ss

Friday, May 4, 2012

விவசாயம் ( 9 )




வருங்கால விவசாயம்

முன்பெல்லாம் விவசாயிகள் தங்களின் வருமானம் கணிசமாக மீதமாகும்போது அதற்கு வேறு அவசிய செலவுகள் இல்லாதபோது மேலும் கொஞ்சம் நிலங்கள் வாங்குவதும் விவசாயத்தை விரிவாக்குவதும் வழக்கில் இருந்தது. 

ஆனால் இப்போது விவசாயத்தில் வருமானம் மீதம் பார்ப்பதே குதிரைக் கொம்பாக இருப்பதால் அந்த மாதிரி நிலம் வாங்கும் வாய்ப்பு இல்லை. அப்படி ஒரு சிலர் விதிவிலக்காக இருந்தாலும் இன்று விவசாயம் செய்வதில் உள்ள பிரச்சினைகளை எண்ணிப் பார்த்து மேலும் நிலங்களை வாங்குவதைத் தவிர்க்கிறார்கள். அப்படி வாங்கினாலும் அதில் தீவிர விவசாயம் பார்க்காமல் ஏதோ ஒரு அழியாத சொத்து என்னும் கண்ணோட்டத்தில்தான் வாங்குகிறார்கள்.

ஆனால் விவசாயமல்லாத தொழில் செய்வோர் தங்களின் உபரியாக இருக்கும் பணத்தை பிறர்க்கு கடன்கொடுப்பதை விட பாங்கில் போடுவதில் கிடைக்கும் குறைந்த வட்டியைவிட அழியாச் சொத்தான் நிலத்தில் போட்டால் நல்லது என்கிற கண்ணோட்டத்தில் நிலங்களை சர்வசாதாரணமாக வாங்கிப் போடும் வழக்கம் அதிகமாகி வருகிறது. 

விவசாய நிலமாக இல்லாமல் வீட்டுமனைகளாக வாங்கிப்போட்டால் அதிகலாபம் பார்க்கலாம் என்கிற எண்ணத்தில் மனைகள் வாங்கிப்போடும் போக்கும் பெருகி வருவதால் விவசாய நிலங்களும் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு விற்பனையாகி வருகின்றன.

 இது விவசாயிகள் மத்தியில் விவசாயம் செய்து வருமானம் ஈட்டும் நம்பிக்கையைக் குறைத்து வேறு ஏதாவது உத்தியைக் கையாண்டு நாமும் ஏன் சம்பாதிக்கக்கூடாது என்கிற உணர்வு மேலோங்கிவருவதைக் காண்கிறோம்.

இதனுடைய விழைவாக விவசாய விளைபொருட்களின் விற்பனையால் கிடைக்கும் வருமானத்தைவிட நிலத்தை விற்றால் என்ன விலைக்குப் போகும் என்று நத்திக்கொண்டிருக்கும் நிலையில் விவசாயம் என்னும் பாரம்பரியத் தொழில் படுவேகமாக படுகுழியில் வீழ்ந்துகொண்டுள்ளது.

இதன்காரணமாக நிலங்கள் அனைத்தும் உழைக்கும் விவசாயிகளிடமிருந்து உழைக்காத விவசாயம் செய்யாத பணம் படைத்தவர்களின் கைகளுக்குப் போகும் போக்கு வளர்ந்து வருகிறது.

இதன் விளைவாக விவசாய உற்பத்தி குறையப்போவதும் அதன் காரணமாக விளைபொருட்களின் விலை நினைத்துப்பார்க்கமுடியாத அளவு உயரப்போவதும் தவிர்க்க முடியாததாக ஆகப் போகிறது.

ஆனால் அதற்குள் மிகப்பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலத்தை இழந்து விட்டு அந்தப் பணத்தைக்கொண்டு ஏதும் செய்ய முடியாதவர்களாய் பாங்கில் போட்டுவிட்டு அலையப் போகிறார்கள். நிறையப் போர் தொலைத்துவிட்டும அலைவார்கள்.

ஆனால் அந்தப் பணத்தையெல்லாம் குறைந்த வட்டிக்கு வாங்கி மேலும் மேலும் பணம் படைத்தவர்கள் நிலங்களை வாங்கிக் குவிக்கவும் அதைத் தொடர்ந்து அபரிதமான விவசாய வருமானத்தால் கவரப்பட்டுத் தாங்களும் ஏன் விவசாயம் செய்யக்கூடாது என்று எண்ணி சகல வசதிகளுடன் களத்தில் இறங்கும் காலம் தூரத்தில் இல்லை.

