ss

Wednesday, May 2, 2012

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 6 )
நாத்திகவாதிகள் யாரை எதிர்த்துப் போராட வேண்டும் ?உலகில் காலங்காலமாகவே ஆத்திகர்கள் இருந்ததுபோலவே நாத்திகர்களும் இருந்து வந்துள்ளனர்.

அப்படியானால் உலகில் எப்போதும் ஆத்திகக் கருத்துக்கள்மட்டுமே நிலவவில்லை என்று தெரிகிறது.

ஆத்திகத்திற்கும் நாத்திகத்துக்கும் என்ன வேறுபாடு? அவற்றுக்குள் என்ன தீர்க்கமுடியாத முரண்பாடு? அவற்றுள் எது சரி?

நம்மைச்சுற்றிலும் நாம் காணும் அல்லது உணரும் மற்றும் அறிவால் எண்ணிப்பார்க்கும் அத்தனையும் நமக்கு அப்பற்பட்ட நம்மால் அதன் பிரம்மாண்டத்தை உணரமுடியாத ஒரு மாபெரும் சக்தியால் படைக்கப்பட்டது. 

அதன் ஒரு பகுதி நாம். நாம் அழியக்கூடியவர்கள் ஆனால் நமக்கு அப்பாற்பட்ட அந்த பிரம்மாண்ட சக்தி என்றென்றும் அழியாதது.
அது ஆட்டுவித்தபடிதான் நாம் ஆடவேண்டும். அதற்குப் பெயர் பரம்பொருள் அல்லது ஆதிமூலம் அல்லது பரமாத்மா அல்லது இறைவன். அதனால் படைக்கப்பட்ட அனைத்தும் அதன் இச்சைப்படிதான நடந்தாகவேண்டும். அது நல்லவர்களுக்கு நன்மையும் தீயவர்களுக்கு தண்டனையும் வழங்கக்கூடியது.

அதனால் மக்களாகப் பிறந்த நாம் அனைவரும் அனைத்து உயிர்களையம் நேசிக்கும் வாழ்வு வாழவேண்டும். அன்பே கடவுள் என்னும் கோட்பாட்னபடி வாழவேண்டும் அதுதான் படைப்புக் போட்பாட்டுக்கு ஏற்புடையது என்பதை உணரவேண்டும்.

எல்லோரும் இன்புற்று வாழவேண்டுமானால் நாம் நம்மைப்படைத்த இறைவனை எண்ணிப் பார்க்கவேண்டும் அவன் மகிமையை உணர்ந்து போற்றி வணங்கவேண்டும் 

பிறர்க்கு நல்லது செய்வதன்மூலம் இறைவனின் கோபத்துக்கு ஆளாகாமல் வாழ வேண்டும். அவனை மகிழ்விக்கும் விதமாக அவனுடைய தண்டனையில் இருந்து தப்பும் விதமாக பிறர்க்குத் தீங்கு செய்யக்கூடாது. எல்லோரிடமும் அன்பு செலுத்தவேண்டும். வலிமையுள்ளவர் அது இல்லாதவர்க்கும் எல்லோருமே இயன்றவரையும் பிறர்க்கும் உதவிசெய்து வாழவேண்டும்.

பிறப்பதால்தான் இன்பமும் துன்பமும் ஏற்படுகிறது. அதனால் பிறப்பற்ற நிலைதான் இறைவனுக்கு நெருக்கமான நிலை. எனவே பிறப்பற்ற வாழ்வை வேண்டி இறைவனைப் பிரார்த்தனைசெய்வதே நாம் பின்பற்றவேண்டிய உயர்ந்த வாழ்க்கைமுறை என்பது ஆன்மிகத்தின் நிலை ஆகும்.

ஆனால் இந்த நிலை பின்பற்றப்படுகிறதா என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். 

ஆனால் மக்களாகப்பிறந்த நாம் அதை உணராமல் நாம் வந்தவிதத்தை அறியாமல் நாம்தான் அனைத்தையும் தீர்மானிப்பவர்களாகக் கருதிக்கொண்டு ஒருவருக்கொருவர் தான் என்ற அககங்காரத்துடன் நடந்துகொள்கிறோம்.

ஒவ்வொருவரும் அதேமாதிரி நடப்பதால் ஒத்த மனப்பான்மை இல்லாமல் அன்பால் அரவணைத்துக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக்கொண்டு தீங்கு விளைவித்துக்கொண்டு நிம்மதியற்ற வாழ்வு வாழ்ந்துகொண்டு உள்ளோம்.

