ss

Wednesday, May 23, 2012

தனிநாடு கோரிக்கை நியாயமா?( 2 )

தனிநாடு கோரிக்கை நியாயமா?( 2 )


ஒரு நாட்டின் எந்த ஒரு தேசிய இன மக்களும் அந்த நாட்டின் ஒரு பகுதியாக இருப்பதைப் பெருமையாகக் கருதவேண்டும். அதுதான் ஒரு நாடு! அப்படியில்லாத நாடு தேசிய இனங்களின் சிறைசாலையாகத்தான் இருக்க முடியும்!

நமது நாட்டின் மைய அரசின் கொள்கை கோட்பாடுகள் எதுவும் அனைத்து தேசிய இன மக்களின் நலன்களையும் பாகுபாடற்ற முறையில் பேணிக் காக்கக்கூடியதாக இல்லை!

மாநிலங்களுக்கிடையேயான பிரசினைகளைக்கூட நியாயமாகத் தீர்க்க கையாலாகாத அரசாகத்தான் உள்ளது.

மொழிவழி மாநிலங்களின் கூட்டமைப்பாக சொல்லிக்கொண்டே தேசியமொழிகளை வளர்க்க ஏதும் செயாததுமட்டுமல்ல அவற்றை அழித்தொழிக்கும் மொழிக்கொள்கையை விடாப்பிடியாகக் கடைபிடித்துவருகிறது!

ஊழலற்ற பாராபட்சமற்ற நிர்வாகத்திரன் மிகுந்த ஒரு அரசாக இல்லாத நிலையில் தங்களுக்கென ஒரு தாயகம் இருந்தால் நலமாக இருக்கும் என்ற எண்ணங்கள் வளர்வது நியாயமே!

ஆனால் இருக்கும் அதிகாரங்களையும் மக்கள் சக்தியையும் வைத்து சாத்தியப்பட்ட வெற்றிகளை அடைய நியாயமான எந்தப் போராட்டங்களையும் செய்யாமலேயே ஊழல் முடைநாற்றமெடுத்து உலகுக்கோர் மோசமான முன்னுதாரணமாய் மாநில அரசுகளும் அரசியல் கட்சிகளும் இருக்கும் நிலையில் மக்களும் போதிய விழிப்புணர்வு இல்லாதிருக்கும் நிலையில் தனிநாடுதான் முழுமையான தீர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது!


இப்போது மக்களைப் பெருநோயாய்ப் பீடித்திருக்கும் ஊழல் மற்றும் கொடிய விஷயங்ளை ஒழித்துக்கட்டாமலேயே அதற்கான போராட்டத்துக்கு முன்னுரிமை கொடுக்காமலேயே தனிநாடாக இருந்தால் அனைத்தும் சாதித்துவிடலாம் என்பது தவறான நினைப்பு ஆகும்!

இந்த முதற்கட்ட சிக்கலைத் தீர்ப்பதற்கான போராட்டங்கள் தீவிரமானாலன்றி அந்தக் கயவர்களும் அவர்களின் ஆட்சிமுறையும் மக்களை வேறு பாதையில் ஒரு அடிகூட நகர அனுமதிக்கப் போவதில்லை!


தவிர அத்தகைய போராட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் பின்னால் அமையப்போகும்  தனிநாட்டில் பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்கும் வரையில் எந்த மக்களுக்காக ஒரு மாற்றம் வேண்டும் என்று எண்ணுகிறார்களோ அந்த மக்களே முதலில் சொன்ன கயவர்களையும் தனிநாடு கேட்பவர்களையும் ஒரே தட்டில்தான் வைத்துப் பார்ப்பர்கள் என்பதை காணத் தவறுகிறார்கள்!

தவிர தேசிய சுயநிர்ணய உரிமைக்காக ஒரு மைய அரசை நிர்ப்பந்திப்பதற்கான போராட்டத்துக்கே தயாராக மக்கள் இல்லாத ஒரு நிலையில் தனிநாடு என்ற ஒரு ஆபத்தான அரசியலுக்கு எத்தனைபேர் முன்வரத் தயாராய் இருக்கிறார்கள்? அதைக் கொள்கைரீதியாகவாவது ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்களா?எந்த வகையிலும் தேசிய நலன்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் வளர்த்துக்கொள்ளவும் தாய்மொழியைப் பாதுகாத்துக்கொள்ளவும் வளர்க்கவும் ஒன்றுபட்ட நாட்டில் வாய்ப்பே இல்லை என்று பல போராட்டங்களின் மூலம் கிடைக்கும் அனுபவங்கள் அடிப்படையில் சுதந்திர அரசுதான் தீர்வு என்ற முடிவுக்கு ஒரு இயக்கம் வரும்போதுதான் மக்களின் ஆதரவு அவர்களுக்கு இருக்கும். 

அதுவன்றி மோசமான பின்புலத்தில் நேரடியாகச் சுதந்திர அரசுதான் தீர்வு என்ற முடிவுக்கு வரும்போது முதலில் சந்திக்கவேண்டியது மக்களின் எதிர்ப்பாகத்தான் இருக்கும்! அத்தகைய ஒரு கொள்கை பலமல்ல, பலவீனமே!இருக்கும் நாடுகள் துண்டாடப்படவேண்டும் என்றும் ஒன்றுக்கு மேற்பட்டநாடுகள் ஒன்றிணையவேண்டுமென்றும் இருவிதமான எதிரும் புதிருமான தேவைகளுடன் உலக சமுதாயம் நகர்ந்துகொண்டுள்ளது.