ஆக விவசாயம் தெரியாதவர்கள் நிலத்தில் உழைக்காதவர்கள், அத்தகைய உழைப்பாளிகளையெல்லாம் வேலையில் அமர்த்திக்கொண்டு எல்லாச் சவுகர்யங்களுடன் பரிவாரங்களுடன் விவசாயத்தை வெற்றிகரமாக நடத்தப்போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

ஆம் படித்த விபரம் அறிந்தவர்கள் கைகளில் நிலம் வரும்போது அவர்கள் விவசாயம் செய்தால் நல்ல ஆதாயம் கிடைக்கும் என்ற நிலை உருவாகும்போது அவர்கள் விவசாயத்தின் நவீன உத்திகளைக் கற்றுக்கொள்ள நீண்டகாலம் பிடிக்காது. வசதியிருந்தால் தொழில் நுட்பத்தை நல்ல சம்பளத்துக்கு அமர்த்தி;க்கொள்ள முடியும்.

இன்று பெரும் தொழில் அதிபர்களாக உள்ள பலரும் பெரும் தொழில் குடும்பத்தில் தோன்றி வளர்ந்தவர்களோ அல்லது அந்தத் துறையில் நிறையக் கற்றுக்கொண்டு நுழைந்தவர்களோ அல்ல! திறமையையும் வசதியையும் கொண்டு நுழைந்து சாதித்தவர்கள்தான் அதிகம்!
அதுபோல விவசாயத்துறையும் தொழில் துறையைப்போல் ஆகக்கூடிய காலம் நெருங்கிக்கொண்டு உள்ளதாகவே எண்ணுகிறேன்.

வசதிபடைத்தவர்களின் கைகளுக்கு நிலம் போகும்போது அவர்கள் சின்னச்சின்ன விவசாயிகளைப்போல் தங்களுக்குள்ளேயே விவகாரம் செய்துகொண்டு முன்னேறாமல் இருப்பதற்கு மாறாக, அத்தகைய பலர் சேர்ந்து பெரும் பண்ணைகளை உருவாக்கி நவீன வசதிகளைக்கொண்டு வெற்றிகரமாக விவசாயம் செய்வார்கள் செய்யவும் முடியும். இப்போது போல அல்லாமல் அவர்களின் பண்ணைகள் அனைத்தும் தங்களுக்குள் ஒரு அமைப்பை உருவாக்கிக்கொண்டு சந்தையையும் தீர்மானிப்பவர்களாக இருக்கப்போகிறார்கள்.

அதன்பின் அரசுகளை அவர்கள் சொல்லும்படி கேட்கவைப்பது அவர்களால் முடியாத காரியமாக இருக்காது. 

மிகக்குறுகிய காலத்துக்குள் எஞ்சியிருக்கும் விவசாயிகளிடமிருந்தும் அதிக விலை கொடுத்தோ அவர்களால் தனிப்பட்ட முறையில் வெற்றிகரமாக விவசாயம் செய்யமுடியாத நிலைமைகளை உருவாக்கியோ மீதமுள்ள நிலங்களையும் எளிதில் கைப்பற்றி விடுவார்கள்.

இன்றைய விவசாயிகள் தங்களிடமுள்ள நிலங்களை விற்றுவிட்டு அதை பெரும் பண்ணைகளில் குறைந்த வட்டிக்கு டெபாசிட் செய்து விட்டு அந்தப் பண்ணைகளுக்கே வேலைக்குப் போகவேண்டிய காலம் வரப்போகிறது. 

அப்படி ஒரு காலம் வருவது தவிர்க்க முடியாதது. வரவும் வேண்டும். காரணம் இப்போதுள்ள முறையில் வருங்காலத்தில் வெற்றிகரமாக விவசாயம் செய்யமுடியாது. நிலங்களை அபிவிருத்தி செய்யவோ நீர் மேலாண்மையை முறையாகச் செய்யவோ இயற்கை வேளாண்மைக்கு முழுமையாக மாறிச் செல்லவோ இப்போதுள்ள ஒழுங்கற்ற அராஜகமான வேளாண்முறையைக்கொண்டு நிச்சயம் முடியாது!

பெரும் பண்ணைகளாக மாறவேண்டியது காலத்தின் கட்டாயம்! அந்தப் பண்ணைகள் நாட்டுக்கும் மக்களுக்கும் உகந்ததாக இருக்குமா இருக்காதா என்பதை வருங்கால மக்கள் தீர்மானிப்பார்கள்!

2 comments:

  1. இன்னும் சில வருடங்களுக்கு பின் விவசாயம் தான் முக்கிய தொழிலாக இந்தியாவில் இருக்கும். நானும் விவாச குடும்பத்தில் பிறந்தவன் தான். ஆனால் விவசாயம் தெரியாது. இப்பொது என்னக்கு இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. பல நண்பர்கள் சேர்ந்து அவரவர் தகுதிக்கு ஏற்ப ஒரு இடத்தில நிலம் வாங்கி, கலப்பு முறையில் விவசாயம் செய்து, தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து, பாதுகாப்பகவும் விவசாயம் செய்யலாம் என்பது எனது எண்ணம். நண்பர்களுடைய கருத்து என்ன தெரிவிக்கலாமே?

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆர் வி ஆர்!

      Delete