ss

Thursday, May 24, 2012

மரம் ( 3 )


மரத்தை வெட்டாதீர்!

நண்பர்களே! மரத்தை வெட்டாதீர் என்பது இன்று விபரம் தெரிந்த ஒவ்வொருவரும் விரும்பும், சொல்லும் ஒன்று. ஆனால் அனைவருமே அதன் மறுபக்கத்தைப் பார்க்கத் தவறுகிறோம். அதுதான் ஏன் மரத்தை வெட்டுகிறார்கள் என்பது!

யாருமே விளையாட்டுக்காக அல்லது பொழுதுபோக்குக்காக மரத்தை வெட்டுவதில்லை. ஒவ்வொருவருமே அடுப்பெரிப்பதில் இருந்து மாளிகை கட்டுவதுவரை சொந்தத் தேவைக்காகவும் அரசும் பெரும் நிறுவனங்களும் பல்வேறு வகையான தொழில்களுக்காகவும் கட்டுமானங்களுக்காகவும் மரங்களை நம்பித்தான் இருக்கிறார்கள். 

ஒரு காலத்தில் ரயில்வே ஸ்லீப்பர் கட்டைகளுக்காக்கூட மரக்கட்டைகளைத்தானே பயன்படுத்தினார்கள்? காகித ஆலைகளின் இயக்கமே மரங்களை அழிப்பதில்தானே இருக்கிறது?



மரங்களைப் பாதுகாக்கவேண்டும் அவற்றை வெட்டுவது கூடாது. அதனால் கேடுவரும் என்ற குரல் எல்லாம் ஒருவருக்கொருவர் தமக்கு இருக்கும் அக்கறையைப் பரிமாறிக்கொள்ள மட்டும் பயன்படுகிறது. 

ஆனால் மரத்தை வெட்டி அழிப்பது இன்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விட்டுவைக்கப்படுவதால் மரங்களின் அழிவு என்பது கண்கூடான நடைமுறையாக உள்ளது!

மரங்களை வெட்டக்கூடாது என்கிற உணர்வு அங்கே வெட்டிச் சாய்க்கிற கொடாரிகளையும் அறுத்துத் தள்ளுகிற மின்சார ரம்பங்களையும் தடுத்து நிறுத்துகிறதா? இழுக்கின்ற யானைகளையும் சுமக்கின்ற கனரக வாகனங்களையும் தடுத்து நிறுத்துகிறதா?

ஆயிரம் வருடங்கள் வாழ்ந்து அளவற்ற நன்மைகளைச் செய்த முதிர்ந்த மரங்கள் , எத்தனையோ தலைமுறைகளைப் பார்த்த மரங்கள் எத்தனையோ உயிரினங்களுக்கு வாழ்வளித்த மரங்கள் மர அறுவை ஆலைகளில் அரை நிமிடத்தில் விதவிதமாக அறுத்தெறியப்படுகிறதே அதன் வேகம் குறைத்துள்ளதா?

ஒரு பொருளின் மேல் ஏறி நின்றுகொண்டிருப்பவன் அந்தப் பொருளை ஒரு அங்குலம்கூடத் தூக்கமுடியாது. அந்தப்பொருளைத் தூக்கவேண்டுமானால் முதலில் அப்பொருளைவிட்டுக் கீழிறங்கவேண்டும் 

அதுபோல மரங்களை வெட்டுவதைத் தவிர்க்கவேண்டுமானால் முதலில் அதன் உபயோகப் பொருட்களுக்கு மாற்றுவழி தேடவேண்டும். 

என்னதான் மாற்று வழிகள் பயன்பாட்டுக்கு வந்திருந்தாலும் அது மரங்களின் அழிவைத் தடுக்குமளவு இல்லை என்பதே உண்மை! 

இதுதான் இன்று மரங்களின் அழிவுக்கும் அதனைத்தொடர்ந்து மழைவளங் குறைவதற்கும் பிராணவாயு குறைந்து போவதற்கும் காரணமாக இருந்து அச்சுறுத்தி வருகிறது. 

மரங்களின் அழிவைத் தடுக்கவேண்டுமென்றால் காடுகளிலும் வனங்களிலும் உள்ள மரங்களை வெட்டுவது தடைசெய்யப்படவேண்டும். மக்களின் பயன்பாட்டுக்கென சில வகைகளை ஒதுக்கி அவற்றைத் தனியாக உற்பத்தி செய்துதான் பயன்படுத்தவேண்டும் என்பதும் நடைமுறைக்கு வரவேண்டும்.

இது தனிநபரில் இருந்து உலக நாடுகள் அனைத்தும்வரை அக்கரைப் படவேண்டிய விசயம். தேவையான அளவு நடவடிக்கைகள் உள்ளதா என்பதுதான் அக்கரைக்குரிய கேள்வி!

No comments:

Post a Comment