ss

Friday, June 29, 2012

மரம் ( 7 )

காலத்தின் கட்டாயம்

மரம் வெட்டுவதை தடுக்கவேண்டும் என்று அனைவரும் விரும்புகிறோம். 

அது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

அதற்கு முன் ஒன்றைக் கவனிக்க வேண்டும். 

மனிதன் எதற்காக மரத்தை வெட்டுகிறானோ அந்தத் தேவைகளுக்கு மாற்று வேண்டும். 

அல்லது அந்தத் தேவைகளையே மாற்றவேண்டும். 

அதுவல்லாமல் எப்படி நிறுத்த முடியும்? 

ஒரு பொருளின்மேல் ஏறி நின்று கொண்டிருப்பவன் அந்தப் பொருளைத்   தூக்கவேண்டுமானால் முதலில் அவன் கீழே இறங்கவேண்டும். 

அதுதான் முக்கியம்!

எனது மொழி ( 47 )

ஆனந்த வாழ்வு 

தேவைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்றபடி அதிகப்படியான சொத்துக்களைச் சேர்த்துத் திருப்தியடையலாம். 

அல்லது இருக்கும் வசதி வாய்ப்புகளுக்கு ஏற்றபடி தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் குறைத்துக்கொண்டு அதன்மூலமும் திருப்தியடையலாம்.

 மனத்தளவில் இரண்டின் மதிபபும் ஒன்றுதான். 

ஆனால் முன்னது தாற்காலிகமானது. பின்னது நிரந்தரமானது. 

இரண்டாவது வகையினருக்கு வசதிவாய்ப்புகள் பெருகினாலும் ஆரவாரமான வாழ்வை விரும்;பமாட்டார்கள். அத்தகையவர்களே வாழ்வை அனுபவிக்கத் தெரிந்தவாகள் ஆவர். 

அவர்களிலும் உயர்ந்த பண்பும் சமூக நோக்கும் கொண்டோர் மேன்மக்களாகவே போற்றப்படுவர். 

அத்தகைய போற்றுதலுக்குரிய வாழ்வுக்கு ஈடுஇணையே கிடையாது. 

இந்த உண்மையை உணர்ந்திடில் ஒருவர் எந்த நிலையில் இருந்தாலும் ஆனந்தமயமான வாழ்வு வாழலாம். 

வாழமுடியும்.

--------------------------------------------------------------------------------------------------------
=====================================================================
---------------------------------------------------------------------------------------------------------


சொந்தமும் இரவலும்.


உலகையும் வாழ்வையும் கூர்ந்து கவனிப்பது மேலானது.

அவற்றைப் பற்றிக் கற்க முயல்வதும் கற்பதும் அதனினும் மேலானது.

கற்பதைச் சரியாக உணர்வது அதனினும் மேலானது.

உணர்ந்ததை உலகவாழ்வுடனும் அனுபவங்களுடனும் பொருத்திப்பார்த்து அறிவை வளர்த்துக்கொள்தல்  அதனினும் மேலானது.

அந்த அறிவின் உயர்ந்த நிலையாம் ஞானத்தைக்கொண்டு உலக நடப்புக்களை ஆராய்தல் அதனினும் மேலானது.

அந்த ஆய்வின் வெளிப்பாடுகளைப் பிறர்க்கும் தெளிவிப்பதும் கற்பிப்பதும் அதனினும் மேலானது!

இத்தனை படிகள் தாண்டிச் செய்யவேண்டிய ஒன்றை யாரோ எழுதிவைத்துச் சென்றதை நூல்களிலிருந்து காபி எடுத்து அப்படியே சமூக வலைத் தளங்களில் பேஸ்ட் செய்துவிட்டு அதைப் பற்றி விளக்குவதற்குக்கூட முடியாமல் தவிப்பவர்கள் நிறையப்பேர் உள்ளனர்!

அவர்கள் வெளிப்படுத்தும் விஷயங்களுக்கு அவர்கள் எப்படி உரிமை கொண்டாட முடியும்?

Thursday, June 28, 2012

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 8 )


காரண காரியம்

நான் ஒரு விஷயத்தில் அறிவியல் சிந்தனைமட்டுமே கொண்டவர்களிடமிருந்து மாறுபடுகிறேன். அது என்னவென்றால் ஆன்மிகம் என்ற வார்த்தையையே நான் மறுப்பதில்லை. காரணம் அதுவும் ஒரு உலகப்பார்வை என்பதை நான் அங்கீகரிக்கிறேன்.

நான் சொல்லும் பரம்பொருளின் அடிப்படை வேறு மற்றவர்கள் சொல்லும் பரம் பொருள் என்பது வேறு.

ஆதாவது மற்றவர்களின் பார்வையில் பரம்பொருள் என்பது பரமாத்மா அல்லது அனைத்தையும் படைத்த அனைத்துமாயிருக்கிற படைப்புக் கடவுள். அது தன்னுள் அடங்கியுள்ள அனைத்தின் மேலும் ஆதிக்கம் செலுத்துகிறது அல்லது இயக்குகிறது. அதன் ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்டு இருக்pன்ற பொருட்கள் மற்றும் வாழ்கின்ற உயிர்கள்(ஜீவாத்மாக்கள்)

என்னுடைய பார்வையில் பரம்பொருள் என்பது அனைத்துமாயிருப்பது என்ற ஒன்றே. மற்ற அனைத்துமே அதன் அங்கங்களே! மனித உடம்பும் அதன் மூலக்கூறுகளும் எப்படியோ அப்படி!

நமது உடம்பின் உட்கூறுகள் நலமாக இருக்குமளவு ஒட்டுமொத்தமான உடம்பும் அதைச்சார்ந்துள்ள நமது வாழ்வும் சிறப்பாக இருக்கிறது. ஆனால் அதற்காக நமது உடம்பு என்கிற மாபெரும் வடிவம் அதன் உட்கூறுகள் ஒவ்வொன்றையும் நேரடியாகக் கட்டுப்படுத்துவது இல்லை. ஒன்றன் நலன் ஓன்றில் அடங்கியுள்ளது என்ற அடிப்படையில் ஒன்றையொன்று இணைபிரியாதது, ஒன்றை ஒன்று சர்ந்துள்ளது.

அதேபோல அனைத்துமாய் இருக்கிற பரம்பொருளும் அதன் உட்கட்டமைப்பில் ஒரு அங்கமாக விளங்கும் நாமும் ஒன்றையொன்று சார்ந்து இயங்கும் இயக்க அம்சங்கள். பரம்பொருள் என்பது தொகுதி, நாம் அதனின் ஒரு பகுதி. அதற்காக அந்தத் தொகுதியாகிய பரம்பொருள் தன்னுள் அடங்கியுள்ள ஒவ்வொரு பகுதியையும் நேரடியாகக் கட்டுப்படுத்துவது இல்லை. 

பரம்பொருளின் ஒரு பகுதியாகிய நாம் நமது வாழ்வைச் சிறப்பான ஒன்றாக வைத்திருக்குமளவு பரம்பொருளின் ஒரு நிலையாகிய நாம் வாழும் உலகமும் நமது சமூக வாழ்வும் சிறப்பாக இருக்கும் இல்லாவிட்டால் எதிர்விளைவுகள் துயரமாக இருக்கும் என்பதால் உயர்ந்த நெறிமுறையின்படிவாழ்வது நமது கடமையாகிறது.

அதையே ஆழ்ந்து சிந்திக்க இயராதவர்கள் எல்லாவற்றுக்கும் மேலானது பரம்பொருள். அது தனது உள்ளுறுப்புக்களாகிய நம்மைக் கட்டுப்படுத்துகிறது. நாம் சிறப்பாக சமூகத்துக்கும் சுற்றுப்பறத்துக்கும் இயைந்த முறையில் நல்வாழ்க்கை வாழ்வதுதான் அதற்குக் கொடுக்கும் மரியாதை. இல்லாவிட்டால் நமது வாழ்வு சிறப்பாக இல்லாமல் துயரமாகிவிடும் என்ற அளவு தம் வாழ்வை நெறிப்படுத்திக் கொள்வதுதான் சிறப்பானது. அறிவியலுக்கு நெருக்கமானது. அதை அறிவியல் ஆன்மிகம் என்றுகூடச் சொல்லலாம். 

ஆதாவது பஞ்சாமிர்தத்தை ஆண்டவனின் அருட்பிரசாதம் என்று சொல்லியும் உண்ணலாம். சிறந்த உன்னதமான நலம்பயக்கும் சுவைமிக்க உணவுப்பண்டம்  என்று சொல்லியும் உண்ணலாம்.இரண்டும் விளைவால் நன்மையே பயக்கும்.

ஆனால் பஞ்சாமிர்தம் என்பது என்னென்னவோ மகிமை நிறைந்தது, அதை உண்டால் அற்புதமான சித்திகள் கைகூடும். அதன்மகிமையை உணராதவர்களின் வாழ்வைக் கெடுத்துவிடும் என்றெல்லாம் சொன்னால் அதை எப்படி ஏற்க முடியும்?


அதேபோல மனித உணர்வுகளையெல்லாம் பரம்பொருளுக்கு ஏற்றி அது சதாகாலமும் கண்காணித்துக்கொண்டிருக்கும் பகைவனைப் போலவும் அதனிடம் அதன் விருப்பப்படி நடந்து கொள்ளாவிட்டால் பழிவாங்கிவிடும் என்பதுபோலவும் நினைப்பதும் நம்புவதும் அறியாமையாகும். அதன் பெயர் ஆன்மிகமல்ல. அறியாமை!


காரணம் இன்றிக் காரியம் இல்லை என்று சொல்வார்கள். அதன் பொருள் நாம் காணும் அனைத்துவிதப் பொருட்களின் அல்லது செயல்பாடுகளின் ஒவ்வொரு அசைவுக்கும் அடிப்படையாக ஒரு காரணம் இருக்கிறது என்பதே!

