ss

Friday, June 1, 2012

வீட்டுத் தோட்டம் ( 2 )


பொரியல் தட்டை 

நண்பர்களே!

வீட்டுத் தோட்டத்தில் பயிர் செய்ய அடுத்து ஒரு வகை பொரியல் தட்டை.

இது புஞ்செய் பூமிகளில் மானாவாரியாகவும் பாசனப்பூமிகளில் பாசனப்பயிராகவும் பயிரிட்டுவரும் தட்டைப்பயிறு போன்று இருந்தாலும் இது சமையலுக்கென்றே கண்டுபிடிக்கப்பட்ட ரகமாகும்.

இதன் காய்கள் நீளமாகவும் கனமாகவும் பச்சையாகவும் இருக்கும். 




இதை வீட்டுத் தோட்டத்தில் மண் தரை இருந்தால் வெறும் நிலத்திலும் அப்படி இல்லாவிட்டால் தொட்டிகளிலும் வளர்க்கலாம்.

குறைந்தது இருபது லிட்டர் கொள்ளளவு உள்ள தொட்டிகளை இதற்குப் பயன்படுத்தலாம். 

ஒரே தொட்டி அதைவிடப் பெரியதாக இருந்தால் இடம் விட்டு இடம் நகர்த்துவதும் தூக்குவதும் கடினமாக இருக்கும். 

இரண்டு தொட்டிகளில் நட்டால் ஒரு குடும்பத்துக்கு அவ்வப்போது பறிக்கப் போதுமானதாக இருக்கும்.

ஒரு முறை கடையில் வாங்கினால் அடுத்து நாமே காய்ந்துபோகும் காய்களில் இருந்து விதைகளை எடுத்து வைத்துக் கொள்ளலாம். வேண்டியவர்களுக்கும் கொடுக்கலாம்.

நான் முன் ஒரு முறை சொன்னதுபோலவே தரிசாகக் கிடக்கும் இடங்களில் அல்லது சாக்கடை ஓரங்களில் செடிகளின் இலைகள் விழுந்து இற்றுப்போன மக்கிய மண்ணை அள்ளி வந்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

இது கொஞ்சம் பரவலாக நிலத்திலேயே படர்ந்து காய்க்கக் கூடியது. அதனால் தொட்டிகளைச் சுற்றிக் கொஞ்சம் இடம் விடவேண்டும்.

நட்டு இரண்டு மாதத்தில் காய் காய்க்கத் துவங்கிவிடும். செடி பசுமையாகவும் அடர்த்தியாகவும் அழகாகவும் இருக்கும். நிறையக் காய்கள் பிடிக்கும்.

இதன் காய்களை இளம் பாகமாக இருக்கும்போது இன்னும் உள்ளே விதைகள் தெரியாத நிலையில் அப்படியே பறித்துப் பச்சையாக முழுமையாக மென்று உண்ணலாம். 

கொஞ்சம் முற்றினால் காயைப் பறித்து தொலித்து உள்ளிருக்கும் பச்சையான மணிகளை அப்படியே மென்று உண்ணலாம்.

அந்தப் பாகத்தில் பறிக்கும் காய்களை அப்படியே நறுக்கி பொரியல் செய்யலாம். சுவையாக இருக்கும்.

சமையலுக்குக் காய்கள் பறிக்கும் போது காய்கள் வேறுபட்ட பாகங்களில் இருக்கும். 

ஓரளவு முதிர்ச்சி அடைந்ததை அப்படியே நறுக்கிப் போடும்போதே அதிகமாக முற்றியதை தொலித்து அந்த விதைகளையும் நறுக்கப்பட்;ட காய்களுடன் சேர்த்துப் பொரியல் செய்யலாம்.

இந்தக் காய்களில் முற்றியவற்றை அப்படியே தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்து உரித்தும் மாலைநேரங்களில் தின்னலாம்.

முதிர்ந்த காய்களை நேரடியாக நெருப்பில் சுட்டுத் தின்றாலும் மிகவும் சுவையாக இருக்கும்.

இத்தனைக்கும் மேல் நாம் பறிக்காமல் விடுவதாலோ நமது கண்களுக்குச் சிக்காமலோ விடுபட்டுக் காய்ந்து போகும் காய்களைச் சேகரித்து வைத்துக்கொள்ளலாம். ஒரு பகுதியை விதைக்காக எடுத்து வைத்துக்கொண்டு மீதியுள்ள காய்ந்த மணிகளை வேண்டும் போது தட்டைப்பயறாக சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தச் செடிகளை நன்கு நீர்விட்டுப் பராமரித்தால் நீண்ட நாட்களுக்குக் காய்க்கும். 

வீட்டில் காய்க்கும் செடிகொடிகள் என்றாலே அதன் மகிழ்ச்சியே தனிதான். அனுபவியுங்கள்!

No comments:

Post a Comment