அதன் காரணமாக இவ்வுலகு இறைவனால் எல்லோருக்குமாகப் படைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னாலும் அதில் வாழும் நம்முள் சிலர் எல்லா வளமும் பெற்று நிம்மதியாக வாழ மிகப்பலர் அப்படிப்பட்ட இன்ப வாழ்வை வெறும் கனவாக எண்ணி வாழவேண்டியுள்ளது.

இந்த மாறுபட்ட நடைமுறைக்குக் காரணம் ஆன்மிகத்தின் இந்த அடிப்படைக்கோட்பாடு  எல்லா இடங்களிலும் ஒரேமாதிரி பின்பற்றப்படுவதில்லை என்பதுமட்டுமல்ல எந்த இடத்திலும் பின்பற்றப்படுவது இல்லை. ஒவ்வொரு இடத்திலும் மக்கள் ஒவ்வொருவிதமாக அதை வியாக்கியானப்படுத்திக் கொண்டு தமக்கேற்ற முறையில் எல்லாம் அதை மாற்றியமைத்துக்கொண்டு அதை ஆன்மிகம் என்று சொல்கிறார்கள். அத்தகைய விளக்கங்களும் அதன் வழி அமைந்த வழிகாட்டுதல்களும்தான் நாளாவட்டத்தில் பொதுவான கோட்பாடுகளாகவும் அவற்றைத் தாங்கிநிற்கும் மதங்களாகவும் மாற்றம் பெற்றன.

அந்த மாற்றங்கள் என்பது ஆன்மிகத்துக்கு ஆதாரமாக இருந்த பரம்பொருள் கோட்பாட்டைவிட்டு விலகி அதற்கு மாறாக பல கடவுள்கள் பலவிதமான வழிபாட்டு முறைகள் பலவிதமான சடங்குகள் பலவிதமான துதிப்பாடல்கற் ஓதும் மந்திரங்கள் என அந்த மதங்களுக்கும் தத்துவப் பிரிவுகளுக்கும் முன்னோடிகளாக இருந்தவர்கள் சொல்வது எல்லாம் ஆன்மிகத்தின் உட்கூறுகள் ஆகின. எல்லாம் வல்ல இறைவனுக்கு மனிதனின் குணங்கள் எல்லாம் கற்பிக்கப்பட்டன. மனிதனிடம் இருக்கின்ற நல்ல கெட்ட குணங்கள் எல்லாம் இறைவனுக்கும் இரு;பபதாகவும் நாம் அதற்சு செய்யும் சடங்குகளைப்பொருத்தும் கொடுக்கும் பலிகள் அல்லது வேறுவிதமான வேண்டுதல்களைப் பொறுத்தும் கடவுளின் அருற் இருக்கும் என்றும் நம்பிக்கைககள் தோற்றுவிக்கப்பட்டு அவை நம்பவும் பட்டன.

எல்லாம் வல்ல இறைவனின் அருளுக்குப் பாத்திரமாக மனிதன் நடக்கவேண்டும் என்பது போய் மனித விருப்பு வெறுப்புகளுக்குத் தக்கபடியெல்லாம் ஆன்மிகத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதனால் கடைசியில் ஆன்மிகம் என்பது ஒரு பொதுவான கோட்பாடே அன்றி பின்பற்றப்படும் வாழ்க்கை முறை அல்ல என்ற அளவுக்குச் சீரழிந்து மக்கள் தங்களுக்குள் ரத்தம் சிந்துவதற்கும் வேறெந்த ஒரு காரணத்தையும் விட இந்த ஆன்மிகத்தில் உள்ள முரண்பட்ட தத்துவங்கள் காரணங்களாகிவிட்டன.

இந்த இடத்தில் தான் ஆத்திகமும் நாத்திகமும் நேர் எதிரும் புதிருமாக மோதும் இரு பெரும் கோட்பாடுகள் ஆகிவிட்டன.

நாத்திகத்தின் அடிப்பைடைக் கோட்பாடு நாம் காணும் அல்லது உணரும் அல்லது அறிவைக்கொண்டு அறியும் அல்லது அறிவைக்கொண்டும் அறியமுடியாத அண்டத்தில் உள்ள அனைத்தும் ஏதோ ஒரு சக்தியால் படைக்கப்பட்டது அல்ல. அது ஒரு மாபெரும் இயக்கம் அது என்றென்றும் இயங்கிக்கொண்டேதான் உள்ளது. அதற்குத் தோற்மும் முடிவும் இல்லை. அதை எந்த சக்தியும் படைக்கவும் இல்லை அப்படி ஒரு சக்திதான் இத்தனையையும் படைத்தது என்றால் அந்தச் சக்தியைப் படைத்தது எது என்ற பதிலளிக்கமுடியாத கேள்வியையும் எழுப்புகிறது.