அதன் ஒரு பகுதியாக ஒரு பொருளை அல்லது ஒரு செயலை ஒன்று அல்லது ஒருவர் அல்லது பலர் செய்வதாகக் கருதுகிறோம். அந்த அடிப்படையில் ஒவ்வொன்றையும் செய்ய பிரிதொன்று அல்லது பிரிதொருவர் இருக்கும்போது எல்லாமும் சேர்ந்த ஒட்டுமொத்தமான ஒன்றை செய்ய அல்லது படைக்க ஏதோ ஒன்று யாரோ ஒருவர் இருந்துதானே ஆகவேண்டும் என்ற கருத்து உருவாகிறது. அது ஒரு எண்ணம்தானே அல்லாமல் அப்படி தன்னை இன்னொன்று உருவாக்காமல் தான்மட்டும் அனைத்தையும் உருவாக்கும் ஒன்று இருக்கவே முடியாது.

காரணம் நம்மைச் சுற்றி நாம் அறிந்த அல்லது அறியாத அனைத்துமே தன்னுள் அடங்கியுள்ள பலவற்றின் தொகுதியும் தன்னைவிடப் பெரிய வேறொன்றின் ஒரு பகுதியுமாகத்தான் இருக்கமுடியும். இதுதான் இருப்பின் விதி! இந்த விதிக்கு மாறாக தான் படைக்கப்படாத எது ஒன்றும் பிறவற்றைப் படைத்தலை மட்டும் செய்துகொண்டு இருக்கமுடியாது.


Wednesday, June 27, 2012

இயற்கை ( 6 )பட்டாம் பூச்சி

வண்ண வண்ணக் கனவுகளுடன் கவலையில்லாமல் வலம் வரும் இளைஞர் பட்டாளத்தைப் பட்டாம்பூச்சிகள் என்றும் சொல்வார்கள்.

காரணம் பட்டாம்பூச்சிகள் பலவகை நிறங்களில் பலவகை அளவுகளில் மறந்து பறந்து காண்பவர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதுதான்.

அவற்றுக்குத் தேவை தேன் சிந்தும் மலர்கள். அந்த மலர்களைப் பூக்கும் செடிகள் கொடிகள் மரங்கள்.

அவையெல்லாம் வளரவேண்டுமானால் காலாகாலத்தில் மழைபெய்யவேண்டும். பலவகைத் தாவரங்களும் பூத்துக் குலுங்கவேண்டும்.

முன்னெல்லாம் அப்படித்தான் இருந்தது.


மழைக்காலங்களில் கிராமங்களில் வீடுகளைச் சுற்றிலும் காலி இடங்களிலும் புறம்போக்குகளிலும் குளம் குட்டையோரங்களிலும் பல்வகைச் செடிகளும் பச்சைக்கம்பளம் விரித்ததுபோல் இருக்கும். 

தும்பை, துளசி, எருக்கு, ஆவாரை, குப்பைமேனி, ஊமத்தை, காட்டாமணக்கு, நாயுருவி, துத்தி, சுள்ளி போன்ற செடிவகைகள் நெருக்கமாக முளைத்துக் கிடக்கும். அத்தோடு சப்பாத்தக் கள்ளி, தீருகு கள்ளி, கிழுவன் போன்றவற்றின்மேல் கோவை, வேலிப்பருத்தி ஊணாங்கொடி போன்ற கொடிவகைகள் படர்ந்திருக்கும்.

இவற்றில் பூத்திருக்கும் பூக்களில் இருக்கும் தேனை உறுஞ்ச வண்ணவண்ணப் பட்டாம்பூச்சிகள் காலை நேரங்களில் பறக்கும் 

விடுமுறை நாட்களில் காலையில் இந்தப் பட்டாம்பூச்சிகளைப் பிடித்து விளையாடுவது பசியுணர்வைக்கூட மறக்கடிக்கும் விளையாட்டு ஆகும். 

தும்பைச் செடிகளைப் பிடுங்கிக் கையில் வைத்துக்கொண்டே பட்டாம்பூச்சிகளை விரட்டிச் செல்வதும் அதை அதற்கு வலிக்காமலும் கசங்காமலும் தும்பைச் செடிகளால் அலுங்காமல் அமுக்கிப்படிப்பதற்குள் அவை தப்பித்து ஓடுவதும் மீண்டும் மீண்டும் விரட்டுவதும் மறக்கமுடியாத அனுபவங்களாகும்.

ஆனால் சிலநேரங்களில் அவை வேலிகளைத் தாண்டித் தாண்டிச்செல்லும்போது சுற்றிச் சென்று பிடிப்பற்குள் வெகு தூரம் போய்விடும் நல்ல பட்டாம் பூச்சியாக இருந்தால் விட மாட்டார்கள்.

ஆனால் அத்தகைய ஒரு காலத்தை அநேகமாக இழந்துவிட்டோம். காரணம் அந்தமாதிரி உயிரினங்கள் வாழும் இடங்களை ஆக்கிரமித்தது அல்லாமல் கண்ட பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி அழித்தும் விட்டோம். 

தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்களும் பட்டாம்பூச்சிகளும் முக்கியமாக உதவிசெய்யும். ஆனால் அத்தகைய உயிரினங்களை அழிப்பதால் அதன் தொடர்ச்சியாக பல அரிய தாவரங்கள்கூடப் பல்கிப் பெருகுவதற்குப் பதிலாக அழியக்கூடிய நிலை ஏற்படுகிறது. 

மூலிகைப் பயன் உள்ள நிறையத் தாவரங்கள் அழிந்துபோனதாற்கு அவற்றைச் சார்ந்து வாழ்ந்த பட்டாம்பூச்சிகள் போன்ற உயிரினங்கள் அழிந்ததும் ஒரு காரணாக இருக்கலாம்.

எனவே பட்டாம்ப+ச்சிகள் பறந்து திரிந்த அவற்றைச் சிறுவர்கள் விரட்டி விளையாடிய ஒரு காலம் திரும்பவேண்டுமானால் காணுமிடங்களில் எல்லாம் மரங்கள் வளர்ந்திருக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக நல்ல மழை பெய்ய வேண்டும். 

குளம் குட்டைகள் எல்லாம் நிரம்பி வழியவேண்டும். அவற்றின் ஓரங்களெல்லாம் பச்சைப் பசேலென்று செடிகளும் கொடிகளும புதர்களும் மண்டிக் கிடக்க வேண்டும். அவற்றில் வண்ண வண்ணப் பூச்சிகள் பறந்து திரியவேண்டும். 

நீர்க்குட்டைகளின் ஓரங்களில் நண்டுகள் வளை தோண்டி வசிக்க நீருக்குள் நீர்க்காக்கைகள் விளையாட  எந்த இரையை நாம் பிடிக்கலாம் என்ற அங்குள்ள மரங்களின் மேல் உட்கார்ந்திருக்கும் கொக்குகள் நோட்டமிட அங்கே இயற்கைத் தாய் நடனம் புரிய வேண்டும் 

அப்போது அந்த அழகுக்கு அழகு சேர்க்கப் பட்டாம்பூச்சிகள் வண்ண வண்ணமாகப் பறந்து திரியும் கண்கொள்ளாக் காட்சிகளைப் பார்க்கலாம்.

அப்படியொரு காலம் வருமா?

மரம் ( 6 )கொடுக்காப் புளி


(மார்ச் 6-2012 தேதியில் முகநூலில் பதிவு செய்தது)

விவவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும் முக்கியமாகக் கிணற்று மேட்டிலும் இதை வளர்ப்பார்கள். இதற்குப் பாசனம் தேவை இல்லை. ஆனால் பாசன வாய்க்கால் ஓரங்களில் இருப்பவை நன்கு செழித்து வளரும். 


இந்த மரம் குட்டையான முட்கள் நிறைந்ததாக இருப்பதால் வேலிக்காகவும் அந்தக்காலத்தில் நடுவதுண்டு. இதன் இலை வெள்ளாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும்.


ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் பாசனக் கிணறுகளில் மாடுகளைக் கொண்டு நீர் இறைக்கப்பட்டபோது வாரியில் நிழலுக்காக இந்தமரங்கள் நட்டு வளர்க்கப்படும்.

வேலிகளில் சிறியதாக வளரும் இது விட்டுவைத்தால் வேம்பு அல்லது புளியமரம்போல் பெரியதாக வளரும் இயல்படையது. நன்கு வளர்ந்து முற்றிய மரங்கள் பல்வகை மரச் சாமான்கள் செய்யயப் பயன்படும்.


எல்லாவற்றுக்கும் மேலாக அக்காலக் கிராமச் சிறுவர்களுடன் இது நெருங்கிய தொடர்புடையது. இதன் சுருள் சுருளான பசுமையான சிவப்பான அழகான காயும் பழங்களும் உண்ணப் பயன்படும். சில ரகங்கள் துவர்ப்புத் தன்மை மேலோங்கியும் சிலரகங்கள் தித்திக்கும் சுவையுடனும் பழங்களைக் கொண்டிருக்கும். வெடித்த பழங்கள் நல்ல சுவையாக இருக்கும். மருத்துவப் பயன்களும் உண்டு.

இதன் முற்றிய அடிமரத்தில் முட்கள் இருக்காது. அதனால் எட்டியவரை சல்லைகளால் காய் பறித்துவிட்டு எட்டாத உயரத்தில் இருப்பதை முள்ளில்லாத அடிமரத்தில் ஏறி பாதிமரத்தில் இருந்து மீண்டும் சல்லைகளால் காய் பறிப்பார்கள்.

எப்படி இருந்தாலும் நீளமான கொக்கிச் சல்லைகளுடன் சிறுவர்கள் இந்த மரம் இருக்கும் இடங்களைத் தேடி அலைவதும் கண்டும் காணாமலும் இதன் பழங்ளைப் பறித்துக்கொண்டு யாரேனும வந்துவிட்டால் ஓட்டம் பிடிப்பதும் வேடிக்கையான அனுபவங்கள். சிலநேரங்களில் இரக்கமற்ற ஆட்களிடம் மாட்டிக்கொண்டு சல்லைகளை இழப்பதும் உண்டு.

சிறுவர்கள் மேல் பாசம் கொண்டு பறித்துத் தருபவர்கள் கொஞ்சம் பேர். சிறுவர்களின் ஓயாத தொல்லைக்குப் பயந்துகொண்டு மரத்தையே வெட்டியவர்களும் உண்டு.

