ss

Saturday, May 19, 2012

அரசியல் ( 9 )

கருத்தோட்டம் (9)

ஜனநாயகம் மட்டுமல்ல முடியாட்சியும் சர்வாதிகார ஆட்சியும் உலகில் நீண்டகாலம் இருந்தது. இன்றும் இருக்கிறது.

அப்போதெல்லாம் மக்களிடையே உறவுகள் மிகவும் ஏற்றத் தாழ்வானதாக ஆண்டான் அடிமை என்பது சக்திமிக்கதாக இருந்தது. எனவே அத்தகைய ஆட்சிமுறைகள் மாறி மக்களாட்சி நடைமுறைக்கு வந்தது. 

ஆனால் மக்களாட்சி முறை எதற்காகக் கொண்டுவரப்பட்டதோ அந்த நோக்கங்கள் நிறைவேறியதா என்று பார்த்தால் நிறைய நாடுகளில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அத்தகைய நாடுகளில் ஒன்றுதான் நமது நாடு.

மற்ற ஆட்சிமுறைகளில் இருந்த குறைபாடுகள் மக்களாட்சி என்ற பெயரிலும் பல்வேறு வடிவங்களில் இப்போதும் நீடிக்கவே செய்கிறது.

அத்தகைய குறைகள் நீங்கப்பெறும்போது தான் அதை மக்களாட்சி என்று சொல்ல முடியும்!


மக்கள் ஊழியர்கள் என்பது பெயருக்குத்தான் தவிர உண்மையில் எஜமானர்களாகத்தான் நடந்து கொள்கிறார்கள்! தங்களில் பாதி வயதுகூட இல்லாத அரசு ஊழியர்கள்கூட நாற்காலியில் அமர்ந்துகொண்டு தாங்கள் நின்றநிலையில் வணக்கம் செலுத்தவேண்டும் என்று எதிர்பார்ப்பதை நிறைய முதியவர்களே கண்கூடாகக் காண்கிரார்கள். 

உண்மையான மக்களாட்சி நடப்பது உண்மையானால் அரசு ஊழியர்கள் மக்கள் ஊழியர்களாகத்தான் இருப்பார்கள்!மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் நிரந்தரமாகப் பணிபுரியும் அதிகாரிகளாக இருந்தாலும் மக்களுக்கு எதிராகக் கொள்ளையடிப்பதில் மட்டும் ஒன்று சேர்ந்துகொள்கிறார்கள். 

மக்களால் தேர்ந்தேடுக்கப்படுபவர்கள் அதிகாரிகளை வழிநடத்தும் சட்டங்களையே உருவாக்க அதிகாரம் படைத்தவர்கள்! அதனால் அதிகாரிகளுக்குக் கூட்டாளிகளாக இல்லாமல் மக்களுக்கு விசுவாசிகளாக அதிகாரிகளை ஆட்டுவிக்கும் திறன் பெற்றவர்களாக இருந்தால் மக்களுக்கு அன்னியர்களாக இல்லாமல் அவர்கள் மனத்தில் இடம் பெற்றவர்களாக இருந்தால் நல்லவை அனைத்தும் சாத்தியப்படும்!

அத்தகைய திசைவழியில் மக்கள் போராடாமல் அவர்களை சரியாக வழிநடத்தும் சரியான வழிமுறைகள் இல்லாமல் தனிநபர்களைத் துதிபாடும் கீழ்த்தர அரசியலைக்கொண்டு சாதிக்க முடியாது!மிகச் சரியான எழுச்சியையும் மாற்றத்தையும்தான் புரட்சி என்கிறோம். நமது நாட்டில் அது கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது. சரியான பொருளில் அதைப் புரிந்துகொள்ளல் அவசியம்!

ஒரு நாட்டில் நல்லநோக்கங்களுடன் கூடிய ஒரு புரட்சி நடக்கவேண்டுமானால் அந்தத் திசையில் மக்களை வழிநடத்திச் செல்லவல்ல ஒரு கோட்பாடு உருவாகவேண்டும். அந்தக் கோட்பாடு நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்குச் சரியான வழிகாட்டி சரியான திசையில் அழைத்துச் செல்லக்கூடியதாக இருக்கவேண்டும்.

அந்தக் கோட்பாட்டை அறிவியல்ரீதியாகப் புரிந்துகொண்டு அதை மக்கள்மனதில் ஆழமாக விதைக்கவல்ல சிந்தனையாளர்களும் தேசபக்தர்களும் மனிதநேயங்கொண்டோரும் பொது நன்மைக்காகத் தான் இழப்பைத் தாங்கத் தயங்காதவராக உள்ள எண்ணற்ற முன்னோடிகளும் முன்வரவேண்டும்.அத்தகைய முன்னோடிகள் நாடுமுழுக்கவும் இருந்து ஒரு பொதுவான அமைப்பின்கீழ் திரளவேண்டும். நாட்டு மக்களின் மறுமலர்ச்சிக்கு என்ன செய்யவேண்டும் என்று திட்டமிடவேண்டும். அந்தத் திட்டம் அனைத்துமக்களையும் பாராபட்சமின்றி மதித்து அவர்களின் உயர்வாழ்வையே குறிக்கோளாகக் கொண்டதாக இருக்கவேண்டும்.

அந்த உயர் நோக்கங்களை ஒரு ஆவணமாக வெளியிட்டு அதை ஏற்றுக் கொள்பவர்களை அந்த அமைப்பின்கீழ் திரள அறைகூவல் விடவேண்டும்.

அந்த அமைப்பின் மகத்தான நோக்கங்களை ஏற்றுக்கொள்பவர்கள் நாடுமுழுக்க சாத்தியப்பட்ட இடங்களில் எல்லாம் கிளைகளை உருவாக்கவேண்டும்.

ஒரு ராணுவக் கட்டமைப்புடன் சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டு இம்மியும் பிசகாமல் பின்பற்றவேண்டும்.

அதன் உறுப்பினர் ஒவ்வொருவரும் தவறு செய்யாதவர்களாக மட்டுமல்ல தவறு செய்ய வாய்ப்பே இல்லாத முறையில் பயிற்றுவிக்கப்படவேண்டும். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் செத்த எலியைத் தூக்கி எறிவதுபோல் தூக்கி எறியக் கூடிய வலுவான கட்டமைப்பாக அமைப்பு விளங்கவேண்டும்.அந்த அமைப்பு நிச்சயம் இப்போது நடத்துகின்ற ஏமாற்றுத் தேர்தல்களில் எல்லாம் பங்கேற்காமல் நல்ல கொள்கையின் கீழ் மக்களைத் திரட்டுவதையே நோக்கமாகக் கொண்டிருக்கவேண்டும். 

அமைப்பின் கீழ் திரளும் மக்கள் சக்தி அரசுகளையே ஆட்டுவிக்ககுமளவு வலுவாகும்போது இப்போதுள்ள மாய்மால அரசியல் வலுவிழந்து உதிர்ந்து போய்விடும் உதிர்த்தப்பட்டுவிடும். அதுதான் உண்மையான மக்கள் புரட்சி! அதை ஒரு கொள்கைதான் வழிநடத்தும். தனிநபர்கள் எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களின் பங்குமட்டுமே மதிக்கப்படும்!No comments:

Post a Comment