ss

Saturday, June 9, 2012

ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 22 )



அஞ்சாமையும் மனவுறுதியும்
     

ஒவ்வொருவரும் தம் அறிவுக்கு எட்டியவரை உலகையும் வாழ்வையும் புரிந்து கொண்டு நமது கடமைகளாகப் பலவற்றைக் கருதி நடக்கிறோம். அக்கடமைகள் சொந்த வாழ்க்கையில் இருந்து உலகளாவிய தன்மையுடையது வரை பலதரப்பட்டவை. 
    
மக்கள் எல்லோருடைய அறிவும் பண்பாடும் வாழ்க்கைத்தரமும் ஒரேமாதிரியாக இல்லை. எனவே மாறுபாடும் முரண்பாடும் நிறைந்ததாகவும் பகைமையுணர்வு கலந்ததாகவும் வாழ்க்கை உள்ளது. அதனால் கடமை என்பதுகூட தரத்துக்கு ஏற்ப தன்மை மாறுபடுகிறது. 
    
இந்த நிலையில் கடமையாற்றும் போதும் செயல்படும் போதும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு எதிரான அம்சங்களுடன் போராடியே ஆக வேண்டிள்ளது. 

எந்த ஒரு கடமையையும் அமைதியாகச் செயலாற்றும் சூழ்நிலை இல்லை. எனவே புறச் சூழ்நிலைமைகளுடன் முட்டி மோதித்தான் ஆக வேண்டிள்ளது. இதில் பல சந்தர்ப்பங்களில் நல்லது தோல்வியடையவும் நேர்கிறது. 

நல்லவர்க்கு ஏற்படும் தோல்வி நன்மைக்கு ஏற்படும் தோல்வி அல்ல. 

காரணம் நன்மை என்பது அனைத்து உயிரினங்களின் நியாயமான உணர்வுகளையும் விருப்பங்களையும் பிரதிபலிப்பதாகும். 

எனவே நல்லோர் தம் செயலில் தோல்வி யடைந்தாலும் அச்செயலில் உள்ள நியாயம் காரணமாக அது வேறு நபராலோ வேறு வடிவத்திலோ நிச்சயம் வெல்லும். 
    
ஆகவே நல்லது எது தீயது எது என்பதை சமுதாயத்தின் தீர்ப்புக்கு விட்டு விட்டு நமக்குச் சரியெனப்படும் கடமைகளைச் செய்ய வேண்டும். 

எதிர் வரும் பிரச்சினை எதுவென்றாலும் அதை வெற்றியுடன் கடந்து முன்னேற வேண்டும். தோல்விகளைக் கண்டு துவண்டு போகக்கூடாது. 

நேர்மையாகச் செயல்படுகின்றவர்கள் தீயசக்திகளைக் கண்டோ தீய மனிதர்களைக் கண்டோ அஞ்சி அடங்கிவிட்டால்  நல்ல லட்சியங்களை நிறைவேற்ற முடியாது. அதுமட்டுமல்ல அனைத்துத் துறையிலும் தீமைகளே தீர்மானிக்கும் சக்திகள் ஆகிவிடும். அதைத்தான் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டுள்ளோம். 
   
எனவே நியாய உள்ளம் படைத்தோர், மனிதநேயம் படைத்தோர், உயர்ந்த லட்சியத்தைக் கொண்டவர்கள் அனைவரும் எத்தகைய சூழ்நிலைமையிலும் அஞ்சாமல் மனவுறுதி காக்க வேண்டும். 

மலை போன்ற துன்பங்கள் அடுத்தடுத்து வந்தாலும் கலங்காமல் எதிர் நிற்க வேண்டும. மனதால் பயந்து பயந்து அர்த்தமற்ற வாழ்வு வாழ்வதை விடத் துணிந்து எதிர்நின்று வருவதை ஏற்றுக் கொள்வது உயர்ந்தது. 
     
வீரத்தால் சாதிக்க முடியாததைக் கோழைத்தனத்தால் சாதிக்க முடியாது. எனவே வீரத்தையும் விவேகத்தையும் சரியாகக்கையாண்டால் தோல்விக்கு இடமில்லை. 
    
வீரம் என்பதும் அஞ்சாமை என்பதும் நல்லோர்க்கு மட்டுமல்ல தீயவர்க்கும் சொந்தமான குணங்கள் ஆகும். 

ஆனால்  அதை வழிநடத்தும் சிந்தனையிலும் எண்ணத்திலும் சமுதாயக் கண்ணோட்டத்திலும் சமூகத்தேவையிலும் நல்லோரின் வீரத்துக்கு ஆக்கமும் ஊக்கமும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிறைந்து கிடப்பதால் இறுதி வெற்றி நல்லோரின் பக்கம்தான் மிக மிக அதிகம் ஏற்படும்.

எனவே அஞ்சாமல் செயல்பட வேண்டும். சரியென்று பட்டதை எந்த இடத்திலும் அச்சமின்றி வெளிப்படுத்த வேண்டும். நல்லதை எண்ணி மனதில் அன்பும் ஆதரவும் பெருக்கெடுப்பதைப் போல் தீயவற்றைக் கண்டு வெறுப்பும் வீரமும் பொங்க வேண்டும்.        
    
அஞ்சாமையும் மனஉறதியும் செயலூக்கம் மிக்க உயர்ந்த வாழக்கையின்  அடிப்படை அம்சங்கள்  ஆகும்.

No comments:

Post a Comment