காக்கைகள் பறித்துச் சென்று வீடுகளின் கூரைமேல் வைத்துத் தின்னும். அப்போது அது கொடுக்காப்புளிப் பழத்தை கீழே வைப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்து திடீரெனப் பலமான சப்தம் கொடுத்து காக்கையை விரட்டிவிட்டு பழத்தை வீட்டின்மேல் ஏறி எடுத்துக் கொள்வார்கள். காக்கைகள் கொண்டுவரும் பழம் மிகவும் சவையாக இருக்கும்.

எப்படியோ எந்தப் பாசனமும் தேவைப்டாமல் எந்த வரட்சிக்காலத்திலும் உயிர் வாழ்வதுமட்டுமல்ல கனிகளையும கொடுக்கக்கூடிய கொடுக்காப்புளி மரமும் பழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது. சிலபகுதிகளில் மட்டும் காணலாம்.

வர்த்தக ரீதியில் லாபம் தராத எதையும் ஒழிப்பது என்ற மனித விதியின்படி இதுவும் ஒரு நாள் காணாமல் போகக்கூடும்…..

Monday, June 25, 2012

மரம் ( 5 )வெள்வேல மரமும் பொன்வண்டும்


இதுதான் பொன் வண்டு. கொங்கு நாட்டில் இதைப் பொன்னாம்பூச்சி என்று சொல்வார்கள். பசுமைநிறத்துடன் பலாக்கொட்டை அளவில் இருக்கும். மற்றொரு இனம் உடல் சிவப்பாகவும் தலைமட்டும் பசுமையாகவும் உருவத்தில் பெரியதாகவும் இருக்கும். இதை மலைப் பொன்னாம் பூச்சி என்பார்கள்.

பூச்சி இனங்களிலேயே அருவருப்பு இல்லாமல் சர்வசாதாரணமாகப் பிடித்து விளையாடக்கூடியது இந்தப் பொன்வண்டு.

அதைத் திருப்பி மல்லாக்கப் போட்டுவிட்டால் இறக்கைகளை அடித்து ரீங்காரமிட்டபடி குட்டிக்கரணம்போட்டு சமநிலைக்கு வருவது பார்க்க அழகாக இருக்கும்.

நான் சிறுவயதில் மழைக்காலங்களில் இவற்றைப்பிடித்துத் தீப்பெட்டிகளில் அடைத்துவைத்து விளையாடுவேன். முட்டைகள்கூட வைக்கும்.

இவை பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் வெள்வேல் மரங்களில் அதன் இலைகளைத் தின்று வாழும்.


ஆனால் சமீப காலங்களில் இது கண்ணில் காண்பதே அரிதாகிவிட்டது. எனது பேரனுக்கு விளையாடக் கொடுப்பதற்காக வெள்வேல மரங்களில் தேடிப் பார்த்துக் கிடைக்காமல் இப்போது அந்த முயற்சியைக்கூடக் கைவிட்டுவிட்டேன். 

வெள்வேல் மரங்களும் மிக அரிதாகிவிட்டன! அவை சுத்தமாகக் காணாமல் போய்விட்டால் அதன் பின் பொன்வண்டுகளின் அழிவு நிச்சயமாகிவிடும்.

ரசாயன உரங்ளையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தத் துவங்கியபின்பு நாம் இழந்துவரும் உயிரினங்களில் இந்தப் பொன்வண்டையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான்! யாரேனும் பார்த்திருந்தால் சொல்லுங்கள் காதிலாவது கேட்டுக்கொள்கிறேன்!..... —

Sunday, June 24, 2012

எனது மொழி ( 46 )வாழும் காலம்!


உயர்ந்த மனிதர்கள் உடலால் மட்டுமே சாகிறார்கள்! அவர்கள் சொன்ன கருத்துக்களின்மூலம் என்றென்றும் வாழ்கிறார்கள்!


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
============================================================================
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


நல்லவர்களின் அரசியல்


நமது நாட்டில் நல்லவர்கள் அரசியலுக்கு வரமாட்டேன் என்று இருப்பதாக நிறையப்பேர் நினைக்கிறார்கள்!

யார் சொன்னது வரமாட்டேன் என்று சொன்னார் என்று? 

அவர்கள் தங்கள் கடமையைச் செய்துகொண்டுதான் உள்ளார்கள். 

ஆனால் மக்களின் அறியாமையால் சாக்கடையைச் சந்தானம் என்றும் சந்தனத்தைச் சாக்கடைஎன்றும் நினைத்து சாக்கடையைப் பூசிக்கொண்டு உள்ளார்கள்! 

சந்தனத்தின் அருமையை உணரும்போதுதான் உண்மை வெளிப்படும்.

அதுபோல நல்லவர்களின் அருமை உணரப்ப்படும்போதுதான் அவர்கள் என்ன செய்தார்கள் என்ற உண்மை வெளிப்படும்!


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------==============================================================================----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சரியான அரசியல்


நமது நாட்டில் அரசியல் என்றால் அது அயோக்கியத்தனம் என்று மக்கள் நினைக்கும் அளவு அரசியல் மோசமாகிவிட்டது. 

அதனால் பெரும்பாலானவர்கள் அரசியல் சீர்கேடுகளை எதிர்த்துக் குரல் கொடுப்பதையும் மோசமான அரசியலையும் ஒரேமாதிரிப் பார்க்கிறர்கள்!

அது சரியான பார்வை அல்ல! அது தீயவர்களுக்குத்தான் பயன்படும். 

நோய்களுக்கும் மருத்துவத்துக்கும் வேறுபாடு இல்லையென்றால் நோய்க்கு மருத்துவம் பார்க்க முடியாது. 

நோய்க்கு மருத்துவம் தேவையில்லை என்றால் நோய்களை அமைதியாக ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான். 

எந்த மருத்துவம் செய்தாலும் நோய் குணமாகாது என்று சொல்வது நோயைக் குணப்படுத்தும் வழி அல்ல!

ஆனால் அப்படிச் சொல்வது நோயைவிடத் தவறானது என்று நிறையப்பேர் விபரம் அறிந்தவர்களே உணராமல்போனதுதான் பெருநோய்!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
============================================================================
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அரசியல் (16)


எது சரியான அரசியல்?


அரசியல் வாதிகளில் பெரும்பாலோர் தவறானவர்கள் என்பதால் அனைவரும் அப்படி என்று சொல்லமுடியாது. 

அப்படியானால் நாளை ஒரு நல்லமாற்றம் எப்படி வரமுடியும்? அதற்காக உழைப்பவர்கள் எல்லாம் அரசியல்வாதிகள் அல்லவா? 

அப்படியானால் நாட்டுக்காக உயிர்நீத்தவர்கள் எல்லாம் அரசியல்வாதிகள் அல்லவா? அந்தமான் சிறையில் உயிர்விட்டவர்கள் எல்லாம் அரசியல்வாதிகள் அல்லவா? 

இப்போதும் நாடும் உலகமும் போய்க்கொண்டிருக்கும் நிலைமைகளைப் பார்த்து வேதனைப்படுபவர்களும் என்ன செய்யலாம் என்று ஆராய்பவர்கள் எல்லாம் அரசியல் வாதிகள் அல்லவா? 

இப்போதுள்ள மோசமான நிலைமைகளை எண்ணி வருத்தப்படும் ஒவ்வொருவரும் அரசியல்வாதிகள்தான்!

மக்களைப் பிடித்த நோய்கள்தான் அரசியலா? நேர்மையான அரசியலை உருவாக்கவே முடியாதா? மொத்தமாக அரசியல்வாதிகள் என்றால் அயோக்கியர்கள் என்று சித்தரிப்பது வருங்காலத்தை தொடர்ந்து அயோக்கியர்கள் கையில் ஒப்படைப்பது ஆகும்!

எப்படியான அரசியலை உருவாக்கலாம் என்பது ஒருசில வரிகளில் சொல்லும் புதுக்கவிதை அல்ல. நாட்டு நடப்பை,உலக நடப்பைக் கூர்ந்து கவனித்து எது நல்ல வழி என்பதை நடைமுறை உண்மைகளை வைத்து உணர்வதுதான் முதல்பாடம். 

அதையே கவனிக்கப் பொறுமை இல்லாமல் குத்துமதிப்பாகத் தூற்றினால் அடுத்தகட்ட நல்ல அரசியலைக் கற்கப் பொறுமை எங்கே இருக்கப் போகிறது. 

சரியான அரசியலைக் கற்க விரும்பினால் யார் என்ன செய்கிறார்கள் என்பதை முதலில் கவனிக்கவேண்டும்.

யாருடைய கொள்கை கோட்பாடுகள் நடைமுறை உண்மைகளுடன் ஒத்துப் போகிறதென்று கவனிக்க வேண்டும்.

எந்த இயக்கத்தில் ஜனநாயகம் அனுமதிக்கப் படுகிறதென்று கவனிக்கவேண்டும்!

எந்த இயக்கத்தின் தலைவர்கள் உண்மையான தொண்டர்களாக இருக்கிறார்கள் என்று கவனிக்கவேண்டும்.

எந்த இயக்கத்தில் தகுதிகளும் நேர்மையான உழைப்பும் மதிக்கப்படுகிறதென்று கவனிக்கவேண்டும்.

எந்த இயக்கம் கடந்தகாலத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வருங்கால அரசியல் நடவடிக்கைகளைத் திட்டமிடுகிறது என்று கவனிக்க வேண்டும்.

எந்த இயக்கத்தில் முறைகேடுகளைக் காலாகாலத்தில் தடுக்கவும் தவறு செய்பவர்கள் எப்பேர்ப்பட்ட நபராயினும் அவர்மேல் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது என்று கவனிக்கவேண்டும்! 

எந்த இயக்கம் மக்களின் அறியாமையையும் இயலாமையையும் பயன்படுத்தி ஆதாயம் அடையாமல் மக்களை சரியான திசையில் வழிநடத்த தொடர்ந்து முயல்கிறது என்று கவனிக்கவேண்டும்.

எந்த ஒரு இயக்கம் தனிநபர்களின் வாலாக இல்லாமல் கொள்கைகளாலும் திட்டங்களாலும் வழிநடத்தப்படுகிறது என்று கவனிக்கவேண்டும்.

