ss

Saturday, May 19, 2012

அரசியல் (7)

கருத்தோட்டம் ( 7 )


மக்கள் தங்களால் தேர்வு செய்யப்படும் தங்களின் பிரதிநிதிகளிடம் என்ன எதிர் பார்க்கலாம்? தங்களின் வட்டாரப்பிரச்சினைகளை சரியாகக் கவனித்து அதற்குத் தீர்வாக அவர் அங்கம் வகிக்கும் மன்றத்தில் தங்களின் பிரச்சினைகளை உரிய முறையில் முன்வைக்கிறாரா? நாட்டு நடப்புக்ளைச் சரியாகப் புரிந்து தங்களின் சார்பாக அரசுக்கு நல்ல பல ஆலோசனைகளை வழங்குகிறாரா? தனது அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் அரசு வேலைகளில் முறைகேடுகள் நடக்காமல் விழிப்புணர்வுடன் செயல்பட்டு தனது கடமையைச் செம்மையாக ஆற்றுகிறாரா? தேர்தல் காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளின்படி நடக்கிறாரா? என்பதுபோன்ற அம்சங்களைத்தான் எதிர்பார்க்கலாம் எதிர்பார்க்கவேண்டும்.


ஆனால் நமது மக்கள் என்ன நினைக்கிறார்கள்? ஆங்காங்கே தாங்களே செய்யவேண்டிய அல்லது மற்ற அரசு அமைப்புகளின் ஊழியர்கள் செய்யவேண்டிய வேலைகளைக்கூட இவர்கள் செய்யவேண்டுமென்று விரும்புகிறார்கள். தெருவிளக்கு சாக்கடைசுத்தம் உட்பட.தங்களின் சொந்தத் தேவைகளுக்காகக்கூட அவர்கள் உதவவேண்டும் என்று எண்ணுகிறார்கள். எதற்காவது நன்கொடை என்று போனால் அள்ளித் தரவேண்டும் என்று எண்ணுகிறார்கள். தாங்கள் கோரும் சிபாரிசுகளை உடனே செய்துதரவெண்டுமென எண்ணுகிறார்கள். வட்டாரத்தில் உள்ள எல்லாப் புள்ளிகளுக்கும் நல்ல பிள்ளையாக நடக்கவேண்டும் என நினைக்கிறார்கள்.


அவர்களின் உண்மையான கடமைகள் தவிர மற்ற வேலைகளையெல்லாம் எதிர்பார்க்கிறார்கள். 


எல்லாவற்றுக்கும் மேலாக தேர்தல் காலங்களில் ஏராளமாகச் செலவு செய்பவர்களால்தான் முடியும் என்கிற அளவு நிறைய ஆரவாரத்தையும் எதிர்பார்க்கிறார்கள்.இப்படிப்பட்ட நிலையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர் எப்படிப்பட்டவராக இருக்கமுடியும்? முறைகேடாகக் கொள்ளையடிக்கும் தமது சொந்தத் திட்டத்துக்கும் மேலாக மக்களின் நிர்ப்பந்தத்துக்காகவும் சேர்த்துக் கொள்ளையடிக்க வேண்டியவராகிறார். தமது கடமைகளைப்பற்றிக் கற்றுக்கொள்ளவும் திறம்படக் கடமையாற்றவும் வேண்டிய இடத்தில் கொள்ளைக்காரர்களும் சமூகவிரோதிகளும்தான் தாக்குப் பிடிக்கமுடியும் என்ற நிலை ஏற்படுகிறது.அப்;பறம் என்ன? ஜனநாயகமாவது புடலங்காயாவது! வெந்துகொண்டு இருப்பதில் பிடுங்குவது மிச்சம் என்பதுதான் நமது மக்கள் பிரதிநிதிகள் புரிந்து பின்பற்றுகிற ஜனநாயகம்!


