ss

Saturday, June 9, 2012

ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 21 )



பொதுநலன்           

சொந்தநலன், பொதுநலன் என்ற இரண்டு வகையில் வாழும் மனிதர் அனைவரும் சிந்திக்க வேண்டியுள்ளது.

தனக்காக, தன் குடும்பத்துக்காக செயல்பட வேண்டியுள்ளது. அதேநேரம் உறவினர்களுக்காகவும் செயல்பட வேண்டிள்ளது. அதற்கப்பால் பிறருக்காகவும் ஊர் மக்களுக்காகவும் நேரடி அறிமுகம் இல்லாத நாட்டு உலக மக்களுக்காகவும் செயல் பட வேண்டும்.      

இதில் நம் சிந்தனையும் செயல்பாடும் எத்தகைய வட்டத்துக்குள் வருகிறது; என்பதைப் பொறுத்து சமுதாயத்தில் நமது தரம் தீர்மானிக்கப் படுகிறது. 

இதில் உலகளாவிய சிந்தனையைக் கொண்ட மேதைகள் பலர் இருந்தாலும் கோடிக்கணக்கான மக்கள் தான், தன் குடும்பம் என்ற குறுகிய மனப்பான்மையிலேயே  கட்டுண்டு கிடக்கிறார்கள். அவர்கள் தங்கள் சமுதாயக் கடமைகளைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களாக இருக்கிறார்கள். 
    
சராசரி உயிரினத்திலிருந்து மிகப் பலமடங்கு சகல துறைகளிலும் மனிதன் முன்னேறி விட்டாலும் மிகப் பெரும்பாலோரின் உணர்வைப் பொறுத்தவரை இன்னும் தாழ்ந்த மட்டத்திலேயே உள்ளனர். 
   
நாகரிகத்தின் உச்சியில் மனிதன் இருப்பதாக நமக்குநாமே பாராட்டிக் கொண்டாலும் அத்தகைய உச்சிக்குச் சொந்தக்காரர் சிலரே. மற்ற மிகப்பெரும் பாலோர் வாழும்வரை புறச் சூழ்நிலைமைகளுக் கேற்ப வாழ்ந்துவிட்டு காலவெள்ளத்தில் கரைந்து போய் விடுகிறார்கள். 

அத்தகையவர்கள் அனுபவிப்பதில் நாட்டமுடையவர்களாக இருக்கிறார்களே தவிர ஆக்கரீதியில் சிந்திப்பது இல்லை. எனவே சமுதாயம் பற்றியும் ஒட்டுமொத்தமான மக்கள் நலனைப்பற்றியும் அக்கரையும் முயற்சியும் உடையோர் சிறுபான்மையினராகவே உள்ளனர்.
    
உண்மையாகவே சமுதாய நலன் வேண்டிச் சிந்திப்போரும் செயல்படுவோரும் மிகக் குறைவாக உள்ளபடியால் அவர்களின் உணர்வுகளும் செயல்பாடுகளும் மக்களைச் சென்றடைவது பலவீனமாகவே உள்ளது. 

பாமர மக்கள் அறியாமையாலும் சுயநலத்தாலும் செய்யும் தவறுகள் ஒருபுறம் இருக்க பொதுநலனின் பேரால் எமாற்றி வாழ்கின்ற போக்கு நல்லோரின் நற்செயல்களைவிடப் பன்மடங்கு வலிவுடையதாக உள்ளது. அதுவே பல நேரங்களில் தீர்மானிக்கும் சக்தியாகக்கூட ஆகிவிடுகிறது.

இதன்காரணமாக ஒட்டுமொத்த சமுதாய நலன் பாதிக்கப்படுகிளது. அது ஒவ்வொரு குடும்பம் மற்றும் தனிநபர் வாழ்விலும் பிரதிபலிக்கிறது. எனவே பொதுநலன்பற்றி ஒவ்வொருவரும் அக்கரைப்பட வேண்டும் என்பது அவசியக் கடமையாகின்றது. 
     
ஓவ்வொருவரும் சமுதாயத்தில் தனிநபருக்குரிய பாத்திரத்தை உணர வேண்டும். சமுதாயத்தின் ஒட்டுமொத்த கதிப்போக்கில் இருந்து தான்மட்டும் தப்பிக்க முடியாது என்பதை உணர வேண்டும். 

ஓவ்வொருவரும் பொதுநலனில் அக்கரை கொள்ளுமளவு ஒட்டுமொத்தமான சமுதாயநலன் மேம்படும் என்பதை உணர வேண்டும். பொதுநலனில் நாட்டமுடையோர்தான் மேன்மக்களாக மதிக்கப் பெறுவர். எனவே ஒவ்வொருவரும் தாம் விரும்பும் புகழினை அடைய பொதுநலனில் ஈடுபாடு கொள்ள வேண்டும். 
    

பொதுநலன் எனில் நலன் பேணுவது மட்டுமல்ல. தவறினை எதிர்த்தலும் தீயவர்களிடமிருந்தும் தீயகருத்துக்களிடமிருந்தும் மக்களைக்காத்தலும் அதற்காக அயராது உழைத்தலும் அடங்கும். 

No comments:

Post a Comment