எந்த ஒரு இயக்கத்தின் தலைவர்களும் தொண்டர்களும் எத்தகைய போராட்டத்துக்கும் தியாகத்துக்கும் தயாராக இருக்கிறார்கள் என்று கவனிக்கவேண்டும்.

எந்த ஒரு இயக்கம் மக்களை சாதி,மத,இனம்,மொழி வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும் பொருந்தும் பொதுவான கோட்பாடுகளின்கீழ் திரட்ட முயல்கிறது என்று கவனிக்க வேண்டும்.

எந்த ஒரு இயக்கம் ஆண் பெண் சமத்துவத்தை மதிக்கிறது, மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் போராடுகிறது என்று கவனிக்கவேண்டும்.

எந்த ஒரு இயக்கம் உலகின் இயற்கை வளங்களையும் அனைத்து உயிர் வகைகளின் நலன்களையும் பாதுகாத்து வருங்கால சந்ததிகளுக்கு அற்புதமான ஒரு உலகைப் படடைப்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளது என்பதைக் கவனிக்கவேண்டும்.

அத்தகைய ஒரு இயக்கமும் தலைவர்களும் தொண்டர்க்களும்தான் நாட்டுக்கும் உலகத்துக்கும் நல்லது செய்ய முடியும்.

அத்தகைய ஒரு இயக்கம்தான் ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டிய இயக்கமாகும்.

அத்தகைய ஒரு இயக்கம் இருந்தால் அதனோடு இணைந்துகொள்வதும் அதற்கு நெருக்கமான இயக்கமாக இருந்தாலும் அதனுடன் தன்னை இணைத்துக்கொண்டு அந்த இயக்கத்தை மேலும் சிறப்பானதாக்குவதற்காக முயல்வதும் அப்படிப்பட்ட இயக்கம் எதுவும் இல்லை என்றால் அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதும் ஒவ்வொரு தேசபக்தனின் அரசியல் கடமை ஆகும்!
---------------------------------------------------------------------------------------------------------
======================================================================
=====================================================================தனி நபர் அரசியல்

ஒரு தனிநபர் எவ்வளவு சிறந்தவராக இருந்தாலும், அவர் பின்பற்றும் கொள்கைகளும் திட்டங்களும் ஆராயப்படவேண்டும்.

காரணம் மனிதன் உடல்ரீதியாகவும் உள்ளரீதியாகவும் பாதிக்கப்படக்கூடியவன்.

ஒரு மனிதனின் உடல்நிலையும் வாழும் காலமும் திட்டவட்டமானது அல்ல!

ஆனால் ஒருவர் பின்பற்றும் பாதை திட்டவட்டமானது.

பாதை தவறென்றால் மாற்றிக்கொள்ளலாம். தனிநபர்களின் தவறுகள் மற்றவர்களால் மாற்றப்படமுடியாதது.

நமது நாட்டின் அடிப்படை அரசியல் கோளாறே தனிநபர் சார்ந்த அரசியல்தான்.

நல்லவரா கெட்டவர்களா என்பது பிரச்சினை அல்ல.

சுயநல அரசியலுக்கு ஆபத்தானவர்களாக இருந்தால் யாராக இருந்தாலும்  அவர்கள் விட்டுவைக்கப்பட மாட்டார்கள்.

இன்று நாட்டில் பெரிய தலைவர்கள் எல்லாம் விட்டுவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் அது அவர்களின் சிறப்பைக்கருதி அல்ல.

அவர்களால் எந்த ஆபத்தும் இல்லை என்பதே.

தலைவர்கள் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்றாலும் எதிரும் புதிருமாக மோதிக்கொள்பவர்களாக இருந்தாலும் அனைவரும் பொதுவான குணம் படைத்தவர்களே!

அதனால்தான் ஒருவருக்கொருவர் விட்டுவைக்கிறார்கள். இவர்களில் யாராவது மற்றவர்களின் சுயநல அரசியலுக்கு வேட்டுவைக்கக்கூடியவராக இருந்தால் முதலில் அவர் ஒழித்துக் கட்டுப்படுவார்.

ஆனால் அனைத்து மக்களுக்கான கொள்கையையும் கோட்பாட்டையும் திட்டங்களையும் யாரும் தனிநபரை ஒழிப்பதுபோல் ஒழிக்கமுடியாது.

ஆகையால் தனிநபர்களின் பின்னால் திரண்டு தனிநபர்களுக்கு ஏற்படும் கதி அந்த இயக்கத்தின் கதி என்று ஆகி அதன் பின்னால் திரண்ட மக்கள் தோல்வியடைந்து அவமானப்படுவதைவிட கொள்கையினைப்பார்த்து அதன்கீழ் திரளவேண்டும்.

அதுதான் சிறந்தது!

Saturday, June 23, 2012

கூடங்குளமும் நானும் ( 3 )


கூடங்குளம் படிப்பினை!

கூடங்குளம் அணுஉலைகளால் அங்கு வாழும் மக்களுக்கு நிரந்தரமான பயமும் மனநோயும் என்று ஆகிவிட்டது. உரிய காலத்தில் தடுக்கப்பட்டிருக்க வேண்டும். காலங்கடந்த முயற்சி பயனளிக்கவில்லை.

ஆனால் இந்தியாவில் இனி எங்கும் புதிதாக அணு உலை நிறுவ மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்கிற அளவு நாடு முழுவதும் போராட்டம் ஈர்த்துள்ளது. அதுவே ஒரு வெற்றிதான். 

அடுத்து நாடு முழுக்க எங்கெங்கு அணுஉலைகள் உள்ளதோ அங்குள்ள மக்களையெல்லாம் ஒரு அணியில் திரட்டக் கூடங்குளப் போராட்ட முன்னோடிகள் முயற்சி செய்யவேண்டும்.

கூடங்குள அணுஉலை எதிர்ப்புப்போராட்டம் தோல்வியடைந்ததற்கான காரணங்களை விரிவாக ஆராயவேண்டும்.

என்ன செய்திருந்தால் இந்தப் பொராட்டம் வெற்றி பெற்றிருக்கும் அப்படிச் செய்ய ஏன் முடியவில்லை என்பதை எல்லாம் ஆராய வேண்டும்.


இந்தத் திட்டம் துவங்கும்போதே அதைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அன்று அந்த அளவு மக்களிடம் அணுஉலை பற்றிய பயமோ எதிர்ப்பு உணர்வோ போதுமான அளவு இல்லாததால் அது சாத்தியப்படவில்லை.

ஜப்பானின் புக்ஸிமாவுக்கு முன்பே ரஷ்யாவின் செர்னோபில் அணுஉலை விபத்து நடந்திருந்தாலும் அது இந்திய மக்களின் மனதில் பெரிய பாதிப்பை உண்டுபண்ணவில்லை.

இப்போது சுனாமியால் ஏற்பட்ட புக்ஸிமா அணுஉலை விபத்து அணுஉலைகள் சம்பத்தப்பட்ட அச்சத்தை உலகம் முழுக்கவே ஏற்படுத்தியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக இந்தியாவிலும் குறிப்பாக கூடங்குளம் பகுதியில் வாழும் மக்களுக்கு அதிக அளவு அச்ச உணர்வு ஏற்பட்டது. 

பொதுவாகவே எந்த ஒரு பிரச்சினையானாலும் தங்களைப் பாதிக்கக்கூடிய ஒன்றாக இல்லாத வரைக்கும் அதைக் கண்டுகொள்ளாத போக்குதான் நமது மக்களின் பொதுப்பண்பாகும். நதி நீர்ப் பிரச்சினையில் இருந்து மீனவர் பிரச்சினையில் இருந்து ஈழத்தமிழர் பிரச்சினைவரை அதைத் தானே பார்க்கிறோம்?

அதுபோல அணுஉலைப் பிரச்சினையிலும் கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு ஈடான அளவு மற்ற மக்களை இந்த அச்ச உணர்வு பாதிக்கவில்லை.

ஆனாலும் அந்த மக்கள் தடுத்தே தீருவது என்ற முனைப்புடன் போராட்டத்தில் இறங்கினார்கள். 

இறங்கிய பின்னாவது மற்ற மக்கள் அதை ஆதரித்தார்களா என்றால் அதுவும் போதுமான அளவு இல்லை.

அப்படிப் போதுமான ஆதரவு கிடைக்காததற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம்;. ஒன்று காலங்கடந்து போராடுவதால் பயனில்லை என்பது. இரண்டாவது அதை ஒரு வட்டார மக்களுக்கான பிரச்சினையைப் போல் பார்த்ததும் மின்சாரப் பற்றாக்குறையைப் போக்கவந்த ஒரு மாயக் கண்ணாடிபோல் சித்தரிக்கப்பட்டதும் ஆகும். 

பொதுவாக நமது அரசாங்கங்கள் போராட்டங்களை இழுத்தடிப்பது, பொய்ப் பிரச்சாரம் செய்வது, பயமுறுத்துவது பொய்வழக்குப் போடுவது போன்ற பல வழிமுறைகளைத்தான் எப்போதும் கையாள்வது வழக்கம். தவிர்க்க இயலாத ஒரு நிலையில்தான் போராட்டங்களைக் கண்டு கொள்வார்கள்.

அரசாங்கம் போராட்டங்களைப்பற்றி ஒரு மதிப்பீடு வைத்திருக்கும். ஆதாவது போராட்டத்தை மதித்து அதன் நியாயத்தை உணர்ந்து ஒப்புக் கொள்வதெல்லாம் கிடையாது. 

ஒப்புக்கொள்வதால் இழப்பு அதிகமா? அதை நிராகரித்து விட்டு ஒடுக்குவதால் இழப்பு அதிகமா என்று பார்ப்பார்கள். எதில் இழப்பு அதிகமோ அதைத் தவிர்த்துவிட்டு இழப்புக் குறைவான வழியைப் பின்பற்றுவார்கள்.

இந்தப் போராட்டத்தைப் பொருத்தவரை போராட்டத்தை ஏற்று கூடங்குளம் அணுமின்சார நிலையத்தை மூடுவதைவிட போராட்டத்தைச் சமாளிப்பது இல்லாவிட்டால் ஒடுக்குவது என்பதுதான் எளிய வழியாக இருந்தது.