சில வருடங்களுக்கு முன்னால் அமெரிக்காவின் வருடாந்திர ராணுவ பட்ஜெட்டே ஒருலட்சம் கோடி ரூபாய்கள். ஆனால் தற்காலத்தில் நமது நாட்டில் மக்களின் பிரதிநிதிகள், ஜனநாயகத்தின் காவலர்கள்; லட்சக்கணக்கான கோடிகள் தனிநபர்களாகவே கையாட முடியும் என்றபோது நமது ஜனநாயகத்தின் பரிணாமவளர்ச்சியை எண்ணி வியந்துதான் போனேன்!

மருத்துவத் துறையின் உயர் அதிகாரியாகப் பணி புரியும் ஒருவர் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை சம்பாதிக்கவும் குவிண்டால் கணக்கில் தங்கக் கட்டிகளைக் குவிக்கவும் நமது ஜனநாயகத்தைத் தவிர எந்த ஜனநாயகம் அனுமதிக்கும்? 


குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படும் நாடுகளில் இருந்தால் தோட்டாக்களுக்கு இறையாகவேண்டியவர்கள் எல்லாம் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து அழகு பார்க்க நமது ஜனநாயகம் மட்டுமே அனுமதிக்கும்!


ஒருவரே எல்லோருக்கும் நல்லவராக வேண்டிய அவசியமே இல்லை! அது அவசியமும் அல்லை. சாத்தியமும் இல்லை. ஆனால் தவறு செய்ய வாய்ப்பே இல்லை. மீறித் தவறு செய்தால் தப்பி வாழ வழியே இல்லை என்கிற முள் கிரீடத்தை அணிவித்துவிட்டால் மக்கள் பிரதிநிதி மக்களின் விரோதி ஆக முடியாதல்லவா? அப்படி இருந்தால் ஒன்று நல்லவனாக இருக்க வேண்டும் அல்லது அவன் எப்படி இருந்தாலும் நல்லபடி நடந்துதான் தீர வேண்டும். அந்தநிலையில் நல்லவர்கள் மட்டுமே நிர்வாக அமைப்புகளுக்கு வர உண்மையான வாய்ப்பு ஏற்படுகிறது. 


எனவே அத்தகைய முள் கிரீடங்களை அணிவிக்கவும் அணிந்துகொள்ளவும் மக்கள் தயாராக இருக்கிறார்களா? சமுதாய முன்னோடிகள் அத்தகைய உணர்வை மக்களிடம் ஏற்படுத்தத் தயாராக இருக்கிறார்களா என்பதே நேர்மையாளர்கள் முன் உள்ள கேள்வி!


ஒரு மடையன் கூட மந்திரியாகி மக்களைப்பற்றி எதுவும் தெரியாமலே அதிகாரிகள் எழுதிக்கொடுப்பதை வாந்திஎடுப்பதன்மூலம் தங்களை அறிந்தவர்போல் காட்டிக்கொள்கிறார்கள்! அதற்கு நமது அரசியலும் அரசியல் சட்டமும் இடம் கொடுக்கிறது.

மாடு மேய்க்கக் கூடத் தகுதி இல்லாதவர்கூட பட்ஜெட் தக்கல்செய்ய கக்கத்தில் பைலுடன் கித்தாப்பாக ஆட்சிமன்ற அரங்கில் நுழைகிறாரே அந்த பைலில் உள்ளது பூராவும் அவர் மண்டையில் உதித்ததாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை புரிந்தவராகவாவது இருப்பாரா? அதிகாரிகளின் உருவாக்கத்தை அரங்கேற்றுவதுதானே இவர் வேலை?

ஆட்சி நிர்வாகம் சிறந்ததாக இருக்கவேண்டுமென்றால் ஆட்சியாளர்களை தேர்வு செய்கிற மக்களின் தரமும் உயர்வானதாக இருக்கவேண்டியது அவசியம் என்ற உணர்வு மக்கள் மத்தியில் வளரவேண்டும்.

ஆட்சியாளர்களாகட்டும் அதிகாரிகளாகட்டும் மக்களிடம் இருந்துதான் உருவாகிறார்கள். எனவே நமது கருத்துக்களும் விமர்சனங்களும் அதற்கு இலக்காககூடிய அனைவருக்கும் பொருந்தும்.


No comments:

Post a Comment