய அரசின் நிலைகளை கண்டும் கூடவா உங்களுக்கு எங்கள்

தனிட்டமிழ்நாட்டு எண்ணம் ஏற்புடையதாக இல்லை?


பதில்:தமிழ்நாட்டு அரசியலின் யோக்கியதைமேல் நம்பிக்கை இல்லை! மத்தியில் ஆள்பவர்களைவிடதமிழ்நாட்டை ஆள்பவர்கள் மேலானவர்களாக இல்லை -  என்பதே........

தவிர, ஒரு மாநிலத்தின் அதிகார வரம்பில் நின்று நேர்மையான அத்தனை இயக்கங்களையும் நடத்திப் பார்த்துவிடவில்லை! 

தனிநாடு கேட்பதற்கான அவசியக் காரணங்களை நான் காணவில்லை!

கேள்வி:

 உங்களை இன்றைய தமிழக முதல்வர் அம்மையாருக்கு ஆலோசகராக நியமித்து ஆணை வந்தால் ஏற்பீர்களா?மறுப்பீர்களா?காரணம் என்ன?

பதில்:

ஏற்றுக் கொள்வேன்! 

காரணம் அந்த அம்மையாரின் சக்தி வானளாவியது. அவருடைய சக்தி வீணாவதைத் தவிர்த்து உருப்படியான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதால் கிடைக்கும் புகழ் இப்போது இருப்பதைவிட பலமடங்கு மகத்தானது என்று உணரவைப்பேன். 

வாழுகாலம் குறுகியது அந்தக் காலத்தில் வீணர்களின் துதிபாடலில் மயங்கிக் கிடைப்பதைவிட தனது எதிரிகளை வெல்வதில் கவனத்தைச் செலுத்துவதைவிட மக்களின் மனங்களை வென்று என்றென்றும் நீடிக்கும் புகழில் கவனம் செலுத்தும்படி அதற்கான திட்டங்களையும் வகுத்துக் கொடுப்பேன்.

தவிரவும் அவர்நினைத்தால் ஈழச் சகோதர மக்களுக்காக தமிழ்நாட்டையே ஒரு குடையின்கீழ்  கொண்டுவரமுடியும் என்பதால் அந்த மக்களின் வெற்றியை அம்மையாரின்மூலம் உறுதி செய்ய முயல்வேன். காக்கைகள் சொல்லும் குரலுக்கு செவிமடுப்பதைவிட புதுப் பாதைக்குச் செவிமடுப்பார் என நினைக்கிறேன். காரணம் இப்போதுள்ள அவரின் அரசியல் தகுதியை வைத்து அல்ல. எனது ஆலோசனைகளால் மாற்றம் பெரும் அவரது புது அரசியலை முன்வைத்து என உறுதியாகச் சொல்வேன்.

இத்தனைக்கு மேலும் எனது முயற்சியும் ஆலோசனைகளும் பயன்தராது எனில் தோல்வி எனக்கல்ல, உயர் தர்ம நெறிகளுக்கே என்ற எண்ணத்துடன் வெளியேறி விடுவேன்.....

கேள்வி:

தமிழகத்தின்/இந்தியாவின் இன்றைய நிலைக்கு யார்/எது காரணம்?

பதில்:

அறியாத மக்களை முதல் குற்றவாளிகளாக்க மாட்டேன். படிப்பறிவும் உலக அறிவும் இருந்தும் அவற்றை மக்களுக்காகப் பயன்படுத்தாமல் தம் சொந்த ஆதாயத்துக்குமட்டுமே பயன்படுத்தும் அதற்காக அப்பாவிமக்களை அத்தனைவிதமாகவும் வஞ்சிக்கும் சமுதாய முன்னோடிகளை முதல் குற்றவாளிகளாக்குவேன்.

ஒரு ஆட்டுக் குட்டிக்குக்கூட ஆயிரம் ஆடுகளில் கலந்திருக்கும் தனது தாயை அடையாளம் காணமுடியும்போது தங்களை ஆளத தகுதியுள்ளவர் யார் என்று சரியாக சிந்தித்துணரத் தவறும் மக்கள் இரண்டாமவர்கள்.

கேள்வி:        

இந்தியாமுன்னேறாமல் இருப்பதற்கு மக்கள் தொகை பெருக்கமே காரணம் என்கிறார்களே அது உண்மையா?

மக்கள் தொகைப் பெருக்கம் என்பது சரியல்ல! 

மக்கள் தொகை குறைவாக இருந்த காலத்தில் கொடும் பஞ்சங்கள் வந்தபோது கணக்கற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டன. இப்போது மக்கள்தொகை மிக அதிகமாக இருக்கும் நிலையிலும் பஞ்ச காலத்தில் சாவுகள் நேர்வதில்லை. 

முன்னர் வரட்சிக்காலத்தில் பஞ்சம் பிழைக்க மக்கள் இடம்பெயர்வது சாதாரமாக நடந்தது. இப்போது அந்த அளவு இல்லை.

முன்னர் விவசாய வேலைகள் சரிவர இல்லாமல் மக்கள் துன்பப்பட்டனர். ஆனால் இவ்வளவு மக்கள் தொகை அதிகரித்த நிலையிலும். வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை! 

எனவே மக்கள்தொகைப் பெருக்கத்தைச் சொல்வது மனிதத் தவறுகளை மறைக்கத்தான் பயன்படும்!

இனியொரு பார்வையிலும் பார்க்கவேண்டும்.

உலகில் உள்ள ஒவ்வொரு அணுவும் நம்மால் ஆக்கவோ அழிக்கவோ முடியாத ஒன்றாகும். ஒன்று இன்னொன்றாக மாறிமைவதன்மூலம் பல்வேறு வகையான இயக்கங்கள் நடக்கின்றன. அதில் ஒன்று மனித வாழ்க்கை. 

எனவே இந்த உலகத்தில் உள்ள ஒரு அணுவையும் எண்ணிக்கையில் உயர்த்தாமல் தோன்றும் மனிதப் பெருக்கம் அதன் நெருக்கடிக்கு உடனடிக் காரணமாக இருக்க முடியாது. 

ஆனால் இயற்கைச் சம நிலை என்பது மனித இனம் எந்த அளவு இருந்தால் நல்லதோ அதற்கு அதிகமாகப் போகும்போது உயிரியல் கட்டமைப்பே, இயற்கைக் கட்டமைப்பே தகர்ந்துபோய் பெருங்கேடாய் முடியும் முடியப் போகிறது.

அந்தப் பார்வையில் பார்த்தால் மக்கள் தொகைப் பெருக்கம் கவலை அளிக்கக்கூடியதே!

No comments:

Post a Comment