அந்த வழியைப் பின்பற்றி போராட்டத்தை ஒடுக்கிவிட்டார்கள்

இதேபோராட்டம் நாடுதழுவிய போராட்டமாக அந்தத் திட்டத்துக்கு ஆனசெலவைவிடக் கூடுதலான இழப்பு போராட்டங்களினால் ஏற்படும் அல்லது அரசுக்கே ஆபத்து ஏற்படும் அல்லது மக்கள் தேர்தலில் தோற்கடிப்பதற்கு அதுவே காரணமாகிவிடும் என்கிற அளவு  வலிமையான போராட்டமாக இருந்திருந்தால் அரசு இணங்கியிருக்கும்.

ஆனால் இதைப்பொருத்துவரை மேலும் ஒரு விஷயத்தையும் அரசு கணக்கில் எடுக்கவேண்டி வரும்.

ஆதாவது போராட்டத்தை முன்னிட்டுத் திட்டத்தை கைவிட்டால் அதை எதிர் நோக்கியுள்ள மின்சாரத் தேவைக்கு மாற்றுவழி இல்லை என்பதோடு இயங்கிக்கொண்டிருக்கும் மற்ற அணுமின்சார நிலையங்களையும் மூடவேண்டிய சட்டப்பிரச்சினைகள் வரலாம் நிச்சயம் வரும்.

அதனால் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது என்பதை உணரவேண்டும்.

உலகளாவிய ஒரு பிரச்சினையை ஒரு நாட்டுக்குள் ஒரு பகுதிக்குள் ஒரு வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் எப்படி சமாளிக்கமுடியும்.

தவிர அணுசக்திப்பயன்பாட்டால் வரக்கூடிய விளைவுளை உணரச்செய்து மக்களைத் திரட்ட முயற்சிசெய்வதைவிட அது ஏதோ தமிழ் மக்களுக்கு எதிரான சதிபோலவும் அதனால் தமிழ் மக்கள் மட்டும் அழிவார்கள் என்பதுபோலவும் முன்வைக்கப்பட்டதெல்லாம் அனைத்து மக்களையும் ஈhப்பதற்குப் பதிலாக எதிரும் புதிருமாக நிறுத்தியது. 

ஆதாவது பிரிவினை எண்ணங்கள் உணர்வு பூர்வமாக இல்லாத மக்களிடையே பிரிவினை எண்ணங்களையும் சேர்த்து முன்வைக்கும்போது போராட்டம் போதுமான ஆதரவு இல்லாமல் போவது இயல்பாகிவிடுகிறது.

கூடங்குளம் அணுமின்சார நிலையம் மூடப்படவேண்டுமானால் அதற்கு முன்னதாக ஏற்படவேண்டிய சில மாற்றங்களாக நான் கருதுபவை:

நாட்டில் சுயநலம்தான் அரசியல் என்ற நிலைமை மாறி மக்களின் நலன் காப்பதுதான் அரசியல் என்ற பண்பாடு வளரவேண்டும்.

தேசவிரோத மக்கள்விரோத மக்களைக் காட்டிக்கொடுக்கும் கட்சிகளும் அரசுகளும் துடைத்தெரியப்பட்டு உண்மையான மக்களாட்சியும் தேசபக்த அரசியல் இயக்கங்களும் மலரவேண்டும்.

கூடங்குளம் திட்டத்தைக் கைவிடவேண்டுமானால் நாட்டிலுள்ள மற்ற திட்டங்களையும் கைவிடவேண்டும். காரணம் இது கைவிடப்பட என்ன காரணங்களோ அந்தக் காரணங்கள் பிற அனைத்துத் திட்டங்களுக்கும் பொருந்தும். நீதிமன்றங்களும் பாரபட்சமற்ற முடிவைத்தான்  எடுக்கவேண்டி வரும். குறிப்பிட்ட ஒரு திட்டத்தைமட்டும் மூடியது சரி, மற்றதை மூடக்கூடாது என்று அது உத்தரவிடமுடியாது!

அத்தனை திட்டங்களையும் கைவிடுமளவு நமது நாட்டின் பொருளாதார வல்லமையோ மாற்று மின்சக்தித் திட்டங்களோ வளரும் தேவைக்கு ஏற்ற அளவு கிடையாது. அவை முதலில் உருவாக்கப்படவேண்டும்.

தவிர அணுஉலை விபத்துக்களுக்குப் பின்னும் இன்னும் உலகநாடுகளிடையே அணுஉலைக்கு எதிர்ப்பு போதுமான அளவு அச்சுறுத்தக் கூடியதாக இல்லை. வளர்ந்த நாடுகள் கூட இழுத்து மூட உடனே தயாராக இல்லை. அப்படி இருக்க பற்றாக்குறை காரணமாக கடன்கார நாடாக ஏற்கனவே உள்ள நிலையில் மற்றவர்கள் செய்யாத ஒன்றை இங்கு எதிர்பார்க்க முடியாது. எனவே ஒரு பொருளாதார வல்லரசாக இந்தியா மாறவேண்டும்.

இறுதியில் நியாயமான போராட்டங்களுக்காக அனைத்து மக்களும் ஓரணியில் திரளும் வண்ணம் நேர்மையான தலைமையின் கீழ் மக்கள் திரட்டப்பட்டிருக்கவேண்டும்.

இப்போது நமது மக்கள் செய்யக்கூடியதெல்லாம் உலகளாவிய அணுசக்திப்பயன்பாட்டுக்கு எதிரான இயக்கத்தைக் கட்ட முன்முயற்சி எடுப்பதும் நாட்டு அரசியலில் நேர்மையயை முன்னிறுத்தி நல்ல அரசியல் சக்திகளை உருவாக்குவதுமே!

உலக அணுசக்திப்பயன்பாட்டு ஒழிப்பு இயக்கம் என்பது கூடங்குளத்தில் உருவாகி உலகம் பூராவும் பரவட்டுமே!

அதற்கு முன்னதாக ஓடும் ரயில் வண்டிக்குள் எதிர்த் திசையில் பயணிக்க முயல்வதால் எந்தப்பயனும் இல்லை!

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 7 )

ஆன்மிகத்தின் எதிரிகள்


இந்த உலகையும் அண்டசராசரத்தையும் அதில் வாழும் அத்தனை 

உயிர்களையும் படைத்ததாக மக்கள் நம்பும் ஒரு இறைவன் எப்படி 

மனிதப்பண்புகள் கொண்டவனாகவும் மனித உறவுகளைப்போன்ற 

உறவுகளையும் மனிதனைப்போன்றே மனமாச்சர்யங்கள் உடையவனாய் 

இருக்கமுடியும்? 


எப்படி மனித வடிவையும் மனிதன் விரும்பும் வடிவையும் உடையவனாக 

மட்டும் இறைவன் இருக்க முடியும்?


இறைவனின் படைப்புகள் அத்தனையையும் பாழ்ப்படுத்தும் மனித 

இனத்துக்கு இறைவனைப்பற்றிய அனைத்தையும் முடிவெடுக்கும் 

அதிகாரத்தை யார் கொடுத்தார்கள்?


இத்தனை மனிதரையும் இத்தனை உயிர்களையும் இத்தனை இயற்கை 

வளங்களையும் படைத்த இறைவனின் விருப்பம் தான் படைத்த 

அத்தனையும் நலமாக இருக்கவேண்டும் என்பதாகத்தானே இருக்கமுடியும்? 


அப்படிப்பட்ட இறைவனின் விருப்பமான பண்புகளின் வழி நடப்பதுதானே 


உண்மையான ஆன்மிகமாக இருக்கமுடியும்?

நடப்பில் உள்ள ஆன்மிகம் அப்படிப்பட்டதுதானா?மூடநம்பிக்கைகளை எதிர்த்த தாக்குதல்களை எல்லாம் ஆன்மிகத்தை 

எதிர்த்த தாக்குதல்களாகவே எண்ணுகிறார்கள்.


அதனால் ஆன்மிகத்துக்கு நாத்திகவாதிகளால் ஏற்படும் அவமதிப்பைவிட  

போலி ஆன்மிகவாதிகளால்தான் அதிகமான அவமதிப்பு ஏற்படுகிறது!


போலி ஆன்மிகமும் மூடநம்பிக்கைகளும் தான் உண்மையில் மனித 

குலத்துக்கே எதிரானது!


உண்மையான ஆன்மிக நெறிகள் வளரவேண்டுமானால் போலி ஆன்மிகமும் 

மூடநம்பிக்கைகளும் ஒழிக்கப்படவேண்டும்!

Friday, June 22, 2012

உணவே மருந்து ( 21 )


உணவுமுள்

பத்து முட்களை ஒன்றாகக் கட்டி நமது கையிலோ காலிலோ தைத்தால் அது தைக்காது. துன்பம் விளைவிக்காது. 

ஆனால் அவற்றைத் தனித்தனியாகப் பிரித்து தைத்தோமென்றால்  அது தைத்துவிடும். ரத்தம் வரும். வலிக்கவும் செய்யும்.

அதுபோல இயற்கையாக உண்ணக்கூடிய உணவுப் பொருட்களை சமைக்காமல் உண்ணும்போது பல்வேறு சத்துக்களும் குறிப்பிட்ட விகிதத்தில் சேர்ந்திருப்பதால் தீங்கு விளைவிப்பதில்லை. மாறாக நன்மையே செய்கிறது. 

ஆனால் வேகவைக்கும்போதோ, சுடும்போதோ, எண்ணையில் பொரிக்கும்போதோ அவற்றில் அடங்கியுள்ள கட்டமைப்பின் சரிவிகிதம் சிதைக்கப்பட்டு சமைக்கும் விதத்துக்குத் தக்கபடி எதிர்மறை விளைவுகளை உண்டுபண்ணுகிறது. அது தீமைகளாக உணரப்படுகிறது!
------------------------------------------------------------------------------------------------------------
========================================================================
------------------------------------------------------------------------------------------------------------


கோவைக் கொடி


 கோவைக் கொடி என்பது கிராமப்புறங்களில் இன்றும் அழியாமல் தாக்குப்பிடித்துவரும் ஒரு அற்பதமான மூலிகைக் கீரை ஆகும். அதனிடம் ஒரு பக்கம் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும் அதே நேரம் எனக்குப் படித்தது அது ஒரு சிறப்பான சுவையான கீரை உணவு என்பதே!

