ss

Saturday, May 26, 2012

மரம் ( 4 )


கருவேல் மரம்

விவசாயிகளுக்கு மிகவும் நெருக்கமான மரம் கருவேல் மரம்.

எல்லாவகையான மண்வகையிலும் வரட்சியைத் தாங்கி நின்று வளரக்கூடியது.

இதன் அடிமரத்தில் இருந்து நுனிக் கிளைவரை கெட்டியான தன்மை உடையது. எளிதில் புழுக்காமலும் இற்றுப்போகாமலும் நீண்ட காலம் பயன்படக்கூடியது.

கிராமங்களில் புஞ்சைக் காடுகளிலும் வயல் வரப்புகளிலும் ஏரிக்கரைகளிலும் தரிசு நிலங்களிலும் சாலையோரங்களிலும் ஏரிகளின் உட்பகுதிகளில்கூட இவற்றைக் காணலாம்.

சாதாரணமாக ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை! வேலாங்குச்சியால் பல்துலக்கினால் ஆயுள்முழுவதும் உறுதியான பற்களுடன் வாழலாம்.

கால்நடைகளுக்கு நிழல்தரும் என்பதைத் தவிர இந்த மரத்தின் இலைகளும் காய்களும் ஆடுகளுக்குத் தீனியாகப் பயன்படும். அதன்காய்களை உண்டு செல்லும் ஆடுகள் இடும் புழுக்கைகள்மூலம் இது பரவக்கூடியது.

விவசாயிகளுக்கும் கருவேலமரத்துக்கும் இருக்கும் பிணைப்பு பிரிக்கமுடியாதது. காரணம் அதன் பாகங்கள் ஒவ்வொன்றும் விவசாயிகளின் பல கருவிகளுக்கும் வேலைகளுக்கும் தேவையானவை.
அதன் கெட்டியான அடிமரத்தால்தான் உழுகின்ற கலப்பைகள் செய்யப்படுகின்றன. ஒரு அதிசயமான ஆனால் மறுக்கமுடியாத உண்மை என்னவென்றால் இன்றளவும் உழும் மரக்கலப்பை கருவேலமரத்தைக் கொண்டே செய்யப்படுகிறது என்பதும் வேறுமரங்கள் பயன்பாட்டில் இல்லை என்பதும்தான்! காரணம் அதன் உறுதித் தன்மையும் கனமும்தான். உழும் கலப்பைகள் உறுதியாக இருந்தால்தான் உடையாமலும் தேயாமலும் நீண்ட நாட்கள் பயன்படுத்தமுடியும். தவிர கனமாக இருப்பதால் நிலத்தில் ஆழ உழுவதற்குத் துணைசெய்கிறது.

கலப்பையில் பொருத்தப்படும் மேழியும் கருவேல மரத்தால் தான் செய்யப்படுகிறது. அதனால் ஒரு முதிர்ந்த கருவேல மரத்தைப் பார்த்தாலே அதைக்கொண்டு இத்தனை கலப்பைகள் செய்யலாம் இத்தனை மேழிகள் செய்யலாம் என்று கணக்கிடுவது விவசாயிகளின் வழக்கம்!

அதுபோலவே கருவேலமரத்தின் கிளைகளும் அவற்றின் கனத்துக்கு ஏற்றபடி மண்வெட்டி,  களைக்கொத்துகள், கோடாரிகள், மற்றும் பல விவசாயப் பாரம்பரியக் கருவிகளுக்கான கைப்பிடிகள் செய்யப்படுகின்றன. 

அதேபோல முன்னர் பயன்பாட்டில் இருந்த இப்போது மறைந்து வருகின்ற விவசாயிகளின் மற்றும் மக்களின் போக்குவரத்து மற்றும் பாரம் சுமக்கும் வாகனமான கட்டை வண்டி செய்யவும் கருவேலமரம் தவிர்க்கமுடியாத தேவையாகும்.

