ss

Monday, May 21, 2012

தமிழும் தமிழ்நாடும் ( 2 )


தமிழ் தப்புமா?

உலகில் சிறிதும் பெரிதுமாக ஆயிரக்கணக்கான மொழிகள் வழக்கில் உள்ளன. 

சில பலகோடி மக்கள் பேசும் மொழிகளாகவும் வேறுசில சில கோடி மக்கள் பேசுபவையாகவும் இன்னும் பலப்பல மொழிகள் லட்சக் கணக்கிலும் ஆயிரக் கணக்கிலுமான மக்கள் மட்டுமே பேசும் மொழிகளாகவும் உள்ளன. 

பலமொழிசள் இலக்கியத்தரமும் வரலாறும் நாகரிகமும் கொண்டு விளங்குகின்றன. அனேகம் மொழிகள் ஒருகாலத்தில் சிறப்புற்றிருந்து இன்று வரிவடிவம் இன்றி வெறும் பேச்சு மொழிகளாக உள்ளன. 

இன்னும் கணக்கற்றவை அழியும் தருவாயில் வழக்கொழிந்து வருகின்றன. 


மக்களின் தொடர்புகள் விரிவடைய விரிவடைய மொழிக்கலப்பு ஏற்படுகின்றது. ஏந்தெந்த மொழிகள் மக்களின் வாழ்க்கையுடனும் தேவைகளுடனும் அறிவியல், பண்பாட்டு வளர்ச்சியுடனும் தம்மை முழுமையாக இணைத்துக்கொண்டு காலத்துக்கேற்பத் தம்மை வளர்த்துக்கொள்கிறதோ அந்த மொழிகள் சிறப்புற்று விளங்கும்,மற்ற மொழிகளின்மேல் தாக்கத்தை ஏற்படுத்தும். 

இந்தப் போக்குகளின் விளைவாக ஈடுகொடுக்க முடியாத மொழிகள் பலவீனப்பட்டு ஒரு கட்டத்தில் மறைந்துவிடும். ஒருகட்டத்தில் உலகம் முழுவதும் ஒரே மொழிதான் வழக்கில் இருக்கும்.

தமிழ்மொழி மிகவும் தொன்மையான மொழி. உயர்ந்த நாகரிகம், பண்பாடு, வரலாறு, மற்றும் நல்ல பாரம்பரியம் உடைய மொழிதான் என்பதில் ஐயமில்லை. 

ஆனால் வளர்ந்து வரும் தேவைக்கேற்பப் புதுப்புதுச் சொற்களை உருவாக்கி அதனைச் செழுமைப்படுத்தத் தவறியதால் இன்றுதமிழ்மொழியின் ஒரு பகுதியை ஆங்கிலம் பிடித்துக் கொண்டது. 

ஆங்கிலம் கலவாமல் பேசமுடியாது என்கின்ற அளவுக்கு தமிழ் பலவீனமடைந்து விட்டது. ஆங்கிலம் நுழைந்துவிட்ட இடங்களையோ அல்லது வருங்காலத்தில் ஆங்கிலம் இன்னும் எந்த அளவு வேகமாகப்பயன்படப் போகிறதோ அந்தப் பயன்பாட்டு அம்சங்களையோ தமிழ் ஈடுசெய்யப்போவது இல்லை. 

எனவே பழம்பெருமை வாய்ந்த நமது தமிழ்மொழி பிற்காலத்தில் மதிப்பிழந்து வழக்கொழிந்து போவது தவிர்க்க முடியாததாகும் இந்தியாவின அனைத்து மொழிகளுக்கும் அதுதான் கதி! 

காரணம் உலகம் வேமாகச் சுருங்கிவருகிறது.

பட்டுப்பூச்சி முட்டைகளையும் மல்பெரிச் செடியின் இலைகளையும் ஓருதட்டில் நிரப்பி வைத்தால் முட்டைகள் கண்ணுக்குத் தெரியாது. இலைகள் மட்டும் நிரம்பியிருக்கும். ஆனால் மறுநாள் பார்த்தால் இலைகள் மட்டும் காணாமல் போய்விடும். காரணம் முட்டைக்குள் இருந்து வெளிவரும் புழுக்கள் அவற்றை உண்டுவிடும். 

அதுபோல் எவ்வளவு பெரிய பாரம்பரியம் மிக்க மொழியாக இருந்தாலும் காலத்துக்கேற்ப அதைச் செழுமைப்படுத்தா விட்டால் காலமாற்றத்துக்கு ஈடாக வளம்பெறும் வேறொரு மொழி சிறிய அளவில் நுழைந்தாலும் நாளாவட்டத்தில் அது பெருகி ஏற்கனவே இருந்த மொழியைக் காணாமல் செய்துவிடும். 

அதுபோன்ற ஒருநிலைதான் இந்திய மொழிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இந்திய மொழிகள் தேவைக் கேற்ப வளர்க்கப்படாததால் இத்தகைய வாய்ப்புள்ள ஆங்கிலமொழி நாளா வட்டத்தில் அனைத்து இந்திய மொழிகளையும் அழித்து வருகிறது. அழித்துவிடும்.

நமது மொழிகள் அழியாமல் தப்பிக்கும் அதிசயம் ஏதாவது நிகழ்ந்தால் நல்லது!

நிகழுமா? 

2 comments:

  1. கண்டிப்பாக நிகழும்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நம்பிக்கைக்கு வாழ்த்துக்கள் நண்பரே!

      Delete