முன்பெல்லாம் கிராமப் புறங்களில் கள்ளி கிழுவன் போன்ற உயிர் வேலிகளில் கோவைக் கொடி படர்ந்திருக்கும். அதன் இலைகள் பெரும்பாலும் ஆடுகளுக்கு சிறந்த உணவாகும். அதனால்தானோ என்னவோ அதைக் கீரையாகச் சமைத்து உண்பவர்கள் குறைவு என்பதே!

இப்போதும் உயிர்வேலிகளில் எஞ்சியிருப்பவற்றிலும் வரப்பு ஓரங்களிலும் கோவை படர்ந்திருப்பதைக் காணலாம். ஆனால் உயிர்வேலிகள் தாக்குப் பிடிக்கும் காலம்வரைதான் கோவைக் கொடியும் தாக்குப்பிடிக்கும்.

அதன் கீரை தவிர காயும் சிறந்த உணவுப் பொருளாகும் பாகற் காயைக்கொண்டு என்னவெல்லாம் செய்வோமோ அதையெல்லாம் கோவைக்காயைக் கொண்டும் செய்யலாம்.

கோவைப்பழமும் உண்ணக்கூடியதே!

நகர்ப்புறங்களில் அல்லது கிராமங்களில்கூட கோவைக் கொடியை நட்டு வளர்ப்பதன்மூலம் நிரந்தரமான கீரை மற்றும் காய் வகையொன்றைச் செலவில்லாமல் நிரந்தரமாக உருவாக்கிக் கொள்ளலாம் என்பதே இதன் சிறப்பம்சம். தவிர ஒரு முறை நட்டுவிட்டால் பலவருடங்களுக்கு அழியாமல் பயன்தரும்.

மாடியில் ஒரு தொட்டியில்கூட நட்டுப்பயிராக்கிப் பயன்பெறலாம். இயற்கையில் அழியக்கூடிய நிலையில் உள்ள ஒன்றை வீட்டுப் பயிராக்குவதன்மூலம் அழியாமல் காப்பற்றவாம். கடைகளில் விற்கப்படுபவை இதற்கு ஈடானவை அல்ல.

--------------------------------------------------------------------------------------------------------
====================================================================
--------------------------------------------------------------------------------------------------------

Thursday, June 21, 2012

விவசாயம் ( 25 )


மண்புழு வளர்ப்பு

ஒரு நிலம் விவசாயத்துக்கு ஏற்ற நிலம். நன்கு வளமான நிலையில் உள்ளது. அதில் என்னபயிர் செய்தாலும் நன்கு வளரும் என்று உறுதிப்படுத்திக்கொள்ள ஒரு நல்ல உபாயம் உள்ளது. 

அது என்னவென்றால் அந்த நிலத்தில் ஈரமான ஒரு பகுதியில் மண்ணைப் பறித்துப் பார்த்தால் அங்கு மண்புழுக்கள் தென்பட வேண்டும்.

ஒரு நிலத்தில் ஈரமான ஒரு நிலையில் மண்புழுக்கள் அங்கு வாழமுடியும் என்றால் அங்கு நன்கு பயிர் செய்யமுடியும் என்பது பொருள்.

அதனால்தான் மண்புழுக்களைக் குடியானவனின் நண்பன் என்று கூறுவார்கள்.

மண்புழுக்கள் வாழும் நிலங்கள் எதனால் அப்படிக் கருதப்படுகின்றன, மண்புழுக்கள் நமக்கு என்ன பயனைத் தருகின்றன என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

மண்புழு வாழவேண்டுமானால் அங்கு அதற்குத் தீனி வேண்டும். அதற்குத் தீனி கிடைக்க வேண்டுமானால் நன்கு மக்கிய பொருட்கள் அந்த நிலத்தில் கலந்திருக்க வேண்டும். மக்கிய பொருட்கள் கலந்திருக்க வேண்டுமானால் அதற்குத் தேவையான மக்கக்கூடிய குப்பைகள் இலை தழைகள், கால்நடைகளின் கழிவுகள் போன்றவை கலந்திருக்கவேண்டும்.

அதுமட்டுமல்ல குப்பை கூழங்களை மக்கச்செய்யும் நிறைய நுண்ணுயிர்களும் அந்த நிலத்தில் வாழவேண்டும். அதற்குமேல் போதுமான ஈரம் வேண்டும்.

இவ்வளவும் சரியாக இருக்கிறது என்பதற்கு அடையாளம்தான் மண்புழு!


அந்த மண்புழுக்கள் ஒரு ஈரநிலத்தில் காணப்படவில்லை என்றால் என்ன பொருள்?

அவை வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லை, போதுமான உணவு இல்லை என்பது பொருள்.

அப்படியானால் அதைத்தொடர்ந்து அந்த நிலத்தில் மக்கக்கூடிய பொருட்களோ அவற்றை மக்கச்செய்யும் நுண்ணுயிர்களோ இல்லை என்றும் உணர்ந்து கொள்ளலாம். 

அது பயிர் செய்ய அதுவும் இயற்கை விவசாயம் செய்ய ஏற்ற நிலம் அல்ல என்று எளிதில் தெரிந்துகொள்ளலாம்.

இந்த நிலை ஏற்படுவதற்குக் காரணம் என்ன? ஏன் மண்ணில் மண்புழுக்கள் இல்லாமல் போகிறது? வரட்சிக் காலத்தில் ஈரம் இல்லாததால் மண்புழு இல்லாமல் போவது நியாயம். ஈரகாலத்திலேயே ஏன் இல்லாமல் போகின்றன?

காரணம் மிக எளிதானதுதான். ஆதாவது சின்னஞ்சிறு மண்புழுக்கள் மீது நாம் கருணையற்ற யுத்தம் நடத்தி; வருகிறோம். அதுவும் பலமுனைத் தாக்குதல்!

ஒரு பக்கம் கால்நடைப் பயன்பாட்டைக் குறைத்து அதனால் அவற்றின் கழிவுகள் நேரடியாக நிலத்தில் சேர்வதைத் தடுத்துவிட்டோம். அதனால் நிலத்தில் உள்ள நுண்ணுயிர்களுக்கோ மண்புழுக்களுக்கோ போதுமான உணவின்றிச் செய்து வருகிறோம்.

மறுபக்கம் நிலத்தில் பயிர்களுக்கான சத்துக்கள் குறைந்த நிலையில் நிலத்தை வளப் படுத்துவதற்குப் பதிலாக வேதி உரங்களைப் பயன்படுத்தினோம். 

நிலத்திலுள்ள நுண்ணுயிரிகள் வேதி உரங்களை உண்டு வாழ முடியாதது மட்டுமல்ல அந்த நிலையில் வாழும் சூழலை இழந்து அழிவை நோக்கிய பயணத்தைத் துவக்கின. 

போதாக் குறைக்கு பூச்சிக் கொல்லிகளை வரைமுறையின்றிப் பயன்படுத்தியதாலும் நேரடியாக நஞ்சின்மூலமும் களைக்கொல்லிகளின் மூலமும் மண்;புழுக்கள் கொல்லப்பட்டன.

என்ன வேதி உரங்களைப் போட்டாலும் என்ன பூச்சி;க் கொல்லிகளைத் தெளித்தாலும் பயிர் எதிர்பார்த்தபடி வளர்வதில்லை போதுமான மகசூலைக் கொடுப்பதில்லை, நாளுக்கு நாள் பூமி களர் நிலங்களாகி வருகிறது என்று காலங் கடந்து உணரப் படுகிறது. இப்போதும் விவசாயம் நெருக்கடிக்கு உள்ளாகாமல் இருந்திருந்தால் வருமானம் கட்டுபடியாகக்கூடிய அளவில் இருந்திருந்தால் இப்போதும் இந்த இயற்கை வேளாண்மை பற்றிய சிந்தனை வந்திருக்காது. 

இப்போது செய்த தவறு உணரப்படுகிறது. அதைத் திருத்திக் கொள்வது எப்படி என்பதுதான் கேள்வி! 

அதற்கு வேதி உரங்களை மூட்டை மூட்டையாகக் கொட்டி விவசாயம் செய்தோமல்லவா அதுபோலவே நிறைய மண்புழு உரம் உற்பத்தி செய்து மூட்டை மூட்டையாகப் போட்டால் பயிர் அருமையாக வரும் என்று கருதப்படுகிறது. செய்யவும் படுகிறது.

ஆதாவது முன்போலக் கால்நடைகள் இல்லாத நிலையில், கால்நடைகiளின் பயன்பாடு குறைந்த நிலையில் கால்நடைகள் வைத்து பாரம்பரிய முறை விவசாய வேலைகள் செய்யமுடியாத நிலையில் இருக்கும் வேலை செய்யும் மாடுகளையும் பால்மாடுகளையும் அவற்றின் கழிவுகளையும் எப்படிப் பயன்படுத்தலாம் என்று சிந்தித்ததன் பயன்தான் மண்புழு உரம். ஏன் அதை நாமே உற்பத்தி செய்து நிலத்துக்கு இடக்கூடாது என்றும் நினைத்தார்கள். 

மாடுகளை நிறைய வளர்த்து அவற்றை நிலத்தில் பட்டிகளில் அடைத்து மற்றும் எருக் குழிகளில் சேகரிக்கப்படும் சாணத்தின் மூலம் நிலத்தில் மண்புழுக்கள் உற்பத்தியாவதன் மூலம் பயன் கிடைக்க நிறைய மாடுகள் வேண்டும். நிறைய வேலையாட்கள் வேண்டும். நிறைய செலவும் பிடிக்கும். அது நடைமுறை சாத்தியமும் இல்லை.

அதனால் மண்புழு உரத்தை நாமே ஓரிடத்தில் உற்பத்தி செய்வது சுலபம்தானே! அதுதான் மண்புழு மோகம்! 