கட்டை வண்டிகளின் முக்கியப்பாகமான சக்கரத்திற்கான அனைத்துப் பாகங்களுக்கும் கருவேலமரம் பயன்படுகிறது. தேக்கு, வாகை போன்ற மரங்கள் பயன்படுத்தப்பட்டாலும் உறுதியில் இதற்கு இணை வேறு எதுவும் இல்லை!

வண்டிச் சக்கரத்தின் முக்கியப் பாகங்களான சுற்றுப்பகுதியான வட்டை, அவற்றை மையத்துடன் இணைக்கும் ஆரக்கால்கள், மத்தியில் அமைந்துள்ள கும்பக்கட்டை என்று சொல்லக்கூடிய மத்தியபாகம், மக்கள் உட்காரவும் சாமான்கள் ஏற்றவும் பயன்படும் வண்டியின் உடல்பாகத்தின் அனைத்துப்பகுpகளும் பலகைகளும் கரவேலமரத்தால் செய்து பயன்படுத்தப்பட்டது. 

உட்காருமிடத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் தட்டிகளைத் தாங்கியிருக்கும் வண்டிமுளை என்று சொல்லக்கூடிய ஒரு அங்குலத்துக்குக் குறையாத நீளக் குச்சிகளும் கருவேலங் குச்சிகளே!

அதேபோல் வண்டியின் முன்பாகம் நிலத்தில் ஊன்றி வைக்கக்கூடிய பூமி தாங்கிக்கட்டை என்று சொல்லக்கூடிய ட வை தலைகீழாகப் போடும்படியான வடிவிலான உறுதியான கட்டையும் கருவேலமரக் கட்டைகள்தான் ஆகும்.

கட்டை வண்டியைப் பொருத்தவரைக்கும் ஏர்க்கால் மரம் என்று சொல்லக்கூடிய மையத்தில் நீளமாக நுகத்தில் இருந்து பின்புறக் கடைசிவரை அமைந்திருக்கும் ஏர்க்கால் மரமும் இரண்டு சக்கரங்களுக்கும் இடையில் குறுக்காக இரும்பு அச்சின்மேல் பிணைக்கப்பட்டு முழு வண்டியையும் தாங்கிக்கொண்டிருக்கும் தொப்பக்கட்டை என்று சொல்லக்கூடிய பகுதியும் மாடுகளின் கழுத்தில் பூட்டப்படும் நுகமும் நாம் அமரும் இடத்தில் நாம் பக்கவாட்டில் சாய்ந்துவிடாமல் இருப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் சவாரித் தப்பைகள் என்று சொல்லப்படும் பகுதிகளும் நீங்கலாக மற்றவேலைகளுக்குக் கருவேல மரம் பயன்படுகிறது.

சக்கரத்தைச்சுறறி உறுதியாகச் சேர்த்துப்பிடிக்கும் பட்டாக்களும் கடையாணிகளும் கயிறுகட்டப்பயன்படும் வளையங்களும் மட்டுமே இரும்பால் ஆனவை.

மின்சார மோட்டாரும் வேறு நீரிரைக்கும இயந்திரங்களும் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் மாடுகளின் துணைகொண்டு கமலை(கவலை என்றும் சொல்வார்கள்) என்று சொல்லக்கூடிய நீரிறைக்கும் முறைக்கும் பிரதானத் தேவையாகக் கருவேலமரம்தான் பயன்பட்டது.

