இப்படியும் ஒரு விடுகதை
கொட்டக் காட்டுக்காரனுக்கும் ஊஞ்சக் காட்டுக்காரனுக்கும் சண்டை! அதை ஆத்துக் காட்டுக்காரன் வந்து தீர்த்து விட்டானாம். அது என்ன?
இப்படி ஒரு விடுகதை ஐம்பது வருடங்களுக்கு முன்பு நான் குழந்தையாக இருந்தபோது எங்கள் பாட்டி சொன்னது இன்னும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது.
இதற்கு மேலே படிக்காமல் இந்த விடுகதைக்கு உங்களால் விடை கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள். முடியாவிட்டால் மேலே தொடர்ந்து படியுங்கள் விடை அடுத்து வரும்.
ஆதாவது நான் சின்னப்பையனாக இருந்தபோது அடிக்கடி தலை குளிக்கச் சொல்லி எங்கள் பாட்டி கொடுத்த தொல்லை தாங்க முடியாது.
தலை குளிப்பதென்றால் சாதாரணமாக இப்போதுபோல் ஷாம்பு போட்டு;க் குளிப்பதென்றால் பரவாயில்லை ஐந்து நிமிட வேலை!
ஆனால் அப்போது சனிக்கிழமை காலையில் எழுந்தால் தலைக்கும் உடம்புக்கும் எண்ணெய் போட்டுத் தேய் தேய் என்று தேய்த்து வெய்யிலிலும் கொஞ்சநேரம் நிற்கவேண்டும்.
அதன்பின் சோப்புப் போடாமல் வெறும் அரப்புத் தூளைப் போட்டுத் தலைக்கு மீண்டும் ஒரு முறை தேய்த்துத் தேய்த்துத் தண்ணீர் விட்டுக் கழுவ வேண்டும். அப்போதுதான் அரப்பு எண்ணெய்ப்பிசுக்கு அழுக்கு எல்லாம் அடித்துக்கொண்டு போகும்.
அரைநாள் லீவே விளையாடப் போக முடியாமல் வீணாகப் போய்விடும். அதனால்தான் பாட்டி கையில் சிக்காமல் ஒட்டம் பிடிப்பது.
இதைத்தான் எங்கள் பாட்டி விடுகதையாகச் சொன்னார்கள்.
கொட்டைக்காடு என்று சொன்னால் ஆமணக்கு எண்ணெய். ஆதாவது கொங்குநாட்டில் ஆமணக்கைக் கொட்டமுத்து என்று சொல்வார்கள். அதனால் ஆமணக்கு எண்ணெயை விடுகதையில் கொட்டக்காடு என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஊஞ்கக்காடு என்றால் அரப்பு என்று பொருள். அரப்புத் தூள் செய்யப் பயன்படும் இலை மரத்தின் பெயர் ஊஞ்சல் மரம் ஆகும் அதனால் அரப்புக்கு இந்த விடுகதையில் ஊஞ்சக்காடு என்று பெயர்.
இரண்டையும் தேய்த்துக் குளிக்கும் போது கடைசியில் ஊற்றிக் கழுவப் பயன்படும் தண்ணீர்தான் ஆத்துக்காடு என்று விடுகதையில் வருகிறது. ஆதாவது ஆற்றில் ஓடுவது தண்ணீர் தானே?
இதன் மூலம் எந்த வேதிப்பொருளும் சேராத உடல் நலத்துக்கு நன்மை விளைவிக்க்கூடிய இயற்கையான குளியல் முறை வலியுறுத்தப் படுகிறது.
இப்படிக் குளியலை நாம் பின்பற்றினோமென்றால் தலைவலி, தோல்வியாதி பொடுகு போன்ற புறத் துன்பங்கள் எதுவும் நம்மைத் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
விடுகதையில் சொல்லப்பட்டது சரிதானே?
No comments:
Post a Comment