நாம் உற்பத்தி செய்யும் மண்புழு உரமும் நிலத்தில் வாழும் மண்புழுக்கள் உற்பத்தி செய்யும் உரமும் ஒரேமாதிரி தரமுடையவைதானா? 

மண்புழுக்களுக்கு நிலத்தில் உரமிடுவது மட்டும்தான் வேலையா? 

இந்த இரு கேள்விகளுக்கும் தெளிவான விடை காணவேண்டும்.

மண்புழுக்கள் தங்களுக்கான உணவைத்தேடி இடைவிடாமல் தாம் வாழும் காலம் ஈர மண்ணுக்குள் இடம் பெயர்ந்துகொண்டே உள்ளன. குறைந்த பட்சம் இரண்டடி ஆழத்துக்காவது மண்ணுக்குள் மண்புழுக்களின் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும்.

மண்ணுக்குள் மண்புழுக்களின் நடமாட்டம் தொடர்ந்து இருப்பதால் விவசாய நிலத்தின் மேல் மண் சல்லடைக் கண்களாகத் துளைக்கப்படுகிறது. அந்தத் துளைகள் உடனுக்குடன் மூடிக்கொள்வதால் நமது கண்களுக்குத் தெரியாது ஆனால் அப்படித் துளையிடப்படுவதால் மண் கெட்டிப்படாமல் மிருதுவாக ஆக்கப்படுகிறது. 

அப்படி மிருதுவாக்கப்படும் மண் மற்ற நுண்ணுயிர்களின் நடமாட்டத்துக்கும் மழைநீர் எளிதில் மண்ணுக்குள் நுழைந்து தங்கவும் உதவி செய்கிறது. 

ஆக மண்ணை மிருதுவாக்குகிறது. அதன் மூலம் மற்ற நுண்ணுயிர்களின் நடமாட்டத்துக்கும் பெருக்கத்துக்கும் உதவி செய்கிறது. மழைநீர் சேகரிப்புக்கும் உதவுகிறது. 

மண்புழுக்களை நாம் வளர்ப்பதன் மூலம் எரு உற்பத்தி செய்தாலும் மண்புழுக்களின் இந்த வேலைகளையெல்லாம் நிலத்தில் செய்வது யாh?

அதுமட்டுமல்ல இரண்டாவதாக மண்புழுக்கள் தான் வாழும் மண்ணில் நிலத்திலேயே தனக்கான உணவையும் பெற்று தனது கழிவுகளையும் வெளியேற்றும்போது அந்தக்கழிவுகள் எருவாக உடனுக்குடன் மண்ணில் சேர்ந்து விடுகிறது. அப்படிச் சேர்க்கும்போது அதை தான் நடமாடும் இடங்களில் வெளிக் காற்றுப் படாமல் வெய்யில் படாமல் சேதாரமில்லாமல் சேர்க்கிறது. 

அந்த எருவை நிலத்தில் உள்ள அதைச் சார்ந்துள்ள சில நுண்ணுயிரிகள் மேலும் பக்குவப்படுத்தி மேம்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. பல்லுயி;ர்களின் வாழ்க்கை முறை அதுதான் ஆகும்.

ஆனால் தனியாகத் தயாரிக்கப்படும் மண்புழு உரம் உடனுக்குடன் உடனுக்குடன் நிலத்தில் சேர்க்கப்படுதில்லை. அதனால் காற்றின் மூலமும் வெப்பத்தின் மூலமும் ஒரு பகுதி சத்துக்களை இழந்து சக்கையாகிப் போகும் வாய்ப்புகள் நிறைய உள்ளன.

மண்புழு இயற்கையாக நிலத்தில் எங்கெல்லாம் தனது கழிவாகிய உரத்தை படியச் செய்கிறதோ அந்த முறையில் நாம் தயாரிக்கும் உரத்தைப் படியச்செய்ய முடியாது.

இந்த நிலையில் நாம் தயாரிக்கும் மண்பூழு உரமும் அதன் பயன்பாடுகளும் இயற்கையில் வாழும் மண்புழுக்களுக்கு எப்படி ஈடாகும்?

அதனால் நாம் மண்புழுக்களுக்கு உணவாகும் விதத்தில் மக்கக்கூடிய குணம் உள்ள பல்வேறுபட்ட பொருட்களை விவசாய நிலங்களில் இட்டு மக்கச்செய்ய வேண்டும்.  கால்நடைக் கழிவுகளை அது காற்றாலும் வெய்யிலாலும் சாரமிழக்கும் முன்பே நிலத்தில் சேர்க்கவேண்டும். 

எவையெல்லாம் கொண்டு மண்புழு வளர்க்கலாம் என்று நினைக்கிறோமோ அவற்றை யெல்லாம் விவசாய மண்ணிலேயே நேரடியாகச் சேர்த்து மண்புழுக்களுக்கு உணவாக மாற்றும் வேலையை இயற்கையிடமே ஒப்படைக்கவும் வேண்டும். அதுதான் சிறந்த முறை ஆகும்.

அதைவிட்டு இயற்கையாக மண்ணில் வாழ்ந்து வளம் கொடுக்க வேண்டிய மண்புழுக்களை கோழிப் பண்ணைகளில் கோழிகள் வளர்ப்பதுபோல் வளர்க்க நினைத்தால் அந்த முறையில் மண்புழுவளர்த்து நல்ல லாபத்துக்கு மண்புழு உரம் விற்பவர்கள் வாழத்தான் பயன்படுமே தவிர நிலங்கள் வளங்குறைந்து போவதைத் தடுக்க உதவாது.

வேதி உரங்களுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் கொட்டிக்கொடுத்துக் கடன்காரர்கள் ஆன விவசாயிகள் வருங்காலத்தில் மண்புழு உரத்துக்கும் பஞ்சகாவ்யத்துக்கும் செலவு செய்து கட்டுபடி ஆகவில்லை என்று சொல்லவேண்டிய நிலையும் வரலாம்.

விவசாயிகள் தற்காலத்தில் தங்கள் நிலத்தில் விளையும் நெல்லை விற்றுவிட்டு கடைகளில் விற்கும் அரிசியைத்தான் வாங்கி உண்கிறார்கள்.

அதுபோல தங்களின் கால்நடைகளின் சாணத்தை மண்புழு வளர்ப்பாளர்களுக்கு விலைக்கு விற்றுவிட்டு அவர்களிடமிருந்து மண்புழு உரத்தையும் பஞ்சகாவ்யத்தையும் வாங்கி உபயோகிக்கும் காலமும் வெகு தூரத்தில் இல்லை.

இதுபோன்ற எதிர்ப்புக் குரல் எல்லாம் கடல் அலைகளின் முன் குருவி கீச்சிடுவது போன்றதுதான்.

யார் கேட்கப் போகிறார்கள்?Wednesday, June 20, 2012

பல்சுவை ( 5 )


முருகனுக்குமொட்டை

நான்கு நாட்களுக்கு முன்பு எனது நண்பர் ஒருவர் தான் திருச்செந்தூர் போவதாகச் சொன்னார். 

எனக்குக் கூட ஆசை! போய்வந்து நாளாகிவிட்டது. நாமும் அப்படியே ஒரு டூர் அடிக்கலாமா என்று. 

எங்கெங்கு போகிறீர்கள் என்று கேட்டதற்கு தீருச்செந்தூர் மட்டும்தான் என்று சொன்னார். 

ஒரு இடம் பார்க்கவா அவ்வளவு தூரம்போகிறீர்கள் என்று கேட்டேன். 


இல்லை மொட்டை அடிக்க வேண்டும் அதனால் என்றார். அதற்கு முப்பது கி மீட்டரில் பழனி இருக்கும்போது முன்னூற்றம்பது கீமீ செல்லவேண்டுமா என்றேன். 

இல்லை திருச்செந்தூர் முருகனுக்குத்தான் வேண்டுதல் என்றார். 

எல்லாப் பக்கங்களிலும் முருகன் ஒன்றுதானே, திருச்செந்தூர் அவ்வளவு தூரம் செலவும் செய்து ஏன் கஷ்டப்படுகிறீர்கள் என்றேன். அவர் கேட்கவில்லை. அப்படிச் செய்வது தப்பு என்று சொல்லி ஒரே நாளில் தீருச்செந்தூரே போய்விட்டு வந்துவிட்டார்.

பாவம் வாரம் பூராவும் கடுமையான வேலை! ஒரு நாள் ஓய்வில் திருச்செந்தூர்வரை போய்விட்டு வந்து நடமாடுவதற்கே துன்பப் பட்டுக்கொண்டுள்ளார்.

நான் கேட்பதெல்லாம் இவர் பழனிக்குப் போயிருந்தால் முருகன் இங்கு ஏன் வந்தாய்? தீருச்செந்தூர் போ என்று சொல்லி விடுவாரா?

அல்லது திருச்செந்தூரில் உள்ள முருகன் இங்கு ஏன் வரவில்லை என்று வருத்தப்படுவாரா?

தன்னுடைய பக்தன் எவ்வளவு செலவு செய்தாவது எவ்வளவு துன்பத்துக்கு நடுவிலாவது தன்னுடைய கோவில்களில் குறிப்பிட்ட இடத்துக்குத்தான் போகவேண்டும், இல்லாவிட்டால் தண்டிப்பேன் என்று சொல்வாரா?

பார்த்தால் பாவமாக உள்ளது.

இது என்ன ஆன்மிகம்?

எனது மொழி ( 45 )


வேறுபாடு

சாதாரணமாக ஒவ்வொருவரும் உலகில் பிறக்கிறோம் கிடைத்ததை உண்கிறோம், வளர்கிறோம், வாழ்கிறோம், இன்பதுன்பங்களை அனுபவிக்கிறோம், குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னால் இயற்கையாகவோ செயற்கையாகவோ இறந்து மண்ணோடு மண்ணாகி விடுகிறோம்.

இதன் நடுவில் இவ்வுலகில் இருப்பதில் தத்தம் பங்கு கூடுதலாக இருக்கவேண்டும் என்ற உணர்வில் சூரைத் தேங்காய்க்கு போட்டிபோடும் சிறுவர்கள்போல் முட்டிமோதி நெட்டித் தள்ளி வாழ்கிறோம். விருப்பை விட வெறுப்பை அதிகமாக வளர்த்துக் கொள்கிறோம்.    

