ss

Wednesday, May 23, 2012

சிறு கதைகள் ( 5 )


கிடாய்வெட்டு

அந்தப் பண்ணை வீட்டில் அன்று கிடாய்வெட்டு! உறவினர் சிலர் வந்திருந்தனர். இன்னும் வரவேண்டும்.

அன்று தேர்தல் நாளும்கூட.

காளை மாடுகள் பூட்டப்பட்ட வண்டி தயாராய் இருந்தது. அவர்கள் ஊருக்குள் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று கிடாய் வெட்டிவிட்டு அப்படியே ஓட்டும் போட்டுவிட்டு வரவேண்டும்.

வந்த விருந்தினர்கள் விருந்துக்குப் பின்னால் ஓட்டுப் போடப் போக வேண்டும் இன்னும் வராதவர்கள் ஓட்டுப் போட்டுவிட்டு விருந்துக்கு வருவார்கள்.

ஆட்டுக் கிடாயும் வண்டியில் ஏற்றப்பட்டது. அதற்கு இரண்டு மூன்று வருடங்கள் ஆகியிருக்கும். நன்கு வளர்ந்திருந்தது. முன்னமே கிடாய் வெட்டு வைத்துக்கொள்ள வசதிப்படவே இல்லை. அதுதான் தாமதம். இன்றுதான் அதற்கு நேரம் வாய்த்தது.

முத்துச்சாமி வசதியான விவசாயி அல்ல. ஆனால் குடும்பம் பெரிசு! ஐந்து ஓட்டுக்கள் இருந்தன. ஒட்டுப்போடாமல் இருந்தால் நல்லா இருக்குமா?

அவர்கள் ஐந்து பேருடன் இன்னும் ஒரு சிலரும் ஏறிக்கொள்ள வண்டி புறப்பட்டது.

அன்று கிடாய்க்கு ராஜமரியாதை! அதற்கு ஒன்றும் புரியவில்லை. போகும் வழியில் மேய்ந்துகொண்டிருந்த மற்ற ஆடுகளைப் பார்த்துக் குசியாகக் கத்திக்கொண்டு வந்தது! அது கத்திய விதத்தைப் பார்த்தால் என்னமோ அவையெல்லாம் பரிதாபமாக வெய்யிலில் மேய்ந்துகொண்டிருப்பது போலவும் இதற்குமட்டும் அவற்றுக்குக் கிடைக்காத வாழ்வு கிடைத்து விட்டதுபோலவும் இருந்தது. பாவம்!

அம்மன் கோவிலை அடைந்தாயிற்று. பூசை முடித்துத் தீருநீறு குங்குமம் சந்தனப்பொட்டு எல்லாம் வாங்கி நெற்றியில் போட்டுக்கொண்டு வெளியே வந்தார்கள் கிடாய் தயார் நிலையில் இருந்தது.

பூசாரி ஒரு செம்பில் தீர்த்தம் கொண்டு வந்து அத்தோடு மஞ்சளும் சேர்த்து கிடாயின் மேல் தெளித்தார்.

உடனே கிடாய் துலுக்குக் கொடுக்கவேண்டும். ஆதாவது தன்னுடைய உடம்பைப்  பொலபொலவென சிலிர்த்துக் குலுக்க வேண்டும். அப்போதுதான் அம்மன் மனப்பூர்வமாகச் சம்மதிப்பதாக அர்த்தம்! இல்லாவிட்டால் அது தெய்வக் குற்றமாகக் கருதப்படும். 

ஆனால் உடனே துலுக்குக் கொடுக்கவில்லை. முத்துசாமிக்குப் பொசுக்கென்று ஆகிவிட்டது. 

மீண்டும் ஒரு தடவை அம்மனைக் கும்பிட்டுவிட்டுவந்து அவர் தன்னுடைய கையால் தீர்த்தத்தை கிடாயின் மேல் தெளித்தார்! 

ஆனாலும் பயன் இல்லை! உடனே முத்துசாமியும் அவர் அனைவியும் பலவாறு மெதுவான குரலில் ஏதேனும் தப்புத் தண்டாப் பண்ணியிருந்தால் தங்களை மன்னிக்கவேண்டும் என்று பலமுறை அம்மனிடம் திரும்பத் திரும்பப் புலம்பினர்.

கடைசியாகப் பூசாரி வெளியே வந்து, "ஆத்தா! அடுத்த வருஷம் ரெட்டைக் கிடாய் வாங்கிக்கலாம் உடனே உத்தரவு குடு ஆத்தா! இப்பிடி சோதிச்சா அவக என்ன பண்ணுவாக" என்று முத்துசாமிக்கு ஆத்தாவிடம் சிபாரிசு செய்தார்.

அப்போதுதானே அடுத்த வருடம் பூசாரிக்கு ரெண்டு தலை கிடைக்கும்!

எப்படியோ ஒரு வழியா இவர்கள் கொடுத்த துன்பம் தாங்க முடியாமலும் அதன்மேல் பலதையும் தெளித்ததால் ஏற்பட்ட பிசுக்கால் அசவுகர்யமாக இருந்ததாலும் கிடாய் தன்னுடைய உடம்பை நல்லபடி குலுக்கித் துலுக்குக் கொடுத்தே விட்டது!

ஏதோ தன்னைக் கொல்ல அது சம்மதித்து விட்டதைப் போல!

முத்துசாமிக்கும் அவர் மனைவிக்கும் பெரிய சந்தோஷமாகப் போய்விட்டது.

"நாம்ம எவ்வளவோ கஷடப் படறோம். ஆனாலும் எந்த சாமி குத்தமும் பண்ணலே! ஆனா ஆத்தா ஏன் நம்மள இவ்வளவு நேரம் சோதிச்சதுன்னே தெரியலே! சரி! ஆத்தா உட்ட வழி!" 

என்று சொல்லி மீண்டும் ஒரு தடவை கும்பிட்டுவிட்டு வந்து முத்துசாமி சரி சொன்தும் கிடாய்வெட்டு ஆளின் கொடுவாள் வேகமாக இறங்கி கிடாயின் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கிடாயின் தலை துண்டாகி தனியாகக் கிடந்தது! தலை பூசாரிக்கு! 

வெட்டப்பட்ட ஆடு தலையில்லாமல் வண்டியில் ஏற்றப்பட்டது!

வெட்டப்படாத ஐந்து இரண்டுகால் ஆடுகள் தாங்கள் வாங்கிய ஐந்தாயிரம் ரூபாய்க்காக ஓட்டுப்போடப் பள்ளிக்கூடம் நோக்கி நடந்தன!

2 comments:

  1. இதில் பலியாக்கப்பட்டது ரெண்டுகால் ஆடுகளும் நாலு கால் ஆடும் தான்.சுளீர் சாட்டை விளாசல்.தொடரட்டும் உங்களது விளாசல்கள் ஐயா
    ...உங்கள் முத்து

    ReplyDelete
  2. உங்கள் தளத்தில் தொகுக்கப்பட்டிருந்த சிறுகதைகள் அறிவு பூர்வமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது. உங்களுக்கு எனது மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துக்கள், சமீபத்தில் http://www.valaitamil.com/literature_short-story என்ற இனையதளத்தை பார்த்தேன். அதில் அகிலன்,அசோகமித்திரன், அறிஞர் அண்ணா போன்றோரின் சிறுகதைகள் அழகாக தொகுக்கப்பட்டிருந்தது.

    ReplyDelete