பல தேசிய இனங்களை உள்ளடக்கிய ஒரு நாட்டில் அனைத்து மக்களின் அனைத்துஉரிமைகளும் சமமாக மதிக்கப்படாமல் துயரத்துக்காளாகும் ஒரு பகுதி மக்கள் தாங்கள் பங்குவகிக்கும் நாட்டைத் துண்டாடி தமக்கென ஒரு தனியரசை உருவாக்கிக்கொண்டுதான் தீரவேண்டும் என்ற தேவை,

அதே நேரம் சின்னஞ் சிறு நாடாக தனித்தனி நாடுகளாக இருந்துகொண்டு அனைத்துத் துறைகளிலும் உலக நாடுகளுடன் அனைத்துவிதமான தொடர்புகளையும் வைத்துக்கொண்டு பாதுகாப்பு உட்பட்ட பல அபரிமிதமான செலவுகளைச் செய்துகொண்டு தன்னந்தனி நாடாகத் துன்பப் படுவதைவிட ஒத்த தரமுடைய ஒன்றுக்கு மேற்படட அரசுகளின ஒன்றியமாக அமைத்துக்கொண்டால் பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருப்பதல்லாமல் மகத்தான வளர்ச்சிக்கும் அது கொண்டு செல்லும் என்கிற தேவைஇந்த இரண்டு சிந்தனைகளிலும் நியாயம் இருக்கிறது. அதன் காரணமாகத் தவிர்க்கமுடியாத நிலைமைகளில் நாடுகளின் எல்லைகள் மேலும் மேலும் கூடுதலாக வரையப்பட்டுக் கொண்டிருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சமாதானம் சகவாழ்வு என்ற உயரிய நோக்கத்தை அடிப்படையாக வைத்து வரையப்பட்ட பிரிவினைக் கோடுகள் அழிக்கப்படவேண்டும் என்பதுதான் உலகமக்களின்மேல் நலன்களில் உண்மையான அக்கரை கொண்டோரின் உண்மையான நோக்கமாக இருக்கமுடியும்.

அத்தகையோரில் ஒருவராக இருப்பதே நமது வாழ்வின் மகத்தான சிறப்பாகுமென்று எண்ணுகிறேன்!

எனவே ஒரு காலத்தில் உருவாகவேண்டிய லட்சிய அமைப்பாக துண்டாடுதல் என்ற இடைக்கால ஏற்பாடு இல்லாமலே போராட்டங்கள்மூலம் உருமாற்றம் செய்ய முதலில் முயற்சிக்கவேண்டியது நியாயமென்று கருதுகிறேன்.இருக்கக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பது என்பது தவிர்க்கக்கூடியதாகவும் தாற்காலிக ஏற்பாடாகவும் தான் இருக்க முடியும். 

காரணம் உலக நாடுகளின் எண்ணிக்கை குறைவதையும் கடைசியில் மனித இனம் முழுமைக்கும் ஒரே உலகம் ஒரே நாடு ஒரே பண்பாடு ஏன் இறுதியில் ஒரே மொழி என்கிற திசையில்தான் உலகம் நகர்ந்துகொண்டுள்ளது.

அதைப் புரிந்துகொள்ளாதவர்கள்தான் தங்களுக்குக் கூடுதல் வலிமை கிடைக்கும்போது தங்களையொத்த பிற இனங்களின் உரிமைகளைக் கணக்கில்கொள்ளாமல் உதாசீனம் செய்து பிரிவினை எண்ணங்களை வளர்க்கிறார்கள். அதேபோல் தனிநாடுதான் நிரந்தரத் தீர்வென்று பாதிக்கப்பட்டவர்களில் பலரும் நினைத்து ஒரே கட்டமைப்புக்குள் சமாதான சகவாழ்வுக்காகப் போராடுவதற்குப் பதிலாக நேரடியாக தனிநாடு வேண்டும் என்று விரும்புகிறார்கள். 

இந்த இரண்டு போக்குகளுமே தவறானவை ஆகும்.மற்ற இனங்களுக்குள்ள உரிமைகளை மதித்து இணையாக நடத்துபவர்கள்தான் நாடு சிதையாமல் இருக்கவேண்டும் என்று சொல்லத் தகுதியுள்ளவர்கள் ஆவர்.

அதேபோல் தனிநாடு என்ற கோரிக்கை தாற்காலிகமானதே, எப்படியும் ஒரு காலத்தில் ஆதிக்கமனப்பான்மை ஒழியும் காலத்தில் நாடுகளின் எல்லைக்கோடுகள் அழிக்கப்படவேண்டும் என்பதை உணர்ந்தவர்கள்தான் ஆதாவது அனைத்துமக்களின் ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்தவர்கள்தான் ஒரு கட்டமைப்புக்குள் சுயநிர்ணய உரிமைக்காகவோ தவிர்க்கமுடியாத நிலையில் தனிநாட்டுக்காகவோ கோரிக்கை எழுப்பத் தகுதி உடையவர்கள் ஆவார்கள்!No comments:

Post a Comment