வெள்ளைத்தாளிலே வெள்ளை மை கொண்டு எழுதுவதால் எந்தப்பயனுமில்லை. 

ஆனால் வித்தியாசமான நிறங்கொண்ட மையினால் எழுதும்போது அதிலுள்ள பொருளைப் பொருத்து எழுத்துக்களுக்கும் எழுதுபவனுக்கும் சிறப்பு வருகிறது. 

அதுபோல மற்ற எல்லோரையும் போலவே சாதாரண மனிதனாய்ப் பிறந்து வளர்ந்து வாழ்ந்து இன்பதுன்பங்களில் உழன்று செத்து மறைவதில் எந்தப் பயனுமில்லை. 

மற்றவர்களைவிட வேறுபட்டவர்களாக தங்கள் எண்ணம், சொல், செயல் அனைத்திலும் பல்வேறு சிறப்புக்களை வெளிப்படுத்துபவர்களாக வாழ்வதுதான் உயர்ந்த வாழ்க்கை!
---------------------------------------------------------------------------------------------------------
=====================================================================
------------------------------------------------------------------------------------------------------------
உதவி

    உதவிபெறும் ஒருவருடைய மனம் திருப்தியும் ஆறுதலும் அடையும் அதேநேரம் உதவிசெய்பவர் நியாயமானராக இருப்பின் அவருக்கும் அதேமாதிரி உணர்வுகள் ஏற்பட வேண்டும்.

அப்படிப்பட்ட உணர்வுகள் ஏற்படாத ஒருவர் செய்த உதவி நிச்சயம் உதவியாக இருக்காது.

சுயநலம், தற்பெருமை, இயலாமை, பயம் போன்ற உணர்வுகள் அடிப்படையில் செய்யப்படும் சாதாரண செயலாகவே இருக்கும்.

முன்னதை மதிக்கலாம் மதிக்கவேண்டும். பின்னதை மதிக்கவேண்டிய அவசியம் அத்தகைய உதவி பெற்றவருக்குக்கூட இல்லை.  

அரசியல் ( 15 )

நண்பர்களே! இன்று காலை ஒரு நண்பருடன் சேட்டிங்கின்போது அந்த நண்பர் கேட்ட கேள்விகளும் நான் அளித்த பதில்களும்.....

நண்பர்:  sir ,,i've some ques 4 survey
can u ans me?  pls

நான்: எனக்குத்தெரிந்த்தைச் சொல்கிறேன்.

நண்பர்: 
 • What qualities do you think the candidate must possess to become the president of india?
 • (ellame englsh la irukum ,,,en frnd media communication padkran ,, avnuku help panna than naanum kekren..,, avan anupunadha apdiye ungalta kekren)

  நான்:
  இந்தியக் குடியரசுத்தலைவரைப் பொருத்தவரை முப்படைகளுக்கும் தலைவராகப் பெயரளவுக்கு இருந்தாலும் உண்மையில் அவர் மத்திய அரசின் ஏஜென்ட் . அவ்வளவே. தனது சொந்த அறிவின்படி அல்லது தகுதியின்படி செயல்பட முடியாது. செயல்படுவதும் இல்லை. ஆகையால் அவருக்குத் தேவைப்படும் ஒரே தகுதி கொஞ்சம் படித்திருப்பதும் மத்திய அரசு சொன்னபடி கேட்கும் கீழ்ப்படியும் புத்தியும்தான்.அதனால் அவருக்கு அரசு செலவில் எல்லா வசதியும் கிடைக்கிறது.

  நண்பர்:super

  நான்: நல்லது நண்பா!

  நண்பர்: Do you think the President of India is just a figure head or he has an important role to play? can you recall instances when the President of India took a stand or played a major role in bringing about a decision/implementation of any policy or programme?

  நான்: இதில் நான் இரண்டு விதமாகப் பார்க்கிறேன். முதலாவது மத்திய அரசு மக்களவையில் மக்கள் பிரதிநிதிகளால் விவாதித்து முடிவு செய்ய முடியாத அல்லது நேரமில்லாத பொது குடியரசுத்தலைவர் பெயரால் எந்த அவசர சட்டத்தையும் பிறப்பிக்க முடியும். ஒரு மாநில அரசைக்கூட டிஸ்மிஸ் செய்ய முடியும். ஆதாவது ஒரு ஜனநாயக நாடு என்ற போர்வைக்குள் தேவைப்பட்டால் சர்வாதிகாரமான நடவடிக்கை எடுக்க அவருடைய பதவி ஒரு உபாயம்.

  இரண்டாவதாக அவர் ஒரு தன்மான மிக்கவராக அல்லது தேசப்பற்றுமிக்கவராக இருந்தால் மத்திய அரசின் தவறைச் சுட்டிக்காட்டி பணியமுடியாது என்று மறுத்து நேர்மையாக நடந்து மக்களின் நர்பெயருடன் பதவியைவிட்டு வெளியேறலாம். அத்தகைய தேசபற்றை இதுவரை யாரும் வெளிக்காட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டவில்லை என்பதே உண்மை.

  நண்பர்:  bt thavarai suttikaattum alavukku thairiyam endha janaathipathikkum vandhadhaaga theriyavillai 

  • ok aduthu oru elithana kelvi 
  • Who is your most favourite president so far? why

   நான்:
   மனதில் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு சித்திரத்தைத் தவிர உயர்வாக தனது பதவியின்மூலம் நிரூபித்தவராக ஒருவரையும் நான் கருதவில்லை!

   நண்பர்: o,, idhuvaraikum pathavi vagithavargalil ivar paravallai ,, endru unardha therunam ,,??

   நான்:ராஜெந்திரப் பிரசாத், ராதாகிருஷ்ணன் காரணம் அவர்கள் சுதந்திரப்போராட்டகாலத்தில் வாழ்ந்தவர்கள், கல்வியாளர்கள், மக்கள் மனதில் மரியாதைபெற்றிருந்தவர்கள் என்பதுமட்டுமே!

   நண்பர்:seri
   • inum 3 kelvigal mattume

    நான்:
    சொல்லவும்

    நண்பர்: 4. Do you think that ruling parties choose such persons as presidents that they may achieve their goals with regard to elections and governance? How can this be avoided?

    நான்: இந்தியாவைப் பொருத்தவரை முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே தரமானவை. அவற்றுள் வேற்றுமை கிடையாது. ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்பதைத் தவிர வேறு கொள்கை கிடையாது. அவர்களுக்கு இந்த சிஸ்டத்தை மாற்றவேண்டும் என்பதைவிட தொடர்வதுதான் தங்களின் தவறுகளுக்கும் நோக்கத்துக்கும் வசதியாக இருக்கிறது. அதனால் சீர்திருத்தம் பற்றி அவர்களால் சிந்திக்க முடியாது. இதைத் தடுக்கவேண்டும் என்றால் பொதுவான ஒரு பாராபட்சமற்ற கொள்கையும் திட்டமும் அடிப்படையில் மக்கள் இயக்கம் உருவாகவேண்டும் உண்மையான ஜனநாயகம் மலரவேண்டும் ஒவ்வொருவரும் தனது பங்கை செளுத்தும்வண்ணம் அந்த ஜனநாயகம் இருக்கவேண்டும். அது இன்னும் விரிவான முறையில் சொல்லப்படவேண்டியதும் ஆகும். நேரமில்லை.

    நண்பர்:kadisiya sonnadhil rmba nitharsanam >>. நேரமில்லை<<
    • Do you believe that since the President of India represents our nation globally we need to choose a person who can elicit respect and admiration of foreign countries? If so what qualities/attributes he must possess?

     நான்: 
     என்னைப்பொறுத்தவரை ஒருநாட்டின் மதிப்பும் மரியாதையும் அதன் பொருளாதார வலிமையைகொண்டுதான் பிற நாடுகளால் தீர்மானிக்கப்படுகின்றன. தனிமனிதர்களைக் கொண்டு அல்ல! ஒரு குஸ்டரோகிக்கு மாவீரனைப்போல் வேஷம் போட்டால் மாவீரன் ஆகிவிடமுடியாது. அதுபோல வெளிநாடுகள் நம்மை மதிக்கவேண்டும் என்றால் நமது அரசியல்தரம் உயரவேண்டும் தேசப்பற்று உயரவேண்டும்.பொருளாதார வலிமை உயரவேண்டும்.

     நண்பர்: appo verum nalla janaathipathi mattum vaithukkondu nanmathippai sambhaadhikka mudiyaatha?

     நான்:இந்த நிலைமையை அனுமதிக்கும் சகிக்கும் ஒருவரை நல்ல ஜனாதிபதி என்று என்னால் சொல்ல முடியாது. அப்புறம் அவரைக்கொண்டு வெளிநாட்டில் நல்லபெயர் சம்பாதிக்க என்ன அவசியம்?

     நண்பர்: 
     • mmm aduvum sari thaan
     • kadaisiyaaga ,,, Do you believe that so far Indian Presidents have not had significant role to play in the governance of our country? Why

      நான்: 
      அவர்கள் யாரும் அவர்களின் தகுதியை வைத்துப் பதவியில் அமர்த்தப்படுவது இல்லை. மக்களால் தேர்ந்தேடுக்கப்படுபவர்களும் அல்லர். அரசியலில் பயிர்ச்சிபெற்றவர்களாக இருக்கவேண்டுவதும் இல்லை.உயிருள்ள ஒருமநிதனாகமட்டும் இருந்தால்போதும் என்ற ஒரே தகுதியைக் கொண்ட ஒரு பதவியைக் கொண்டு யாரும் எந்த சிறப்பான பாத்திரத்தையும் சிறப்பாகச் செய்துவிட முடியாது! என்னால் அதை மதிக்கவும் முடியாது!

      நண்பர்: manadhil thondriyathai pattendru koori ulleergal   karuthukkalai paghirndhu kondatharku nanri  

      நான்:ஓ! நல்லது நண்பா! எனது அரசியல்கருத்துக்களை அறியவேண்டுமேன்றால் எனது வெப்சைட்டில் பலகட்டுரைகளாக எழுதியுள்ளேன். பார்க்கலாம்.