அதன் குத்துகால்களும் கவலை எண்டி என்று சொல்லக்கூடிய மர உருளைம் அந்த மர உருளை பொருத்துப்படும் பக்கவாட்டில் உள்ள காதுப் பலகைகளும், அந்தக் காதுப்பலகையுடன் கூடிய உருளையைப் பொருத்தும் ஆள் உயரத்துக்கும் மேலே குத்துக்கால்களுக்கு இடையே அமைந்திருக்கும் பெரிய உறுதியான தோரணப்பலகையும் அது தவிர சால், பரி இவற்றுடனும் மாடுகளின் கழுத்தில் உள்ள நுகத்துடனும் பிணைக்கப்பட்டுள்ள வடம், வால் கயிறு என்று சொல்லப்படும் கயிறுகள் நிலத்தில் உராய்ந்து அறுந்து போகாமல் தாங்கி உருண்டு கொடுக்கும் பண்ணைவாய் உருளை முன்னுருளை ஆகியவை செய்யவும் இத்தனையும் கொண்ட நீரிறைக்கும் அமைப்புக்கு முட்டு;க்கொடுக்கும் உதைகால் மரம் என்று சொல்லக் கூடிய கவட்டை மரங்களும் கருவேலமரத்தால் செய்யப்படுபவையே!

இதுதவிர கால்நடைகளைக் கட்டுவதற்கான பட்டிகள் அமைக்கும்போது அந்தப்பட்டிகளைத் தாங்கிநிற்கும் ஒதுக்குக்கால்களாகவும் கால்நடைகளைக்கட்டும் முளைகளாகவும் கால்நடைத் தீவனம் அவற்றின் கால்களால் மிதிபடாத வகைக்கு கால்நடைகளின் முன்னால் போடப்படும் காடி மரங்களாகவும் கருவேல மரங்கள் பயன்படுகிறது.

வயலில் நெல்நாற்று நடும்போது சேற்றுழவு செய்தபின் மட்டமடிக்கப்பயன்படும் பரம்பு என்கிற சமப்படுத்தும் மரமும் கருவேலமரத்தால் செய்யப்படும்.

சுருக்கமாகச் சொன்னலால் கருவிகள் செய்யும் போது செதுக்கி எறியப்படும் பாகங்களும் மரத்தின் நுனியில் இருக்கும் சிறு சிறு குச்சிகளும் தான் அடுப்பெரிக்கப் பயன்பட்டது. பயனற்றது முட்கள் மட்டும்தான். 

இன்னும் எண்ணற்ற பயன்கள் கருவேல மத்தால் இருந்தன.

இப்போதும் வீடுகட்டும் பணிகளுக்கு கதவு நிலவு போன்றவற்றுக்கு கருவேல மரத்தைப் பயன்படுத்த மாட்டார்கள். கேட்டால் அது ஆகாது என்பார்கள். 

உண்மைக் காரணம் விவசாயப் பயன்பாடு பெரும்பாலும் கருவேல மரத்தினைச் சார்ந்து இருந்ததால் அதை வீட்டுக்கும் பயன்படுத்தினால் கருவேல மரங்கள் அழிந்து தட்டுப்பாடு வந்துவிடும் என்ற எச்சரி;ககை உணர்வுதான் ஆகும்.

இத்தனை சிறப்புடைய கருவேல மரத்தின் பயன்பாடுகள் விவசாயத்தில் பெரும்பாலும் குறைந்து விட்டதால் இப்போதைய தலைமுறையினருக்கு அதன் அருமை தெரியாமல் போய் அதை அநேகமாக ஒழித்துவிட்டார்கள். இப்போது ஒரு பல் குச்சிக்காகக்கூட நெடுந்தூரம் சென்றால்தான் வேலங்குச்சி கிடைக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது.

வாத்தகமயமான உலகில் தாய்தந்தையர் கூட அந்நியப்பட்டுப்போன நிலையில் இந்தக்கருவேல மரத்தின் பயன்பாடும் விவசாயிக்கு அது செய்த சேவையும் வரலாற்றில் படித்துத்தான் வருங்காலத்தில் தெரிந்து கொள்ளமுடியும்!

இயற்கைத் தாயின் மடியில் நாம் தவழ்ந்து விளையாடிய எதைத்தான் அழித்தொழிக்காமல் விட்டுவைத்தோம்!...

1 comment: