ss

Monday, June 11, 2012

விவசாயம் ( 21 )


விஷவலையில் விவசாயிகள்

இன்றைய விவசாயிகள் பல்வேறு எதிர்மறையான சூழல்களின் காரணமாகவும் பசுமைப் புரட்சியின் மோசமான விளைவுகளின் காரணமாகவும் தங்களின் தொழிலையே செய்ய முடியாத அளவு நெருக்கடியில் உள்ளார்கள்.

இதுதவிர விவசாயிகளுக்கே உண்டான மன உழைச்சல் பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. நாட்டையே பாதிக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளையே யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கும்போது விவசாயிகளின் மனஉழைச்சலையெல்லாம் யார் கண்டுகொள்ளப் போகிறார்கள்?

அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

முதலாவதாக விவசாயிகளின் நிலங்களுக்கு இடையில் பொது எல்லைகளில் உள்ள வரப்புகள் சரியாகப் பராமரிக்கப்பட சரியான விதிமுறைகள் இல்லை. அதன்காரணமாக அதில் சதகமான நிலையில் உள்ள விவசாயிகள் பொது வரப்புகளைப் பற்றி அக்கரைப்படுவது இல்லை. காரணம் என்னவென்றால் பொது வரப்புகள் சேதம் அடைவதால் கீழ்மட்டத்தில்  இருக்கும் விவசாயிகளின் நிலம் எந்த வகையிலும் பாதிப்பு அடைவதில்லை. ஏனென்றால் வரப்பு பலவீனமாவதின் காரணமாக சரியும் மண் மேல்மட்ட விவசாயியின் நிலத்தை அரித்து கீழ்மட்ட விவசாயியின் நிலத்தில் சேர்க்கும். 

இந்த அற்பக் காரணத்தாலேயே பெரும்பாலான விவசாயிகளின் பொது வரப்புகள் நேராக இல்லாமலும் உடைந்தும் சேதமடைந்தும் இருப்பதைக் காணலாம். மேல்பகுதி விவசாயி பொதுவரப்பைப் போடலாம் என்று சொன்னாலும் கீழ்ப்பகுதி விவசாயி எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டார்.

அதன்காரணமாக ஒட்டியிருக்கும் விவசாயிகள் மத்தியில் பெரும்பாலும் இணக்கமான உறவுகள் இருக்காது. இருந்தாலும் உள்ளத்தில் ஒன்றும் பேச்சில் ஒன்றுமாகவும்தான் இருக்கும்.

அடுத்ததாக நிலங்களின் எல்லைகளைக் காட்டும் சர்வேக் கற்கள் பெரும்பாலான நிலங்களில் இருக்காது. காரணம் அந்தக் கற்கள் இல்லாவிட்டால் தனது நிலத்தின் பரப்பு அடுத்தவனின் நிலத்துக்குள் அல்லது புறம்போக்குக்குள் தள்ளிப்போகும் என்ற சாதகமான நிலையில் உள்ளவர்கள் அந்தக் கற்களைப் பராமரிப்பதில் அக்கரை காட்டுவது இல்லை ஏதேனும் சாக்குச் சொல்லி அதை இடம் பெயரச்செய்யும் முயற்சியில்தான் இருப்பார்கள். 

அதனால் ஒரு விவசாயியின் நிலத்தின் அளவுகளை சர்வேக் கற்களின் துணைகொண்டு அளப்பது இயலாததாகி அனுபவ அடிப்படையில்தான் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் காரணமாக நிலங்களின் அளவுகள் அவர்களின் பத்திரங்களில் உள்ளபடி இருப்பது இல்லை. ஒன்று கூடுதலாக இருக்கும் இல்லாவிட்டால் குறைவாக இருக்கும். 

இதனால் விவசாயிகளிடையே ஒரு தொடர்ந்த மனப்போராட்டமும் பகைமையுணர்வும் சச்சரவும் தகராறுகளும் அடிக்கடி ஏற்படுகின்றன.

இந்தப் பொதுவரப்பு சம்பந்தமாகவோ சர்வேக் கல் பிரச்சினை சம்பந்தமாகவோ ஒரு விவசாயி முறையிட்டால் அதைச் சரி செய்ய எந்த உடனடி ஏற்பாடும் கிடையாது.

அடுத்து ஒரு விவசாயியின் நிலத்தில் இருந்து எந்த அளவு தூரம் இடைவெளி விட்டு கிணறு தோண்டலாம் என்பதெல்லாம் விதிமுறை கிடையாது. அதனால் ஒரு விவசாயி தன்னுடைய வரப்பு ஓரத்தில் கிணறு வெட்டித் தண்ணீர் கிடைத்துவிட்டால் அருகில் உள்ள விவசாயி அந்தக் கிணற்றுக்கு அருகிலேயே தானும் கிணறு வெட்டுவதை நிறைய இடங்களில் காணலாம். 

இதனால் இரண்டு கிணறுகளின் நீர் வரத்தும் பாதிக்கப்பட்டு கிணறு வெட்டும் செலவுகள் ஆயில் எஞ்சின் அல்லது மின் மோட்டார் வைக்கும் செலவுகள் எல்லாம் தேவையற்ற விரய செலவுகளாகின்றன. மின்சாரமும் கணக்கின்றி விரயம் செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு இடையே பகைமை உணர்வு வளர்கிறது.

பொதுக் கிணறுகளின் பயன்பாடு: இதில் பொதுக்கிணறுகளில் பங்குதாரர்களாக உள்ள யாரும் பெரும்பாலும் ஒற்றுமையாக இருப்பதைப் பார்ப்பது கடினம். அதற்கும் மேல் தகராறு செய்துகொள்பவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள். 

பொதுக் கிணற்றைத் துப்புறவாக வைத்துக் கொள்வது, அபிவிருத்தி செய்வது, ஆழப்படுத்துவது, மோட்டார் அல்லது ஆயில் எஞ்சின் வைப்பது, மின் இணைப்பு வாங்குவது போன்ற பலவகையானவை பொதுவாக அனைவரும் சேர்நதுதான் செய்ய வேண்டும். ஆனால் அதில் உள்ள அனைவருக்கும் தவிர்க்க முடியாத தேவை இருக்கும் வேலைகள்தான் ஒழுங்காக நடக்கும் மற்றவை நடக்காது. 

அதிலும் அதில் உள்ள ஒருவர் வசதியானவராக இருந்து விட்டால் அந்தப் பொதுக்கிணற்றை அபிவிருத்தி செய்ய முட்டுக்கட்டையாக இருப்பதோடு அந்தக் கிணற்றுக்கு அருகிலேயே தனது பங்கில் தான்ஒரு புதுக்கிணறு ஆழமாக வெட்டுவதன் மூலம் பழைய கிணற்றைக் காயவைக்கவே முயல்வார். 

இதனால் தாக்குப்பிடிக்க முடியாதவர்கள் அந்த வசதியான பங்காளிக்கு விற்பார் அல்லது அவர் மேல் உள்ள பகைமை உணர்வால் அவரை விட வசதியான அவருக்கு வேண்டாத ஒருவருக்குத் தன் பங்கை விலைக்குக் கொடுப்பார். தன்னால் முடியாத பதிலடியை புதியவராவது கொடுக்கட்டும் என்பதுதான்.

எங்கள் தோட்டத்துக்குப் பக்கம் ஒரே கிணற்றில் மூன்று ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம்  உற்பத்தி செய்யப்பட்டு மூன்று மின் மோட்டார்கள் இயங்குகின்றன. ஒரு ஜெனரேட்டரும் ஒரு மோட்டாரும் இருந்தால் போதுமானது. அந்த ஒன்றுக்கே தினம் ஒரு மணி நேரம்கூட வேலை இல்லை.

ஆனால் மூன்று செட் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் வாங்கப்பட்டு வீணாகக் கிடக்கிறது. இது அந்தக் கூட்டாளிகளிடையே ஒற்றுமையின்மை மட்டுமல்ல அதைத் தீர்ப்பதற்கான நிர்வாக உதவி சட்ட உதவியெல்லாம் கிடையாது. 

ஒரு சரியில்லாத நபர் ஒரு பியூஸ் கேரியரைப் பீடுங்கி வைத்துக்கொண்டால்கூட மொத்தக் கூட்டாளிகளும் பாதிக்கவேண்டிய நிiமைதான் நடப்பில் உள்ளது.

தென்னந்தோப்புகளை முதலில் உண்டுபண்ணுபவர் தனது நிலத்தின் ஓரத்தில் கன்றுகளை நட்டு மரங்களாக்கிவிடுவார். அது அருகில் உள்ள நிலத்தில் குறிப்பிட்ட தூரம் வரை விவசாயத்தைச் செய்யவிடாமல் நிழலாலும் வேர்களாலும் பாதிப்பை உண்டுபண்ணும்.இப்படித்தான் தோப்புகளை வைக்கவேண்டும் என்ற விதிகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இதனால் ஏற்படும் பகையும் நிறைய ஆகும். 

இதேபோல ஆறு, குளம், ஏரி, அணைக்கட்டு போன்ற பாசனம் பெறும் நிலங்களில் வேறுவகையான பிரச்சினைகள் வருகின்றன.

நீர் மேலாண்மை என்பது விவசாயிகளைச் சித்திரவதை செய்யக்கூடிய ஒரு விஷயமாகத்தான் நிறைய இடங்களில் உள்ளது. உண்மையில் அது ஒரு பெரிய கதை! 

வாய்க்கால் தண்ணீர் பாய்ச்ச மேல் மடை, கீழ்மடை என்பதும் தண்ணீர் செல்லக்கூடிய மடைகளின் அளவுகளில் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு செய்யும் தில்லுமுல்லுகளும் விவசாயிகளுக்கு பெரிய தலைவலி யாகும்.

அதுதவிர பிரதான வாய்க்கால்களில் முறைவைத்துத் தண்ணீர் விடும்போது கொடுக்கும் காசுக்கு ஏற்ப முறைகேடுகள் செய்வதால் கடைமடைப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் படும் அவஸ்தையும் துன்பமும் சொல்லி முடியாது.

இத்தனைக்கும் மேலாக பாசன சபை என்ற பெயரால் விவசாயிகளால் தேர்வு செய்யப்படும் நபர்கள் செய்யும் ஊழல் அதிகாரிகளைவிட மோசமானது. 

இதற்கும் மேலாக அரசு அறிவிக்கும் சலுகைகள் தங்களுக்குக் கிடைப்பதற்கும் பல தில்லுமுல்லுகள் செய்யவேண்டும்.

என்னுடைய அனுபவத்தில் இருபது ஏக்கர் விவசாயிகள் பலர் லட்சக்கணக்கில் அரசின் தள்ளுபடி பெற்றார்கள். ஆனால் மூன்று ஏக்கர் உள்ள எனக்கு ஒரு பைசாகூட இதுவரை எந்த சலுகையும் நிவாரணமும் கிடைக்கவில்லை. காரணம் அதற்காக தகுதியற்ற நபர்களிடம் நான் செல்வதில்லை என்பதே!

இப்படியான எண்ணற்ற பிரச்சினைகளால் விவசாயிகள் ஒரு பக்கம் பெருத்த மன உழசை;சலுக்கு இடையே தங்கள் தொழிலைச் செய்யவேண்டியுள்ளது.

இந்தப்பிரச்சினைகளைத் தீhக்க எந்த விதமான ஏற்பாடுகளும் கிடையாது. அதனால் ஏற்படும் பகைமையுணர்வு விவசாயிகள் அரசுக்கு எதிராகப் போராடுவதைத் தடுக்கப் பிரித்தாளும் சாதனமாகவும் பயன்படுகிறது. 

இதனால் விவசாயிகள் ஒன்றுபட்டுப் போராடித் தங்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு இயலாமல் தவிக்கிறார்கள் சமுதாயத்தில் பாவப்பட்ட ஜென்மங்களாக பெரும்பாலான விவசாயிகள் வலம் வருகிறார்கள்.

No comments:

Post a Comment