அந்தப் பேரியக்கத்துக்குள் நடக்கின்ற எண்ணற்ற இயக்க வடிவங்களுள் ஒன்றுதான் மனித வாழ்க்கை. அதேபோன்று அனைத்து உயிருள்ள அல்லது உயிரற்ற எல்லாமே இயற்கையின் பேரியக்கத்துள் அடங்கிய உட்கூறுகளே.

அத்தகைய இயக்கக்கூறுகளில் ஒன்றான மனித இனம் பல்வேறு மூடநம்பிக்கைகளில் சிக்கி முரண்பட்டு துன்பப்படுவதைவிட இயற்கையில் நடக்கும் இயக்கங்களைச் சரியாகப்புரிந்துகொண்டு சரியாக வாழ்ந்தால் போதும் என்கிறது. 

ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்வை எப்படி வாழ்ந்தால் அது தங்களுக்கும் மற்றவருக்கும் ஏற்படையதாய் இருக்குமோ அப்படி வாழ்ந்தால் போதும். நமக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்றுக்குப் பயந்துகொண்டுதான் நாம் வாழ்வேண்டுமென்ற அவசியம் இல்லை. அப்படித் தவறு செய்யாமல் இருப்பதுமில்லை. தவறு செய்யாமல் இருப்பது என்பதோ சிறந்த மார்கங்களில் நடப்பது என்பதோ இல்லாத ஒரு கடவுளைக்கண்டு பயந்து அல்ல. மக்கள் தாங்களாகவே ஏற்படுத்திக்கொள்ளும் சட்டதிட்டங்களுக்குத்தான் ஓரளவு கட்டுப்பட்டுவாழ்கிறார்களே அல்லாமல் கடவுளைக்கண்டு பயந்து அல்ல. எனவே அனைத்து மக்களுக்கான வாழ்க்;கை விதிகள் பாராபட்சமில்லாமல் உருவாக்கப்பட்டு அதைச் சரியாகப் பின்பற்றினால் வாழ்வு சிறப்பாக இருக்கும் என்கிறார்கள்.

அவர்கள் தங்கள் கோட்பாடுகளை வலியுறுத்துவதற்காக மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக பெயரளவில் இருக்கும் போலித்தனமான ஆன்மிகத்தையும் ஆன்மிகத்தின் பேரால் நடக்கும் அனைத்து மூடநம்பிக்கைகளையும் விட்டுக்கொடுக்காமல் தாக்குதல் தொடுக்கிறார்கள்.

அப்படித் தொடுக்கப்படும் தாக்குதல்களுக்குப் பிரதான இலக்காவது மெய்யான ஆன்மிகக்கோட்பாடு அல்ல! அதன் பெயரால் நடக்கும் அநியாயக் கூத்துக்களே! அப்படித் தாக்குதல் தொடுப்பவர்களுக்கு ஆன்மிகத்தின் அடிப்படைகூட நிறையப் பேருக்குத் தெரியாது. அவர்களின் பலம் போலி ஆன்மிகவாதிகளின் மூடநம்பிக்கைகளில்தான் அடங்கியுள்ளது.

உண்மையான அடிப்படை ஆன்மிகத்துக்கும் அறிவியல் சிந்தனைகளாகிய அடிப்படை நாத்திகத்து;ககும்  தீர்க்கமுடியாத முரண்பாடுகள் எதுவும் இல்லை. தீர்க்கவேண்டிய அவசியமும் இல்லை. ஒரு நாணையத்தின் இரு பக்கங்களைப் போன்றவை. ஒன்றில்லாமல் ஒன்றில்லை. 

இரண்டின் மக்களுக்கான விருப்பங்களும் ஒன்றே! வழிமுறைகள்தான் வேறு அவற்றை இயற்கைக்கும் நமது வாழ்வுக்குமான உறவு பற்றிய இரு வேறு இணக்கமான பார்வைகள் என்று எடுத்துக்கொண்டால் உலக வாழ்வு அக்கப்போராக இல்லாமல் அற்புதமானதாக மாறும். 

ஆகையால் உண்மையான ஆத்திகமும் உண்மையான நாத்திகமும் இணைந்து போலி ஆன்மிகமான மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் போராடவேண்டும்.அதற்கு விதிவிலக்கு கிடையாது! விதிவிலக்குக் கொடுக்கப் பட்டால் அதுவும் ஒரு மூடநம்பிக்கையே!

அதுதான் ஆத்திகர்களின் கடமை! அதுதான் நாத்திகர்களின் கடமையும்கூட!  


2 comments:

  1. அருமையான பதிவு ..மிக்க நன்றி..

    ReplyDelete
  2. மிக நன்றி நண்பர் சந்திரசேகர் குருசாமி அவர்களே!

    ReplyDelete